Published:Updated:

இவள் பேரழகி - காயத்ரி

இவள் பேரழகி - காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
இவள் பேரழகி - காயத்ரி

நம்பிக்கையாழ் ஸ்ரீதேவி

இவள் பேரழகி - காயத்ரி

நம்பிக்கையாழ் ஸ்ரீதேவி

Published:Updated:
இவள் பேரழகி - காயத்ரி
பிரீமியம் ஸ்டோரி
இவள் பேரழகி - காயத்ரி

`பெண் பிள்ளையா? காது மடலின் நிறத்தில்தான் இவள் வருவாள்' எனப் பிறந்தவுடனே சுற்றம் முடிவு செய்யும். கால்களை உதைத்தபடி  மெள்ளச் சிரிக்கும் சிசுவை அள்ளிக்கொஞ்சும் அத்தைகள் `அடிக்கருவாச்சி' என்று கிண்டல் செய்வார்கள். இவள் வளர வளர அதுவே இவளின் செல்லப் பெயராகும். அர்த்தம் புரியும்வரை `கருவாச்சி' என்ற அழைப்பு வலிக்காது. வளர்ந்து வனப்பெய்கிற காலத்தில் இந்தப் பட்டப்பெயர்  இவளை மெள்ளச் சிதைத்துத் தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளும்.

வகுப்பறையின் முதல் வரிசை மட்டுமல்ல, நடன நிகழ்ச்சியின் முதல் வரிசையும் இவளுக்கு மறுக்கப்படும். பண்டிகைக்குத் துணியெடுக்கச் செல்லும்போது பிடித்த வண்ணங்கள் எல்லாம் பறிபோகும். சுற்றியிருக்கும் அந்த நாலு பேரின் பழிப்புச் சொற்கள்தாம் `ஏன் கறுப்பாகப் பிறந்தோம்' என மனதுக்குள் கதற வைக்கும்.

அத்தனை பாடங்களிலும் தேர்ச்சியடைந்து ரேங்க் கார்டு வாங்கும்போது, `நீயெல்லாம் பாஸாகிட்டியா?' என்கிற ஆங்கில ஆசிரியரின் ஏளனமான  தொனியில் கருமை இறுகிடும். இப்படிப் பல அனுபவங்கள் நம்மில் பலருக்கு உண்டு.

இவள் பேரழகி - காயத்ரி

பட்டப்படிப்பு முடித்தபிறகு கலந்துகொள்ளும் நேர்காணல் களின்போது மதிப்பெண் பட்டியல் நம்பிக்கை தரும்தான். ஆனால், `தகவல் வரும்' என்று திருப்பியனுப்புகிற தருணங்கள் கனலையே மனதில் கொட்டியனுப்பும். திறமையும் கடின உழைப்பும் தரும் நம்பிக்கையில் அத்தனை அவமானங்களையும் உதைத்துத் தள்ளி, தனக்குப் பிடித்த துறையில் பயணிக்கும் பெண்களை `டார்க் ஸ்கின் கேர்ள்' என்கிற அடையாளம் ஏளனப்படுத்தவே செய்கிறது. இதுபோன்ற பெண்களின் மனக்கண்ணாடியாக `கலர்ஸ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது `பேரழகி' தொடர்.

பேரழகி `போதும் பொண்ணு' வாக நடிக்கிற காயத்ரி சென்னையைச் சேர்ந்தவர்.  அப்பா ராஜா ஆட்டோ டிரைவர். அம்மா ராணி இரண்டாண்டுகளுக்கு முன் காலமாகி விட்டார். பி.எஸ்ஸி கணிதம் படித்திருக்கும் காயத்ரி பள்ளிக் காலத்தில் இருந்தே நாடகங்களில் நடித்தவர். சினிமாவில் சிறிய ரோல்களில் தலைகாட்டிய காயத்ரி, `இனிமே இப்படித்தான்' படத்தின் மூலம் ஹீரோயினின் தோழியாக முன்னேற்றம் கண்டுள்ளார்.  சினிமா உலகிலும்  நடிப்புத் திறமையைத் தாண்டி டார்க் ஸ்கின் பெண்ணாக காயத்ரி சந்தித்த ஏமாற்றங்கள் அதிகம். அவரைப் `பேரழகி'யே நம்பிக்கைப் பெண்ணாக நம் முன் நிறுத்தியுள்ளது. இன்று தன்னம்பிக்கைமிக்க உழைப்புக்கு உதாரணமாகத் திகழும் இந்தப் பேரழகி, தன் கதையையும் கனவு களையும் பகிர்கிறார் நம்மோடு.

``பேரழகில வர்ற `போதும் பொண்ணு' என்பது ஒரு கதா பாத்திரம் மட்டுமல்ல, அதுல நானும் இருக்கேன். சீரியலில் வருகிற  சில காட்சிகள் உண்மை யில் எனக்கே நடந்திருக்கு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவள் பேரழகி - காயத்ரி

ஆரம்ப நாள்கள்ல நிறைய ஆடிஷன்ஸ்ல நான் கத்துக்கிட்டது இதுதான். `நல்லா பர்ஃபார்ம் பண்றம்மா'ன்னு சொல்லுவாங்க. `நமக்கு எப்படியும் சான்ஸ் கிடைச்சிரும்'னு நானும் நம்பிட்டிருப்பேன். ஆனா, அந்த வாய்ப்பு வேறொரு பொண்ணுக்குப் போயிரும். அப்பெல்லாம் மனசுல ஓர் அடி விழுந்த மாதிரி இருக்கும். `கறுப்பா பொறந்தது ஒரு தப்பா'ன்னு ஒரு கோபம் வரும். நடிப்பை விட்டே போயிடலாம்னு ஒருகட்டத்துல முடிவு பண்ணினேன். அப்போதான் `பேரழகி' ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. வழக்கம் போல ரிஜெக்ட்தான்னு நினைச்சப்போ நடந்ததோ  நம்பமுடியாத ஆச்சர்யம்” என்று உற்சாகமாகிறார் காயத்ரி.

``இது என் வாழ்க்கையை பாசிட்டிவ் பாதைக்கு மாற்றிய அரிய வாய்ப்பு. என்னைப் போன்ற டார்க்  ஸ்கின் பெண்களை அப்படியே `போதும் பொண்ணு' பிரதிபலிக்கிறா. அறிவுக்கும் சரும நிறத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு அவ நிரூபிக்கிறா.

இந்த சீரியலுக்காக, டார்க் ஸ்கின் உள்ள பெண்கள் சந்திக்கிற பிரச்னைகள் என்னன்னு நிறைய பேரை நேர்ல சந்திச்சு புரிஞ்சுகிட்டோம். நிறம் காரணமான புறக்கணிப்பைத் தாண்டி சாதிச்ச பெண்களைச் சந்திக்கிறதும், அதுக்காக மேற்கொண்ட பயணங்களும் என்னை ரொம்பவே மாத்தியிருக்கு.

இவள் பேரழகி - காயத்ரி

மெட்ரோ ரயில்ல `பேரழகி' ஷூட்டிங் நடந்தப்போ அதுல டிராவல் பண்ணின பெண்கள் `கவலைப்படாதம்மா, நீ அழகிதாம்மா... உன்னால முடியும்'னு ஆறுதல் சொன்னாங்க. அதை ஒரு டிராமாவா யாரும் ஃபீல் பண்ணலை. தங்களில் ஒருத்தியாத்தான் என்னை அவங்க பார்க்கறாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்கு.

சமூகத்துல `போதும் பொண்ணு' மாதிரி நிறைய பொண்ணுங்க ஒதுக்கப்படறாங்க.  அவங்க மனசுல `போதும் பொண்ணு' சின்னப் பொறியை விதைக்கிறா. `சின்ன நெருப்பால எதுவும் பண்ண முடியும்; சின்ன வெளிச்சத்தால பெரிய இருட்டை ஜெயிக்க முடியும்'கிற நம்பிக்கையை அவ கொடுக்குறா. இந்த சீரியல் பார்த்துட்டு எனக்கு போன் பண்ணிப் பேசின பெண்கள் பலர், `டார்க் ஸ்கின்' மாயைல இருந்து வெளியில வந்துட்டதா சொன்னாங்க.

இவள் பேரழகி - காயத்ரி

பெண்கள் எந்தச் சூழல்லயும் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாம உறுதியா இருக்கணும். திறமைக்கான வாய்ப்பு நிச்சயமா கிடைக்கும். நடிப்பைவிட்டே போயிடலாம்னு நான் குழப்பத்துல இருந்தப்பதான் எனக்கு `பேரழகி' வாய்ப்பு கிடைச்சது. என் முழு நடிப்புத்திறமையும் வெளிக்காட்டுறதுக்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்தது. இதுபோல ஒவ்வொரு பெண்ணும் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை நம்பிக்கையோடு போராடுவதை விட்டுடக் கூடாது.

நான் கண்ணாடி முன்னாடி நின்னு நிறைய பேசுவேன். நான் விரும்பினதெல்லாம் கிடைச்சுட்ட மாதிரி ஃபீல் பண்ணுவேன். என்னைப் பேட்டி எடுக்க வந்தா அந்தக் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லுறதுன்னுகூட எப்பவோ ரிகர்சல் பண்ணியிருக்கேன். இப்போ நினைச்சா சிரிப்பா இருக்கு. ஆனா, என் வாழ்க்கைல நான் ஆசைப்பட்டதெல்லாம் நடக்குது” என்று புன்னகைக்கிறார் காயத்ரி.

ஆம்... கருமை என்பது இழிவில்லை; பிழையில்லை... கனவு காணுங்கள்; சிகரம் தொடுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism