Published:Updated:

"பாலா சார் எதிர்பார்த்த கேரக்டரில் என்னால நடிக்கவே முடியல..!" - கவிதா டிங்கு

"பாலா சார் எதிர்பார்த்த கேரக்டரில் என்னால நடிக்கவே முடியல..!" - கவிதா டிங்கு
"பாலா சார் எதிர்பார்த்த கேரக்டரில் என்னால நடிக்கவே முடியல..!" - கவிதா டிங்கு

`விடாது கருப்பு' (மர்ம தேசம்) சீரியல் மூலமாக அறிமுகமானவர், நடிகை கவிதா. 18 வயதில் மீடியாவுக்குள் நுழைந்தவர். நடிகர் டிங்குவைத் திருமணம் செய்து, அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். நீண்ட நேரத் தேடலுக்குப் பின்னர், அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

``ஊருன்னு சொன்னா, சென்னைதாங்க. எந்த ஊரில் இருந்தாலும் சென்னைபோல வராது. எனக்கு அக்கா, தம்பி, தங்கச்சி இருக்காங்க. எல்லோரும் செட்டில்டு. ஃபேமிலியில் நான் மட்டும்தான் மீடியாவைத் தேர்வு செஞ்சேன். சின்ன வயசிலிருந்தே டான்ஸ் மேலே பயங்கர கிரஷ். அப்பா, அம்மாவும் எனக்குப் பயங்கர சப்போர்ட். என் குரு, ஒய்.ஜி.மகேந்திரன் சார். அவரின் ஆக்டிங் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்து நடிப்பைக் கற்றேன். `விடாது கருப்பு', என் முதல் சீரியல். தொடர்ந்து நிறைய சீரியலில் நடிச்சேன்'' என நினைவலையின் முதல் குழியை ஆரம்பித்தார்.

``என்னுடையது காதல் திருமணம். கணவர் டிங்குவை பல ஈவன்ட்களில் சந்திச்சுப் பேசியிருக்கேன். ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டோம். வாழ்க்கையிலும் நாம் சேர்ந்தால் நல்லா இருக்கும்னு தோணுச்சு. எங்க வீட்டுல வந்து பேசினார். திருமணம் நடந்துச்சு. ரெண்டு பேரும் மீடியாவில் இருந்ததால், நான் ஷூட் போயிட்டால், அவர் வீட்டில் இருப்பார். அவர் ஷூட்டில் இருக்கும்போது நான் வீட்டில் இருப்பேன். இதனால், எங்களுக்குள் கம்யூனிகேஷன் குறைஞ்சது. குடும்பத் தலைவியா வீட்டைப் பார்த்துக்கிறதில் எனக்கும் அதிக விருப்பம் இருந்ததால், நடிப்புக்கு பிரேக் எடுத்தேன். கடைசியாக, `திருமதி செல்வம்' சீரியலில் நடிச்சேன்.

2013-ம் வருஷம் அமெரிக்காவுக்கு வந்துட்டோம். இங்கே அவரின் பிசினஸில் உதவியா இருக்கேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாங்க. அவங்களை ஸ்கூலுக்கு அனுப்புறது, சமைக்கிறது, வீட்டைச் சுத்தம் பண்றதுன்னு பிஸியான அம்மாவா இருக்கேன். `டிங்கு டான்ஸ் அகாடெமி' என அமெரிக்காவில் ஒரு டான்ஸ் ஸ்கூல் வெச்சிருந்தோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். இடையில் சென்னைக்கு வரவேண்டிய சூழலால், அந்த அகாடெமியை குளோஸ் பண்ணிட்டோம். ஒரு வருஷம் சென்னை வாசத்துக்குப் பிறகு மறுபடியும் அமெரிக்காவுக்கே வந்துட்டோம்'' என்கிறார் கவிதா.

`சேது' படத்தின் அனுபவம் குறித்துப் பேசியபோது, ``பாலா சார் என் போட்டோ பார்த்துட்டு, என் ஃப்ரெண்ட் மூலமா அப்ரோச் பண்ணினார். படத்தில் ஃப்ரெண்ட் கேரக்டர்னு சொன்னதும் முதலில் நடிக்க மறுத்துட்டேன். `இது ஃப்ரெண்ட் ரோலா இருந்தாலும், மெயின் கேரக்டர்'னு சொன்னார். அப்புறம்தான் நடிச்சேன். அதுக்கு அப்புறம், `நந்தா' படத்தில் லைலா கேரக்டரில் வாய்ப்பு வந்துச்சு. அப்போ எனக்குச் சின்ன ஆபரேஷன் நடந்திருந்ததால், கொஞ்சம் குண்டா இருந்தேன். என்னைப் பார்த்துட்டு, `நீயென்ன குண்டாகிட்டே. இதுக்கு ஒல்லியான தோற்றம் வேணும்'னு சொல்லிட்டார். பிறகு, `பிதாமகன்' படத்தின் சங்கீதா கேரக்டரும் வந்துச்சு. கொடுமை என்னன்னா, அப்போ நான் ஸ்லிம்மாகி இருந்தேன். `என்னம்மா நான் நினைக்கிற கேரக்டருக்கு ஏற்ற மாதிரியே நீ இருக்க மாட்டேங்கிறே. இதுல கொஞ்சம் குண்டா இருக்கணும்'னு சொன்னார். `பரவாயில்லே சார். எனக்கும் படத்தில் நடிக்கும் ஆர்வம் இல்லே'னு சொல்லிட்டு வந்துட்டேன்'' எனச் சிரிக்கிறார் கவிதா.

`பிக் பாஸ்' பார்க்குறீங்களா எனக் கேட்டதும் துள்ளலுடன், ``யூ-டியூப்ல தமிழ் சேனல் பார்ப்போம். என் கணவர் எந்த வேலை கொடுத்தாலும் பர்ஃபெக்டா பண்ணிடுவார். அவரை `ஆல் இன் ஆல் அழகுராஜா'. வீட்டுல எப்பவும் அவரை `பாஸ்'னுதான் சொல்வேன். அந்த பாஸுக்கு, `பிக் பாஸ்' ரொம்பப் பிடிக்கும். தினமும் பார்த்துடுவார். எனக்கு முதல் சீசன்தான் பிடிச்சிருந்தது. இப்போ, எல்லோரும் கேமராவையே பார்த்துப் பார்த்துப் பேசறாங்க. எனக்கு பாலாஜி அண்ணாவை ரொம்ப வருஷமா தெரியும். அதனால், அந்த வீட்டில் அவரைப் பிடிக்குது. மீடியாவில், சோனி, போஸ் வெங்கட் அண்ணா ரெண்டு பேருடனும் பயங்கர குளோஸ். எங்களுக்கு ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கு. என்ன புராஜெக்ட் பண்ணிட்டிருந்தாலும் அதைப் பற்றி ஷேர் பண்ணுவாங்க. சனி, ஞாயிறு போன்ற நாள்களில் வீடியோ கால் பேசுவோம். அதனால், அவங்களை மிஸ் பண்ற ஃபீல் வந்ததில்லை. என் கணவர் ஒரு தமிழ் சீரியல் டைரக்ட் பண்ணணும்னு இருக்கார். வாய்ப்பு இல்லாமல் இருக்கும் திறமையான பழைய ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு அதில் வாய்ப்பு கொடுப்போம். அப்புறம் வேறென்ன... தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங் போவேன். அதான் என் ஃபிட்னெஸ் சீக்ரெட். சீக்கிரமே எங்க டான்ஸ் ஸ்கூலை மறுபடி ஓப்பன் பண்ணணும். அதுதான் இப்போதைக்கு பிளான்'' என்கிறார் கவிதா டிங்கு.