Published:Updated:

கேபிள் கலாட்டா!

விஜி வந்தாச்சு !படங்கள்: ப.சரவணகுமார்

கேபிள் கலாட்டா!

விஜி வந்தாச்சு !படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:

 ரிமோட் ரீட்டா

##~##

 ஆடிய பாதமும், பாடிய குரலும் சும்மா இருந்துட முடியுமா..?! ரொம்ப நாள் கழிச்சு ரீ-என்ட்ரி கொடுத்திருக்காங்க விஜி... சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிற விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பான 'அழகி’ சீரியல்ல 'சுந்தரி’யா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வெல்கம் விஜி!''னு பொக்கேயோட போனா... முகமெல்லாம் மத்தாப்பூ!

''போன வாரம் தி.நகர் பக்கம் ஷாப்பிங் போயிருந்தேன் ரீட்டா. கஸ்டமர்ஸ்ல இருந்து சேல்ஸ் கேர்ள்ஸ் வரைக்கும் 'சுந்தரி’யைக் கொண்டாடினது, எனக்கே சர்ப்ரைஸ். 'சுந்தரி மேடம்... நீங்க எவ்ளோ கஷ்டப்படுறீங்க..?! வீட்டு வேலை, ஹாஸ்பிட்டல் வேலை, பெட்ரோல் பங்க் வேலைனு ஒவ்வொரு நாளும் அவ்வளவு உழைக்கிறீங்க. சோர்ந்து போகும்போதெல்லாம், 'சுந்தரியைவிடவா..?’னு உங்களைத்தான் நினைச்சுக்கிறோம்...’னு ஒரு பணிப்பெண் சொன்னப்போ, தொடர் ஆரம்பிச்ச ரெண்டு மாசத்துல இப்படி ஒரு ரீச்சானு ஆச்சர்யமா, சந்தோஷமா இருந்தது ரீட்டா!''னு மகிழ்ந்த விஜியோட முகத்துல அத்தனை பெருமிதம்.

''இவ்ளோ நாள் எங்க இருந்தீங்க..?!''னு கேட்டா, புன்னகையோட பதிலும் வந்தது.

''என் பிள்ளைங்களுக்காக கொஞ்சம் பிரேக் விட்டேன். ரெண்டு பெண் குழந்தைங்க. பெரியவ சுரக்ஷா, செகண்ட் இயர் எம்.பி.பி.எஸ். கோர்ஸ் துபாய்ல படிச்சுட்டிருக்கா. இளையவ லவ்லின், டென்த் படிக்கறா. கணவர் 'கேப்டன்’ சந்திரசேகர்... பைலட்டா இருக்கறார்ங்குற விஷயம் உனக்கே தெரியுமே. அவர் ஒவ்வொரு நாடா பறந்துட்டு இருக்கறதால, குழந்தைகளை கவனிக்கிற முழுப் பொறுப்பையும் நான் ஏத்துக்கிட்டேன். அதனாலதான் விஷ§வல் ஸ்கிரீன்ல லீவ் எடுத்தேன்.

கேபிள் கலாட்டா!

இடைப்பட்ட நேரத்துல சின்னத்திரை தொடர்கள்... 'நந்தா’, 'எம் மகன்’னு நல்ல திரைப்பட வாய்ப்புகள் எல்லாம் வந்தபோதும்கூட... 'நோ’ சொன்னது பசங்களுக்காகத்தான். இப்போ அவங்க வளர்ந்துட்டாங்க. இந்த நேரம் பார்த்து 'அழகி’ கதை சொன்னார் டைரக்டர் வி.சி.ரவி சார். என் கேரியர்ல இந்த ரோல் கண்டிப்பா மக்கள்கிட்ட மிக நெருக்கமான ஒரு பெயர் வாங்கிக் கொடுக்கும்னு உறுதியா தெரிஞ்சுது. பிள்ளைங்க, அக்கா (சரிதா), கணவர்னு எல்லாரும் 'ஓ.கே’ சொல்ல, 'அழகி’ சுந்தரியா வந்திருக்கேன். இதைத் தொடர்ந்து நிறைய சீரியல் வாய்ப்புகள் வருது. இப்போதைக்கு 'அழகி’யைத் தவிர வேறெதுவும் மனசில் இல்லை!''னு கண்களாலயும் பேசி முடிச்சாங்க விஜி!

'அழகி'ய அம்மா!

விஜய் டி.வி. 'கனா காணும் காலங்கள்’ சீரியல்ல காலேஜ் பொண்ணா வர்ற சாய் பிரமோதிதா, நிஜத்துலயும் ஸ்டூடன்ட்தான். சென்னை எஸ்.ஆர்.எம். காலேஜ்ல எம்.பி.ஏ. படிக்கிறார்.

''அஞ்சு நிமிஷம் ரீட்டா... நாளைக்கு செமினார் எடுக்கணும்... பிரிபரேஷனை முடிச்சுட்டு வந்துடறேன்...''னு வீட்டுல பரபரப்பா இருந்த சாய் பிரமோதிதா, ஜிம்னாஸ்டிக்ஸ், டான்ஸ், நடிப்புனு கலக்குற மல்டி டேலன்ட் வெச்சுருக்கற பர்சனாலிட்டி!

கேபிள் கலாட்டா!

''அப்பா, அம்மா ரெண்டு பேருமே அட்வகேட்ஸ். சாய்பாபா பக்தர்கள். அதனாலதான் என்னோட பேருக்கும், அக்கா சாய் சமன்வித்தா பேருக்கும் முன்ன 'சாய்’ சேர்த்துட்டாங்க. சின்ன வயசுல இருந்தே நான் ஜிம்னாஸ்டிக்ஸ்ல முறையா பயிற்சி எடுத்து, ஸ்டேட் லெவல் போட்டிகள்ல அவார்ட்ஸ் வாங்கியிருக்கேன். அக்கா சாஃப்ட்வேர் படிக்க, நான் இந்துஸ்தான் காலேஜ்ல ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். இன்னொரு பக்கம், டான்ஸும் பிராக்டீஸ் பண்ணிட்டு இருந்தேன்.

விஜய் டி.வி-யில 'பாய்ஸ் வொர்ஸஸ் கேர்ள்ஸ் - சீஸன் 2’ நிகழ்ச்சியில் 'பெஸ்ட் ஃபீமேல் பெர்பார்மர் அவார்ட்’ வாங்கினது, பெரிய அங்கீகாரம். அதைத் தொடர்ந்து நிறைய டான்ஸ், நடிப்புனு வாய்ப்புகள் வந்தாலும், முதல்ல படிப்பை முடினு வீட்டுல எம்.பி.ஏ. சேர்த்துவிட்டாங்க. பாராட்டுகள், விருதுகள், ஷூட்கள்னு பரபரனு நாட்களை கழிச்சுட்டு, சமர்த்தா காலேஜ் போயிட்டு வர்றது போரா இருந்தது. 'கனா காணும் காலங்கள்’ வாய்ப்பு வர, வீட்ல, காலேஜ்ல பர்மிஷன் வாங்கி, மறுபடியும் ஸ்கிரீன்ல வந்துட்டேன்!''னு சொல்லும்போதே அவ்வளவு சந்தோஷம் சாய் முகத்தில்.

''கனா காணும் காலங்கள் ஷூட்டிங் ஏரியா, செம ஜாலியா இருக்கும் ரீட்டா. பாலா, சக்தி, பிரேம், வெற்றினு அளவேயில்லாம அட்டகாசம் பண்ணுற கேங் அது. தூங்கற பசங்க முகத்தில் பவுடர் போடுறது, மீசை வரையறது, டப்பிங் ரூம்ல பேய் இருக்குனு புரளியைக் கிளப்பறதுனு... கிளாஸ்ரூம் கலகலப்போடதான் இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டும். சரி, என் நடிப்பு எப்படி..? என்ன மார்க் போடுவே..?!''னு எங்கிட்டயே கேள்வியைப் போட்டாங்க சாய்!

மார்க் போடுற வேலை எனக்குமா..? இருக்கற ஜட்ஜ்களே போதும்மா!

''சன் டி.வி. 'செல்லமே’ சீரியல்ல வில்லியா வர்ற 'மதுமிதா’தான் இப்போ எங்க ஃபேமிலி எதிரி!''னு குடும்பத் தலைவிங்க திட்டித் தீர்க்குற அளவுக்கு நடிப்புல கலக்கிக் கிட்டிருக்காங்க கன்யாபாரதி!

கேபிள் கலாட்டா!

''தமிழில் 'செல்லமே’, மலையாளத்தில் 'அம்மா’, புதுசா வரப்போற 'மோகக்கடல்’ தொடர், இன்னும் சில படங்கள்னு சென்னைக்கும், கேரளத்துக்குமா பிஸியா இருக்கேன். என் மூணு வயசு குட்டிப் பாப்பா நிலாபாரதியை அம்மாகிட்ட விட்டுட்டுப் போறது தான், கஷ்டமா இருக்கு!''னு சொல்லும்போதே வருத்தமாகுது கன்யா அம்மாவோட குரல்.

''சமீபத்துல 'மோகக்கடல்’ மலையாள சீரியல் ஷூட்டுக்காக யு.எஸ், கனடா, சிக்காக்கோனு போனப்ப, எல்லாரும் 'செல்லமே’ சீரியல் பத்தியும், என் நடிப்பு பத்தியும் ஆர்வமா வந்து பேசினாங்க. வெளிநாட்டுத் தமிழர்கள்கிட்ட சினிமாவைக் காட்டிலும்... சீரியலுக்கு இருக்கற வரவேற்பு அப்பதான் புரிஞ்சுது ரீட்டா''னு சொன்ன கன்யாவோட கணவர் எல்லாருக்கும் அறிமுகமான... கவிதாபாரதி. இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், குறும்பட இயக்குநர்னு பல பரிணாமங்களைப் பெற்றவர்.

''அவர், 'நீல வானம்’ சீரியல் இயக்கினப்போ எங்களுக்குள் காதல் மலர்ந்தது ரீட்டா. திருமணம் முடிந்து 10 வருஷமாச்சு. நாட்கள் வளர வளர, எங்க சந்தோஷமும் வளர்ந்துட்டே இருக்கு!''னு அழகா முடிச்சாங்க கன்யா!

ஆஹா..!

 வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா!

150

 அழகு இன்ஸ்பெக்டர் !

''சன் டி.வி-யில் ஒளிபரபப்பாகும் 'அழகி' சீரியலில் சமீபத்தில் ஒளிபரப்பிய காட்சிகள் அருமை. காதலியை வேறு ஒருவர் திருமணம் செய்து கொள்ள முயல, காதலன் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைகிறான். அந்தப் பெண், காதலர் மற்றும் திருமணம் செய்து கொள்ள முயலும் நபர் மூவரும் அழைக்கப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணுக்கு அக்கறையாக அறிவுரை தருவதோடு, அவளுடைய அம்மாவை போனில் அழைத்து நிதானமாக பேசி பிரச்னையை முடிக்கும் விதம் அழகு. மிடுக்கான நடை, கடுகடு பேச்சு என்று மிகைப்படுத்தி காண்பிக்கப்படும் இன்ஸ்பெக்டர்களுக்கு இடையில், இந்த கேரக்டரின் பிரதிபலிப்பு அழகாக இருக்கிறது'' என்று பாராட்டுகிறார் உடுமலைப்பேட்டையில் இருந்து எஸ்.ஜானகி.

சூப்பர் வில்லன் !

''ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'சாந்தி நிலையம்' தொடர், பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அதிலும் வில்லனாக சித்திரிக்கப்படும் டாக்டர் கேரக்டர் நன்றாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்காக, அந்த டாக்டர் எப்படியெல்லாம் மாறுகிறார் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். அவரைக் கண்டாலே வெறுப்பு வருகிறது. இதுவே அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றிதான்'' என்று ரசித்துச் சொல்கிறார் சென்னையில் இருந்து சாந்தா கண்ணப்பன்.

இப்படியும் ரேட்டிங்கா ?

''ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி வர வர மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. பிரச்னையில் இருக்கும் கணவன் - மனைவியை அழைத்து சமரசம் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால்... மாமியார், மருமகனை அடிப்பது; மனைவி, கணவன் சட்டையைப் பிடிப்பது; கணவன், மனைவியை அத்தனை பேர் முன்னிலையில் அறைவது... என்றே சமீப காலமாகக் காட்டுகிறார்கள். பிரச்னையை தீர்த்து வைக்க முடியாவிட்டாலும், அவர்களுடைய பிரச்னையை மற்றவர்கள் முன் வெளிச்சம் போட்டுக் காட்டி... சேனலின் ரேட்டிங்கை ஏற்றத்தான் வேண்டுமோ?'' என்று கடுப்பாகி பேசுகிறார் சங்கராபுரத்தில் இருந்து ஜி.ரேவதி.