சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

தொலைக்காட்சி விவாதங்களில் தினம் ஒரு தீபாவளி வெடிக்கின்றன. எதிரெதிர் துருவங்களாகக் கம்பு சுத்தும் கருத்துப் போராளிகளை  ஓரிடத்தில் சந்திக்க வைத்துக் கலந்துரையாட வைத்தோம். அருணன், வானதி சீனிவாசன், ராம சுப்பிரமணியன், மனுஷ்ய புத்திரன், விஜய தாரணி ஆகியோர் பங்கேற்ற சுவாரஸ்யமான விவாதம் தொடங்கியது... 

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

அருணன்: ஒரு விஷயத்தைக் குறித்து விவாதம் பண்ணுகிற மரபு மணிமேகலை காலத்தில் இருந்தே நம்ம தமிழ்ச்சமூகத்தில இருக்கு. எதிர்த் தரப்புடன் நேரடியாகச் சென்று விவாதம் செய்த பெண் மணிமேகலை. அதுபோலவே நீலகேசியும். வாதப் பிரதிவாதங்களுடன் தொடர்ந்து உரையாடிவந்த சமூகத்தில் இந்த விவாதக் கண்ணி அறுபட்டுக் கிடந்தது. நீண்டநாள்களுக்குப் பிறகு அதனுடைய நீட்சியாகவே தொலைக்காட்சிகளில் நடைபெறும் இந்த விவாத நிகழ்ச்சிகளைப் பார்க்கிறேன். அந்தக் காலத்தில் ஒரு தொகுப்பாளரோ நடுவரோ இல்லை. இப்போ இருக்கிறாங்க. நல்லா முறைப்படுத்தப்பட்டு இருக்கு. அவ்வளவுதான் வித்தியாசம்.

வானதி: அந்தக் காலத்தில் ஆதி சங்கரர் நாடு முழுக்க விவாதங்களுக்குச் சென்றிருக்கிறார். விவாதங்களைத் தொகுத்திருக்கிறார்.

ராமசுப்பிரமணியன்: ஆமா, ஆதிசங்கரர் பல விவாதங்களுக்கு ஜட்ஜாகவே இருந்திருக்கிறார்.

(அருணனும், மனுஷ்ய புத்திரனும் இதற்கு புத்தர், சமணர் கால முன்னுதாரணங்களை முன்வைக்க... அவர்களை ஆற்றுப்படுத்திச் சந்திப்பைத் தொடர்ந்தோம்) 

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

மனுஷ்ய புத்திரன்: சென்னைக்கு ரயிலேறிவரும் எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். வந்திறங்கிய காலத்தில் எனக்கு அப்போதிருந்த ஒரே கனவு, ஒரு முறையாவது டி.வி-யில் வரணுங்கிறதுதான். ஏன்னா எங்க ஊர்ல டி.வி-ங்கிறதே பெரிய விஷயமா இருந்தது. நான் அந்த டி.வி-யில ஒரே ஒரு வாட்டி வந்துட்டேன்னா வாழ்க்கையில அதுபோதும்னு இருந்தது. ஆனா, இப்போ ஒருநாள் டி.வி நிகழ்ச்சிக்குப் போகலன்னா வாழ்க்கையே அவ்ளோ அமைதியாவும் நிம்மதியாவும் இருக்கு. காலம்தான் எவ்ளோ சுவாரசியமானதுன்னு பாருங்க. செய்தித் தொலைக்காட்சிகள் அதிகமானபோது, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மனித உரிமை குறித்துப் பேசுறவங்களுக்கான ஒரு ஸ்பேஸ் அப்போதான் முதன்முதல் கிடைச்சது.

ராமசுப்ரமணியன்: 1997-ம் வருஷத்திலேயே நான் தொலைக்காட்சியில் பேசியவன். தூர்தர்ஷன்ல ஸ்டாக் மார்க்கெட் பத்திப் பேசக் கூப்பிட்டாங்க. தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஸ்டாக் மார்க்கெட் பத்தி தமிழில் முதன்முதலில் பேசியவன் நான்தான் என நினைக்கிறன். இப்போ நான் பேசாத டி.வி இல்லை. தலைப்பு இல்லை. சொல்லப்போனால் கலைஞர் செய்திகள், ராஜ் நியூஸ், புதிய தலைமுறை, நியூஸ் 7 இவங்களெல்லாம் சேனல் ஆரம்பிச்ச காலம் முதலே நான் பேசியிருக்கேன்கிற பெருமையும் எனக்கு உண்டு. எனக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும், எனக்கும் விஜயதாரணிக்கும் நிறைய சண்டைகள் வந்திருக்கு. ஆனா, அதெல்லாம் என் சட்டையில மைக் இருக்கிற வரைக்கும். அதைக் கழட்டிட்டேன்னா மற்ற உலக விஷயங்களெல்லாம் ஜாலியா பேசுவோம்.

மனுஷ்ய புத்திரன்:
பயங்கரமா கடுமையா விவாதம் நடந்துட்டு, இடைவெளி விடுவாங்க. அவ்ளோநேரம் எங்கிட்ட சண்டை போட்டுட்டி ருந்த என் பக்கத்துல இருக்கிறவர், `தலைக்கு என்ன ஷாம்பூங்க யூஸ் பண்றீங்க, இவ்ளோ அடர்த்தியா இருக்கே முடி’ன்னு கேப்பாரு.

ராமசுப்ரமணியம்: நிச்சயமா அது நான் இல்லைங்க.

மனுஷ்ய புத்திரன்: எதுக்குச் சொல்றேன்னா, நம்முடைய மோதல்கள் என்பது கருத்தியல் ரீதியானதே தவிர தனிமனிதர்கள் சார்ந்தது அல்லங்கிறது எல்லோரும் புரிஞ்சிக்கணும்னு சொல்றேன்.

வானதி: என் பக்கத்துல உட்கார்ந்து ஹை வால்யூம்ல கத்திப் பேசுறவங்க கிட்ட நிகழ்ச்சியின் இடைவெளியில ‘இங்க பாருங்க... என் காதுக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்கதான் பொறுப்பு’ன்னு சொல்லுவேன்.

(தன்னைத்தான் குறிப்பிடுகிறாரோ என மனுஷ்ய புத்திரன் சந்தேகக் கண்களோடு வானதியைப் பார்த்துச் சிரிக்கிறார்.)

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

விஜயதாரணி: விவாத நிகழ்ச்சிங்கிறது ஒரு நியூஸ் சேனலின் கட்டாயமாக மாறிடுச்சு. நாள் முழுக்க செய்தி கேட்கலாம். ஆனா விவாதங்கிறது ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் குறிப்பிட்ட விஷயத்தைப் பத்தி மட்டும் பேசுறதாலே மக்கள் அதை ஆர்வமா பாக்குறாங்க. இன்னொன்னு, பேசுற நாலு பேர்ல யாருடைய கருத்துக்கு நாம பொருந்திப் போகிறோம்னு பார்வையாளர் தன்னைப் பொருத்திப் பார்க்கிறாங்க. அதுக்கு ஏத்த மாதிரி தன்னுடைய அரசியல் அறிவைப் பரிசீலனை பண்றாங்க. இன்னைக்கு தமிழ்நாட்டுல மக்கள் பரவலாக அரசியல் பேசுறாங்கன்னா டிவில வர்ற விவாத நிகழ்ச்சிகள்தான் காரணம்.

மனுஷ்ய புத்திரன்: ஆனா, இந்த விவாத நிகழ்ச்சி நடத்துற ஒவ்வொரு சேனலுக்கும் ஒரு சார்புநிலை இருக்கு. தொகுப்பாளருக்கு இருக்கும் சார்புநிலைக்கு ஏத்த மாதிரி பந்தை அவங்க உருட்டி விடுவாங்க. ஒரு பக்கம் பலவீனமாக் கணும்னு நினைச்சா அதுக்கேத்த மாதிரி ஆட்களைக் கூப்பிடுவாங்க. ஆனா, தமிழைவிட ஆங்கிலச் சேனல்கள் மோசம்.

விஜயதாரணி: அப்படிச் சொல்லிட முடியாது சார். ஒரு தனியார் தொலைக்காட்சியில நான் பேசிட்டிருந்தேன். அது லைவ் ஷோ. தொலைபேசி மூலமா நேயர் கேள்வி கேட்கலாம். அப்போ, ஒருத்தர் என்னை ரொம்ப மோசமான வார்த்தையில திட்டிட்டாரு. அன்னைக்கு ராத்திரியே அவரைக் கைதுசெய்ய வெச்சேன். ஒரு பெண்ணா எத்தனையோ தடைகளைக் கடந்துதான் பொதுவெளியில அரசியல் பேச வர்றோம். இதையும் கடந்து போகணும்னு கடந்துட்டேன். ஆனா ஒருவகையில அது மோசமான அனுபவமா எனக்குள்ள பதிஞ்சிடுச்சு.

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

ராமசுப்பிரமணியன்: சிறுவயசில இருந்து நான் ஆர்.எஸ்.எஸ்-ல இருந்தவன். ‘ஜன் சங்’ல உறுப்பினரா இருந்தேன். ஆனாலும், நான் எப்பவும் என்னை பி.ஜே.பி-ன்னு சொன்ன ஆளு கிடையாது. என் கருத்துகளைக்கூட தனிப்பட்ட ஆளாகத்தான் முன்வைப்பேன். அந்தச் சூழ்நிலையிலதான் எனக்கு பி.ஜே.பி-யில பொறுப்பு கொடுத்து கட்சிக்காகப் பேசச் சொன்னாங்க. நான் மறுத்தேன். ஆனா, நீங்கதான் பேசணும்னு சொன்னாங்க. எனக்கு எப்பவும் மனசுல இருக்கிறத பேசித்தான் பழக்கம். நீட், டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி-ன்னு எனக்கு இதிலெல்லாம் சென்ட்ரல் கவர்மென்ட்டோட மாற்றுக் கருத்து இருந்தது. அதை தைரியாமப் பேசினேன். பேசிட்டு வீட்டுக்குக் கிளம்புறேன்... ராமசுப்ரமணியன் பி.ஜே.பி-யிலிருந்து நீக்கம்னு டி.வி-யில நியூஸ் வருது. நான் வேணாம்னு சொன்னப்ப என்னைக் கட்சியில சேர்த்துட்டு, இப்படி நீக்கினா என்ன அர்த்தம்?

மனுஷ்ய புத்திரன்: பி.ஜே.பி இல்லைனா அதுக்காக வேற என்னென்னவோ பதவி போட ஆரம்பிச்சுட் டாங்களே?

ராமசுப்பிரமணியன்: இதுக்கு டி.வி சேனல்காரங்கதான் காரணம். ஆண்டாள் பக்தர், கர்னாட சங்கீத ஆர்வலர், கல்வியாளர், சங்கரமட ஆதரவாளர்னு ஒவ்வொரு நாளும் ஒன்னொன்னு போடுவாங்க. என்ன டைட்டில் போடுறாங்கன்னு எனக்குத் தெரியாது. ஒருமுறை பஞ்சாப் நேஷனல் பேங்க்ல நடந்த ஊழலைப் பத்தி மத்திய அரசுக்கு எதிராவே பேசிட்டிருக்கேன். அப்போ அந்த டி.வி-காரங்க போட்ட டைட்டில் ‘மத்திய அரசு ஆர்வலர்.’ இதுதான் தமிழிசையை ஆழமா பாதிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.

வானதி ஸ்ரீனிவாசன்: சார், இப்போ புரியுதா நீங்க கட்சியில இருந்து போனதுக்கு நாங்க மட்டும் காரணமில்ல.

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

அருணன்: இரண்டு விஷயம் நான் சொல்லணும். ஒரு சூடான விவாதத்தின்போது சீமான், தகாத ஒரு சொல்லை என்மீது வீசினாரு. பதிலுக்கு அதே வார்த்தையை நானும் வீசினேன். ஆக பதிலுக்குப் பதில் செட்டில் ஆகிப்போச்சுன்னு நானும் நெனச்சேன். பாத்தா அடுத்த சில நாள்களில் அது லட்சக் கணக்கானவங்களுக்கு உலகம் முழுக்கப் பரவிடுச்சு. 

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!

வானதி சீனிவாசன்: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்பாளராக கங்கை அமரனை நாங்கள் அறிவித்த சமயம், ஒரு டிவி விவாதத்தில திருமாவளவன் அவர்களும் நானும் அதில கலந்துகிட்டோம். எனக்குப் பொதுவாகவே தலித், தாழ்த்தப் பட்டோர்ங்கிற வார்த்தை களைப் பயன்படுத்த தயக்கமா இருக்கும். அதனாலே பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்னு சொன்னேன். அதைப் புரியவைக்கணும்னு `எஸ்.சி’ங்கிற வார்த்தையை அப்போ பயன்படுத்தினேன். அடுத்தநாள் சமூகவலை தளங்கள்ல அது பெரிய விவாதமா மாறிடுச்சு. எஸ்.சின்னு சொல்லி அந்த மக்களை வானதி கேவலப்படுத்திட்டாங்கன்னு பேச ஆரம்பிச்சாங்க. அது இன்னைக்கு வரை எனக்குப் பெரிய வருத்தத்தைக் கொடுக்கக்கூடியது.

அஞ்சுபேரு அஞ்சுவிதமா பேசுறாங்க!மனுஷ்ய புத்திரன்: இயக்குநர் சேரன் மகள் காதல் விவாகரம் குறித்து ஒரு ஊடகத்துல விவாதம் நிகழ்ந்தது. நானும் கரு.பழனியப்பனும் எதிரெதிர் கருத்தில் பேசினோம். அங்க உட்கார்ந்திருந்த பார்வையாளர்கள் உட்பட எல்லோரும் சேரன் மகளைக் காதலித்த அந்தப் பையனுக்கு எதிராகத்தான் இருந்தாங்க. நான் ஒருத்தன் தனியாளா அந்தப் பையனுக்கு ஆதரவாப் பேசினேன். பையன் தப்பு செய் ததாகவே இருக்கட்டும். சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணையும் இளைஞரையும் கூப்பிட்டு அவங்க என்ன சொல்ல விரும்புறாங் கன்னு அறிய விரும்பாலேயே அந்த இளைஞனை மட்டும் நாம் எப்படிக் குற்றம் சுமத்த முடியும்னு கேட்டேன். அந்நிகழ்ச்சி ஒளிபரப்பான ரெண்டு நாள் கழிச்சு ஒரு பொண்ணு என் ஆபீஸுக்கு வந்தாங்க. ‘அந்தப் பையனோட அக்கா சார் நானு. இந்த உலகத்துலயே எங்களுக்கு ஆதரவாப்பேசினது நீங்க மட்டுந்தான்’னு பொசுக்குன்னு என் கால்ல விழுந்தாங்க. அழுதாங்க. ‘எங்க பக்கம் இருக்கிற நியாயத்தைப் பேச யாருமே இல்லையான்னு குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு இருந்தோம். நீங்க ஒரு ஆளு பேசினது அவ்ளோ ஆதரவா இருந்தது சார். நன்றி’ன்னு சொல்லிட்டுப் போனாங்க. எத்தனையோ நிகழ்ச்சிகள்ல பேசியிருக்கேன். ஆனா, இந்தச் சம்பவம் கொடுத்த நெகிழ்வும், மன நிறைவும் இதுவரை ஏற்பட்டதில்லை.

அதேபோல மதுரை புக் ஃபேர்ல இருந்தப்ப ஒரு வயசான தம்பதி என்கிட்ட வந்து, `காதல் திருமணத்தை ஆதரிச்சுப் பேசுறீங்க. எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. மொத பொண்ணு சொல்லாமக் கொள்ளாம ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிச்சு. நாங்க காதலுக்கு எதிரியெல்லாம் இல்ல... கொஞ்ச நாள்ல எங்களோட ரெண்டாவது பொண்ணும் லெட்டர் எழுதிவெச்சுட்டு யார்கூடவோ போயிடுச்சு. பெத்தவங்க... எங்களுக்குன்னு ஒண்ணுமே இல்லையா? எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்ல முடியாதா? 25 வருஷம் ஆசையா வளர்த்தோமே, அதுக்கு ஒரு அர்த்தமும் இல்லையா?’ன்னு கலங்கினாங்க. ஒரு விவாதம்... டி.வியோட முடிஞ்சு போறதில்ல... அது அலை அலையா பல விவாதங்களை ஏற்படுத்துது.’’

வானதி சீனிவாசன்: சரியா சொன்னீங்க!

அருணன்: விவாதங்களின் நோக்கமே விடை தேடிப் போவதுதானே?

தமிழ்மகன், தமிழ்ப்ரபா / படங்கள்: க.பாலாஜி