தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! - பனிமலர் பன்னீர்செல்வம்

மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! - பனிமலர் பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! - பனிமலர் பன்னீர்செல்வம்

என் காதல் சொல்ல வந்தேன்

‘‘உலகில், யார் ஒருவரைப் போலவும் இன்னொருவர் இல்லை; எல்லோருமே தனித்துவம் மிக்கவர்கள்தாம். நிறைவேறாத பத்து காதல்களுக்குப் பிறகு, மற்று மொரு காதல் வந்தாலும்கூட அதுவும் புதிதாகவே இருக்கும்!’’ - வித்தியாசமாக ஆரம்பிக்கிறார் செய்தி வாசிப்பாளர் பனிமலர் பன்னீர்செல்வம்.

மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! - பனிமலர் பன்னீர்செல்வம்

‘‘பள்ளிப் பருவத்தில், எல்லோருக்குமே எதிர் பாலினத்தவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனாலும், அடுத்தடுத்த காலகட்டங்களில் அந்த ஈர்ப்பின் வீரியம் குறைந்து மறைந்தேபோகும்.

13 வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், 15 அல்லது 16 வயதாகும்போது பிடிக்காமல்கூட போகலாம்... மாற்றத்துக்கு உட்பட்ட உளவியல் உண்மை இது. உடல்ரீதியாக வளரிளம் பருவத்து மாற்றங்களைக் குழந்தைகளிடம் விளக்கிக் கூறுகிற நாம், அதே பொறுப்பு உணர்வுடன் மனரீதியிலான இந்த மாற்றங்களையும் எடுத்துச்சொல்லி வளர்க்க வேண்டும்.

வளரிளம் பருவத்தில் வரக்கூடிய `இனக்கவர்ச்சி' எனும் மாயக் காதல் எனக்கும் வந்ததுண்டு. இப்போது நினைத்துப்பார்த்தாலும் எனக்கே சிரிப்பை வரவழைக்கும் நிகழ்ச்சி அது. ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உணர்வு மறைந்துபோனது ஆச்சர்யம். அதன்பிறகு, என் வாழ்க்கையில் ஏற்பட்ட இரண்டு காதல்களுமே மிக நீளமானவை.

பணி நிமித்தமாக சொந்த ஊரைவிட்டு சென்னை வந்தபிறகு, நீண்ட நாள்களாக உடன் பயணித்த நண்பர் ஒருவரையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ளலாம் என எண்ணி னேன். ஆனால், அந்த உறவு ஒருநாள் முறிந்துபோனது. மனது உடைந்து, அழுது புலம்பி, அந்த மன அழுத்தத்தில் வாழ்க்கையின் அடுத்தடுத்த முடிவுகளைத் தப்புத்தப்பாக எடுத்து அனுபவப்பட்டிருக்கிறேன்.

ஆனாலும்கூட, ஒரு விஷயத்தில் மட்டும் எப்போதும் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். `காதலரோடுதான் பிரச்னையே தவிர, காதலில் ஒருபோதும் பிரச்னை இல்லை' என்ற தெளிவுதான் அது. எனவே தான், முதல் காதல் தோல்வி
ஏற்படுத்தியிருந்த வலியிலிருந்து என்னை மறுபடியும் மீட்டெடுத்து வர உதவியதும் காதலாகவே அமைந்தது.

மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! - பனிமலர் பன்னீர்செல்வம்

`காதல் ஒருமுறைதான் மலரும். உதிர்ந்துவிட்டால் மீண்டும் மலராது' என்றெல்லாம் இட்டுக்கட்டி, காதலைப் புனிதப்படுத்தும் முயற்சி இந்த டிஜிட்டல் யுகத்திலும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. இதுமட்டுமல்ல... `பார்க்காமலே காதல், பேசாமலே காதல்' என்றெல்லாம் காதலை உயர்த்திப்பிடித்து தெய்விகக் காதல் வரிசையில் பட்டியலிடுவதன் பின்னணியில், `எங்கள் காதலில் செக்ஸ் இல்லை... இது புனிதமானது' என்று கட்டமைக்கப்பார்க்கிறார்கள். உலக ஜீவராசிகள் உற்பத்தியின் அடிப்படையே தாம்பத்தியம்தானே? அமீபாவில் ஆரம்பித்து மனிதன் வரை அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இனவிருத்திக்கான தேடல்தானே காதல்? ஆக, காதல் என்பது பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். இது, காதலில் இயல்பானது என்பதை உணரும்போதுதான், `என்னை ஏமாற்றிவிட்டார், அதற்காக பழி வாங்குகிறேன் ' என்று கிளம்ப மாட்டார்கள்.

இரண்டாவது முறை என்னை ஆட்கொண்ட காதலுக்கு ஆயுள் ஐந்து வருடங்கள். `எல்லாம் சரியாக நடக்கிறது' என்ற மகிழ்ச்சியோடு திருமணம் என்ற அடுத்தகட்டத்துக்கு நகரவிருந்தபோது, அந்த இரண்டாவது காதலும் கைநழுவிப் போனது. இம்முறை இன்னும் அதிகமாக காயப்பட்டேன். அதன் வடு இன்னமும் இருக்கத்தான்செய்கிறது.

வெறுமையும் தனிமையும் ஒருசேர அழுத்தும் அந்தத் தருணத்தில், வெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்தால்கூட பிரிவு பற்றிய எண்ணங்கள்தாம் ஞாபகத்துக்குள் வந்து அழுகையை வரவழைக்கும். செல்போனை எடுத்துப் பேசிவிடலாமா அல்லது ஒரு மெசேஜ் அனுப்பிப்பார்க்கலாமா என்றெல்லாம் பலவாறான சிந்தனைகள் மனதைச் சிதறடிக்கும். 

மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! - பனிமலர் பன்னீர்செல்வம்

வெறுத்துப்போய் வேலைக்குக்கூட செல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்து முடங்கிக்கிடந்தேன். தினம் ஒருவேளைதான் சாப்பிட்டேன். துக்கத்தில் தூக்கம் தொலைந்தேபோனது. ஒருகட்டத் தில்,   என்னுடைய   மன அழுத்தத்தைக் கண்டு
எனக்கே பயம் வந்துவிட்டது. தயங்காமல், உடனடியாக ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றேன்.

என் எதிர்மறைச் சூழலை மாற்றிக்கொள்ள, ரொம்பவே முயற்சி செய்தேன். ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். புதுப்புது பயணங்களை மேற்கொண்டேன். வலியில் அழுந்திக்கிடந்த மனதுக்கு ஆறுதலாகவும் புத்துணர்ச்சி ஊட்டுவதாகவும் அமைந்த இந்த மாற்றங்கள்தாம் என்னை மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறப்பெடுக்க வைத்திருக்கின்றன.

மறுபடியும் புதிய மனுஷியாகப் பிறந்தேன்! - பனிமலர் பன்னீர்செல்வம்



எந்தக் காதலையும் 100 விழுக்காடு நம்பிவிட வேண்டாம். அதிகபட்சமாக 99 விழுக்காட்டிலாவது காதலை நிறுத்திவைத்துக் கொண்டாடுவதுதான் நல்லது. மீதமிருக்கும் அந்த ஒரு விழுக்காடு என்பது `எந்த மாற்றமும் நிகழலாம்' என்பதற்கான நிகழ்தகவுதான்.

முழுக்க முழுக்க காதலைக் கொண்டாடித் தீர்ப்போர்தான், பிரிவு ஏற்படும் சூழல்களில் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறான முடிவுகளுக்குப் போகிறார்கள். காதலுக்காகத் தற்கொலை என்பது மன்னிக்கவே முடியாத அடிமுட்டாள்தனம் என்றே சொல்வேன். `மாற்றம் ஒன்றே மாறாதது' என்கிற தத்துவம் காதலுக்கும் பொருந்தும் என்ற எதார்த்தத்தைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தச் சிக்கல் இல்லை.

`வாழ்க்கையே இவளோடுதான்... அல்லது இவனோடுதான்' என உடல் பொருள் ஆவியை முழுக்க ஒப்புக்கொடுத்து காதலிப்பவர்களாக நீங்கள் இருக்கலாம். அதே நேரம், எதிர்பாராத பிரிவு ஏற்படும்போது, அதற்காக முடங்கிப் போய்விடாமல் உடனடியாக அடுத்தடுத்த திட்டங்களில் உங்களைப் பிஸியாக்கிக்கொள்ளுங்கள். இதுதான் பிரிவு தரும் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி!

காதலர்களுக்குள் பிரிவு என்பது சூழலைப்பொறுத்தது. இந்தப் புரிதல் இல்லாமல், தொடர்ந்து வெறுப்பை மட்டுமே சுமந்துகொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ப்ரேக் அப் ஆன என் முன்னாள் காதலர்களுடன் இப்போதும் நான் பேசுவது உண்டு. அவர்களுக்குத் திருமணமாகி குடும்பம், குழந்தைகள் என்று ஆனபிறகும்கூட, நட்பு ரீதியாக அவர்களோடு பேசுவதில் எனக்கு எந்தவிதச் சிக்கலும் இதுவரை இருந்ததில்லை. ஒருவருடைய உணர்வுகளை மற்றொருவர் மதிப்பதுதானே உண்மையான காதலாகவே இருக்கமுடியும்?

மறுபடியும் இன்னொரு புதிய காதல் எனக்குள் வரும்... அது இதுவரை உணர்ந்திராத ஒரு பரவசத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும்... எனக்கு நம்பிக்கை இருக்கிறது!''

ப்ரியா வாரியர் ஸ்டைலில், இல்லாத ரிவால்வரை இழுத்துவிட்டுச் சிரிக்கிறார், பனிமலர் பன்னீர்செல்வம்.

த.கதிரவன் - படம் : தி.குமரகுருபரன்

ஆண்களிடம் பிடித்த அம்சம்?

தாடி!

யாரை சைட் அடிக்கிறீர்கள்?

எப்போதும் போலீஸ்காரர்களை!

காதல் கனவு? 

காதல் கணவரோடு நிறைய பயணங்கள்.

புத்துணர்ச்சியின் ரகசியம்?

சோகமாக இருக்கும் போது எனக்கு நானே கிஃப்ட் கொடுத்துக் கொள்வேன்!

பிடித்த காதல் வரி?

‘மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே...

பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே...’