Published:Updated:

`சிட்டி வாழ்க்கை இன்னும் செட் ஆகல!’ - கிராமத்தைவிட்டு வந்த சூப்பர் சிங்கர் ப்ரித்திகா

`சிட்டி வாழ்க்கை இன்னும் செட் ஆகல!’ - கிராமத்தைவிட்டு வந்த சூப்பர் சிங்கர் ப்ரித்திகா
`சிட்டி வாழ்க்கை இன்னும் செட் ஆகல!’ - கிராமத்தைவிட்டு வந்த சூப்பர் சிங்கர் ப்ரித்திகா

'வா ரயில் விட போலாமா 
உனக்கென்ன கோவமா 
மன்னிச்சிடு போலாம் வா! '

பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற பாடல், இப்போதும் ரிப்பீட் மோடில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பாடலைப் பாடிய ப்ரித்திகாவின் குரலில் சொக்குண்டு கிடக்கிறார்கள் இசைப் பிரியர்கள். சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது சீஸனின் வெற்றியாளர் ப்ரித்திகா. திருவாரூருக்கு அருகிலுள்ள தியானபுரத்தைச் சேர்ந்த கிராமத்துப் பொண்ணு. இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள தொலைபேசியில் அழைத்துப் பேசினோம். “நாங்க குடும்பத்தோட திருவாரூர்ல இருந்து சென்னை வந்து செட்டில் ஆகிட்டோங்க” என்றபடியே பேச்சைத் தொடர்ந்தார் ப்ரித்திகா. 

“சூப்பர் சிங்கருக்காக அடிக்கடி ஊர்ல இருந்து சென்னை வந்துட்டு இருந்தோம். சில நேரங்கள்ல வர முடியாத சூழல் இருந்துச்சு. அப்போவே நாம சென்னையில செட்டில் ஆகிடலாம்னு அப்பாவும் அம்மாவும் யோசிச்சிட்டு இருந்தாங்க. டைட்டில் ஜெயிச்சதுக்குப் பிறகு கொஞ்சம் சீரியஸாவே அதுக்கான வேலைகள் நடந்துட்டு இருந்துச்சு. அதோட, அண்ணா காலேஜ் போக சென்னைதான் வசதியா இருந்தது. அவனுக்காகவும் நாங்க எல்லோரும் எங்க கிராமத்தைவிட்டு சென்னைக்கே வந்துட்டோம். இங்கே நான் கலாசேத்ரா பள்ளியில ஒன்பதாவது படிச்சிட்டு இருக்கிறேன். அண்ணா காலேஜ் போயிட்டு இருக்கான். படிப்பு ஒருபக்கம் ஈவெண்ட்ஸ் ஒருபக்கம்னு ஜாலியா போய்ட்டுருக்கு. வீக் எண்ட்ஸ்ல மியூசிக் க்ளாஸ் போயிடுறேன். நிறைய நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. ஆனாலும், சென்னைதான் இன்னும் எனக்கு செட் ஆகவே இல்ல. புது ஊரு, புது இடமில்லையா அதான் கிராமத்துல வாழ்ந்துட்டு சிட்டியில வந்து இருக்கிறதுல கொஞ்சம் சிரமமா இருக்கு. ஸ்கூல் லீவ் டேய்ஸ்ல ஊருக்குப் போயிட்டு வரலாம்னு பார்த்தா அண்ணனுக்கு க்ளாஸ் இருக்கு. எனக்கும் அண்ணனுக்கும் ஒரே டைம்ல லீவ் வர மாட்டேங்குது. அப்பாவும் இப்போ வேலைக்குச் சேர்ந்துட்டாங்க. இந்த டைம்ல எப்படி ஊருக்குப் போறதுன்னு முழிச்சிட்டு இருக்கேன். பார்க்கலாம் இந்த லீவ்லயாவது போயிட்டு வந்திடணும்” என்றவரிடம் 'ரயில் விட போலாம் வா' பாடல் பற்றிக் கேட்டதும், 

“அதுதான் நான் பாடின முதல் ரெக்கார்டிங். போன பொங்கல் அன்னிக்குப் பாடினேன். ரொம்ப நல்லாவே ரீச் ஆகியிருக்கு. சந்தோஷ் நாராயணன் சார்கூட, 'ப்ரித்திகாவுக்கு இதுதான் முதல் ரெக்கார்டிங்னு கேள்விப்பட்டேன். ஆனா, அவங்க ஒரு பின்னணிப் பாடகி மாதிரி பாடினாங்க'னு பாராட்டினார். அந்தப் பாராட்டு என்னை ரொம்பவே ஹேப்பியா வெச்சிருக்கு” என்றபடியே புன்னகைக்கிறார்.