நான் சின்ன வயசுல டிவி பார்க்க ஆரம்பிச்ச காலத்துல இருந்தே சேது அண்ணா ஷோ பண்ணிட்டு இருக்கார். இதை காமெடிக்காக சொல்லலை; சீரியஸாகவே அவர் விஜய் டிவியில ரொம்ப சீனியர். காமெடி ஷோக்கள் எல்லாம் டிவியில் ஃபேமஸாகுறதுக்கு முன்னாடியே `ஜுஜுபி’னு ஒரு காமெடி ஷோவை விஜய் டிவியில் பண்ணினார். அதுல படங்களை, நியூஸை ட்ரோல் பண்ணுவார். கற்காலத்திலிருந்தே காமெடி பண்ணிட்டு இருந்தவரை, ’கலக்கப்போவது யாரு’ சீசன் 3 மூலமா ஆங்கரா இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தினோம்.
அந்த சீசனில் அவரோட சேர்ந்து டிடியும் ஆங்கரிங் பண்ணுனாங்க. நாலாவது சீசனிலும் சேது அண்ணாதான் ஆங்கரிங். ஆனால், அவரோடு சேர்ந்து ரம்யா ஆங்கரிங் பண்ணுனாங்க. விஜய் டிவியில ஒரு பெர்ஃபார்மரா கலக்கினவங்களை ஆங்கரிங் பண்ண வைக்கிற முறையைச் சேது அண்ணாவை வெச்சுத்தான் அறிமுகப்படுத்தினோம். ஆங்கரா இருந்தவரை அதுக்கப்பறம் நடுவராகவும் மாத்தினோம். அஞ்சாவது சீசனில் இருந்து சமீபத்தில் நடந்து முடிஞ்ச ஏழாவது சீசன் வரைக்கும் அவர் நடுவரா இருந்தார்.
ஸ்டாண்டப் காமெடிக்கு ஒருத்தர், ஹூமர் சென்ஸ் - பாடி லாங்குவேஜுக்கு ஒருத்தர், மிமிக்ரிக்கு ஒருத்தர்னு நடுவர்கள் அணியை பிரிச்சோம். அதுல மிமிக்ரிக்கு சேது அண்ணாவை விட்டா வேற ஆள் யாரும் இல்லை. அதுனால அவரையே மிமிக்ரிக்கு நடுவரா போட்டோம். சேது அண்ணாவுக்கும் பாலாஜிக்கும் இடையில காமெடி யுத்தமே நடக்கும். சேது அண்ணன் பாலாஜியை ஓப்பனா கலாய்ப்பார்; அதுக்கு பாலாஜி டென்ஷன் ஆகாம நாசுக்கா அவரை கலாய்ப்பார். இப்படி பல கலாய்ப்புகள் அவங்களுக்குள்ள நடந்திருக்கு; அதில் சில கலாய்ப்புகள் டிவியிலேயும் டெலிகாஸ்ட் ஆகியிருக்கு. அதுல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கலாய் மொமென்ட் ஒண்ணு இருக்கு.
ஒரு நாள் பழனி பெர்ஃபார்ம் பண்ணி முடிச்சதும் பாலாஜி அவர்கிட்ட, ‘என்ன பழனி வெளியூர் நிகழ்ச்சி எல்லாம் புக் ஆகுதா’னு கேட்டார். அதுக்கு அவரும்,` `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி பண்ண ஆரம்பிச்சதும் சில நிகழ்ச்சி வருது சார்’னு சொன்னார். அதுக்குப் பாலாஜி சேதுவைக் காட்டி, `இவரையும் பார்த்துக்கோங்க. ஏதாவது நிகழ்ச்சிக்குப் போனால் இவரையும் அழைச்சுட்டு போங்க. இந்த ஷோவோட ஷூட்டிங் முடிஞ்சதும் ப்ரோகிராமே இல்லாம சும்மாதான் இருக்காப்ள’னு சொன்னார். இது செம ரீச்சாச்சு. ’என்னடா, சேதுவைப் பற்றி சொல்ற கட்டுரையில் ஏன் அவர் கலாய் வாங்குன மொமென்ட்டை சொல்றார்’னு நீங்க யோசிக்கிறது புரியுது. சேது எவ்வளவு சீனியரா இருந்தாலும், ஆன் ஸ்க்ரீனில் அவரை கலாய்ச்சால் சீரியஸா எடுத்துக்க மாட்டார். அதுனாலதான் சேது இன்னைக்கு வரைக்கும் களத்தில் இருக்கார்.
சின்னத்திரையில் எப்படி சேது அண்ணா கலக்கிட்டு இருக்காரோ அதே மாதிரி சினிமாவிலும் பண்ணிட்டு இருக்கார். வி.எஸ்.ராகவன் சாருக்கு சில படங்களில் டப்பிங் பேசியிருக்கார். இன்னும் சில நடிகர்களின் படங்களிலும் அவர்களுக்காக டப்பிங் பேசியிருக்கார். சேது அண்ணாவோட அப்பாவும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்தான். எம்.ஜி.ஆர் படங்களுக்கெல்லாம் டப்பிங் பேசியிருக்கார். புலிக்கு பிறந்தது பூனை ஆகாதுனு தொடர்ந்து நிரூபிச்சுட்டு இருக்கார் சேது அண்ணன்.
’ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை’ தொடரோட இறுதி அத்தியாயம் இது. இந்த தொடர் என்னுடைய நினைவுகளையெல்லாம் ரீ-கலெக்ட் பண்றதுக்கு வசதியா இருந்தது. நிறைய நபர்கள் இந்தத் தொடரை ரெகுரலாக வாசிப்பதாகவும் என்கிட்ட சொல்லியிருக்கிறார்கள். ஒரு முறை ’கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் பாண்டிராஜ், ‘விகடனில் வர உங்க தொடரை தொடர்ந்து படிச்சுட்டு இருக்கேன்’னு சொன்னார். இந்தத் தொடரில் நான் யாரைப் பற்றியெல்லாம் பேசினேனோ அவர்கள் எல்லாம் எனக்கு நன்றி சொன்னார்கள். எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக நானும் விகடனுக்கு எனது நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
சுபம்