Published:Updated:

'சீரியல்ல நடிச்சப்பக் கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைக்கலை! - ட்ரோல் வீடியோ குறித்து சாய்சக்தி

'சீரியல்ல நடிச்சப்பக் கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைக்கலை! - ட்ரோல் வீடியோ குறித்து சாய்சக்தி
'சீரியல்ல நடிச்சப்பக் கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைக்கலை! - ட்ரோல் வீடியோ குறித்து சாய்சக்தி

சன் டிவியில் ஒளிபரப்பான `நாதஸ்வரம்', தற்போது ஒளிபரப்பாகி வரும் `கல்யாண வீடு' சீரியல்களின் சில காட்சிகள்தாம் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் வைரல்.

`வேதாளம்' அஜித், வடிவேலு எல்லோரையும் துணைக்கு இழுத்து வந்து பார்ப்பவர்களை வயிறு குலுங்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். `நாதஸ்வரம்' தொடரில் நடித்த நடிகர் சாய் சக்தியிடம் இந்த திடீர் வீடியோ வைரல் குறித்துப் பேசினோம்.

``என் மொபைலுக்கும் லிங்க் வந்துட்டே இருக்கு. ஒரு லிங்கை ஓபன் பண்ணிப் பார்க்கறதுக்குள்ள பத்துப் பதினைஞ்சு வந்திடுது. தூங்கிக் கண் முழிக்கிறதுக்குள்ள எக்கச்சக்கமா வருதுன்னா பாருங்கண்ணே. எங்களை வச்சு செய்றாங்கன்னு தெரியுது. ஆனாலும் இதையெல்லாம் சீரியஸா எடுத்து கோபிச்சுக்க முடியுமா. என்னைக் கேட்டா, `நாதஸ்வரம்' தொடர்ல நடிச்சப்பக்கூட இவ்வளவு பப்ளிசிட்டி கிடைச்சிருக்காதுபோல, இப்ப அப்படியொரு பாப்புலாரிட்டி. எல்லாத்தையும் பாசிட்டிவா எடுத்துட்டுப் போயிட்டே இருப்போம்ணே. அதுதான் நல்லது' என்றவரிடம், அவரைக் கட்டிப்போட்டிருக்கும் அந்தக் காட்சிகள் குறித்துக் கேட்டோம்.

`காரைக்குடிக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துல ஷூட் பண்ணினாங்க. கதைப்படி என்னைக் கடத்திட்டுப் போயிடுவாங்க. அந்த வீடியோவுல அடி வாங்குறாங்களே, அவங்க `குமார்'ங்கிற வில்லன் கேரக்டரோட அம்மா. அவங்களும் வில்லத்தனம் செய்றவங்கதான். அவங்ககிட்ட இருந்து என்னை மீட்கத்தான் டைரக்டர், முனீஸ்ராஜா எல்லாரும் அங்க வருவாங்க. என்னை அந்த இடத்துல இருந்து மீட்டுட்டுப் போய், எனக்கும் பரமுக்கும் கல்யாணம் செய்து வைப்பாங்க.

சீரியல் ஒளிபரப்பானப்பவே அந்த எபிசோடு பரபரப்பா போச்சு. அந்த சீன்ல நடிச்சதை நினைச்சு சந்தோஷப்படுறேன்' என்கிறார் சாய் சக்தி.