Published:Updated:

"வருத்தப்பட வைத்த சம்பவம் அது!" - 'நந்தினி' கடைசிநாள் ஷூட்டிங்கில் கண்கலங்கிய கவிதா

"வருத்தப்பட வைத்த சம்பவம் அது!" - 'நந்தினி' கடைசிநாள் ஷூட்டிங்கில் கண்கலங்கிய கவிதா
"வருத்தப்பட வைத்த சம்பவம் அது!" - 'நந்தினி' கடைசிநாள் ஷூட்டிங்கில் கண்கலங்கிய கவிதா

`நந்தினி' தொடரின் கடைசி நாள் ஷூட்டிங் அனுபவத்தைப் பேசுகிறார், நடிகை கவிதா.

ன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த `நந்தினி' தொடர் முடிவடைந்துவிட்டது. சச்சு, கவிதா, கன்யா பாரதி, நித்யா ராம் உள்ளிட்ட நடிகைகள் சீரியலின் இயக்குநர் ராஜ்கபூர் மற்றும் யூனிட்டுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த வேளையில், ஸ்பாட்டுக்குச் சென்றோம்.

``முதல் எபிசோடுல இருந்து நடிச்சுக்கிட்டு இருந்த சிலருக்கு `போதும்'ங்கிற மனநிலை வந்திருக்கலாம். ஆனா, கவிதா என்ட்ரி ஆகி சில மாதங்களே ஆகியிருந்த சூழல்ல சீரியல் முடிஞ்சிட்டதுனால, எமோஷனலா இருக்காங்க. அவங்ககிட்ட பேசுங்களேன்" என்றனர் யூனிட்டில் சிலர்.

கவிதாவிடம் பேசினோம்.

``பொதுவா, கம்மியான எபிசோடுல மட்டும்தான் எனக்கான காட்சிகள் இருக்கும்னா, நான் அந்த சீரியல்ல நடிக்க மறுத்திடுவேன். தெலுங்குல நான் நடிச்ச சீரியல்கள் எல்லாம் மூணு நாலு வருடத்துக்குக் குறைவா ஒளிபரப்பானதில்லை. இந்த சீரியல்ல ஒரு கேரக்டருக்கு (விஜயகுமாரின் இரண்டாவது மனைவி) `சீனியர் நடிகை வேணும்; நீங்க நடிச்சா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க. உடனே `எவ்வளவு எபிசோடு போகும்'னு எல்லாம் நான் கேட்கலை. ஏன்னா, தமிழ்நாடு மேல எனக்கிருக்கிற பாசம். இங்கே வளர்ந்து ஆளானவ நான். இப்போ ஆந்திராவுல இருந்தாலும், தமிழ்நாட்டோடு இரண்டறக் கலந்தவ நான். தமிழ்ல கிட்டத்தட்ட நூறு படங்களுக்குமேல் நடிச்சிட்டேனே! `குடும்பம்', `பாசமலர்கள்'னு சில சீரியல்களிலும் நடிச்சேன். அந்த சீரியல்களுக்குக்கூட நல்ல ரெஸ்பான்ஸ். அதனாலதான், காட்சிகள் குறைவா இருந்தாலும் `நந்தினி'யில் நடிக்க சம்மதிச்சேன். ஆனா, நான் நடிக்க ஆரம்பிச்சு நாலு மாசத்துல சீரியல் முடிஞ்சதுதான் ரொம்பவே வருத்தமா இருக்கு'' என்றவர், இந்த நான்கு மாத காலத்தில் கிடைத்த ரீச் குறித்து ரொம்பவே சிலாகித்துப் பேசினார்.

``ஷூட்டிங்கிற்காக சென்னை ஏர்போர்ட்ல இறங்கினா, அந்த நிமிடம் தொடங்கி மறுபடியும் ஆந்திரா எல்லைக்குப் போறவரை `நந்தினி' விசாரிப்புகளாதான் இருக்கும். உண்மையாச் சொல்லணும்னா, அந்தக் காலத்துல 100 படங்கள்ல நடிச்சதும் சரி, இன்னைக்கு ஒரு சீரியல்ல நடிக்கிறதும் சரி. அந்தளவுக்குத் தமிழ் மக்கள் சீரியல்களைக் கொண்டாடுறாங்க. என்கிட்ட எல்லா தமிழ் மக்களும் கேட்கிற ஒரு கேள்வி, `நிறைய சினிமாவுல உங்களைப் பார்த்தோம். அந்தளவு சீரியல்கள்ல பார்க்க முடியலையே, ஏன்?'னுதான். அதுக்கு, என் பதில் இதுதான். `ரெண்டு நாளைக்கு ஒருமுறை வந்துட்டுப் போய் நடிக்கணும்னாலும் சரி, தமிழ் சினிமாவோ, சீரியலோ... கூப்பிட்டா நான் நடிக்கத் தயாரா இருக்கேன்'" என்கிறார்.

கடைசி நாள் ஷூட்டிங் அனுபவம் குறித்துக் கேட்டோம்.

``டைரக்டர் ராஜ்கபூர் இயக்கத்துல சச்சு மாதிரியான பெரிய ஆர்ட்டிஸ்ட்களோடு நடிச்சதை மறக்கவே மாட்டேன். கடைசி நாள் ஷூட்டிங் உணர்வுபூர்வமா இருந்தது. யூனிட்ல எல்லோருக்கும் புடவை, பேன்ட் சர்ட்னு என் செலவுல எடுத்துக்கொடுத்தேன். ஒரு ஞாபகமா இருக்குமில்லையா?! அப்புறம் எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு, குரூப் போட்டோ எடுத்தோம். ஸ்கூல், காலேஜ் ஃப்ரெண்ட்ஸைப் பிரிவோமே... அப்படி இருந்தது, அந்தநாள். கண் கலங்கிடுச்சு. இதே சீரியல் கன்னடத்துல இன்னும் முடியலை. `அந்த ஷூட்டிங்ல சந்திக்கலாம்'னு சொல்லி என்னைத் தேற்றினாங்க மத்தவங்க." என்றவரிடம்,

``மறக்க முடியாத தருணங்களைச் சொல்ல முடியுமா?" - என்றோம். 

``தமிழ்ல நடிக்கிற எல்லாமே எனக்கு மறக்க முடியாத தருணம்தான். `நந்தினி'யைப் பொறுத்தவரை நான் வந்தது குறைவான எபிசோடுகளே! ஆனா, அந்த சீரியலுக்குக் கிடைச்ச வரவேற்பு ரொம்பவே சந்தோஷத்தைத் தந்தது. ஆனா, திடீர்னு நிகழ்ந்த ராணி - சண்முகராஜன் சம்பவம் என்னை ரொம்பவே வருத்தமடைய வெச்சிருச்சு. என்னைக் கேட்டா, 'செம'யா போய்க்கிட்டிருந்த சீரியலுக்கு அது ஒரு கரும்புள்ளினுதான் சொல்வேன். அந்த விவகாரத்துல யார் மேல தப்பு, யார் பக்கம் சரி என்ற விவாதத்துக்குள்ளே நான் போக விரும்பலை. ஏன்னா, சம்பவம் நடந்தப்போ நான் ஸ்பாட்ல இல்லை. ஆனா, `உங்க சீரியல்ல இப்படியொரு சம்பவாமே'ங்கிற கேள்வியை எதிர்கொண்டால், நான் மட்டுமல்லீங்க... யாருமே அதுக்காக வருத்தப்படத்தானே செய்வாங்க!" என்று முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு