Published:Updated:

“காதலுக்கு இவுக தங்கச்சிய தூதுவிட்டாக!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“காதலுக்கு இவுக தங்கச்சிய தூதுவிட்டாக!”
“காதலுக்கு இவுக தங்கச்சிய தூதுவிட்டாக!”

ராஜலட்சுமி - செந்தில்கணேஷ் ஜோடி ரகளைமாங்குயிலே... பூங்குயிலேமு.பார்த்தசாரதி - படங்கள் : க.பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி

விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மேடையில் சிறப்பு விருந்தினராக அமர்ந்திருக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இதழோரம் சிறு புன்னகையை மட்டும் சிந்தியபடி எப்போதும் போன்ற அமைதி. ‘சந்திரரே ஏஏஏஏ... சாமியே எந்துரையே ஏஏஏஏ... இந்திரருக்கு இளையமாரே என்ன சொல்லிக் கூப்பிடுவேன், வந்தா வறாண்டி மதுர சுண்ணாம்பு தாண்டி, போனா போறாண்டி புதுக்கோட்ட போயல தாண்டி’ - கணீர் குரலில் இந்த நாட்டுப்புறப்பாடலை ராஜலட்சுமி - செந்தில்கணேஷ் தம்பதி ஜோடி சேர்ந்து பாட, ஆஸ்கர் நாயகனே ஆர்ப்பரிக்க, அந்த அரங்கமே திக்குமுக்காடிவிட்டது.  

“காதலுக்கு இவுக தங்கச்சிய தூதுவிட்டாக!”

‘கோபக்கார மச்சானும் இல்லே... எம்மச்சான் கொடும செய்யும் மச்சானும் இல்லே... தந்தனானே நான நனானே தன்னானே தான நானே தான நனானே’ என்ற டூயட் பாடலை மெலடி வாய்ஸில் பாடி கிறங்கவைக்கும் ராஜலட்சுமியாக இருக்கட்டும்... ‘வளத்தாண்டா வைர வித்தாண்டா வளத்தாண்டா வைர வித்தாண்டா கருப்பையா’ என இடி முழங்கும் குரலில் பாடும் செந்தில்கணேஷாக இருக்கட்டும்... இந்தக் கிராமத்துக் குயில்களின் குரல்தான் தமிழகத்தின் இப்போதைய இசை டிரெண்ட்.

“வாங்கண்ணே’’ என்றபடி புன்னகையோடு ராஜலட்சுமி வரவேற்க, “எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே. கிராமத்துல நூறு, எறநூறு பேருக்கு முன்னால பாடிக்கிட்டிருந்த எங்களை, இன்னிக்கு ஒலகம் முழுக்கப் பாக்குது’’ என்று பூரிக்கிறார் செந்தில்கணேஷ். “நான் திண்டுக்கல் பொண்ணு. எட்டு வயசுலேயே கோயில்கள்ல பாட ஆரம்பிச்சுட்டேன். பாட்டும் தமிழுந்தேன் உசுரு. காலேஜுலகூட பி.ஏ தமிழ்தேன் படிச்சேன். புதுக்கோட்டைக்குப் பக்கத்துல களபம்கிற கிராமம் இவுக ஊரு. அந்த வருஷந்தேன், புதுசா என்னைய அவுக ஊருக்குப் பாடக் கூப்புட்டாக. ஆரம்பத்துல தனியாத்தான் பாடுனேன். அப்புறம், ‘டூயட்டு சாங்கு பாடணும். இந்த ஊருலேயே என் மாப்ளதேன் ரொம்ப நல்லா பாடுவாப்புடி. அவனோடு சேர்ந்து பாடும்மா’ன்னு இவுக மாமா சொன்னாக. ஆனா இவுக, ‘ஏங்க, மொத தடவையா ரெண்டு பேரும் சேர்ந்து பாடப்போறோம்... சரியா வந்துடுமாங்க?’னு கேட்டாக. ‘நீங்க ஒண்ணும் கவலப்படாதீக. நான் நல்லா இட்டுக்கட்டிப் பாடுவேன். இப்போ நாலஞ்சு வரிய எடுத்து உடுறேன். நீங்க அதைப் பாடுங்க, நான் சமாளிச்சிப்புடுறேன்’னு சொல்லி அப்போவே இவுகளுக்கு துணையா நிக்க ஆரம்பிச்சுட்டேன்” - சொல்லும்போதே ராஜலட்சுமி முகத்தில் வெட்கம் நிரம்பி வழிய, செந்தில்கணேஷ் தொடர்கிறார்...

“நான் திருச்சி கலைக்காவேரி கல்லூரியில இசைத்துறையில படிச்சுக்கிட்டு இருந்தேன். என் மச்சான் செல்லத்தங்கையாதான் எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பத்து வயசுலேயே மேடை ஏத்தினவரு. அப்போவெல்லாம் திருவிழா நேரத்துலதான் கச்சேரி நடக்கும். ரொம்ப சொற்ப வருமானம்தான் கிடைக்கும். என் மச்சான், இவுக பாடுறதைக் கேட்டு, திண்டுக்கல்லுல இருந்து இவுங்கள எங்க ஊரு கச்சேரிக்குக் கூட்டிட்டு வந்தாரு. ரெண்டு பேரும் நிறையக் கச்சேரிகளுக்கு டூயட் சாங்கு பாட போக ஆரம்பிச்சோம்’’ என்று செந்தில்கணேஷ் சொல்ல, வாழ்க்கையிலும் தாங்கள் ஒன்றுசேர்ந்த கதையை, “நாஞ்சொல்லுறேன்...’’ என்று ஆரம்பித்தார் ராஜலட்சுமி.  

“காதலுக்கு இவுக தங்கச்சிய தூதுவிட்டாக!”

‘`பழக ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலேயே இவுகளுக்கு எம்மேல காதல் வந்துடுச்சு. முதல்ல இவுக தங்கச்சிய காதலுக்குத் தூது அனுப்புனாக. நான் புடிகொடுக்கல. `என்னதான் இவுக பாட்டு புடிச்சிருந்தாலும், கச்சேரிக்கு செட் ஆகும்... காலத்துக்கும் கூட சேர்ந்து வாழ சரியா வருமா’னு யோசிச்சேன். இவுக விட்டபாடில்ல. நாலு வருஷமா காதலிச்சோம். 2012-ல நான் எம்.ஏ முடிச்சதும் கல்யாணத்துக்காக வீட்டுல சம்மதம் கேட்டோம். எங்க வீட்டுல எதிர்ப்பு கிளம்ப, இவுக வீட்டு சம்மதத்தோட கல்யாணம் நடந்துச்சு. என்னதான் எம்மேல அப்பாவுக்குக் கோபம் இருந்தாலும், ஒரு நாட்டுப்புறக் கலைஞரா இவுக மேல அப்பாவுக்குத் தனி மரியாதை உண்டு. அதனால, காலப்போக்குல சமாதானமாகிட்டாக” என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்கிறார் ராஜலட்சுமி. காதல் தம்பதியாக வாழ்க்கையை ஆரம்பித்து கவின்ராஜா, நர்த்தனாஸ்ரீ என இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக புரமோஷன் பெற்ற காலத்தில், இசையிலும் இவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

“கல்யாணத்துக்கு  அப்புறம் முற்போக்கு மேடைகள்லயும், பள்ளி, கல்லூரிகள்லயும் பாட ஆரம்பிச்சோம். இவுக நிறைமாச கர்ப்பிணியா இருந்தபோது 45 கிலோமீட்டர் பயணம் செஞ்சு நெடுவாசல் போராட்டத்துல கலந்துகிட்டோம். அங்க அந்த மக்கள் எங்களைப் பாடச்சொல்ல, உடனே ராஜி அங்கேயே பாடல் வரிகளை எழுத, ரெண்டு பேரும் சேர்ந்து கும்மி பாடினோம். போராட்டக் களத்துல நின்னு பாடின அந்த உணர்வுபூர்வமான தருணத்தை மறக்கவே முடியாது. ‘இவுங்கள விட்டா நம்மளை முந்திடுவாங்க’ங்கிற காரணத்தாலேயே நாங்க ரெண்டு பேரும் பலரால, பல கச்சேரிகள்ல புறக்கணிக்கப்பட்டிருக்கோம். அந்த வலி, எங்கேயாவது நமக்கு ஒரு பெரிய கைத்தட்டல் கிடைக்காதான்னு எங்களை ஏங்க வெச்ச நேரத்துலதான், தஞ்சாவூர்ல விஜய் டி.வி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடக்குதுன்னு தகவல் வர, அங்க போனோம். ‘சினிமா பாடல்களைத்தானே அங்க பாடுவாங்க,  நமக்கெல்லாம் எங்க வாய்ப்பு கிடைக்கப்போகுது’னுதான் நெனச்சோம். ஆனா, நாட்டுப்புறக் கலைஞர்களான எங்க திறமைக்கும் அங்கீகாரம் கிடைச்சது. இன்னிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சார் முன்னாடி பாடுறோம்... உலகம் முழுக்க நாங்க பாடுறதைக் கேட்கறாங்க. ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியலீங்க” - உணர்ச்சிவசப்படுகிறார் செந்தில்கணேஷ். “இவுக இப்புடித்தேன் பொசுக்கு பொசுக்குன்னு இளகிடுவாக’’ என்று, தன்னை மீறி சந்தோஷத்தில் துளிர்த்த கண்ணீரைத் தானும் துடைத்துக்கொள்கிறார் ராஜலட்சுமி.

களத்துமேட்டுக் குயில்களுக்கு இன்னும் களம் பல கிடைக்கட்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு