Published:Updated:

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
பிரீமியம் ஸ்டோரி
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

பெண்ணென்று கொட்டு முரசே!

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

பெண்ணென்று கொட்டு முரசே!

Published:Updated:
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
பிரீமியம் ஸ்டோரி
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

தமிழன்னை

பி.சுசீலா   

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

`தமிழுக்கும் அமுதென்று பேர்' எனப் பாடிய இவரின் குரலுக்கும் அமுதென்றுதான் பேர். கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து,  அறுபதாண்டுகளாகத் தமிழ் மக்களின் இதயங்களைத் தனது குரலால் தாலாட்டி வரும் இசையன்னை, பி.சுசீலா. முறையாக இசை பயின்றவர். 1950-ம் ஆண்டு சென்னை வானொலியில் 'பாப்பா மலர்' நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் கவனம்பெற்று சினிமாவுக்குள் நுழைந்தார். 1953-ம் ஆண்டு `பெற்ற தாய்' எனும் படத்தில் தன் முதல் பின்னணிப் பாடலைப் பாடினார். `மாலைப் பொழுதின் மயக்கத்திலே', `சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து', `ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்', `அமுதைப் பொழியும் நிலவே', `மலர்ந்தும் மலராத' என இவர் பாடிய ஒவ்வொரு பாடலும் ரசிகர்களின்
மனதை உருகவைத்தது; உறவுகளின் ஆழத்தை உணரவைத்தது; உழைத்துக் களைத்தவர்களை உறங்க வைத்தது. பன்னிரண்டு மொழிகளில் 17,695 பாடல்களைப் பாடினார். 2016-ம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி இணையர்களின் இசையில் இவர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாத ஒலிச் சொத்து. `பின்னணி பாடியவர்கள் டி.எம்.செளந்தரராஜன் - பி.சுசீலா' என வானொலியில் அறிவிப்பு வந்ததும் பாமர இதயங்கள் பரவசமடைந்தன. மகிழ்ச்சியோ, துக்கமோ... தஞ்சமடைவதற்கான ஆறுதல் தமிழ்க்குரல் சுசீலா. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசைக்குரல் கொடுத்தவர் சுசீலாவே. இளம் தலைமுறைப் பாடகர்கள் பாடி பயிற்சிபெறும் பல்கலைக்கழகமாகவே திகழ்கிறார் இந்த இசைத் தமிழன்னை.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

அவள் ஐகான்

ஜோதிகா 


‘ஜோ’
என்ற ஒற்றை எழுத்து, தமிழ் சினிமாவில் அழகுக்கும் திறமைக்கும் அடையாளம். இயக்குநர் பிரியதர்ஷனால் இந்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜோதிகா, தமிழில் வந்தது ‘வாலி’யின் வாயிலாக. ‘ஓ சோனா சோனா’ பாட்டில் மழையில் நனைந்தபடி அறிமுகமான ஜோதிகாவின் காட்டில், அதன்பிறகு அடைமழைதான். ‘வாலி’யில் சில நிமிடங்கள் வந்துபோகும் காட்சி என்றாலும், ‘குஷி’ திரைப்படத்தில் தன் நேர்த்தியான நடிப்பின் மூலம் திரையை ஆக்கிரமித்துக் கொண்டார் ஜோதிகா. ‘மொழி’யில் வாய் பேசாத பெண்ணாக, கண்களிலும் முகபாவங்களிலும் உணர்ச்சிக்குவியலை வெளிக்காட்டினார். ‘சந்திரமுகி’யில் `முழுசா மாறி நின்ற கங்கா'வாக அசத்தினார். ‘லிட்டில் ஜான்’ படத்தில் கட்டை விரல் சைஸுக்குக் குட்டையாகிப்போன நாயகனுடன் ஜாலி லூட்டி அடித்தார். ‘பச்சைக்கிளி முத்துச்சர’த்தில் மிரட்டும் வில்லியாக ஜோதிகாவின் இன்னொரு முகம் மிளிர்ந்தது. இப்படி நடிப்பால் தன்னை நிரூபித்த ஜோதிகா, சினிமாவைத் தாண்டியும் ஜில்லுன்னு ஒரு காதல் செய்தது சூர்யாவுடன். ‘காக்க காக்க’ என்று கரம்பிடித்து தமிழ்நாட்டு மருமகளானார். திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பராமரிப்பில் நேரம் செலவழித்தவர், ஆறாண்டுகளுக்குப் பிறகு அதே கம்பீரத் துடன், அழகு கூடித் திரும்பிவந்தார் ‘36 வயதினிலே’ படத்தின் மூலம். ‘மகளிர் மட்டும்’ படத்தில் சமூகப்பொறுப்புள்ள ஆவணப்பட இயக்குநராக அசத்திய ஜோதிகாவின் ‘நாச்சியார்’ அவதாரமும் `நச்’சென இருந்தது. 18 ஆண்டுகளாக நடை, உடை, பாவனைகளில் நம்மை ரசிக்கவைத்துக்கொண்டிருக்கும் இந்த சொக்கவைக்கும் சோனா ஜோதிகாவே தமிழ்நாட்டுப் பெண்களின் பெருமைக்குரிய ஆளுமை.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

டார்லிங் ஆஃப் தமிழ்நாடு

ஓவியா

ணவமில்லா ராணுவத் தலைவி இவர். ‘ஓவியா ஆர்மி’தான் சென்ற ஆண்டின் சென்சேஷனல் ஹிட். ‘நான் நானாகவே இருப்பதே நான்’ என்று ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வாழ்ந்து நிரூபித்த ஓவியாவுக்கு ரசிகர் எண்ணிக்கை தினம் தினம் உயர்ந்தது. தன் மனதுக்கு என்ன படுகிறதோ, அதை முகத்துக்கு நேரே `பளிச்'செனப் பேசிவிடும் நேர்மைதான் ஓவியாவின் ஐ.டி கார்டு. இந்த நேர்மையைத்தான் ரசிகர்கள் தாறுமாறாகக் கொண்டாடினார்கள். ‘கொக்கு நெட்டக் கொக்கு’ ரசிகர்களின் தவிர்க்கமுடியாத கீதமானது; ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ சமூக வலைதளங்களின் பொன்மொழி ஆனது.  அவர் பாடிய ‘மரண மட்ட’ வைரலானது. ரசிகர்களால் அந்தளவுக்குக் கொண்டாடப்பட்டார் இந்தப் பெண். `பிக்பாஸ்' வீட்டைவிட்டு வெளியேறியவர் மக்களோடு மக்களாகச் செல்லும் இடங்களிலெல்லாம் செல்ஃபிகளால் சிறகடித்தார். 

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

திரைத் திறமையாளர்

ஆண்ட்ரியா

ழகு, திறமை, கம்பீரம்... இதுதான் ஆண்ட்ரியா. காதல் பதுமை கதாநாயகியாக மட்டுமல்லாமல், வெவ்வேறு பாத்திரங்களில் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் உள்ளங்கவர் நாயகி. எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயங்காத தைரியத் தாரகை. நடிகை மட்டுமல்ல... பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர், நடனக்கலைஞர் எனப் பலப்பல அவதாரங்கள் எடுத்து அசத்துபவர். ‘இதுவரை இல்லாத உணர்விது’ என்று இவர் பாடினால், நம் இதயத்தில் என்னென்னவோ உணர்வுகள் ஊற்றெடுக்கும். ‘தரமணி’ திரைப்படம் ‘ஆல்தியா’ என்ற அச்சைச் சுற்றியே சுழன்றது. கிளிசரின் அழுகை இல்லை; கதறும் வசனங்கள் இல்லை. அலட்டிக்கொள்ளாத, இயல்பான நவீனப் பெண்களில் ஒருத்தியாகவே மாறி, தனித்து வாழும் பெண்களின் வலியை நமக்குள் கடத்தினார் ஆண்ட்ரியா. இந்த நிதான நடிப்பு ராட்சஸியே நம் உள்ளம் கவர்ந்த நட்சத்திரம்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

இணைய நட்சத்திரம்

லக்ஷ்மி ப்ரியா சந்திரமெளலி

நா
டகத்துறை வழியே நடிப்புக்கு வந்தவர் லக்ஷ்மி ப்ரியா. எம்.பி.ஏ படித்திருந்தாலும் விரும்பிய நடிப்பை விடாமல் பற்றிக்கொண்டன லக்ஷ்மியின் கரங்கள். மூன்றாண்டுகளாகத் திரைத்துறையில் தனிமுத்திரை பதிக்க விடாமுயற்சியோடு உழைத்து வருபவர் லக்ஷ்மி. ஆழிக்கடல், 12 ஏஎம், கலைவு என இவர் நடித்த குறும்படம் ஒவ்வொன்றும்  யூடியூப் சேனல்களில் சக்கைப்போடு போட்டது. `மாயா', `ரிச்சி' என அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தாலும், ‘லட்சுமி’ குறும்படம் இவருக்கான பரவலான வெளிச்சத்தை உலகெங்கும் பெற்றுத்தந்தது. வெளிச்சத்தோடு வந்த விமர்சனங்களையும் நேருக்கு நேர் எதிர்கொண்டதில் லக்ஷ்மி வெளிப்படுத்தியது தேர்ந்த கலைஞர்களுக்கே உரிய முதிர்ச்சியின் வெளிப்பாடு. கமல்ஹாசனின் பிரபலமான கதாபாத்திரங்களாகவே மாறி இவர் நடத்திய போட்டோ ஷூட் பெரிய ஹிட். ஆர்வத்தோடும் அர்ப்பணிப்போடும் இன்னும் பல உச்சங்களைத் தொடவிருக்கிறார் இந்த வித்தியாச நாயகி!

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த சின்னத்திரை நட்சத்திரம்

வாணி போஜன்

பெ
யர்தான் வாணி போஜன். தமிழ் இல்லங்களில் இவர் எப்போதும் சத்யாதான். தமிழ்நாட்டையே கவர்ந்த தெய்வ மகள். கோத்தகிரியிலுள்ள ஒரு மலைக்கிராமத்தில் பிறந்தவர். அப்பாவின் வேலை காரணமாகச் சென்னையில் இடம்பெயர்ந்தவருக்கு, இந்நகரம் பல புதிய கதவுகளைத் திறந்துவிட்டது. ஏர் ஹோஸ்டஸ் வேலையில் சிறிதுகாலம் சிறகடித்துப் ‘பறந்து’விட்டு, மாடலிங், விளம்பரங்கள் எனத் தரையிறங்கினார் இந்தத் தேவதை. ‘தெய்வ மகள்’ தொடர் இவரைச் சின்னத்திரைக்கு சிவப்புக்கம்பளம் விரித்து அழைத்துவந்தது. சின்னத்திரை ரசிகர்கள் ‘சத்யா’வைத் தங்கள் வீட்டுப்பெண்ணாகவே கொண்டாடித் தீர்த்தனர். ரேஷன் கார்டில் சேர்க்கவில்லை என்றாலும், ‘சத்யா’ தமிழ்க் குடும்பங்களில் ஒருவராகவே ஒன்றிப்போனார். நேர்த்தியான இவரின் காஸ்ட்யூம்களுக்கு ரசிகைகள் பலர். விரைவில் தன் வெள்ளித்திரைப் பயணத்தையும் தொடர விருக்கிறார் வாணி போஜன்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

தொல்கலை நாயகி

ஐஸ்வர்யா மணிவண்ணன்

லங்கை பூட்டிப் பரதம் ஆடிவந்தவர் ஐஸ்வர்யா மணிவண்ணன். மற்றுமொரு கலையாக, சிலம்பமும் கற்றுக்கொண்டார். ‘பரதமா...சிலம்பமா?’ என்ற கேள்விவந்தபோது, பரதம் ஆட பலர் இருப்பதால், சிலம்பத்தில் முழு கவனம் செலுத்தினார். சிலம்பம், `ஆதியில் பெண்களின் கைகளிலும் தவழ்ந்த தற்காப்புக் கலை' என்று சொல்லும் ஐஸ்வர்யா, `பரதத்தில் உள்ள அசைவுகள், உடல்மொழி, பாவனைகள், இசை மெட்டு எல்லாம் சிலம்பத்திலும் உள்ளன' என்கிறார். கைத்தறிப் புடவையில் இந்த ஹைடெக் பெண் சிலம்பம் சுற்றும் கம்பீரம்... கண்களுக்குக் கலை விருந்து, மனதுக்கு ஊக்கம். சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றிருக்கும் வீரத்தமிழச்சி ஐஸ்வர்யா.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

இலக்கிய ஆளுமை

தமிழ்நதி

போ
ரின் கொடூரத்தையும் புலம்பெயர் வாழ்வின் இன்னல்களையும் தன் எழுத்தில் அழுத்தமாகப் பதித்தவர் தமிழ்நதி. இலங்கை திரிகோணமலையில் பிறந்த இவரது இயற்பெயர் கலைவாணி. தொடர்ந்த போர்ச்சூழல் காரணமாக 90-களின் தொடக்கத்தில் கனடாவில் தஞ்சமடைந்தார். `சூரியன் தனித்தலையும் பகல்' தமிழ்நதியின் முதல் தொகுப்பு. சொற்களால் நிரம்பிய தனிமையும் தனிமையால் நிரம்பிய சொற்களும் இவர் கவிதைகளுக்குக் கனம் சேர்த்தன. பிறகு `இரவுகளில் பொழியும் துயரப்பனி' கவிதைத்தொகுப்பு வெளியானது. `கானல் வரி' என்னும் குறுநாவலும், `ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்' கட்டுரைத் தொகுப்பும், `நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது' எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாயின. இவரின் `பார்த்தீனியம்' நாவலுக்கு ஈழத்து இலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு. இந்த ஆண்டு  ‘மாயக்குதிரை’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. சமகாலத்தில், ஈழ மக்களின் முறியடிக்கப்பட்ட விடுதலைப் போராட்டம் தொடர்பான பதிவுகளை அரசியலின் வெப்பம் குறையாமலும், கலையம்சத்தின் அழகியலைக் கைவிட்டுவிடாமலும் நேர்த்தியாக எழுதுவதில் தனித்துத் தெரிகிறவர் தமிழ்நதி.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

இலக்கிய ஆளுமை

சு.தமிழ்ச்செல்வி

‘பெ
ண் அனுபவிக்கின்ற அவமானங்களை, இழிவுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாத எனது படைப்பு மனம், புனைவுகளில் அதற்கான நிவாரணத்தை, விடுதலையைத் தேடிக்கொள்கிறது' என்று சொல்லும் சு.தமிழ்ச்செல்வி, தமிழ் இலக்கிய வெளியின் வலுவான பெண் குரல். திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கற்பகநாதர்குளம் கிராமத்தில் பிறந்த இவர், இப்போது வசிப்பது விருத்தாசலத்தில். மாணவர்கள் கொண்டாடும் ஆசிரியர், பிள்ளைகள் கொண்டாடும் அம்மா, கணவர் கொண்டாடும் மனைவி எனக் கனிவும் கம்பீரமும் குறையாமல் வாழ்பவருக்கு, எழுத்தாளர் என்பதே அழுத்தமான அடையாளம். புறக்கணிக்கப்பட்ட,  கவனிப்பாரற்ற மக்களின் கதைகளை எழுத்தாக வடிப்பதில் சு.தமிழ்ச்செல்விக்கு நிகராக வேறொருவரைக் கூறுவது சிரமம். களத்துக்கே சென்று, மனிதர்களோடு வாழ்ந்து, அனுபவங்களைப் பெற்று, அவற்றின் ஈரமும் வெப்பமும் மாறாமல் எழுத்தில் வார்த்து எடுப்பவர் சு.தமிழ்ச்செல்வி. `கீதாரி' எனும் இவரது நாவல், விரைவில் திரைப்படமாக வெளிவரவிருக்கிறது. மானுட நேசத்தை மண்ணின் வாசத்தோடு எழுத்துகளில் உலவச்செய்கிற மனுஷி தமிழ்ச்செல்வி.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

நம்பிக்கை நாயகி

ப்ரீத்தி ஸ்ரீனிவாசன்

சி
றுவயதிலேயே விளையாட்டில் சாதனை படைக்கத் தொடங்கியவர், ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். `அண்டர் 19' தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் டீமின் கேப்டன் பொறுப்பேற்றவர். மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றவர். இப்படி ஒருபக்கம் கிரிக்கெட், மறுபக்கம் நீச்சல் என ஏராளமான வெற்றிகளைத் தாண்டி வந்தவரை, 18 வயதில் முடக்கிப்போட்டது விதி. ஒரு விபத்தில் தண்டுவடம் பலமாகப் பாதிக்கப்பட, வீல் சேரே உலகமாகிப்போனது ப்ரீத்திக்கு. கழுத்துக்குக் கீழே உடல் செயல்படாமல் போனாலும் முடங்கிவிடக் கூடாது என்று எழுந்த இவர், இன்று பல்லாயிரம் பேருக்குத் தன்னம்பிக்கை பற்றுக்கொடி. ஆம், ப்ரீத்தி மறு உருவம் எடுத்தார். தன்னை எழுத்தாளராகவும் ஓவியராகவும் சமூகப் போராளியாகவும் மீட்டெடுத்தார். தன்னைப்போலவே தண்டுவடப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் களுக்காக ‘சோல்ஃப்ரீ’ அமைப்பை நிறுவினார். அவர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை விதைத்தார். அப்படி அவர் விதைத்தவர்கள் இன்று தளிர்களாக எழுந்திருக்கிறார்கள். அப்படியோர் அன்பு ஆலமரம் ப்ரீத்தி.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த இசைக்கலைஞர்

மனோன்மணி

வட
இந்திய இசைக்கருவிகளில் தனித்துவமானது சாரங்கி. வாசிப்பதே மிகவும் சவாலானது. பார்த்துக்கொண்டிருந்த ஐ.டி வேலையை உதறிவிட்டு சாரங்கி பிடிக்கவைக்கும் அளவுக்கு இசையே மனோன்மணிக்கு எல்லாமானது.

ஐந்து வருடங்களாக சென்னையிலிருந்து டெல்லி சென்று சாரங்கி கற்ற மனோன்மணி, இப்போது அதில் ஸ்வரங்களை இழைத்துக்கொண்டிருக்கிறார். இளையராஜாவின் இசைக்குழுவில் `தில்ரூபா’ எனும் இசைக்கருவியை வாசித்துவரும் சரோஜாவின் மகளான மனோன்மணி, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, இமான் உள்ளிட்டவர்களின் இசையில் சாரங்கி வாசித்திருக்கிறார். ‘கூட மேல கூட வெச்சி’ பாடல் ஆரம்பிக்கும்போது ஒலிக்கும் சாரங்கி நாதம், இவர் விரல் வழியே கசிந்ததுதான். சாரங்கி இசைக்கருவியைப் பிரபலப்படுத்தும் நோக்கில் திரைப்பாடல்களை சாரங்கியில் வாசித்து இவர் சோஷியல் மீடியாவில் பகிர்வதெல்லாமே இசை ரசிகர்கள் மத்தியில் வைரல் ஹிட். ஒரு தவம்போலிருந்து தனித்துவமான இசை பழகி, ராக தேவதைகளின் சிறகுகளுக்குத் தன் தந்திகளால் உயிர்தருகிறார் மனோன்மணி. 

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த அதிகாரி

அர்ச்சனா ராமசுந்தரம்

 கா
வல்துறையில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்குச் சமகால முன்னுதாரணம், அர்ச்சனா ராமசுந்தரம் ஐ.பி.எஸ். 1980-ம் ஆண்டு பேட்ச்சில் பயிற்சி பெற்ற இவரை, முதல் போஸ்ட்டிங் அளித்து வரவேற்றது தமிழ்நாடு. அசிஸ்டென்ட் சூப்பரின்டெண்டன்ட் ஆஃப் போலீஸாக வேலூர் உட்பட பணியாற்றிய நகரங்களில் எல்லாம் இவர் காட்டிய அர்ப்பணிப்பு அசாத்தியமானது. பணி உயர்வுகள், விருதுகள் என இவரை மேலும் மேலும் உயரத்துக்குக் கொண்டுசென்றது அந்த உழைப்புதான். மத்திய புலனாய்வுத் துறையின் உயரதிகாரியாகவும் பொறுப்பேற்றவர். பல சவாலான வழக்குகளில் அதிரடி நடவடிக்கைகள் மூலம் உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர். இவர் கையாண்ட ஆள் கடத்தல் வழக்குகள், காவல்துறைக்கு வழிகாட்டும் முன்னோடி அத்தியாயங்கள். பாரா மிலிட்டரி ஃபோர்ஸில் டைரக்டர் ஜெனரலாகப் பதவியேற்ற முதல் இந்தியப் பெண் என்கிற வரலாற்றுச் சாதனையை, 2016-ம் ஆண்டு படைத்தவர். நேபாளம், பூடான் எல்லைப் பகுதி மக்களைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பிலும் மிளிர்ந்தது அர்ச்சனாவின் ஆளுமை.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த ஆசிரியர்

மகாலட்சுமி

ழுத்தறிவிக்கும் இறைவி இந்த மகாலட்சுமி. கல்வியே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும், அடர்த்தி கூட்டும் என்பதை அழுத்தமாக நம்புபவர் இந்த அன்பாசிரியை. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை. அரசுப் பேருந்துகளைப் போலவே இன்னமும் பல மலைக் கிராமங்களுக்குச் சென்று சேராமலே இருக்கிறது கல்வி. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் மனநிலையும் பெற்றோரிடம் இல்லை. இந்தச் சூழலை மாற்றும் அக்கறையுடன் தன் ஆசிரியப் பணியைத் தகவமைத்துக்கொண்டார் மகாலட்சுமி. குருவாக மட்டுமல்லாமல், மாணவர்களின் கூட்டாளியாக, கோமாளியாக, தோழியாக மாறி, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டமாகக் கற்பித்து
வருகிறார். ஆரோக்கியம் காக்கும் வகையில் மாணவர்களுக்கு முடி வெட்டிவிடுவது, குளிப்பாட்டிவிடுவது ஆகியவற்றையும் செய்கிறார். சிறப்புக் குழந்தைகளுக்கும் தனிக்கவனம் தருகிறார். மலையேறாத கல்வியை மலைக்கிராம மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, ஆசிரியப் பணியை அர்ப்பணிப்புடன் செய்துவருகிறார் மகாலட்சுமி.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த சமூகச் செயற்பாட்டாளர்

முத்தமிழ், ‘நீலம்’ சமூக நீதி அமைப்பு

கு
ழந்தைகள் மற்றும் பெண்களிடம் சமூக நீதிக்கான விதைகளை விதைத்து வரும் நம்பிக்கைப் பெண்மணி முத்தமிழ். எளிய குடும்பத்தில் பிறந்து, போராடி கல்வி பெற்றவர். கிடைத்த அரிய வாய்ப்பில் `தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான சமூக நீதி மற்றும் நிர்வாகம்’ படித்து, ஆஸ்திரேலியாவில் வேலை பெற்றார். அதன்மூலம் ஐ.நா சபை வரை தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஐந்தாண்டுகளுக்குப் பின் தமிழகம் திரும்பி, திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய ‘நீலம்’ அமைப்பு, முத்தமிழின் சமீபத்திய அடையாளம். வியாசர்பாடி, அயனாவரம், கரலப்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் சிறப்புப் பயிற்சிப் பள்ளிகளை நடத்துவது தொடங்கி, ‘நீலம்’ அமைப்பின் பணிகளின் பட்டியல் வெகு நீளம். கல்வியோடு கலைகளையும் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் முனைப்பில் இயங்கும் முத்தமிழின் நோக்கம், சமூக நீதியே. சாதிய, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் இருண்டிருக்கும் மக்கள் கூட்டங்களில் கலங்கரையாக இருந்துவருகிறார் முத்தமிழ்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த சமூகச் செயற்பாட்டாளர்

கிரேஸ் பானு


மிழகத்தின் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி, கிரேஸ் பானு. பள்ளிப் பருவத்தில் தான் உணர்ந்த உடல் மாற்றத்தை வீட்டில் சொன்னபோது, மனநல சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஒருகட்டத்தில் அவர் திருநங்கை என்பது தெரியவந்தபோது, சொந்த வீட்டிலேயே தீண்டாமைக்கு ஆளானார். பள்ளியில், வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்தே படிக்கவேண்டியிருந்தது. புறக்கணிப்புகளால் படிப்பைத் துறந்து, வீட்டைவிட்டு வெளியேறியவர், திருநங்கைகள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானார். பின்னர், தன் விடாமுயற்சியால் 94% மதிப்பெண்ணுடன் டிப்ளோமா படிப்பை முடித்தார். மேற்கொண்டு பொறியியல் படிக்க விரும்பியவர், அதில் திருநங்கைகளுக்குச் சேர்க்கையில்லை என்பதை எதிர்த்து, தனக்காகவும் தன் சமூகத்துக்காகவும் நியாயம் கேட்டு நீதிமன்ற வாசல் ஏறினார். சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்று, பொறியியல் பட்டம் பெற்றார். தன் சமூகத்தின் பிரச்னைகளுடன், ஜல்லிக்கட்டு முதல் நீட் தேர்வுவரை பொதுச் சமூகத்தின் பிரச்னைகளுக்கும் குரல்கொடுக்கிறார் இந்த உன்னதப் போராளி.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த சமூகச் செயற்பாட்டாளர்

வளர்மதி

மூக அழுத்தமே ஒருவரைப் போராட வீதியில் இறக்கிவிடுகிறது என்பதற்குச் சமீபத்தில் பார்த்த உதாரணம், சமகாலச் சாட்சி வளர்மதி. சேலம் வீமனூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி. பி.எஸ்ஸி விவசாயம் முடித்து, இப்போது இதழியல் படித்து வருகிறார். நெடுவாசலில் அரசு மேற்கொள்ளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் அந்த ஊர் மக்களுக்கு ஆதரவாக, வளர்மதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார். அதைக் `குற்றம்' என்று அரசு சொல்ல, `கடமை' என்று வளர்மதி சொன்னார். அதற்காக அவருக்குக் கிடைத்த பரிசு, குண்டர் சட்டத்தின்கீழ் சிறை. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தாக்கப்பட்டாலும், வளர்மதியின் போராட்டக் குணத்தின் நகக்கண்ணைக்கூட அரசால் அசைக்க முடியவில்லை. நீதிமன்றத்தின் மூலம் குண்டர் சட்டத்தை உடைத்து வெற்றி மகளாகச் சிறையிலிருந்து வெளியே வந்தார். அரசியல் தெளிவும் சமூக அக்கறையும் இணைந்த வளர்மதியின் மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன துணிவுடன். இளம் தமிழ் நெஞ்சங்களுக்கு உதாரணமாகக் களத்தில் நிற்கிறார் வளர்மதி.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த அரசியல் செயற்பாட்டாளர்

கே.பாலபாரதி

மு
ற்போக்கு அரசியலின் முகவரிகளில் ஒருவர். ஆணாதிக்க எதிர்ப்பையும் வர்க்கப்போராட்டத்தையும் ஆயுதமாகக்கொண்ட போராளி. அரசியல் என்பது ஆண்களின் அரங்கு என்பதைத் தகர்த்துப் பெண்ணரசியலுக்கான வெளியை உருவாக்கியவர் களில் முக்கியமானவர் பாலபாரதி. திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். பி.எஸ்ஸி பட்டதாரியான இவர், தன் வாழ்வில் பிரித்துவிட முடியாத அங்கமாக மக்கள் பணியை இணைத்துக்கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக, 2001-ம் ஆண்டு் முதல் மூன்று முறை திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மக்கள் இவர் மீது வைத்த பெரும் நம்பிக்கையின் சான்று இது. எளிய மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலித்த
இவரின் உரைகள், ஜனநாயகத்தின் வலிமையைப் பறைசாற்றின. மக்களுக்கான அரசியலை முன் வைக்கும் பாலபாரதி, கவிஞரும்கூட.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ஃபீனிக்ஸ்
 
சாந்தி

பு
துக்கோட்டை அருகில் இருக்கிறது கத்தக்குறிச்சி. அங்கே செங்கல் சூளையில் வேலைசெய்யும் பெற்றோருக்கு மகளாகப் பிறந்தவர் தடகள வீராங்கனை சாந்தி. வறுமைதான் வாழ்க்கை என்றாலும், தன் கால்களையே ஏணியாக்கி எழுந்து ஓடியவர். தமிழ்நாட்டுக்கு 50-க்கு மேற்பட்ட மெடல்கள் பெற்றுத்தந்தார். இந்தியாவுக்காக வாங்கிக் குவித்தவை 12 சர்வதேச மெடல்கள். 2006-ம் ஆண்டு, தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆனால், அந்தச் சிகரத்திலிருந்து பள்ளத்தாக்குக்கு அவரைத் தள்ளியது ‘பால் சோதனை’ என்ற பெயரில் நிகழ்த்தப்பட்ட அநீதி. பதக்கம் பறிக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த விழுந்த ஒவ்வோர் அடியும் அந்த அப்பாவி ஏழைப் பெண்ணைத் தற்கொலை முயற்சி வரை இட்டுச்சென்றது. சோர்ந்துவிழாமல் அத்தனை துயரங்களையும் துடைத்துப்போட்டுவிட்டு, தன் உயிரைப் புதுப்பித்துக்கொண்டு சீறி எழுந்தார் சாந்தி. தன்னைப் போன்ற ஏழைக் குழந்தைகளுக்குத் தடகளப் பயிற்சி கொடுத்து சாம்பியன்களை உருவாக்க ஆரம்பித்தார். பிழைப்புக்கு, செங்கல் சூளையில் தினக்கூலி வேலைக்குச் சென்றாலும், அவருடைய விளையாட்டு ஆர்வம் தொடர்ந்தது. அவர் வடுக்களுக்கு ஆறுதலாக, பத்தாண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகளப் பயிற்சியாளர் பணி கிடைத்தது. தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட ஒற்றைப் பதக்கத்தை ஓராயிரம் பதக்கங் களாகத் திரும்பப் பெறும் உத்வேகத்தோடு, இன்று பல நூறு சாந்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் இந்தக் கம்பீரத் தமிழச்சி.

சாகசப் பெண்மணிகள்

தேவகி - நாகம்மாள்   

நா
ன்கு சிங்கங்களையும் புலிகளையும் செல்லப்பிராணிகளாகப் பராமரித்துவரும் துணிச்சல் பெண்மணிகள் நாகம்மாளுக்கும் தேவகியும்.    

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

வண்டலூர் மிருகக்காட்சிசாலையில் இருக்கும் நான்கு சிங்கங்களைப் பராமரிக்கிறார் தேவகி. குட்டியாக இவர் மடியில் உறங்கி வளர்ந்த சிங்கங்கள் இன்று ‘400 கிலோ கம்பீரமாக’ வளர்ந்து நிற்கின்றன. முப்பதாண்டுகளுக்கு முன்பு, வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் வேலைபார்த்து வந்த தேவகியின் கணவர், மான் ஒன்று கொம்பால் குத்தியதில் மரணமடைந்தார். கருணை அடிப்படையில், அங்கு செடிகளைப் பராமரிக்கும் வேலை கிடைத்தது  தேவகிக்கு. பிறகு தனது ஆர்வத்தால் பறவைகள், கரடி, ஒட்டகம் என்று பராமரித்து வந்தவர், கடந்த சில ஆண்டுகளாக அங்கிருக்கும் நான்கு சிங்கங்களைத் தாயன்புடன் பராமரித்து வருகிறார். 

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

நாகம்மாள், அதே வண்டலூர் மிருகக்காட்சி சாலையில் உள்ள ஏழு புலிகளைப் பராமரித்து வரும் வீரப்பெண்மணி. தன் மூன்று குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வீட்டில் ஆளில்லாததால், குழந்தைகளை மரங்களில் தொட்டில் கட்டிப் போட்டுவிட்டு, புலிக்குட்டிகளைத் தூக்கி வளர்த்தவர். `அன்பின் முன் மனிதர்கள் விலங்குகள் என்ற பேதமில்லை' என்கிறார் நாகம்மாள்.  
   
தங்கள் கனிவான பராமரிப்பால், கம்பீர மிருகங்களைக் கட்டிப்போடும் சாகசப் பெண்மணிகளாக ஒளிர்கிறார்கள் தேவகியும் நாகம்மாளும்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த தொழில் பயிற்சியாளர்

உமா ராஜ்

ரு தொழிலை நாம் கற்றுக்கொண்டு வளர்ச்சி காண்பது ஒருவகை; ஒரு தொழிலை நாம் கற்றுக்கொண்டு, அதை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, அவர்களுடன் சேர்ந்து நாமும் வளர்வது மற்றொருவகை. இரண்டாம் வகைக்கு அழகிய உதாரணம் சென்னையைச் சேர்ந்த உமா ராஜ். சணல் பைகள் முதல், ஃபேன்ஸி நகைகள், சமையல் கலை எனக் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழில்களுக்கான பயிற்சியைப் பெண்களுக்கு அளித்துவருகிறார். 2004-ம் ஆண்டு இவர் தொடங்கிய ‘சுஹா தொண்டு நிறுவனம்' மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையத்தில், இதுவரை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குறைந்த கட்டணத்தில் பயனடைந்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிகப் பெண் தொழில் முனைவோர்கொண்ட மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பிடித்ததற்கு, உமா ராஜ் போன்ற வளைக் கரங்களின் வலிமையே காரணம்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த தொழில்முனைவோர்

வள்ளி

ஹெர்
பல் நாப்கினைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமைப்பெண், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளி. ஏழ்மையான குடும்பம், ப்ளஸ் டூ-வுடன் முடிந்துபோன படிப்பு, திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்த வறுமை சூழ்ந்த வாழ்வு... இவைதான் இவரது பின்புலம். இருந்தும், எப்போதும் தீராமல் இருந்தது சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற வைராக்கியம். அதுதான் இவரை நாப்கின் தயாரிப்புத் தொழிலைக் கையிலெடுக்க வைத்தது. ஆரம்பத்தில் தோல்விகளையே அதிகம் சந்திக்க வேண்டியிருந்தது. நிச்சயம் தொழிலிலிருந்து வெளியேறிவிடுவார் என்று போட்டியாளர்கள் காத்திருக்க, தன் தொழிலைப் புதுப்பிக்க வள்ளிக்குக் கிடைத்த புது யுக்திதான் ‘ஹெர்பல் நாப்கின்’. சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி வள்ளி தயாரித்த ஹெர்பல் நாப்கினை ஆர்வத்துடன் வாங்கிய பெண்கள், அவருக்கு வெற்றியைப் பரிசளித்தனர். இன்று நேபாளம் வரை சென்று, ‘ஹெர்பல் நாப்கின்’ பெருமை பேசுகிறார் இந்தக் கிராமத்து வெள்ளி.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த மருத்துவர்

டாக்டர் பிரியா ராமச்சந்திரன்

19
தங்கப் பதக்கங்களுடன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, இங்கிலாந்தில் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்றவர் டாக்டர் பிரியா ராமச்சந்திரன். அமெரிக்காவில் பணிபுரிந்தபோது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிறப்பான  சிகிச்சையளிக்கக்கூடிய வகையிலான வசதியான பின்புலம், அவரை யோசிக்க வைத்தது. இந்தியாவில் அதற்கு நேர்மாறான நிலையைக் கண்டவர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக உயர் சிகிச்சையளிக்க, ‘ரே ஆஃப் லைட் பவுண்டேஷ'னை ஆரம்பித்தார். இதுவரை 140-க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் குணப்படுத்தியிருக்கிறார். ஒரு குழந்தையின் சிகிச்சைக்குச் சராசரியாக 10 லட்சம் ரூபாய் செலவாகும் சூழலில், எளிய குடும்பத்துக் குழந்தைகளுக்கு உயிரைப் பரிசாக வழங்கிக் கொண்டிருக்கும் மருத்துவ அறமாகத் திகழ்கிறார் டாக்டர் பிரியா ராமச்சந்திரன்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

பசுமைப் பெண்

வாசுகி மருதமுத்து

யற்கை விவசாயச் செயற்பாட்டுக்கான இன்னோர் உரம், திண்டுக்கல்லைச் சேர்ந்த வாசுகி மருதமுத்து. கணவர் மருதமுத்து, தான் பார்த்துக்கொண்டிருந்த மென்பொருள் வேலையை விட்டுவிட்டு ‘விவசாயம் செய்யலாம்’ என்று இறங்கியபோது, அவரைவிட முனைப்புடன் அதில் களமிறங்கிக் கைகொடுத்தவர் வாசுகி. ‘பசுமை விகடனி’ன் தீவிர வாசகியான இவர், அதில் வெளிவந்த கட்டுரைகள் மூலம் சம்பங்கி சாகுபடி பற்றிக் கற்றுக்கொண்டார். விளைச்சல், அவருக்கு வெற்றி மாலை சூடியது. பூ விவசாயிகளின் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ள வாசுகியைத் தேடி, இயற்கை முறை விவசாயம் செய்ய விரும்பும் பலரும் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் மண்ணின் மங்கையான வாசுகி நம் மனதுக்கும் இயற்கை உரம் போடுகிறார்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த மகளிர் குழு

செவ்வந்தி சுயஉதவிக் குழு

களிர் சுயஉதவிக் குழுக்களின் வெற்றி, பெண் சக்தியின் வலிமையை உலகம் வியந்துபார்க்கச் செய்தது. அப்படி ஒரு குழுதான், புதுக்கோட்டை மாவட்டம் கல்லுக்குடியிருப்பில் உள்ள ‘செவ்வந்தி மகளிர் சுயஉதவிக் குழு’. பருவ காலங்களில் விவசாயத்தையும், மற்ற காலங்களில் கூடை முடைவதையும் நம்பியிருக்கும் பூமி. ‘இது வயிற்றுக்குப் போதவில்லை, கைவசம் ஒரு தொழில் வேண்டும்’ என்று யோசித்த அந்தக் கிராமப் பெண்கள், தங்கள் மண்ணையே நம்பிக் களத்தில் இறங்கினார்கள். தங்கள் ஊரைச் சூழ்ந்த காட்டில் நிற்கும் யூகலிப்டஸ், செம்மரம், தேக்கு, சந்தனமரம், மகாகனி மரங்களின் விதைகளைச் சேகரித்து, நர்சரி தோட்டத் தொழில் செய்ய முடிவெடுத்தார்கள். கலெக்டரிடம் மனு கொடுத்தார்கள். இரண்டரை லட்சம் ரூபாய் மானியம் கிடைத்தது. ‘செவ்வந்திக் குழு’ பூத்தது. விதைகள் முளைத்தன. அப்பெண்களின் வாழ்வு தளிர்த்தது. இப்போது புதுக்கோட்டை, ஆலங்குடி, அன்னவாசல், கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, கொத்தமங்கலம் எனப் பல ஊர்ச் சந்தைகளிலும் கன்றுகளை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். ‘குழு ஆரம்பிச்ச 17 வருஷமா, வீட்டாளு கைய எதிர்பார்க்காம சொந்தக்காலுல நிக்கிறோம்ங்க’ என்கிறார்கள் மல்லிகைச் சிரிப்புடன்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிறந்த விளையாட்டு வீராங்கனைகள்

தமிழக பெண்கள் கால்பந்து அணி

கா
ல்கள்தான் முதலீடு. ஸ்போர்ட்ஸ் ஷூக்கள்கூட வாங்கமுடியாத வறுமையில் வளர்ந்தவை அந்தக் கால்கள். அவைதான் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கின்றன. தேசிய அளவிலான கால்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதித்திருக்கிறது தமிழக பெண்கள் கால்பந்து அணி. இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த மணிப்பூர் அணியோடு மோதிப்பெற்ற இந்த வெற்றி தமிழ்நாட்டு விளையாட்டுச்சூழலில் அசாதாரணமானது. வெற்றி தாண்டியும் பேசப்பட வேண்டியது, அவர்களின் வேர்களைப் பற்றி. இந்த அணியில் இடம்பெற்றிருந்த பல வீராங்கனைகளுக்குத் தந்தை இல்லை; சிலருக்குத் தாய் இல்லை; சிலருக்கு இருவருமே இல்லை. சுனாமியால் பாதிக்கப்பட்டு ஆதரவு இல்லங்களில் வளர்ந்த சிறுமிகளும் உண்டு இந்த இளம் அணியில். பயிற்சியாளர் மாரியப்பன் மாதிரியான ஆசான்களால் இன்று வெற்றி வீராங்கனைகளாக தலைநிமிர்ந்து நிற்கின்றனர். கால்பந்துதான் இனி வாழ்க்கையென்று ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் வளர்ந்த வீராங்கனைகளை ஒருங்கிணைத்து, செதுக்கி, சாம்பியனாக்கியதில் பயிற்சியாளர் முருகவேந்தனின் பங்கு மிகப்பெரியது. வெறும் 12 நாள்கள் பயிற்சியில், 90 நிமிட கூட்டு முயற்சியில் நேஷனல் சாம்பியன் பட்டம் வென்று, ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பிப்பார்க்க வைத்திருப்பதுடன், முதன்முறையாக தமிழ்நாட்டில் மகளிர் கால்பந்தைப் பற்றியும் பேசவைத்திருக்கிறது இந்த புயல்குழு. அவர்களுக்கு `சிறந்த விளையாட்டு வீராங்கனைகள்' விருது வழங்கி உச்சிமுகர்கிறது `அவள் விகடன்'!