Published:Updated:

``அந்த சந்தோஷத்துக்காக நாலு வருஷம் காத்திருந்தோம்!'' - சென்றாயன் மனைவி கயல்விழி

வெ.வித்யா காயத்ரி

"இதுக்காகத்தான்... இந்தத் தருணத்துக்காகத்தான் நாங்க அனுபவிக்காத வலியெல்லாம் அனுபவிச்சோம். கேட்காத வார்த்தைகளையெல்லாம் கேட்டோம். நாலு வருஷம் காத்துகிட்டு இருந்தது இதுக்காகத்தான். எங்க கனவு இப்ப நனவாகிட்டு. அவர் முகத்துல ஏற்படுற சந்தோஷத்தைப் பாக்கத்தான் இதுநாள் வரைக்கும் காத்துகிட்டு இருந்தேன்"

``அந்த சந்தோஷத்துக்காக நாலு வருஷம் காத்திருந்தோம்!'' - சென்றாயன் மனைவி கயல்விழி
``அந்த சந்தோஷத்துக்காக நாலு வருஷம் காத்திருந்தோம்!'' - சென்றாயன் மனைவி கயல்விழி

``அவருக்கு நான் மாசமா இருக்கேன்னு தெரியாது... எங்களோட நாலு வருஷ வலி இன்னைக்கு சந்தோஷமா மாறியிருக்கு. அவர் நூறு நாள் முடிச்சு வந்ததும் விஷயத்தைச் சொல்லணும்'' சமீபத்தில் நமக்கு இப்படிப் பேட்டியளித்திருந்தார் 'பிக் பாஸ்' சென்றாயன் மனைவி கயல்விழி. சமீப நாள்களாக ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வந்து பார்க்கலாம் என்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்திருக்கிறார் சென்றாயன் மனைவி. 

``எங்க நாலு வருஷ கனவு நனவானதை இன்னும் நம்ப முடியலீங்க. இப்ப எனக்கு நாலாவது மாசம் நடந்துட்டு இருக்கு. காலையில எழுந்திருச்சு பாத்திரம் கழுவுறதுல ஆரம்பிச்சு அம்மாவுக்கு ஹெல்ப் பண்றது வரைக்கும் எல்லா வீட்டு வேலையும் பாக்குறேன். இந்த நேரத்துல மாங்காய் சாப்பிட ரொம்பப் பிடிக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அதோட சுவையை இப்பதான் உண்மையா அனுபவிக்குறேன். என்னா சுவையா இருக்கு தெரியுங்களா'' என்றவருக்கு நாளை திருமண நாளாம். 

``என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு என் வீட்டுக்காரர். அப்படி பழக்கமாச்சு. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்னு ரெண்டு பேருக்கும் தோணவும், வீட்ல சொன்னோம். ஆனா ஆரம்பத்துல என் வீட்டுல ஒத்துக்கலை. அப்புறம் சம்மதிச்சாங்க. காதலிச்ச ஒரு வருஷத்தில் கல்யாணம். நாளைக்குத்தான் எங்க கல்யாண நாள். அதுக்குள்ள அவர எப்படியாவது பார்த்திடணும்னு ஆசைப்பட்டேன். அப்பத்தான் போட்டியாளர்களோட உறவினர்களை வீட்டுக்குள்ள பிக் பாஸ் அனுமதிக்கிறார்னு தெரிஞ்சது. என்னை எப்படா கூப்பிடுவாங்கனு காத்திருந்தேன். அதே மாதிரி என்னைக் கூப்பிட்டதும் சந்தோஷத்துல தலைகால் புரியலை. ரெண்டு மாசமா அவரை நேர்ல பார்க்காம, பேசாம இருக்கிற வலி குறைஞ்ச மாதிரி இருந்தது. உங்ககிட்ட சொன்னபடி நூறுநாள் ஆனதும்தான் அவர்கிட்ட நான் மாசமா இருக்கிறதை சொல்லணும்னு நினைச்சேன். வீட்டுக்குள்ள போனதும் என்னைத் தனியா கூட்டிட்டுப் போய், டாக்டர்கிட்ட செக் பண்ணியா, என்ன ஆச்சு, என்ன சொன்னார்னு கேள்வி மேல கேள்வியா கேட்டார். அப்புறமா சொல்றேன்னு சொன்னேன். ஆனா அவர் விடலை. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை வெளிய போகச் சொல்லிடுவாங்க. அதனால டாக்டர் என்ன சொன்னார்னு மட்டும் சொல்லுனு கேட்கவும் மனசு தாங்கலை. விஷயத்தைச் சொல்லிட்டேன். 

நான் சொன்ன மறு நொடி, அவர் ரொம்ப சந்தோஷப்பட்டு, `நான் அப்பாவாகிட்டேன்'னு கத்தினார். எனக்கு அவர் கத்தின நொடி கண்ணு கலங்கிடுச்சு. ஏன்னா, இதுக்காகத்தான்... இந்தத் தருணத்துக்காகத்தான் நாங்க அனுபவிக்காத வலியெல்லாம் அனுபவிச்சோம். கேட்காத வார்த்தைகளையெல்லாம் கேட்டோம். நாலு வருஷம் காத்துகிட்டு இருந்தது இதுக்காகத்தான். எங்க கனவு இப்ப நனவாகிட்டு. அவர் முகத்துல ஏற்படுற சந்தோஷத்தைப் பாக்கத்தான் இதுநாள் வரைக்கும் காத்துகிட்டு இருந்தேன்'' என்றவரின் குரல் கம்முகிறது. சரி அவர் சாப்பாட்டு ராமராமே என்று பேச்சைத் திருப்பினோம். சட்டெனச் சிரித்தவர்...

``அவரைப் பொறுத்தவரைக்கும் சோறுதான் உலகம் (சிரிக்கிறார்). மூணு வேளையும் சோறு இருக்கணும். அது பழையதா இருந்தாலும் சரி. டிபன் ஐட்டத்தைத் தொடவே மாட்டார். அதை மட்டும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்கனு சொல்லி அனுப்பினேன். வீட்டுல கிச்சன் பக்கம் வராதவர் இப்ப சமைக்கிறார், நைட்டு டிபன் சாப்பிடுறார் என்பதை எல்லாம் பார்த்தபிறகு ஆடிப்போயிட்டேன். அதே மாதிரி அவர் கோபக்காரரும்கூட. 

பொதுவா அவர் ரொம்பக் கோபப்படுவார். ஆனா அந்த வீட்டுக்குள்ள அவர பாக்கிறப்ப, கோபத்தை கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கார்னு தோணுது. அதை நிறைய பேர் நடிப்புன்னு சொல்றாங்க. வீட்ல அவருக்கு என்மேல உரிமை இருக்கு. அந்த இடத்துலதான் கோபம் வரும். பார்க்கிற எல்லார்கிட்டேயும் கோபப்பட முடியுமா சொல்லுங்க. தப்புன்னு உணர்ற இடத்துல கோபப்படுறார். சம்பந்தமில்லாத இடத்துல அமைதியா இருக்கார் அவ்வளவுதான்.

புறக்கணிப்போட வலி அவருக்கு நல்லா தெரியும். சினிமாவுல வாய்ப்பு இல்லாம பல நாள் கஷ்டப்பட்டுருக்கார். ஆனா, ஒரு தடவைகூட வேற வேலைக்குப் போகலாம்னு அவர் நினைச்சது இல்ல. `நான் என் கலைத்தாயை நம்புறேன்டீ'ன்னு சொல்லிட்டே இருப்பார். அந்த வீட்டுல போறதுக்கு முன்னாடி `யார் உங்களை ஒதுக்கி வைச்சாலும் மனச விட்றாதீங்க. அதேமாதிரி, நீங்களா யாரையும் ஒதுக்கிடாதீங்க. மத்தவங்ககூட சகஜமா பேசுங்க'னு சொல்லி அனுப்பியிருந்தேன்'' என்றவர் பிக் பாஸ்' வீட்டில் நடத்தப்பட்ட நலுங்கு பற்றியும் பேசினார்.

``பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகுறதுக்கு முன்னாடி விஜய் டிவியிலிருந்து, வீட்டுக்குள்ளே உங்களுக்கு நலுங்கு வைக்கலாமான்னு கேட்டாங்க. அவங்க கேட்ட உடனே, ஓகே சொல்லிட்டேன். வீட்டுக்குள்ளே எங்க ரெண்டு பேரையும் உட்கார வைச்சு எங்க அம்மா, மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு நலுங்கு வைச்சாங்க. நலுங்கு வைக்கும்போது அவர் கண் கலங்கி உட்கார்ந்து இருந்தார். அதைப் பார்க்கும்போது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. எங்க குழந்தை ரொம்ப லக்கியானவங்க. ஆமா, பல லட்சம் பேரோட வாழ்த்தை அவங்க வாங்கிட்டாங்களே இப்பவே. நலுங்கு முடிஞ்சதும் மும்தாஜ் மேடம் என் கையில் அவங்களுடைய வளையலைப் போட்டுவிட்டாங்க. `வளைகாப்பு' நடந்த மாதிரி சந்தோஷம் இருந்துச்சு. `அம்மா வீட்டிலேயே இரு, நான் வந்து உன்னைப் பார்க்கிறேன்.. எந்த வேலையும் பண்ணாத.. பிக்பாஸிலிருந்து வெளியில் வந்ததும் உனக்குத் தேவையான உதவிகள் எல்லாத்தையும் நான் பண்றேன்.. நல்லா சாப்பிடு.. உடம்பைப் பார்த்துக்கோ'ன்னு சொல்லி என்னை வழி அனுப்பி வைச்சாரு.