
பரிசல் கிருஷ்ணா, படங்கள்: க.பாலாஜி
திரைத்துறைக்கு வந்து 50 வருடங்கள் என்ற மைல்கல்லை எட்டிய மகிழ்ச்சியில் இருக்கிறார் லக்ஷ்மி.
``50 வருஷம்... எப்படி ஃபீல் பண்றீங்க?”
``என் காசுல நானே சாக்லேட் வாங்கிக்கலாம். வாட்ச் வாங்கிக்கலாம்னுதான் நடிக்க வந்தேன். இப்ப திரும்பிப் பார்த்தா, இவ்ளோ தூரம் வந்துட்டமானு பயமா இருக்கு. அதே சமயம் முதுகுல தட்டிக்கவும் தோணுது. பேமிலி இல்லைன்னா, இன்னைக்கும் நான் வேலைக்குப் போக முடியாது. பிப்ரவரி 6, நான் மேக்கப் போட்ட மொத நாள். கணவர் காலைல வந்து என் முன்னால அஞ்சு நிமிஷம் நின்னு விஷ் பண்ணினார். அழுதுட்டேன். தேங்க்யூ சோ மச் சிவா. மத்தபடி, எல்லாம் அவன் செயல். எனர்ஜி இருக்கறவரை வேலை செய்வோம்.”
“உங்க டிராவலைத் திரும்பிப் பார்க்கறப்ப என்ன தோணுது?”
``நம்ப முடியாம பிரமிப்பாதான் இருக்கு. 18-ல கல்யாணம் பண்ணி, 19 வயசுல குழந்தை பிறந்தப்பறம்தான் நான் பெரிய ஹீரோயின் ஆனேன். அதவிட காமெடி என்னன்னா, அதுக்கப்பறம்தான் நான் கிளாமர் ஹீரோயினானேன். சாவித்திரி அம்மாவுக்கு அப்பறம் அப்டி அமைஞ்சது உனக்குத்தான்னு பாலசந்தர் சார் சொல்வார். வெறும் கிளாமர்னு மட்டுமில்லாம, நாலு மொழிகள்லயும் வித்தியாசமான கதாபாத்திரங்கள்ல நடிக்க வாய்ப்பு எனக்கு வந்தது.”

``இத்தனை வருஷத்துல நீங்க கத்துக்கிட்டது என்ன?”
``போனவருஷம் ‘எரடனே சாலா’னு ஒரு கன்னடப்படம். சவாலான வேடம். இந்த சீனியாரிட்டிதான் உதவுச்சுனு சொல்லலாம். இப்பவும், ஒரு படம் புக் ஆகிடுச்சுன்னா, நான் ஹோம் வொர்க் பண்ணுவேன். இப்ப வர்றவங்க ரொம்ப சின்ன வயசா இருக்காங்க. மலையாளப்படம் ஒண்ணு புக் பண்ண வந்தாங்க. டைரக்டர் யார்னு பார்த்தா, 22 வயசுப் பையன். கதைல சின்ன மாற்றம் சொன்னாலும் ‘அதெல்லாம் முடியாது’ன்னுட்டார். அந்த கான்ஃபிடென்ட் பிடிக்குது. ‘நான் சீனியர், நான் பார்க்காத கேரக்டரா, வாங்காத அவார்டா’னு சொன்னா, ‘அப்ப வீட்ல உட்கார்ந்துக்கோ’ னு சொல்லிடுவாங்க.”
``நீங்க நடிச்சதுல உங்க ஃபேவரைட் படங்கள்னா எதச் சொல்வீங்க?”
“எல்லாம்தான். ஏதோ ஸ்பெஷல் இருக்கப்போய்தானே எனக்கு வந்தது? ‘ஒரே ஒரு கிராமத்திலே’. ‘சிறை’, ‘உண்மைகள்’, ‘ஜீவனாம்சம்’ ‘அவன் அவள் அது’னு நிறைய சொல்லலாம். ‘அவன் அவள் அது’ அந்தக் காலத்துலயே வாடகைத்தாய் அப்டிங்கற கான்செப்ட் வெச்சு சிவசங்கரி எழுதின கதை. ‘நீ நடிச்சா மக்கள் ஒப்புக்குவாங்க’னு முக்தா ஸ்ரீனிவாசன் சொல்லி நடிக்க வெச்சார். அப்பறம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. நான் நாலு மொழிலயும் பிஸியா நடிச்சுட்டிருந்தேன். டேட் இல்லை. ஜெயகாந்தன் ‘நீதான் பண்ணணும்’னு சொல்லி நடிக்க வெச்சார்”
``ரஜினி, கமலோட அரசியல் வருகையை எப்படிப் பார்க்கிறீங்க”
``எல்லோருமே வலை போடட்டுமே. மீன், நண்டு, சிப்பினு யாருக்கு என்ன கிடைக்குதோ பார்க்கலாம். எல்லோரையும் மனசார வாழ்த்துவோம். நல்ல அட்மினிஸ்ட்ரேஷன் கொடுக்கட்டும். ஜனங்க கணக்கு என்னானே புரியாது. ஆனா ஒண்ணு.. வெளில இருந்து பார்க்கறப்ப செம டிராமா இருக்கும்னு தெரியுது. நல்லா பொழுது போகும்!”