Published:Updated:

"பாஸிட்டிவ், நெகட்டிவ், காமெடின்னு வெளுத்து வாங்கப்போறேன்!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஸ்வேதா

"பாஸிட்டிவ், நெகட்டிவ், காமெடின்னு வெளுத்து வாங்கப்போறேன்!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஸ்வேதா
"பாஸிட்டிவ், நெகட்டிவ், காமெடின்னு வெளுத்து வாங்கப்போறேன்!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஸ்வேதா

"பாஸிட்டிவ், நெகட்டிவ், காமெடின்னு வெளுத்து வாங்கப்போறேன்!" - 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஸ்வேதா

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடரில், சில சமயம் வில்லி, திடீரென பாசமான மருமகள், சட்டென காமெடி என நவரசங்களால் அசத்திவருபவர், ஸ்வேதா. கன்னட சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர். தமிழ் சீரியல் உலகில் புதியதாக என்ட்ரி கொடுத்துள்ளவரிடம் பேசினோம்.

''எனக்கு பெங்களூர். எம்.பி.ஏ படிச்சு முடிச்சதும், பெங்களூரில் ஒரு ஐடி கம்பெனி வேலையில் மூன்று வருஷம் இருந்தேன். ஆங்கரிங் பண்றதில் ரொம்ப நாளாவே ஆர்வம் இருந்துச்சு. டிரை பண்ணிப் பார்க்கலாம்னு இறங்கினேன். முதல் முயற்சியிலேயே வாய்ப்பு கிடைச்சது. கன்னடத்தில் ஆங்கரிங் பண்ண ஆரம்பிச்சேன். அதன்மூலமா கன்னட சீரியலில் நெகட்டிவ் ரோல் வாய்ப்பு கிடைச்சது. இப்படித்தான் என் மீடியா பயணம் ஆரம்பிச்சது'' என இன்ட்ரோ கொடுக்கும் ஸ்வேதா, தமிழ் சீரியல் என்ட்ரி குறித்து கேட்டதும் குஷியாகிறார்.

''என் ஃப்ரண்ட்ஸ் எல்லோருமே தமிழ் சீரியல்கள் சூப்பரா இருக்கும்னு சொல்வாங்க. அதனாலே தமிழ் சீரியலில் நடிக்கும் ஆசை வந்துச்சு. அந்த நேரம், கன்னட சீரியலில் என்னைப் பார்த்துட்டு, 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' கேரக்டருக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு கூப்பிட்டாங்க. என் முகம் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமா இருக்கிறதா பாராட்டினாங்க. என்னை செலக்ட் பண்ணின 'ஜோனி பிலிம்ஸ்' புரொடக்‌ஷனுக்கு ரொம்ப நன்றி. ஆரம்பத்தில் தமிழ் தெரியாமல் எப்படி நடிக்கப் போறோம்னு பயமா இருந்துச்சு. டைரக்டர், என்னோடு நடிக்கும் ஆர்ட்டிஸ்ட் எல்லோரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. இப்போ ஓரளவுக்கு தமிழ் பேசுறதுக்குக் காரணம் அவங்கதான்'' என்கிறார் மிஸஸ் ஸ்வேதா.

''ஆமாங்க. எனக்குத் திருமணம் ஆகிடுச்சு. கணவர் பிசினஸ்மேன். தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதும் வீட்டிலும் தமிழில் பேசி சீன் போடுவேன். இப்போ தப்பில்லாமல் கோர்வையா பேசறதைப் பார்த்து ஆச்சர்யப்படறாங்க. என் மாமியார், என் அம்மா, அப்பா எல்லோருமே என்னை உற்சாகப்படுத்தறாங்க. இன்னும் நல்லா தமிழ் பேச கத்துக்கணும். எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறது பிடிக்கும். அதில்தான் நம்முடைய பெஸ்ட்டை கொடுக்க முடியுது. இந்த சீரியலில் பாஸிட்டிவ், நெகட்டிவ், காமெடின்னு கலந்துகட்டின கேரக்டரா இருக்கிறதில் டபுள் சந்தோஷம். 

என்னுடன் நடிக்கும் அஷ்வினியும் பெங்களூர்தான். அவங்களோடு நல்லா ஜெல் ஆகிட்டேன். அந்த டீமே செம்ம ஃப்ரெண்ட்லி. இந்த சீரியலில் என் மாமியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறவங்க, 'உன் நடிப்பு வித்தியாசமா நல்லா இருக்கு'னு பாராட்டறாங்க. என்னை வெளியில் பார்க்கிறவங்க 'கண்மணி' என கேரக்டர் நேம் சொல்லியே கூப்பிடறாங்க. தமிழ் மக்கள் அவர்களில் ஒருத்தியா என்னை ஏற்றுகொண்டதில் ரொம்ப சந்தோஷம். சிலர் என் நடிப்பை பாராட்டி பேசுறாங்க, சிலர் என்னை திட்டுறாங்க. ரெண்டையுமே ஹாப்பியா ஏத்துக்குறேன். மியூசிக்கலி, இன்ஸ்டாகிராமில் நிறைய பேர் என்னை சப்போர்ட் பண்றாங்க. காஸ்டியூம் விஷயத்தில் நான் கொஞ்சம் கவனமா இருப்பேன். சென்னை, பெங்களூர் இரண்டு இடத்திலும் ஷாப்பிங் பண்றேன். எனக்குப் பிடிச்ச ஜூவல்லரி கலெக்‌ஷன்ஸ், சேலைன்னு எங்கப் பார்த்தாலும் வாங்கிடுவேன். மேட்ச் இல்லாம போடுறது இப்போ புது டிரெண்ட் ஆகிடுச்சு. 

இப்போ, கன்னடத்தில் ஒரு மூவி பண்ணிட்டிருக்கேன். தமிழிலும் வாய்ப்புகள் வருது. சரியாக அமைஞ்சால் நிச்சயம் நடிப்பேன். மாற்றுத்திறனாளி, சைக்கோ போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கணும்னு ஆசை'' எனப் புன்னகைக்கிறார், ஸ்வேதா.

அடுத்த கட்டுரைக்கு