Published:Updated:

``டாஸ் போட்டு வெளியேற்றியது எனக்குப் பிடிக்கலை!" - `Mr & Mrs கில்லாடிஸ்' ஆனந்தி

மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ் இறுதிச் சுற்று குறித்து ஆனந்தி அதிருப்தி.

``டாஸ் போட்டு வெளியேற்றியது எனக்குப் பிடிக்கலை!" - `Mr & Mrs கில்லாடிஸ்' ஆனந்தி
``டாஸ் போட்டு வெளியேற்றியது எனக்குப் பிடிக்கலை!" - `Mr & Mrs கில்லாடிஸ்' ஆனந்தி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிற ரியாலிட்டி ஷோ, `மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிஸ்' (சீஸன் 2). சின்னத்திரை பிரபலங்கள் தம்பதி சகிதமாகக் கலந்துகொண்ட இந்த ஷோவில், பலதரப்பட்ட ரிஸ்கான டாஸ்குகள் தரப்பட்டன. உயரமான இரு கட்டடங்களை ஓர் அடி அகலமுள்ள பலகை உதவியுடன் சைக்கிள் மூலம் கடப்பது, பாம்புகள், பல்லிகள் மத்தியில் நடப்பது... போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம். ஷோவுக்கான ஷூட்டிங் தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் நடைபெற்று வந்த நிலையில், நிகழ்ச்சிக்கான இறுதிச் சுற்று சமீபத்தில் படமாக்கப்பட்டு, இரு தினங்களுக்கு முன்பு (16/09/18) ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் சித்தார்த் - ப்ரியா ஜோடி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்கள். 

இந்நிலையில், ஷோவைத் தொடர்ந்து பார்த்து வந்தவர்கள், செமி ஃபைனல் வரை வந்த ஆனந்தி - அஜய் ஜோடி டாஸ் மூலம் ஷோவிலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆனந்தியிடம் பேசினோம்.

``போட்டின்னா வெற்றி தோல்வி ரெண்டுமே இருக்கும். இது எனக்கும் தெரியும். ஆனா, என்னோட ஒரு ஆதங்கம் என்னனு கேட்டா, நான் விருப்பப்பட்டே கலந்துக்கிட்டாலும், குழந்தை பிறந்து நாலே மாசம் ஆகியிருந்த சூழல்ல ஷோவுக்குள்ள வந்தேன். பையனையும் பார்த்துக்கிட்டு ஷூட்டிங்லேயும் கலந்துகிட்டதெல்லாம் மறக்க முடியாத த்ரில்லிங் அனுபவமே. மீடியா புகழை விரும்பாத என்னோட கணவரையும் வற்புறுத்தி ஷோவுல கலந்துக்க வெச்சேன். எல்லா டாஸ்க்கையும் நாங்களும் சிறப்பாகவே செஞ்சுக்கிட்டு வந்தோம்.

பாம்பு, பல்லிகள் அடைக்கப்பட்ட பெட்டியிலிருந்து கீ செயினை எடுக்கிற டாஸ்கை முதல் ஆளா அட்டெண்ட் பண்ண எல்லோருமே பயந்தாங்க. அப்போ, `சேலஞ்சிங்கா எடுத்துக்கிட்டு முதல் ஆளா பண்ண யாராவது முன் வர்றீங்களா?'னு கேட்டாங்க. அப்போ சித்தார்த் ஜோடி முன் வர்றதா சொன்னாங்க. ஆனா, அந்த டாஸ்கை அவங்க முதல் ஜோடியா பண்ணலை. நானும் என் கணவருமே செய்தோம். எந்தவொரு ரிஸ்க்கான வேலையையும் முதன் முதலா செய்றவங்களுக்குத்தானே பயம் அதிகமா இருக்கும். அவங்க அதை முடிச்சுட்டா, பின்னாடி வர்றவங்க கொஞ்சம் தைரியமா இறங்குவாங்க இல்லையா... அந்த லாஜிக்படி, எனக்குப் பின்னாடி வந்த சித்தார்த் ஜோடி அந்த டாஸ்கை கம்ப்ளீட் செய்தது. டெலிகாஸ்ட்ல அந்த டாஸ்கை சித்தார்த் ஜோடிதான் முதல்ல செஞ்சு முடிச்சமாதிரி காட்டிட்டாங்க.

இது பரவாயில்ல... நடந்த இன்னொரு விஷயம்தான் என்னை ரொம்பவே பாதிச்சது. அதாவது, செமி ஃபைனல்ல நாங்களும், சித்தார்த் ஜோடியும் டை-அப் ஆகி, சரி சமமா இருந்தோம். ஆனா, வாங்கிய ஓட்டு எங்ககிட்டதான் அதிகமா இருந்தது. அதுக்கு முந்தைய ஸ்டேஜ்ல எல்லாம் டை-அப் ஆனா கம்மியான ஸ்கோர் வாங்கினவங்களை வெளியேற்றிய நிகழ்ச்சியினர், அந்த முறை அப்படிச் செய்யாம டாஸ் போட்டுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. டாஸ் எனக்கு எதிரா விழவே... எங்களால ஃபைனலுக்குப் போக முடியலை. அதுல உண்மையிலேயே எனக்கு வருத்தமே. பொதுவா, எந்த ரியாலிட்டி ஷோவா இருந்தாலும் ஒரு டாஸ்கை முதல் ஆளா செய்றவங்க பலி ஆடுதான். நான் கேட்க விரும்புகிற ஒரே கேள்வி, டாஸ் போட்டு எப்படிங்க திறமையாளரைத் தேர்ந்தெடுக்க முடியும்?!" என்கிறார், ஆனந்தி.

நியாயம்தான்!