Published:Updated:

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!
அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

சாதனைப் பெண்களின் சங்கமம்ப.சூரியராஜ், நித்திஷ், சக்தி தமிழ்ச்செல்வன்படங்கள் : விகடன் டீம்

பிரீமியம் ஸ்டோரி

வள் விருதுகள் விழா... எண்ணற்ற சாதனைகளால் இதுநாள்வரை நம் இதழை அலங்கரித்த திறமைசாலிகளை மேடையேற்றி அழகுபார்த்த பொன்மாலைப்பொழுது அது. சிறகு விரித்துப் பறக்கும் தேவதைதான் அவள் விருதுகளின் லோகோ. சீனியர் தேவதைகள் வழிநடத்த, ஆயிரமாயிரம் தேவதைகள் அவர்களைப் பின்தொடர்ந்து அடுத்த முறை மேடையேறு வார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவள் குடும்ப விழாவின் முக்கியத் தருணங்கள் இங்கே...

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*தமிழ் எழுத்துலகில் தங்களுக்கு எனத் தனித்த அடையாளத்தைப் பதிவுசெய்த பெண்மணிகள் சு.தமிழ்ச்செல்வி மற்றும் தமிழ்நதி ஆகியோருக்கு `இலக்கிய ஆளுமை’ விருதுகள் வழங்கப்பட்டன.    மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா ரங்கராஜன், எழுத்தாளர் ச.விசயலட்சுமி இணைந்து இந்த விருதுகளை வழங்கினர். ``எவ்வளவு பெரிய உயரத்தை அடைந்தாலும், பெண் இரண்டாம் இடத்தில் வைத்துத்தான் பார்க்கப்படுகிறாள்'' எனத் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார் சு.தமிழ்ச்செல்வி. வெளிநாட்டில் இருக்கிற காரணத்தால், விழாவில் பங்கேற்க முடியாத எழுத்தாளர் தமிழ்நதியின் சார்பாக அவரின் தோழியும் கவிஞருமான தி.பரமேஸ்வரி விருதைப் பெற்றுக்கொண்டார். தமிழ்நதி அனுப்பியிருந்த நன்றி தெரிவிக்கும் கடிதத்தில் `ஈழ மக்களின் வலியைத் தொடர்ந்து பதிவுசெய்வேன்’ என உறுதியளித்திருந்தார். 

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

* சாகசப் பெண்மணி களுக்கான அவள் விருது களை வழங்க சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா  மேடையேறினார். வண்டலூர் பூங்காவில் புலி, சிங்கங்களைப் பராமரிக்கும் நாகம்மாள், தேவகி பற்றிய காணொலியில் ஏழு புலிகள் நாகம்மாளுடனும், நான்கு சிங்கங்கள் தேவகியுடனும் கொஞ்சி விளையாடுவதைப் பார்த்ததும் அமைச்சர் உள்பட, ஒட்டுமொத்தப் பார்வையாளர்களும் புருவம் உயர்த்தி ஆச்சர்யத்தில் உறைந்தனர். விருது பெற்ற நாகம்மாளிடம் `புலிகளுடன் எப்படி வாஞ்சையாகப் பழகுகிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ``மனுஷனைவிட மிருகத்தை நம்பலாம். அதுங்கெல்லாம் என் குழந்தைங்க. அதுங்களை நான் பாத்துக்கிறதே கடவுள் எனக்குக் கொடுத்த வரம்” என நெகிழ்ச்சியுடன் கூறினார். 

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

``என் மொத்தப் பாசத்தையும் கொட்டி நாலு சிங்கங்களைப் பராமரிக்கிறேன். அதுக நான் சொல்றதைக் கேட்டு நடந்துக்கும்” எனத் தன் சிங்கக் குழந்தைகளைப் பற்றி தேவகி சிலாகிக்க, எழுந்த கரகோஷ ஒலி வண்டலூருக்கே கேட்டிருக்கும்.

*சிறந்த அதிகாரிக்கான அவள் விருதை பாரா மிலிட்டரி ஃபோர்ஸ் டைரக்டர் ஜெனரலாகப் பதவியேற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரிய அர்ச்சனா ராமசுந்தரம் ஐ.பி.எஸ் பெற்றார். அவருக்கு, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியும் எழுத்தாளருமான திலகவதி ஐ.பி.எஸ்  விருது வழங்கினார். இரண்டு காக்கிச்சட்டைகளின் கம்பீரத்தில் மிளிர்ந்தது மேடை.  ``தலைமைப் பண்புக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு தேவையில்லை. முதன்முதலாக அப்பாவுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காகச் சென்னை வந்தபோது மிரட்சியாக இருந்தது. `திரும்பிச் செல்லலாம்’ என நினைத்தேன். ஆனால், அதன்பிறகு தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடித்துப்போன ஊரானது. எந்த அளவுக்கு என்றால், ஒரு தமிழரைத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு!’’ என அர்ச்சனா சொல்ல, கம்பீரத்தையும் மீறிய வெட்கம் அவர் முகத்தில் லேசாக எட்டிப்பார்த்தது.  

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*தனது `ரே ஆஃப் லைட் ஃபவுண்டேஷன்’ மூலம் இதுவரை 140-க்கும் மேற்பட்ட  குழந்தைகளின் புற்றுநோயைக் குணப்படுத்திய மருத்துவர் பிரியா ராமச்சந்திரன், சிறந்த மருத்துவருக்கான அவள் விருதைப் பெற்றார். அவர் சிகிச்சையளிக்கும் குழந்தைகளின் காணொலி அரங்கில் ஒளிபரப்பானபோது, பார்வையாளர்களின் கண்களில் நீர் கோலமிட்டது. இந்த விருதைப் `பெண் நலம்' நிறுவனர் ராதிகா சந்தானகிருஷ்ணனும் மருத்துவர் கமலா செல்வராஜும் வழங்கினர். ``இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குச் சிகிச்சை அளித்திருக்கிறேன். அதில் சில குழந்தைகளின் தந்தைகள், குழந்தைக்கு நோய் இருப்பது தெரிந்ததும் அவர்களைவிட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். ஆனால், நோயின் ஆரம்பநிலையிலிருந்து மரணப் படுக்கையில் உயிர் உதிரும் தருணம் வரை அந்தக் குழந்தைகளைக் கைவிடாது இறுக்கி அணைத்திருப்பது அவர்களின் அம்மாக்கள்தான். அந்த இறுக்கம் ஆயுளுக்குமானது’’ என பிரியா சொல்ல, தாய்மார்கள் தங்களின் உடல்மொழியால் அதை ஆமோதித்தனர்.   

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*சிரிப்போடு ஆரம்பித்த `நம்பிக்கை நாயகி' விருதாளர் ப்ரீத்தி ஸ்ரீனிவாசனின் குரல் மெள்ள வலியின் கனத்த சுவடுகளைப் பற்றி பேசத் தொடங்கியது. ``என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளால் தியேட்டருக்குப் போய் படம்கூட பார்க்க முடியாது.  வீல்சேருக்கான ரேம்ப் வசதி இருக்காது. என்னைத் தூக்கிட்டுத்தான் போகணும். படம் பார்க்கப்போற இடத்துல நாலு பேரு பார்க்கிற மாதிரி நாமளே படமாகற வலி இருக்கே... அதை அனுபவிச்சாத்தான் புரியும். லைப்ரரியிலகூட எங்களுக்கு ரேம்ப் வசதி இல்லை. மாற்றுத்திறனாளிகள் படிக்கவே கூடாதுனு முடிவுபண்ணீட்டீங்களா?’’ என, கனத்த குரலில் அவர் எழுப்பிய கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. ``பொண்ணுனா, கிரிக்கெட் விளையாடக் கூடாது, நீச்சல் பழகக் கூடாது... இன்னும் எத்தனை எத்தனை தடைகள்? இது எல்லாத்தையும் தாண்டி என்னை இந்த மேடைக்குக் கொண்டுவந்தது என் அம்மாதான்’’ என ப்ரீத்தி நெகிழ, தன் தங்கமீன் முகத்தைப் பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்தார் அவரின் அம்மா.   

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*சிறந்த சமூகச்செயற்பட்டாளர்களுக் கான விருதுகளைப் பெற ஒன்றாக மேடையேறினார்கள் முத்தமிழ், வளர்மதி, கிரேஸ் பானு ஆகியோர். முத்தமிழும் வளர்மதியும் விருதை தங்களது குடும்பங் களுக்குச் சமர்ப்பிக்க, சமூகத் தீண்டாமையால், பாலினத் தீண்டாமையால் உயிரிழந்த மூன்று திருநங்கைகளுக்கு தன் விருதைச் சமர்ப்பித்தார் கிரேஸ் பானு.  

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*சிறந்த ஆசிரியருக்கான விருது  பெற மகாலட்சுமி மேடையேறுகையில் பறையிசை அதிர அவருக்கு வரவேற்பு கொடுத்தார்கள் அவரின் மாணவர்கள். விருதை வழங்கிய பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனிடம் ஒரு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் மகாலட்சுமி. ``பெண் குழந்தைகளுக்கு `மாதவிடாய் விடுப்பு’ என சிறப்பு விடுமுறை வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும்’’ என அவர் விடுத்த அந்தக் கோரிக்கைக்கு ``நிச்சயம் பரிசீலனை செய்யப்படும்’’ எனப் பதில் தந்தார் உதயச்சந்திரன்.

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*சிறந்த தொழிற்பயிற்சியாளர் விருது பெற்ற உமா ராஜ், விருதைத் தன் கணவருக்குச் சமர்ப்பித்தது ஆச்சர்ய ட்விஸ்ட். அவருக்கு விருது வழங்கிய தீயணைப்புத் துறை அதிகாரி ப்ரியா ரவிச்சந்திரன், ``முன்னால நெருப்போடு வாழ்க்கை நடத்திட்டிருந்தோம். இப்போ நெருப்பை அணைக்கிற துறையிலும் வந்துட் டோம். இன்னமும் வளர்வோம்’’ என நம்பிக்கை பூஸ்ட் அளித்தார்.  

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*மென்பொருள் வேலையைத் தூக்கிப் போட்டுவிட்டு மண்வெட்டியோடு  களமிறங்கிய வாசுகி மருதமுத்துவுக்கு `பசுமைப் பெண்’ விருது வழங்கப்பட்டது. ``நம் வருங்கால சந்ததிக்கு பணம் சேர்த்துவைக்க வேண்டாம். அவர்களுக்கு ஆரோக்கியம்தான் வேண்டும்” என்ற வாசுகி உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையுமே தூவப்படவேண்டிய உரம். 

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

 *ஹெர்பல் நாப்கினைத் தமிழகத்துக்குத் தந்த வள்ளி, சிறந்த தொழில்முனைவோருக்கான விருதைப் பெற்றார். வெற்றி பெறுவதற்கு முன்னால் அனுபவித்த ஆயிரம் தோல்விகளை யும் அவமானங்களையும் வலிகளையும் தன் சன்னமான குரலில் மேடையில் விவரித்தார் வள்ளி. கனத்த மெளனம் சூழ்ந்தது அரங்கை. 

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*``234 சட்டமன்ற உறுப்பினர்களில் இருபதே பேர்தான் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள். பெண் எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கினால்கூட ஆதிதிராவிடர்நலத் துறை, சமூகநலத் துறைதான் ஒதுக்கப்படுகின்றன. ஏன்... பெண்கள் மற்ற துறைகளில் திறமையில்லாதவர்களா?’’ என, சிறந்த அரசியல் செயற்பாட்டாளர் விருது பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கேள்வி எழுப்ப, அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது. பேராசிரியர் பாரதி,  பாலபாரதிக்கு விருதை வழங்கினார். ``இத்தனை பெண் சாதனையாளர்களை ஒரே மேடையில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் என அனைத்திலும் 50 விழுக்காடு பெண்கள் பங்குபெறும் காலம் வர வேண்டும்’’ என பாலபாரதி குரலெழுப்ப நாட்டின் ஒட்டுமொத்த `அவள்’களின் குரலாக அது ஒலித்தது. 

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*`எதிர்நீச்சலடி... வென்று ஏற்றுக் கொடி!’ - இந்த வரிகள் ஃபீனிக்ஸ் பறவையான தடகள வீராங்கனை சாந்திக்கே பொருந்தும். விருது பெற அவர் மேடையில் எடுத்த வைத்த ஒவ்வோர் அடிக்கும் கரகோஷம் அதிர்ந்தது. ``நான் தவறவிட்ட ஒரு பதக்கத்தை என் மாணவர்கள் வழியாக நூறு பதக்கங்களாகத் திருப்பி எடுப்பேன்’’ என அவர் சூளுரைக்க, உறுதியாக ஆமோதித்தார்கள் அவரின் மாணவர்கள்.

*முதன்முறையாக தேசிய அளவிலான கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற தமிழகப் பெண்கள் கால்பந்து அணி சிறந்த விளையாட்டு வீராங்கனைகள் விருது பெற மேடையேறினார்கள். ``ஆண்கள் அணிக்குக் கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள் எங்களுக்குக் கிடைக்கலை. முறையான வேலைவாய்ப்புகளைக் கொடுத்தா, இன்னும் ஆயிரம் மெடல்கள் வாங்குவோம்’’ என்ற அவர்களின் கோரிக்கை கட்டாயம் அரசுக்கும் கேட்டிருக்கும்.

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*எளிய மனிதர்களின் வெற்றியும் வெள்ளந்தியான பேச்சும் எப்படி இருக்கும் என்பதைச் செவ்வந்தி சுயஉதவிக் குழு விருது வாங்க மேடையேறியபோது பார்வையாளர்கள் தெரிந்துகொண்டார்கள். ``எழுதப் படிக்கத் தெரியாத எங்களை இந்த மேடைக்குக் கொண்டுவந்து நிறுத்தினது எங்க முயற்சிதான்’’ என நெகிழும் குரலில் அவர்கள் சொல்ல, கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள் சக மனுஷிகள்.

*சிலம்பக் கலையால் சிலிர்க்கவைக்கும் ஐஸ்வர்யா மணிவண்ணனுக்கு `தொல்கலை நாயகி’ விருது வழங்கப்பட்டது. தன் பரத குரு கவிதா ராமுவையும், சிலம்ப குரு பவர் பாண்டியனையும் மேடையேற்றி நன்றி தெரிவித்த ஐஸ்வர்யா, நடிகை சுஜாவுக்கு சிலம்பம் சுற்ற டெமோ காட்டவும் தவறவில்லை.  

*இசையரசி பி.சுசீலா. 60 ஆண்டுகள், 12 மொழிகள், 17,695 பாடல்கள் என இசையுலகின் உச்சம் தொட்டவர். தலைமுறைகளாகத் தமிழர்களைத் தாலாட்டிக்கொண்டிருக்கும் அவருக்கு `தமிழன்னை’ விருதை வழங்க மேடையேறினார்கள் நடிகைகள் சச்சுவும் லதாவும். அந்தத் தருணத்தைத் தொகுத்து வழங்கிய நடிகர் சிவகுமார், அவருக்குப் பிடித்த சுசீலாவின் பாடல்களைக் கடகடவெனப் பட்டியலிடுகையில் நொடிக்கு நொடி காலப்பயணம் மேற்கொண்டனர் பார்வையாளர்கள்.

*`டார்லிங் ஆஃப் தமிழ்நாடு’ விருது பெற துள்ளலாக மேடையேறினார் ஓவியா. விருது வழங்கிய ஸ்ரீப்ரியா, தொகுப்பாளர்கள் நட்சத்திரா, ராஜவேல் என அனைவரின் கேள்விகளுக்கும் சளைக்காமல் டக்டக்கென பதில் கொடுத்து க்ளாப்ஸ் வாங்கினார்.  

அவள் விருதுகள் - பெண்ணென்று கொட்டு முரசே!

*`இணைய நட்சத்திரம்’ விருது வாங்கிய லக்ஷ்மிப்ரியா ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், கலா மாஸ்டர் ஆகியோரை எல்லாம் இமிடேட் செய்து கைத்தட்டல்கள் அள்ளினார்.

*`சிறந்த சின்னத்திரை நட்சத்திரம்’ விருதை வாணிபோஜனுக்கு `டிடி' வழங்கினார். டிடி-க்கு வாணி நடிப்பு சொல்லிக்கொடுக்க, டிடி பதிலுக்கு காம்பியரிங் சொல்லிக்கொடுக்க, ஜாலி கேலி நிமிடங்கள் அவை.

*கண்களால் கவிதை பேசும், கன்னச் சதைகளால் உணர்ச்சி கடத்தும் நடிப்பு ராட்சசி ஆண்ட்ரியாவுக்கு `திரைத் திறமையாளர்’ விருது வழங்கப்பட்டது. பட்டுச்சரிகை மின்ன மின்ன லண்டன் மியூசியத்தின் மெழுகுச் சிலையாக அவர் நடந்துவர, அரங்கில் பேச்சுமூச்சில்லை. `இதுவரை இல்லாத உறவிது...’ என அந்தக் காந்தக்குரலே மெளனம் உடைக்க இயல்புநிலைக்கு திரும்பியது சென்னை வர்த்தக மைய அரங்கம்.

*தன் சாரங்கியால் மொத்த வளாகத்தையும் இசை வெள்ளத்தில் மூழ்கடித்தார் சிறந்த இசைக் கலைஞருக்கான விருது பெற்ற மனோன்மணி.

இப்படி, பொறுப்பும் பெருமையும் நிறைந்த கலர்ஃபுல் கொண்டாட்டமாக நடந்து முடிந்தது அவள் விருதுகள் 2017. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு