
சுஜிதா சென்
மாற்றம்... முன்னேற்றம்... திவ்யதர்ஷினி.! ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த ஆனந்தத்திலிருக்கிறார் டிடி.
“ `துருவ நட்சத்திரம்’ படத்துல எனக்கு ரொம்பச் சின்ன ரோல்தான். ஆனா, ரொம்ப பவர்ஃபுல்லான கதாபாத்திரம். என்னோட கெட்டப், லுக், ஸ்டைல் எல்லாமே இந்தப் படத்துல மொத்தமா மாறியிருக்கு. ஷூட்டிங் சமயத்துல சிம்ரன் மேம், ராதிகா மேமோட சேர்ந்து ஒரு பூமராங் வீடியோ பண்ணினேன். அதிலிருந்து எல்லோரும், ‘அடுத்த வீடியோ எப்போ வரும்?’னு கேட்டுட்டிருக்காங்க. மொத்தத்துல என்ஜாய் மட்டுமல்ல, நடிப்புக்கான முதல் கட்டப் பாடமாகவும் அமைஞ்சது இந்தத் `துருவ நட்சத்திரம்.’ ”

“செம! ஆமா, கெளதம் மேனனுடன் வொர்க் பண்ணும் வாய்ப்பு எப்படி இருந்தது?”
“இந்த வருஷம் எனக்கு டபுள் சந்தோஷம். ஒண்ணு ‘உலவிரவு’, இன்னொண்ணு ‘துருவநட்சத்திரம்’. `உலவிரவு’ கெளதம் மேனன் சாரோட `ஒன்றாக’ யூ-ட்யூப் சேனலுக்காகப் பண்ணிய மியூஸிக் வீடியோ. டேட்டிங் நைட்டோட தமிழ்ச்சொல்தான் ‘உலவிரவு’. இந்த மியூசிக் வீடியோபத்திக் கெளதம் மேனன் சார் என்கிட்ட சொன்னப்பவே, `நீங்க நல்லா யோசிச்சுத்தான் சொல்றீங்களா... கண்டிப்பா நான்தான் நடிக்கணுமா?’னு கேட்டேன். அதுவும் ரொமான்டிக் பாட்டுனு சொன்னவுடனே ரொம்பவே பயந்துட்டேன். கெளதம் சாரோட படங்கள்ல வர்ற ரொமான்ஸ் காட்சிகளின் அழகியலை நான் கெடுத்துடக்கூடாதேனு தோணுச்சு. ஆனா தைரியம் சொல்லிக்கொடுத்து, நடிக்கவெச்சு வீடியோவை செம சூப்பராக்கிட்டார் கெளதம் சார்.
இந்தப் பாட்டு யூ-ட்யூப் ட்ரெண்டிங்ல இருந்ததைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டேன். பெரிய நடிகர், நடிகைகள் யாரும் இந்தப் படத்துல நடிக்கலை. அப்படியிருந்தும் இந்தப் பாடல் ஹிட் ஆயிருக்குன்னா, அதுக்குக் காரணம் முழுக்க முழுக்க கெளதம் சார், கார்த்தி சார், அப்புறம் மதன் கார்க்கி சார்தான்.”

‘`புரொஃபஸர் வேலை பார்க்குறீங்கன்னு தகவல் வந்து விழுந்ததே?’’
“ஆமாம். ஆனா, இப்போ இல்ல, எம்.பில் டூரிஸம் அண்டு மேனேஜ்மென்ட் படிச்சுட்டு, ஒரு தனியார்க் கல்லூரியில ஆறுமாசம் முழுநேர விரிவுரையாளரா இருந்தேன். முதல் நாளே நடத்தப்போற பாடங்களைக் குறிப்பெடுத்துக்கிட்டு கரெக்ட்டா க்ளாஸ் நடத்துவேன். ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர்லாம் இல்லை. நம்மளை நம்பி நிறைய மாணவர்கள் இருக்காங்க என்பதால் சின்சியராப் பாடம் நடத்துவதை மட்டுமே ஒரே வேலையா வெச்சிருந்தேன். வெளிநாடுகள்ல நிகழ்ச்சி பண்றது, நேரலை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குறதையெல்லாம் நிறுத்திட்டேன். அந்த ஆறுமாசத்துல நான் கத்துக்கிட்ட பாடங்கள் எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்துச்சு. இப்போ பி.ஹெச்டி படிச்சிட்டிருக்கேன்.”
“திருமண உறவிலிருந்து வெளியே வந்துட்டீங்களே..?’’
``ம்ம்ம்... என்னுடைய பர்சனல் வாழ்க்கை பத்தி நான் மட்டும் சொன்னா, அது சரியா இருக்காது. அது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. அதனால்தான் எதையும் வெளியே சொல்லாமல் இருக்கேன். நான் நல்லா இருக்கணும்னு அவர் நினைப்பார்; அவர் நல்லா இருக்கணும்னு நானும் நினைக்கிறேன். இந்த ரிலேஷன்ஷிப்ல இருந்ததுக்காக நான் கவலைப்படலை. காதல்ல விழுறதும் வாழ்க்கையில தேவைப்படற ஒண்ணுதான். ஆனா, இப்போதைக்கு என் மனசுல யாரும் இல்லைங்கிறதுதான் உண்மை!”