
அவள் அரங்கம்வெ.வித்யா காயத்ரி - படங்கள் : கே.ராஜசேகரன்
சன் டி.வி ‘தெய்வமகள்’ சீரியல் ஹீரோயினின் நிஜப்பெயர் வாணி போஜன். ஆனால், தமிழ் இல்லங்களில் இவர் எப்போதும் சத்யாதான். ஏர் ஹோஸ்டஸ் வேலையில் சிறிதுகாலம் சிறகடித்துப் ‘பறந்து’விட்டு, மாடலிங், விளம்பரங்கள் எனத் தரையிறங்கியவர் வாணி. ‘தெய்வ மகள்’ தொடர் இவரைச் சின்னத்திரைக்குச் சிவப்புக்கம்பளம் விரித்து அழைத்துவந்தது. சின்னத்திரை ரசிகர்கள் ‘சத்யா’வைத் தங்கள் வீட்டுப்பெண்ணாகவே கொண்டாடித் தீர்த்தனர். நேர்த்தியான இவரின் காஸ்ட்யூம்களுக்கு ரசிகைகள் பலர். விரைவில் தன் வெள்ளித்திரைப் பயணத்தையும் தொடரவிருக்கும் வாணி போஜன், அவள் விகடன் வாசகிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்...

‘சத்யா’ தைரியமான பெண். `வாணி போஜன்' எப்படி?
- வெற்றிச்செல்வி, கோயம்புத்தூர்
இயல்பிலேயே பெண்கள் எல்லோரும் தைரியமானவர்கள்தான். நானும் அப்படித்தான்.
மகா பாப்பாவுக்கும் உங்களுக்கும் கெமிஸ்ட்ரி செம... என்ன மேஜிக் அது?
- எம்.பாக்யஸ்ரீ, சித்தூர்
குழந்தைகள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் மகா, லவ்லி பேப். மகா வந்ததும் எங்கள் ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலவென மாறிவிட்டது. அவளால் எங்கள் எல்லோரின் முகத்திலும் மகிழ்ச்சி நிறையும். லவ் யூ அண்டு தேங்க் யூ மகா.
நடிகை, நடுவர்... பிடித்தது எது?
- நித்திலா சேகரன், மும்பை
இரண்டுமே பிடித்திருக்கிறது. சீரியலில் நடிப்பு சார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். சன் டி.வி ‘அசத்தல் சுட்டீஸ்’ நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும்போது திறமையைத் தீர்மானிக்கவேண்டிய அந்தப் பொறுப்பை உணர்கிறேன். குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடுவராக இருப்பது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது.
மறக்கமுடியாத லவ் புரொபோசல்?
- கே.ரேஷ்மா, திருநெல்வேலி
நிறைய லவ் புரொபோசல்கள் வந்திருக்கின்றன. ஆனால், மறக்கமுடியாத அளவுக்கு ஸ்பெஷலாக யாரும் சொன்னதில்லை. ஒருவேளை, இனி அப்படி யாராவது புரொபோஸ் செய்தால் சொல்கிறேன்.
திருமணம், லிவிங் டுகெதர், நோ மேரேஜ்... எது பெஸ்ட்?
- இளமதி சந்திரசேகரன், சென்னை-33
என்னைப் பொறுத்தவரை திருமணம்தான் சிறந்தது. நம் சுக துக்கங்களைப் பரிமாறிக்கொள்ள ஆயுளுக்கும் ஒரு ஜீவன் வேண்டும். லிவிங் டுகெதர், நோ மேரேஜ் என்பதை எல்லாம், ‘40, 50 வயசுக்கு அப்புறம்?’ என்கிற கேள்வியை யோசிச்சுப் பார்த்து முடிவெடுக்க வேண்டும்.
உங்களால் மறக்க முடியாத கிசுகிசு?
- எம்.ரித்திகா, ஹைதராபாத்
நான் பலருடன் இணைந்து விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். அப்படி என்னுடன் நடித்தவர்களை எல்லாம் எடிட் செய்து, ‘வாணி போஜனின் பாய் ஃப்ரெண்ட்ஸ், லவ்வர்’ என யூடியூப் சேனலில் ஒரு வீடியோ போஸ்ட் செய்திருந்தார்கள். விழுந்து விழுந்து சிரித்தேன்.
உங்களுடைய பொழுதுபோக்கு?
- அமிழ்தவல்லி குமார், திருச்சி-1
புத்தகங்கள் படிப்பேன். உலக நடப்புகள், பிடித்த படம் என ரேண்டமாக எதைப்பற்றியாவது யோசித்துக்கொண்டே இருப்பேன். நன்றாகத் தூங்குவேன்.
அடிக்கடி பார்த்து ரசிக்கிற ஒரு பொருள்?
- என்.சாமுண்டீஸ்வரி, மைசூர்
நான் சாய்பாபாவின் தீவிரமான பக்தை. ஒருநாள் எங்கள் வீட்டின் அருகே இருக்கும் குப்பைத்தொட்டியில் ஒரு சாய்பாபா சிலையைப் பார்த்தேன். அந்தச் சிலையைச் சுத்தம் செய்தேன். அதில் ஒரு விரிசல்கூட இல்லை. அதை எங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்தேன். இப்போதும் அதைப் பார்க்கும்போதெல்லாம் எமோஷனலாக இருக்கும்.
அம்மாவிடம் திட்டு வாங்கும் விஷயம்?
- சு.தமிழ்வாணி, மதுரை
நேரத்துக்குச் சாப்பிட மாட்டேன். சாப்பிடும்போது மொபைலைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவேன். இந்த இரண்டு விஷயங்களுக்கும் என்னைத் திட்டித் திட்டியே என் அம்மா டயர்டாகிவிடுவார்.
வாணி போஜனை உங்களுக்கு ஏன் பிடிக்கும்?
- கஸ்தூரி கண்ணன், திருவாரூர்
அவள் தன் உலகத்தின் மனிதர்களை ஜட்ஜ் செய்வதைத் தவிர்த்து, அனைவரையும் நல்லவர்கள் என நம்புவாள், அனைவரிடமும் அன்பு செய்வாள்.
அடிக்கடி அவுட்டிங் போகும் இடம்?
- வளர்மதி பெரியசாமி, தேனி
ஷூட்டிங் முடிந்தால் நேராக வீட்டுக்குச் சென்றுவிடுவேன். அவுட்டிங்கில் எல்லாம் ஆர்வம் இருப்பதில்லை. குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதுதான் பிடிக்கும். பார்ட்டி, எனக்குச் சரிப்பட்டு வராத விஷயம்.
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்?
- வர்ஷா தேவராஜன், பாலக்காடு
தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி!
நடிப்பைத் தவிர வேறு என்ன பிடிக்கும்?
- யாழிசை சுதாகரன், சென்னை-91
எனக்கு இயக்குநராக ஆசை. ஸ்கிரிப்ட் எல்லாம்கூட வைத்திருக்கிறேன்.
உங்களுடைய ரோல் மாடல் யார்?
- சிந்துஜா சத்யன், திருவனந்தபுரம்
என் அம்மா. அடுத்ததாக, சேலம் கலெக்டர் ரோகிணியை மிகவும் பிடித்திருக்கிறது. அவருடைய தைரியம் எனக்கு இன்ஸ்பயரிங்காக இருக்கிறது.
விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்தது பற்றி...
- சி.இளவேனில், காரைக்கால்
ரொம்பவே வித்தியாசமான அனுபவம். ஏர்ஹோஸ்டஸாக வேலைபார்த்த மூன்று வருடங்களில், ஒவ்வொரு நாளையும் புதிது புதிதாக வாழ்ந்தேன்.
பின்புலம் இல்லாமல் மீடியாவுக்கு வந்த நீங்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் என்னென்ன?
- செ.கிறிஸ்டியா, செங்கல்பட்டு
நாம் மற்றவர்களிடம் எப்படியிருக்கிறோமோ, அப்படித்தான் அவர்களும் நம்மிடம் இருப்பார்கள். நான் மீடியாவில் அனைவரிடமும் இயல்பாகவும் அன்பாகவும் பழகுவேன். எனவே, எனக்கு இங்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். கஷ்டங்கள் எதுவும் அனுபவிக்க வேண்டிய நிலைமை எனக்கு வரவில்லை.
உங்களுடைய பலம் யார்?
- மீனா வசந்தகுமார், பொன்னேரி
என் அம்மா. என் பெஸ்ட் ஃப்ரெண்டும் அவர்தான். என் பர்சனல் விஷயங்களை அவரிடம் மட்டும்தான் பகிர்ந்துகொள்வேன். எப்போதும் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்.
ஏர்ஹோஸ்டஸ் இன்டர்வியூவில் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன?
- வர்ணிகா பாஸ்கரன், கொடுமுடி
ஏர்ஹோஸ்டஸ் வேலைக்கு முன்பாக, இன்னொரு இன்டர்வியூவுக்குச் சென்றிருந்தேன். ‘அதில் ஏன் தேர்வாகவில்லை?’ என்று கேட்டார்கள். ‘அங்கு பணியில் சேர்வதற்கு முன் 15 ஆயிரம் ரூபாய் கட்டச் சொன்னார்கள். என்னால்
அது முடியாது என்பதால், அதில் சேரவில்லை’ என்று உண்மையைச் சொன்னேன். அது அவர்களுக்குப் பிடித்துப்போக, என்னைத் தேர்வு செய்தார்கள். 25 ஆயிரம் ரூபாய் ஆரம்பச் சம்பளமாக நிர்ணயித் தார்கள்.
உங்களை மிகவும் பாதித்த சம்பவம்?
- சித்ரா சுவாமிநாதன், ஊட்டி
நான் பத்தாவது படித்தபோது ஒரு மாஸ்டரிடம் ட்யூஷன் போனேன். ஒவ்வொரு பாடத்தை யும் பொறுமையாக நடத்துவார். அவர் நடத்தும்போதே அந்தப் பகுதி மனப்பாடமாகிவிடும். எதிர் பாராதவிதமாக திடீரென அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். என்னால் அவர் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அவ்வளவு அழுதேன். அதற்குப் பின் எத்தனையோ மரணங்களைக் கடந்திருந்தாலும், அப்படி ஓர் அழுகையைக் கடந்ததில்லை. இன்றுவரை என்னால் அவர் இழப்பிலிருந்து மீண்டுவர முடியவில்லை.
சொந்த ஊரான கோத்தகிரிக்கு இப்போதும் செல்வீர்களா?
- பவானி கார்த்திகேயன், திருநாகேஸ்வரம்
அடிக்கடி போக நேரம் இருப்பதில்லை. அவசியம் ஏற்படுகிறபோது செல்கிறேன்.
அடுத்து... சீரியலா? சினிமாவா?
- எல்.யாஸ்மின், ஈரோடு
சினிமா வாய்ப்புகள் வருகின்றன. என் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கிறது.
வெள்ளித்திரையில் யாருடன் நடிக்க ஆசை?
- எஸ்.சிவஸ்ரீ, காட்பாடி
இவருடன்தான் நடிக்க வேண்டும் என்கிற திட்டமெல்லாம் இல்லை. எல்லோருடனும் நடிப்பதற்குத் தயாராக இருக்கிறேன்.
எதிர்காலக் கனவு?
- சத்யா சந்திரன், பெங்களூர்-51
கரியரைப் பொறுத்தவரை, அப்படி எதுவும் இல்லை. நாளை என்ன நடக்கும் என்று யோசிக்க மாட்டேன். இன்றைய நாளை எப்படி பிடித்த மாதிரி வாழ்வது என்றுதான் யோசிப்பேன். பர்சனலாக, ஒரு நல்ல மனுஷியாகக் கடைசி வரை வாழ வேண்டும் என்று நினைப்பேன். இன்றுவரை நான் யார் மனதையும் காயப்படுத்தியதில்லை. இனியும் அப்படியே வாழ வேண்டும் என்பதுதான் ஆசை.
உங்களுடைய சின்ன வயது கிரஷ் யார்?
- த.தமிழ்மலர், சேலம்

சூர்யா. டீன் ஏஜில் அவரது படங்களை ஒன்று விடாமல் பார்த்துவிடுவேன்.
மறக்க முடியாத பாராட்டு..?
- கீதா கிருஷ்ணமூர்த்தி, திருச்சூர்
டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா சார், ‘நான் உன் ரசிகன்’ என்று சொன்னார். அவரிடமிருந்து அப்படி ஒரு பாராட்டு கிடைத்ததைப் பொக்கிஷமாக நினைக் கிறேன். தேங்க்யூ சார்!

உங்களின் வார்ட்ரோப்பில் என்ன ஸ்பெஷல்?
- ஆர்.மங்கை, நெல்லை
புடவை கட்டிக்கொள்வது மிகவும் பிடிக்கும். என்னிடம் நல்ல புடவை கலெக்ஷன் உள்ளது. ஹோம்லி லுக்தான் என் சாய்ஸ். அதுதான் என் முகத்துக்கு செட் ஆகும்.

உங்களின் ஃபேவரைட் ரியல் லைஃப் ஜோடி யார்?
- செ.மலரொளி, கலவை
கிருஷ்ணா - சாயாசிங். அவர்களுடைய காதலும், ஒருவர் மேல் ஒருவர் வைத்துள்ள மரியாதையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பிடித்த ஹீரோயின்?
- கே.தியா, பெங்களூர்-3
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் ஆல்டைம் ஃபேவரைட் ஹீரோயின்.
தன்னை எத்தனை சர்ச்சைகள் சுற்றினாலும் `கேர்' பண்ணாமல் முன்னேறிப்போகும் அவரின் ஆட்டிட்யூடுக்கு ஒரு சல்யூட்!”