அன்வர் - சமீரா, விக்னேஷ் கார்த்திக் - சௌந்தர்யா என இரண்டு காதல் ஜோடிகள். `ஒரு நிஜக் காதல் ஜோடியே காதலர்களாக நடிக்கிற...' என ப்ரமோ வெளியிட்டு, `பகல் நிலவு' சீரியலைத் தொடங்கினார்கள் (அன்வர் - சமீரா ஜோடி நிஜத்திலேயே காதலித்துக் கொண்டிருக்கிறவர்கள்). கதையில், ஹீரோக்கள் இருவரும் (அன்வர், விக்னேஷ் கார்த்திக்) சமூகத்தில் பெரிய மனிதராக மதிக்கப்படும் ஓர் அரசியல்வாதியின் மகன்கள். ஆனால், உடன் பிறந்தவர்கள் இல்லை. அப்பா ஒரே ஆள். அம்மா வேறு வேறு. `அக்னி நட்சத்திரம்' டைப் கதை. இவ்விரு ஜோடிகளைச் சுற்றியே நகரும் விதமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது, சீரியல்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய `பகல் நிலவு' சீரியல் குறித்த சுருக்கமான அறிமுகம் இது. இத்தொடர் தற்போது 700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், இப்போது என்ன பிரச்னை என்கிறீர்களா?!
6 மாதங்களுக்கு முன் தொடரிலிருந்து வெளியேறியது, அன்வர் - சமீரா ஜோடி. `ஆமாம், `பகல் நிலவு' சீரியலிலிருந்து வெளியேறி விட்டோம்! அன்வர்-சமீரா ஜோடி ஒப்புதல்' என விகடன் இணையதளத்தில் அப்போது செய்தி வெளியிட்டிருந்தோம்.
`கதையில் இரண்டு ஜோடிகளில் யாருக்கு அதிக முக்கியத்துவம்' என்பதில் முதலில் பிரச்னை என்றார்கள். அதாவது, விக்னேஷ் கார்த்திக் - சௌந்தர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்ததாகவும், அன்வர் கதையில் குறுக்கிட்டு டாமினேட் செய்ததே அதற்குக் காரணம் என்றும் பேசப்பட்டது. இது குறித்து, அன்வரிடம் அப்போது பேசினோம்.
`சேனல்ல நான் டாமினேட் செய்தேன்னு சொன்னதைக் கேட்டப்போ எனக்கு சிரிப்பாதான் வந்தது. ஷெட்யூல் கரெக்டா இல்லாதது, சக நடிகர், நடிகைகளுக்கு இடையே குரூப் பாலிடிக்ஸ்.. போன்ற விஷயங்கள் எனக்கு வருத்தத்தைத் தந்தது. அவமதிக்கப்படறதா நினைச்சா, அந்த இடத்துல இருந்து வேலை பார்க்கணும்னு அவசியமில்லை. அதனால டீசன்டா ஒதுங்கிக்கிறது நல்லதுனு நினைச்சு நாங்க வெளியேறிட்டோம்' எனச் சொன்னார்கள், அன்வரும் சமீராவும். `குரூப் பாலிடிக்ஸ்' என அன்வர் தெரிவித்திருந்த வார்த்தைக்கு, சௌந்தர்யா உள்ளிட்ட சக நடிகர், நடிகைகள் உடனே கண்டனமும் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில், தற்போது விக்னேஷ் கார்த்திக் - சௌந்தர்யா ஜோடியும் சீரியலில் இல்லை.
இவர்களுக்கு என்ன பிரச்னையாம்?!
சௌந்தர்யாவிடம் பேசினோம்.
``ஆரம்ப நாள்கள்ல சீரியல் விறுவிறுப்பாதான் போய்க்கிட்டு இருந்தது. அன்வர் - சமீரா வெளியேறினது குறித்து நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பலை. அது அவங்களோட இஷ்டம். அதுக்குப் பிறகு என்ன காரணம்னு தெரியலை, திடீர் திடீர்னு கதையைச் மாத்திக்கிட்டே இருந்தாங்க. இதனால, எங்களோட ட்ராக்கும்கூட ஒரு தொடர்ச்சி இல்லாமப் போய்க்கிட்டிருந்தது. இந்தப் போக்கு எங்களுக்குப் பிடிக்கலை. எங்களோட நேரத்தை நாங்களே விரயம் செஞ்சுக்கிறோமோனு தோணுச்சு. அதனால, 4 மாசத்துக்கு முன்னாடியே நானும், விக்னேஷ் கார்த்திக்கும் சேர்ந்து பேசி ஒரு முடிவெடுத்து வெளியேறிட்டோம்." என்கிறார்.
கதையின் மைய கேரக்டர்களான இரு ஜோடிகளும் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு ஜோடியை அறிமுகப்படுத்தி நகர்கிறது, இந்த சீரியல். தவிர, இரண்டு பிரதான ஜோடிகள் வெளியேறியது குறித்து யாரும் அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. சில தொடர்கள் ஆரவாரமின்றி ஆரம்பித்து, பின்னர் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. சில சீரியல்கள் பிரமிப்புடன் தொடங்கி, போகப்போக பிரதான கேரக்டர்கள், அல்லது அதில நடித்த பிரபலங்கள் வெளியேற, வலுவிழந்த புயலாகி கரை ஒதுங்கி விடுகின்றன.
`பகல் நிலவு' இதில் எந்த ரகம் என்பதை சீரியல் ரசிகர்களே முடிவு செய்துகொள்ளலாம்.