Published:Updated:

"இங்கே ஆட்டத்துக்கு மட்டும் மார்க் தரலைனு நினைக்கிறேன்..." - 'ஜோடி' ஷோவில் கொதித்த மஹத்

"இங்கே ஆட்டத்துக்கு மட்டும் மார்க் தரலைனு நினைக்கிறேன்..." - 'ஜோடி' ஷோவில் கொதித்த மஹத்
"இங்கே ஆட்டத்துக்கு மட்டும் மார்க் தரலைனு நினைக்கிறேன்..." - 'ஜோடி' ஷோவில் கொதித்த மஹத்

`ஜோடி' ஷோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநருடன் மஹத் வாக்குவாதம்.

சில ஆண்டுகளுக்கு முன் `ஜோடி' ரியாலிட்டி ஷோவில், நடனம் ஆடிய நடிகர் பிருத்விராஜ் என்கிற பப்லுவுக்கும், நடுவராக இருந்த சிம்புவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து, அது பெரிய அளவில் சர்ச்சையானது ஞாபகம் இருக்கிறதா?! `பப்லுவுக்கு நடனம் ஆடத் தெரியவில்லை' என சிம்புவும், `ஷோ டி.ஆர்.பி-க்காகத்தான் சிம்பு இப்படிச் சொன்னார்' என பப்லுவும் மாறி மாறி புகார்களை அடுக்கினார்கள். எது உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். பழைய வரலாறு இப்படி இருக்க, தற்போது `ஜோடி' ஷோவின் 10-வது சீஸன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் சிம்புவுக்கு மிகவும் நெருக்கமான நடிகர் மஹத், நான்கு டீம் லீடர்களில் ஒரு டீம் லீடராக இருந்து, மூன்று ஜோடிகளை உள்ளடக்கிய தனது அணியை வழிநடத்தி வருகிறார்.

இதில், நந்தினி - குரோஷி ஜோடி முதல் வாரமே எலிமினேட் ஆகிவிட்டது. மீதமுள்ள இரு ஜோடிகளில் `சித்ரா -குமரன்' ஜோடிக்கு மார்க் வழங்கப்பட்டது தொடர்பாக சில தினங்களுக்கு முன் மஹத்துக்கும், நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கடும் வாக்குவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து போட்டியாளர்கள் சிலரிடம் விசாரித்தோம். ``ஒவ்வொரு டீம் லீடரும் அவங்க அணிக்காகத்தான் பேசுவாங்க. `சித்ரா - குமரன்' ஜோடிக்கு ஆடியன்ஸ் தரும் மதிப்பெண்ணை ஒளிவு மறைவு இல்லாம காட்டமாட்டேங்கிறாங்கனு மஹத் கோபப்பட்டதாச் சொல்றாங்க. இந்த விவகாரமெல்லாம் சேனல் நிர்வாகம், நிகழ்ச்சியின் டைரக்டர்... இப்படிச் சில மேலிடங்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். எங்களுக்கு எதுவும் தெரியாது." என ஒதுங்கிக் கொண்டார்கள். 

``ஆடியன்ஸ் தரப்புல சித்ரா - குமரன் ஜோடிக்கு தொடர்ச்சியா அதிகமான மார்க் தந்துட்டு வந்த சூழல்ல, ஒரே வாரத்துல திடீர்னு எப்படி அது தலைகீழா மாறும்?! ஆனா, சில தினங்களுக்கு முன்னாடி அப்படி நடந்திருக்கு. அப்போதான், கொதிச்சுப்போனார் மஹத். உடனே, `மத்த மூணு டீம் லீடர்கள், ஏன் சக போட்டியாளர்களேகூட இவங்க ஆட்டத்தை வெகுவா ரசிச்சுப் பாராட்டுகிற சூழல்ல, `இவங்களுக்குக் குறைவான மார்க்'னு எப்படிச் சொல்றீங்க'னு நிகழ்ச்சியோட இயக்குநர்கிட்டேயே போய் கேட்டவர், ஒரு கட்டத்துல, `இப்படியெல்லாம் நடந்துச்சுனா, நான் இந்த ஷோவிலிருந்து வெளியேறிடுவேன்'னு கோபமாப் பேசிட்டார்." என்கிறார்கள், சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த சிலர்.

நடிகர் மஹத்திடம் இதுகுறித்துப் பேசினோம். 

``என்னோட டீம்ல இருக்கிற சித்ரா - குமரன் ஜோடி தொடர்ந்து சிறப்பான பெர்ஃபாமென்ஸ் தந்துக்கிட்டு வர்றாங்க. சம்பந்தப்பட்ட நிகழ்வு நடந்த அன்னைக்கு, குமரன் அவ்ளோ பிரமாதமா ஆடியிருந்தார். ஷோ பார்க்கிறப்போ, அவரோட திறமை உங்களுக்கும் தெரியவரும். ஆனா, அவருக்கு அதிக மார்க் தரலைங்கிறதுல நான் கொஞ்சம் அப்செட். சித்ரா - குமரன் ஜோடியைவிட சுமாரா ஆடினவங்களுக்கு அதிகமான மார்க்கும், இவங்களுக்குக் கம்மியான மார்க்கும் தரப்பட்டது என்பது என் கருத்து. அதனால, என் கருத்தைப் பதிவு பண்ற சூழல் வரும்போது, `இங்கே ஆட்டத்துக்கு மட்டும் மார்க் தரலை; மற்ற சில விஷயங்களுக்கும் சேர்த்தே மார்க் போடுறாங்கபோல'னு சொன்னேன். மற்ற சில விஷயங்களுக்குனு நான் சொல்றது, போட்டியாளர்களோட பாப்புலாரிட்டி மாதிரியான விஷயங்கள். அதாவது, சில போட்டியாளர்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்காங்க. மதிப்பெண் தரும்போது, இதையெல்லாம்கூட மனசுல வெச்சுதான் தர்றாங்களோனு தோணுது!" என்று முடித்தார். 

திறமைகள் எப்போதும் தோற்காது!

அடுத்த கட்டுரைக்கு