Published:Updated:

''என் பொண்ணுக்கு மூக்கே இல்லைன்னுட்டாங்க.. ஆனா...?!’’ ’இசையருவி’ நிஷா

''என் பொண்ணுக்கு மூக்கே இல்லைன்னுட்டாங்க.. ஆனா...?!’’ ’இசையருவி’ நிஷா
''என் பொண்ணுக்கு மூக்கே இல்லைன்னுட்டாங்க.. ஆனா...?!’’ ’இசையருவி’ நிஷா

`இசையருவி' நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தவர் நிஷா. இவருடைய குரலைக் கேட்பதற்கென தனி ரசிகர் பட்டாளமே காத்திருக்கும். இசையருவியில் வேறொரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த முரளியைக் காதலித்துக் கரம் பிடித்தார். திருமணத்துக்குப் பிறகு ஃபோரஸ் (Forus) என்கிற பெயரில் பொட்டீக் நடத்தி வந்தவர், தற்போது சன் டி.வி சீரியல் ஒன்று மூலமாக ரீ-என்ட்ரி ஆகவிருக்கிறார். அவரிடம் பேசினேன்.

``பொட்டிக் ஒரு பக்கம் நல்லபடியா போய்ட்டு இருக்கு. எங்க பொண்ணு ஜீஶ்ரீ இப்போ யூகேஜி படிக்கிறாங்க. ரொம்பப் பொறுப்பான குழந்தை. சீரியல் வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. சரி பாப்பாதான் வளர்ந்துட்டாங்களே ரீ-என்ட்ரி கொடுக்கலாமேன்னு தோணுச்சு. சீக்கிரமே என் ரசிகர்களைச் சந்திக்க வர்றேன்'' எனப் புன்னகைத்தவரிடம் அவருடைய குடும்பம் குறித்துக் கேட்டோம். 

``அன்பான கணவர், கூடவே என் பொண்ணைத் தங்கமாத் தாங்குற எங்கப்பா அம்மா, என் பொண்ணு. இவங்கதான் என் பலமே. என் குழந்தை ரொம்பப் பொறுப்பானவங்கனு சொன்னேன் இல்லியா... நான் வெளிய போறேன்னா என் பொண்ணுகிட்ட `அம்மா ஷூட்டிங் போய்ட்டு சீக்கிரமே வர்றேன்.. நீ அம்மம்மாவைப் பார்த்துக்கோன்னு' அவளைப் பெரிய மனுஷியாக்கிட்டுக் கிளம்பிப் போவேன். அவ என்னுடைய சூழலைப் புரிஞ்சிப்பா. நான் ஷூட் முடிஞ்சு வீட்டுக்கு வர்றப்போ ஓடிவந்து என்னைக் கட்டிப்பா. அந்தத் தருணத்தை வார்த்தைகளால் அடக்க முடியாது '' என்றவரிடம் மகளின் பெயர் வித்தியாசமாக இருப்பதைச் சொன்னோம். 

``(சிரித்துக்கொண்டே) ஆமா பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்தோம். ஜேன்னா உலகம் .. நியூமராலஜியில ஜீன்னு வைக்கணும்னு சொன்னாங்க. ஶ்ரீன்னா லட்சுமி .. `உலக லட்சுமி 'ங்கிறதுதான் அவங்க பேருக்கான அர்த்தம். ஆனா நான் என் பொண்ணை `கும்முட்டி'ன்னு தான் கூப்பிடுவேன். வேற ஒண்ணுமில்ல... பொண்ணு கொழுகொழுனு பொறக்கணும்னு ஆசை. அதனால அவ வயித்துல இருக்கிறப்பவே கும்முட்டினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன். நான் மாசமா இருக்கும்போது யோகா கிளாஸூக்கெல்லாம் போனேன். அவ கூட தினமும் அரை மணி நேரம் பேசுவேன். ஒரு மணி நேரம் பாட்டுக் கேட்பேன். ஏழாவது மாசம் ஸ்கேன் பண்ணிப் பார்க்குறப்போ ஸ்கேன்ல குழந்தைக்கு மூக்கு இல்லாத மாதிரி இருக்குன்னு சொல்லிட்டாங்க. என்னால நம்பவே முடியலை. என் அம்மா அதுக்குள்ள அழுது ஊரையே கூட்டிட்டாங்க. எனக்கு என் புள்ளை நார்மலாதான் இருக்கான்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. அதனால பாப்பா எப்படிப் பிறந்தாலும் ஓகே அக்ஸெப்ட் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். நார்மல் டெலிவரிதான் ஆச்சு. ரத்தமும், சதையுமா என்னுடைய உசுரு வெளியில வந்துச்சு. என்கிட்ட காட்டுனாங்க.. கருப்பா கலையான குட்டி முகம் .. சுருட்டை முடி .. குட்டி மூக்கோட என் ஜீஶ்ரீ பிறந்தா'' என்று அந்நாளை நினைவுபடுத்தி சிலிர்க்கிறார் . 

``அவ பெண் குழந்தை. இந்தச் சமூகத்தில் பெண் குழந்தைகளை வளர்க்குறது ரொம்பவே சவாலான விஷயம். குட் டச், பேட் டச்ல இருந்து எல்லாமே பார்த்துப் பார்த்து சொல்லிக் கொடுக்கிறேன். அவ வீட்டுக்குப் பக்கத்துல விளையாடப் போனா அவ கூட நிச்சயம் என் அம்மா இல்லைன்னா என் அப்பா போவாங்க. தனியா அவளை அனுப்பிட்டு எங்களால நிம்மதியா இருக்க முடியாது. குழந்தைகளுடைய உலகம் ரொம்பவே அழகானது. அவ நம்பர்ஸ் எழுதும்போது ரொம்ப அழகா ஆனா தலைகீழா எழுதுவா. அதை ரொம்ப ரசிக்கிறேன். அதே மாதிரி வரையுறதுனா கொள்ளைப் பிரியம் அவளுக்கு. 

என் மாமாவோட டிராயிங் கிளாஸ்ல என் பொண்ணைச் சேர்த்தோம். அவருக்கு இவங்களோட இன்ட்ரெஸ்ட் தெரியும். பேப்பரும் கிரேயான்ஸும் கொடுத்து பிடித்ததை வரையச் சொன்னா தென்னை மரம், வீடெல்லாம் சாய்ஞ்சு கிடக்குற மாதிரி வரைஞ்சிருந்தாங்க. என் மாமா விளக்கம் கேட்டப்ப ``தண்ணீர் அதிமா வந்ததுனால மரம் சாய்ஞ்சிருச்சு''னு பதில் சொல்லி எங்களை ஷாக் அடைய வைச்சுட்டாங்க. கேரள வெள்ளம் பத்தின நியூஸை டி.வியில பார்த்திருக்காங்க. அந்த பாதிப்புனு அப்புறமா தெரிஞ்சதும் ஆடிப்போயிட்டேன். 

எங்க வீட்டுல சின்ன, சின்ன விஷயத்துக்கும் நன்றி சொல்லணும்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அப்படித்தான் என் பொண்ணும் வளருறா. நான் அவங்க வயித்துல இருக்கும்போது ஆரம்பிச்சு இப்ப வரைக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டுதான் இருக்கேன். எனக்கு இப்படி ஒரு பொறுப்பான பொண்ணு கிடைச்சதுக்கு தினமும் தேங்க்ஸ் சொல்றதுல தப்பில்லையே. என் காருக்குக்கூட தேங்க்ஸ் சொல்லிட்டுதான் வெளிய கிளம்புவேன். அதனாலதானோ என்னவோ, இதுவரைக்கும் ஒரு நாள்கூட பிரச்னைன்னு சொல்லி நான் காரைவிட்டு கீழ இறங்கினதில்லை. எல்லா உயிரையும் நேசிக்கணும்ங்கிறதை என் பாப்பாவுக்கும் சொல்லிக்கொடுத்துட்டு வர்றேன்'' என்ற நிஷா, தாய்மை தருணத்தைக் கொண்டாடுகிறார் என்பது புரிந்தது.

கொண்டாடுங்கள்...!

அடுத்த கட்டுரைக்கு