Published:Updated:

``நடுரோட்டுல நின்னு அழுதேன்... ஏன்னா?!" `ஊர் வம்பு' லட்சுமி

கு.ஆனந்தராஜ்

``தனியார் சேனலில் நடுநிலைத்தன்மையோடு, அரசியல் கருத்துகளைப் பேச முடியுமா என்பது சந்தேகம்தான். அதேசமயம் யூ-டியூப் சேனல்ல தைரியமாப் பேச முடியும்; பேசவும் நிறைய விஷயங்கள் இருக்கு. தைரியமாப் பேச எனக்கு பயமில்லை."

``நடுரோட்டுல நின்னு அழுதேன்... ஏன்னா?!" `ஊர் வம்பு' லட்சுமி
``நடுரோட்டுல நின்னு அழுதேன்... ஏன்னா?!" `ஊர் வம்பு' லட்சுமி

சின்னத்திரைப் புகழ் `ஊர் வம்பு' லட்சுமி, சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்துவருகிறார். `செம்பருத்தி' சீரியலில் வில்லியாக மிரட்டிவருபவர், தன் நடிப்பு மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசுகிறார்.

`` `செம்பருத்தி' சீரியலிலும் நெகட்டிவ் ரோல். ஏதாவது சிறப்பம்சம் இருக்கா?"

``வழக்கத்துக்கு மாறாக, இந்த சீரியல்ல வில்லத்தனம் அதிகம் செய்வேன். ஆனாலும், அந்த நடிப்பு எனக்குப் பிடிச்சிருக்கு. ஒரு வருஷம் கடந்த நிலையில், சீரியல் சூப்பரா போயிட்டு இருக்கு. என் கரியர்ல `செம்பருத்தி' சீரியல் ரொம்ப ஸ்பெஷலானது. எங்க மொத்த டீமும் ஹேப்பியா இருக்கிறோம். நாளைக்குங்கிற சிந்தனை பத்தி பெரிசா கவலைப்பட மாட்டேன். இன்றைய என் வேலையில சிறப்பா கவனம் செலுத்தணும். அதன்படி நடிக்கிறேன்." 

``இந்த சீரியலால் கிடைச்ச மறக்க முடியாத நிகழ்வு பத்தி..."

``சமீபத்தில் `ஜீ தமிழ் விருதுகள்' நிகழ்ச்சி நடந்தது. அதற்கான நாமினேஷன்ல என் பெயரும் இருந்துச்சு. விருது நிகழ்ச்சிக்கு முன்பு நான் வெளியிடங்களுக்குப் போகும்போதெல்லாம், `உங்களுக்கு நிச்சயம் விருது கிடைக்கும்'னு மக்கள் பலரும் சொல்வாங்க. அப்படி என்னைப் பலரும் வாழ்த்த ஒருமுறை நடுரோட்டுலயே அழுதுட்டேன். மக்கள் வாழ்த்துப்படி, எனக்கு விருது கிடைச்சுது. பெருமையா இருந்துச்சு."

``நெகட்டிவ் ரோல்களே அதிகம் வருகிறதேனு வருத்தம் இருக்கா?"

``சீரியலில் ஹீரோயின் சபானாவைத் தொடர்ந்து கொடுமைப்படுத்துவேன். அதனால என் மேல மக்கள் செம கடுப்பில் இருக்காங்க. அதெல்லாம் நடிப்புதானே! ஆன் ஸ்கிரீன்லதான் நாங்க எதிரும் புதிருமா இருப்போம். அதேசமயம், `டேக் ஓகே'னு குரல் கேட்டதும், உடனே கட்டிப்பிடிச்சுச் சிரிப்போம். சபானா, என்னை அம்மானுதான் கூப்பிடுவா. என்னோட தங்கை மாதிரி அந்தப் பொண்ணு. அதென்னவோ தெரியலை, இதுவரை நெகட்டிவ் ரோல்கள்தான் எனக்கு அதிகம் வருது. அதுக்காக ஆரம்ப காலங்கள்ல வருத்தப்பட்டிருக்கேன். ரொம்ப ஹோம்லியான ரோல்கள்ல நடிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கேன். இதெல்லாம் சினிமாவுக்குப் பொருந்தலாம். ஆனா, சின்னத்திரையில, ஹீரோயின் மற்றும் வில்லியைத் தவிர, மற்ற யாருக்கும் ஒரு கட்டத்துக்கு மேல பெயர் கிடைக்காது. எனக்கு ஹீரோயின் ரோல் வராது. அதேசமயம் நெகட்டிவ் ரோல்ல தூள் கிளப்பிடுவேன்." 

``ரியல் லைஃப்ல நீங்க எப்படி?"

``எப்போதும் சிரிச்சுகிட்டே இருப்பேன்; அதிகம் கோபப்படாத கேரக்டர். அதுக்காக கோபப்படுத்திட்டு, பொறுமையா இருக்கச் சொன்னால் ஏத்துக்க மாட்டேன். உடனே ரியாக்ட் பண்ணிடுவேன். என் மைனஸை தெரிஞ்சு, அதை ப்ளஸ்ஸா மாத்திக்க முயல்வேன். என் பெஸ்ட் ஃப்ரெண்டு, புத்தகங்கள்தான். ஷூட்டிங் இல்லைனா, வீடுதான் என் உலகம். சூப்பரா சமைப்பேன்." 

``ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிச்சு, போன வருஷம் ஒரு வீடியோ வெளியிட்டீங்க. அது வைரலாச்சு. இப்போ என்ன நிலைப்பாட்டில் இருக்கீங்க?

``நான், ரஜினி சாரின் பெரிய ரசிகை. `அரசியலுக்கு வருவேன்' என்ற அவரின் அறிவிப்பு வெளியானதுமே, பலரும் எதிர்ப்பு கருத்துகளை வெளியிட்டாங்க. அப்போ, `அவர் அரசியலுக்கு வரட்டும். அது அவர் உரிமை. அவர் வந்த பிறகு அவரின் செயல்பாடுகளை பார்த்துட்டு, அப்புறம் கருத்து சொல்லுங்க'னு ஒரு வீடியோ பதிவை வெளியிட்டேன். இப்போதும் அதேதான் சொல்றேன். தன் கட்சியைக் கட்டமைக்கிறதுக்கான செயல்பாடுகளை விரைவாகச் செய்துகிட்டு இருக்கார். ரஜினி சார் கட்சியைத் தொடங்கினால், அவர் கட்சியில் இணைந்து பணியாற்றவும் தயார்."

`` `ஊர் வம்பு 2.0' தொடங்கப்பட்டால், எப்படி இருக்கும்?"

(சிரிக்கிறார்) ``ராஜ் டிவியில் `ஊர் வம்பு'ங்கிற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நீண்ட காலம் வொர்க் பண்ணினேன். அப்போதைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் அரசியல் பிரபலங்களை பத்தியும் நடுநிலையோடு மக்கள் நிலையிலிருந்து கருத்தாகவும், காமெடியாகவும் பேசியிருக்கிறேன். அந்த நிகழ்ச்சியால் எனக்கும் பெரிய அடையாளம் கிடைச்சுது. கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்பு, இந்நிகழ்ச்சி மறுபடியும் தொடங்கப்பட்டு பாதியிலேயே ட்ராப் ஆகிடுச்சு. இன்னைக்கு நிறைய நியூஸ் சேனல், யூ-டியூப் சேனல் வந்திடுச்சு. அதைவிட சோஷியல் மீடியாவில் ட்ரோல், மீம்ஸ்னு எல்லா அரசியல் நிகழ்வுகளையும் பல கோணங்கள்ல பார்க்க முடியுது. இதற்கிடையே தனியார் சேனலில் நடுநிலைத்தன்மையோடு, அரசியல் கருத்துகளைப் பேச முடியுமா என்பது சந்தேகம்தான். அதேசமயம் யூ-டியூப் சேனல்ல தைரியமாப் பேச முடியும்; பேசவும் நிறைய விஷயங்கள் இருக்கு. தைரியமாப் பேச எனக்கு பயமில்லை. அப்படியொரு வாய்ப்புக் கிடைச்சா, நிச்சயம் பழைய `ஊர் வம்பு லட்சுமி'யாக என்னைப் பார்க்கலாம்" என்று புன்னகைக்கிறார்.