Published:Updated:

"ஆளை மாத்திட்டு, 'முன்னவிட அழகாயிட்ட'னு வசனம் வைக்கிறாங்க!" - சீரியல் ஆள்மாற்ற பஞ்சாயத்து

"ஆளை மாத்திட்டு, 'முன்னவிட அழகாயிட்ட'னு வசனம் வைக்கிறாங்க!" - சீரியல் ஆள்மாற்ற பஞ்சாயத்து
"ஆளை மாத்திட்டு, 'முன்னவிட அழகாயிட்ட'னு வசனம் வைக்கிறாங்க!" - சீரியல் ஆள்மாற்ற பஞ்சாயத்து

சீரியல்களில் ஆள் மாற்றங்கள் நிகழ்கிறபோது அவமானப்படுத்தப்படுவதாகச் சொல்கிறார்கள், சீரியல் நட்சத்திரங்கள்.

ருடக் கணக்கில் ஒளிபரப்பாகிற மெகா சீரியல்களில் அவ்வப்போது ஆர்ட்டிஸ்டுகள் மாறுவது என்பது சகஜமாகிவிட்டது. `ஷூட்டிங் தேதிகளில் சிக்கல்', `இயக்குநர், தயாரிப்புத் தரப்புக்கும் நடிகர், நடிகைகளுக்குமிடையே பிரச்னை', `சக நடிகர் நடிகைகளுடன் பிரச்னை' எனக் காரணங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், முன்பெல்லாம் `இவருக்குப் பதில் இவர்' என ஒரு செகண்டில் வெளியேறுகிறவர் மற்றும் புதிதாக வருபவரின் போட்டோவைக் காட்டி, அந்த விஷயத்தை முடித்து விடுவார்கள். இப்போது அப்படியில்லாமல், வித்தியாசமாகச் சிந்திப்பதாக நினைத்துக்கொண்டு செய்கிற சில விஷயங்கள் சீரியல் நடிகர், நடிகைகளை அதிருப்தியடையச் செய்திருக்கிறது. அப்படி என்ன விஷயங்கள்? சீரியல் வட்டாரத்தில் பேசினோம்.

``சேனல்கள், சீரியல்களின் எண்ணிக்கை பெருகிட்ட இந்தக் காலத்துல சீரியல்கள்ல ஆள் மாற்றம் சகஜம்ங்கிறதை நாங்களும் ஏத்துக்கிறோம். அதுக்கான காரணங்களை அலசுனா, எல்லாத் தரப்புக்கும் ஒரு நியாயம் இருக்கும். அதனால, அந்த விவகாரத்துக்குள்ள போக வேண்டாம். ஆனா, நடிகர் - நடிகைகள் மாறுகிறபோது ஒரு நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டாமா என்பதே எங்க கேள்வி. `ஃபன்'னா யோசிக்கிறதா நினைச்சுக்கிட்டு ஏற்கெனவே ஒருவிதக் கசப்புல தொடர்ல இருந்து வெளியேறுகிற ஆர்ட்டிஸ்டுகளோட மனசை மேலும் புண்படுத்துறாங்க.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, `பொன்மகள் வந்தாள்'னு ஒரு சீரியல்ல ஹீரோயினுக்கும், இயக்குநருக்கும் சண்டை. அந்த ஹீரோயின் தொடர்ல இருந்து வெளியேறுனப்போ, அவரைக் கடுப்பேத்துற மாதிரி, உள்ளே புதுசா என்ட்ரி ஆன ஹீரோயினுக்கு, "முன்ன இருந்ததைவிட இப்போ அழகா இருக்கியேடி எப்படி?"னு வசனம் வெச்சாங்க. 

இதுகூட பரவாயில்ல, இப்போ மாமியார் கேரக்டர்ல நடிச்சுக்கிட்டிருந்த ஒரு நடிகை ஒரு சீரியல்ல இருந்து வெளியேறினாங்க. அந்த மாற்றத்தை டிவியில காட்டும்போது, அவங்க மருமகளே அவங்களை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிற மாதிரி சீன் வெச்சு, (முன்பு எடுத்திருந்த காட்சி இது என்கிறார்கள்) `என்னமா.. உங்களையே வெளியில போகச் சொல்லிட்டாங்களா?'னு கேட்டு, அந்த இடத்துக்குப் புது மாமியாரைக் கொண்டு வந்திருக்காங்க. ஏதோ பிரச்னை சீரியல்ல இருந்து விலகுறாங்க, சரி. அதுக்காக, வெளியேறுகிறவர்களை இப்படியா அவமானப்படுத்தணும்?" என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த சீனியர் நடிகை.

இப்படியான காட்சிகள் குறித்து இயக்குநர்கள் தரப்பில் கேட்டபோது, `ஆர்ட்டிஸ்டுகள் மாறுவது மட்டுமே மக்களுக்குத் தெரியுது, சீரியல்களில் சில சமயம் இயக்குநர்களே மாறுகிறார்களே... அதை என்ன செய்வது? இந்த ஆள் மாற்றம் எங்களுக்குப் பெரிய பிரச்னையா இருக்குது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை தயாரிப்புத் தரப்பும், சேனல் நிர்வாகமும் கலந்து பேசினாதான் சுமுகமான ஒரு தீர்வு கிடைக்கும்னு நினைக்கிறேன்." என்கிறார்கள். 

சீரியல் நடிகரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமான நவீந்தரிடம் இந்த விஷயம் குறித்துக் கேட்டோம்.

``சில நேரங்கள்ல சில ஆர்ட்டிஸ்டுகளே அவங்களோட சுய விருப்பத்தின் பேரில் நடிச்சுக்கிட்டு இருக்கிற சீரியலிலிருந்து வெளியேறுற சம்பவமும் நடக்குது. அந்த மாதிரி சமயங்கள்ல அவங்க ஒப்புதலுடன் இந்த மாதிரி காட்சிகளையெல்லாம் வெச்சா, அது தவறா இருக்காது. ஆனா, ஒரு சீரியல் யூனிட்டுடன் பிரச்னை வந்து, அதில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் வெளியேறினா... அப்போ இந்த மாதிரி நக்கல், நையாண்டி பண்ணினா, அது கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான்." என்கிறார். 

அடுத்த கட்டுரைக்கு