Published:Updated:

``அந்தக் காலங்களையெல்லாம் நினைச்சுப் பார்த்தால்... ரொம்ப வலியா இருக்கும்!" `ரோஜா' சுமதிஸ்ரீ

``அந்தக் காலங்களையெல்லாம் நினைச்சுப் பார்த்தால்... ரொம்ப வலியா இருக்கும்!" `ரோஜா' சுமதிஸ்ரீ
``அந்தக் காலங்களையெல்லாம் நினைச்சுப் பார்த்தால்... ரொம்ப வலியா இருக்கும்!" `ரோஜா' சுமதிஸ்ரீ

``கடந்து வந்த வாழ்க்கை பாடம் கொடுத்த அனுபவத்தில், அழுகைக் காட்சிகள்ல பெரும்பாலும் கிளிசரினே இல்லாம நடிக்கிறது என் வழக்கம்."

``1990-களில் வெளியான பல படங்கள்ல என்னை அப்பாவிப் பொண்ணாப் பார்த்திருப்பீங்க. ஆனா, அவை மக்கள் மனசுல பெரிசா பதியலைனு நினைக்கிறேன். அதனால்தான் சீரியலில் சிறப்பா நடிச்சு, மக்கள் மனசுல இடம்பிடிச்சிருக்கேன்" எனப் புன்னகைக்கிறார், சுமதிஸ்ரீ. சன் டிவி `ரோஜா' சீரியலில் நடித்துவருபவர்.

``உங்களைப் பற்றி..."

``பெற்றோர் உட்பட குடும்பத்தில் பலரும் நடிகர்கள்தான். என் எட்டு வயசுல அம்மா இறந்துட்டாங்க. பிறகு, சித்தப்பா வீட்டுலதான் வளர்ந்தேன். அவருடன் ஒருமுறை ஷூட்டிங் வேடிக்கை பார்க்கப்போனேன். ஒரு ஆர்டிஸ்ட் அன்றைக்கு நடிக்க வரலை. கூட்டத்தில் நின்றிருந்த என்னைப் பார்த்து, `இந்தப் பொண்ணு நல்லா இருக்கே'னு நடிக்கக் கேட்டாங்க. அப்படித்தான், `யாமிருக்க பயமேன்' படத்தில் நடிகை சுலக்‌ஷனாவின் தங்கையா நடிச்சேன். தொடர்ந்து ஹீரோ, ஹீரோயினுக்கு தங்கை உட்பட கேரக்டர் ரோல்கள்ல அதிகம் நடிச்சேன். `பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்' படத்தில் கவுண்டமணி - மனோரமாவுக்கு மகளா நடிச்சேன்". 

``சினிமாவில் அதிகம் நடிக்காததுக்குக் காரணம்..."

``என்னுடையது கூட்டுக்குடும்பம். அதில் என்னோட பங்களிப்பு பெரிசு. அதனால என்னால அவுட்டோர் ஷூட்டிங் போக முடியாது. அதனாலயே நிறைய சினிமா வாய்ப்புகளைத் தவிர்த்தேன். உரிய வாய்ப்புகள் கிடைச்சிருந்தால் சினிமாவுலயும் என் திறமையை வெளிப்படுத்தியிருக்கலாம்னு ஆதங்கம் இருக்கு. ஆனால், அதை நினைச்சு ஒருபோதும் வருத்தப்படலை. ஏன்னா, என் நாடக நடிப்பின் மூலம் மனநிறைவு கிடைச்சுது. தேங்காய் சீனிவாசன், செந்தாமரை உட்பட பல பெரிய கலைஞர்களின் குழுவில் 25 வருஷத்துக்கும் மேல நடிச்சேன். இதுவரை, ஐந்தாயிரத்துக்கும் அதிகமான நாடகங்கள்ல நான் நடிக்காத வேடங்களே இல்லைனு சொல்லலாம். சினிமா நடிப்பில் கிடைக்காத மனநிறைவு நாடகங்களினால் கிடைச்சுது. இருப்பினும், இவற்றின் மூலம் பொருளாதார தேவையைப் பூர்த்தி செய்துக்க ரொம்பவே போராடினேன். அந்தக் காலங்களையெல்லாம் நினைச்சுப் பார்த்தால், ரொம்ப வலியா இருக்கும். அதையெல்லாம் பாசிட்டிவ் எனர்ஜியோடு எதிர்கொண்டு வந்தேன். நிறைய சீரியல்கள்லயும் நடிச்சேன். `தங்கம்' சீரியல் முடிஞ்சதும், பர்சனல் லைஃப் மற்றும் உடல்நிலை காரணத்தில்தான் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தேன். இப்போ `ரோஜா' சீரியல்ல ஆக்டிவா நடிச்சுகிட்டு இருக்கேன்". 

``நீங்க எதிர்பார்க்கும் கேரக்டர்?"

``அம்மா உள்ளிட்ட ரொம்பவே சென்டிமென்ட் ரோல்தான் எனக்குக் கிடைக்குது. `எதார்த்தமான ஏழைக் குடும்பத்து அம்மா என்றாலே, நீங்கதான் பெஸ்ட் சாய்ஸ்'னு சொல்லுவாங்க. கடந்து வந்த வாழ்க்கை பாடம் கொடுத்த அனுபவத்தில், அழுகைக் காட்சிகள்ல பெரும்பாலும் கிளிசரினே இல்லாம நடிக்கிறது என் வழக்கம். கேரக்டராவே மாறிடுறதால, டேக் சொன்னதும் கண்ணீர் வந்திடும். அதைப் பிறரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது. ஆனா, என்னால நெகட்டிவ் ரோல்லயும் மிரட்ட முடியும். அப்படியான வில்லி ரோல் உட்பட சவாலான வேடங்கள்ல நடிக்க ரொம்ப நாளா காத்திருக்கேன்".

``நல்லா பாடுவீங்கன்னு கேள்விப்பட்டோம். உண்மையா?"

(சிரிக்கிறார்) ``சுமாராப் பாடுவேன். அம்மா மேடை நாடகப் பாடகி. அவங்க மூலமாகவும் கேள்விஞானத்தின் வாயிலாகவும் பாடக் கத்துக்கிட்டேன்; கத்துக்கிறேன். அவ்வப்போது வெளி நிகழ்ச்சிகள்லயும் பாடுவேன். பாடுறது தவிர, சினிமா பாடல்களுக்கு முக பாவனைகள்ல பல நடிகர்கள் மாதிரி எக்ஸ்பிரஷன்ஸ் பண்ணுவேன். கடந்த பத்து வருஷமா இந்த முயற்சியைப் பண்றேன். இப்போ ஷூட்டிங் ஸ்பார்ட்ல ஷாட் இல்லாத நேரங்கள்ல இதுதான் பொழுதுபோக்கு. சக நடிகர்கள் என் நடிப்பைப் பார்த்து ரசிச்சு கைதட்டுவாங்க. பெரும்பாலும் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மாதிரி நடிப்பேன்; மத்த கலைஞர்களுக்கும் சொல்லிக்கொடுப்பேன்".

அடுத்த கட்டுரைக்கு