Published:Updated:

"வீடு, கணவர், உறவுகள்..!'' தமிழ் சீரியல் ஸ்பாட்டில் கதறிய கேரள ஹீரோயின்கள்

"வீடு, கணவர், உறவுகள்..!'' தமிழ் சீரியல் ஸ்பாட்டில் கதறிய கேரள ஹீரோயின்கள்
"வீடு, கணவர், உறவுகள்..!'' தமிழ் சீரியல் ஸ்பாட்டில் கதறிய கேரள ஹீரோயின்கள்

பெரும்பாலான தமிழ் சீரியல் ஹீரோயின்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். சமீபத்திய வெள்ளத்தில் சிக்கிய அனுபவத்தைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.

தற்போது ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல்கள் பெரும்பாலானவற்றின் ஹீரோயின்கள் 'கடவுளின் தேசம்' என அழைக்கப்படும் கேரளாவிலிருந்து வந்தவர்கள். வரலாறு காணாத வெள்ளம் அந்த மாநிலத்தைப் புரட்டிப்போட்டுப் போயிருக்கும் நிலையில், சீரியல் ஹீரோயின்கள் சிலரிடம் பேசினோம். 

'வீட்டில் உள்ளவங்க, நண்பர்கள், உறவினர்கள் பலரும் வெள்ள ஏரியாவுல சிக்கிக்கொள்ள, நாங்க தவிச்ச தவிப்பு காலத்துக்கும் மறக்காது!' என்கிறார், 'பொன்மகள் வந்தாள்' ஹீரோயின் மேக்னா வின்சென்ட்.

''கேரளாவுல மழை வேகமெடுக்கத் தொடங்கிய ஒரு வாரத்துக்கு முன்பே நான் அம்மாவைக் கூட்டிக்கிட்டு தமிழ்நாட்டுக்கு வந்துட்டேன். மதுரையில ஷூட்டிங். பொதுவா வெளியூர்ல ஷூட்டிங் இருந்தா தினமும் காலையில எழுந்ததும் கணவருக்கு போன் பேசிடுவேன். அந்தமாதிரி ஒரு நாள் பேசிக்கிட்டு இருந்தப்போ, திடீர்னு ஒரு நாள் நெட் ஒர்க் கிடைக்காம போயிடுச்சு. என் கணவர் வீடு எர்ணாகுளம் பக்கத்துல இருக்கு. நெட் ஒர்க் பிரச்னையே இருக்காது. ஆனா, ஒரு நாள் முழுக்க முயற்சி பண்ணியும் பேச முடியலைனதும் எனக்கு அழுகை வந்திடுச்சு. போதாக்குறைக்கு டிவி, பேப்பர்ல கேரள வெள்ளச் செய்திகள் வேற!. சில சொந்தக்காரங்களுக்கு லைன் கிடைச்சு, அவங்ககிட்ட கேட்டா, அவங்களாலும் எங்க வீட்டுல இருக்கிறவங்களைத் தொடர்பு கொள்ள முடியலைனு சொல்லிட்டாங்க. கணவருக்கு அங்கே என்னாச்சோங்கிற படபடப்புல மனசு ஷூட்டிங்லேயே ஒட்டல. ராத்திரியெல்லாம் தூங்காம, அவர்கிட்ட இருந்து அழைப்பு வருமானு கண் முழிச்சுக் காத்திருந்தேன். ஒருவழியா மூணு நாள் கழிச்சு லைன்ல வந்தார். அந்த நிமிடம்தான் எனக்கு மூச்சு திரும்பி வந்த மாதிரி இருந்திச்சு. கரன்ட், நெட் ஒர்க் அங்கே கட் ஆகியிருக்கு. மத்தபடி, எங்க வீட்டை வெள்ளம் சூழலை. ஆனா, ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல வீடுகள் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கிறதா சொல்றாங்க. எப்போ ஷூட்டிங் முடியும்னு இருக்கு. மழைக்குப் பிந்தைய என் ஊரைப் போய் பார்க்கணும்போல இருக்கு'' என்கிறார், மேக்னா வின்சென்ட்.

'வள்ளி' தொடரின் ஹீரோயின் வித்யா, ஆயுர்வேத சிகிச்சைக்குப் பெயர் பெற்ற குமரகம் பகுதியைச் சேர்ந்தவர்.

" 'குமரகம்' உலக அளவுல பெரிய பெரிய ஆளுங்க டூரிஸ்டா விரும்பி வர்ற இடம். அந்த இடமே இப்போ பொலிவிழந்து கிடக்கு" என்கிறவர், மழை உச்சத்திலிருந்தபோது கேரளாவில் இருந்திருக்கிறார்.

''2015 சென்னை மழை வெள்ளத்தைவிட பல மடங்கு மழை, கேரளாவுல! நாங்க இருக்கிற கோட்டயம் மாவட்டம் கிராமங்கள் நிறைஞ்ச ஏரியா. வெள்ளம் வரப்போகுதுனு தெரிஞ்சதும் முதல் வேலையா கரன்ட் கட் பண்ணிட்டாங்க. அப்போவே பீதி ஆரம்பிச்சிடுச்சு. பிறகு மொபைல் கட் ஆச்சு. ஆனாலும் மழை விடாம பெய்துட்டே இருக்கு. வீட்டுல இருந்த உணவுப் பண்டங்களை வெச்சு சமாளிச்சுக்கிட்டு இருக்கோம். வெளியில என்ன நடக்குதுன்னு தெரியாததுனால, ஒரே பதட்டம். அக்கம் பக்கத்து வீடுகள்லகூட ஒருத்தரையும் சந்திக்க முடியாமதான் இருக்கோம். மலைச்சரிவுகள்ல இருக்கிற வீடுகள் அப்படியே விழறதா பிதி கிளப்புகிற தகவல்கள் மட்டும் தீயா பரவிக்கிட்டு இருக்கு. வீட்டை விட்டு வெளியிலேயும் வரமுடியாத சூழல். தண்ணீர் சூழ்ந்து நில அரிப்பு உண்டாகிடுமோனு வீட்டுக்குள்ளே இருக்கவும் பயம். எந்தக்காலமும் யாருக்கும் வரக்கூடாது இந்த நிலை. இப்பகூட என்னால அந்தப் பீதியில இருந்து வெளியில வரமுடியல. கணவர் வினு மோகன் மழை லேசா வெறிச்சதுமே களத்துல இறங்கிட்டார். இப்போ நானும் அவரும் சேர்ந்து மீட்புப் பணிகள்ல களமிறங்கியிருக்கோம்" என்கிறார், வித்யா.

"நான் சென்னையில இருந்ததால வெள்ளத்துல இருந்து தப்பிச்சிட்டேன். ஆனா, இங்கே ஷூட்டிங் ஸ்பாட்டுல அந்த ரெண்டுநாளும் அழுதுகிட்டே இருந்தேன். கொல்லம்ல என் வீடு இருக்கிற ஏரியாவுல வெள்ளம் வரலைங்கிற செய்தியைக் கேட்டதுக்குப் பிறகே நிம்மதியா இருக்க முடிஞ்சது. ஆனா, என் பெரியப்பா வீடு ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கு" என்கிறார், 'யாரடி நீ மோகினி' நட்சத்திரா (வெண்ணிலா).

மீண்டு வாருங்கள்!

அடுத்த கட்டுரைக்கு