தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

அன்புக்கு நான் அடிமை! - யஷிகா ஆனந்த்

அன்புக்கு நான் அடிமை! - யஷிகா ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்புக்கு நான் அடிமை! - யஷிகா ஆனந்த்

எனக்குள் நான்

அன்புக்கு நான் அடிமை! - யஷிகா ஆனந்த்

‘பிக் பாஸ்’ வீட்டின் சன்னி லியோன்...
ஐஸ்வர்யாவின் அநியாய ஆதரவாளர்...
மொக்கை ஜோக் மோகினி...

திரையில் மட்டுமே யஷிகாவைப் பார்த்தவர்களின் பிம்பங்கள் இவை. நிஜத்தில் அவர் வேற லெவல். பாசிட்டிவிட்டியின் பிராண்டு அம்பாசிடராக்கலாம். அவ்வளவு மெச்சூரிட்டி!

`` `யஷிகா’ன்னா ‘சக்ஸஸ்’னு அர்த்தம். ஆனா, நான் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே போனது டைட்டிலை ஜெயிக்கிறதுக்காக இல்லை. மக்களின் இதயங்களை ஜெயிக்கிறதுக்காக...'’ தடுமாறினாலும் யஷிகாவின் தமிழ், அவரைப் போலவே அழகு.   சினிமா கனவுகள், போராட்டங்கள், அவமானங்கள், நிராகரிப்புகள்... இவற்றைப் புறந்தள்ளித் தொடரும் பயணம் என யஷிகாவின் 19 வயது வாழ்க்கை மெகா சீரியலை மிஞ்சுகிறது.

நான் யார்?

``டெல்லியில பிறந்தாலும் நான் பக்கா சென்னைப் பொண்ணுங்க. இங்கேதான் ஸ்கூல் முடிச்சேன். 12-வது முடிச்ச உடனேயே நடிக்கிற வாய்ப்புகள் வர ஆரம்பிச்சதால படிப்பை அப்படியே நிறுத்தி வெச்சிருக்கேன். பைலட் ஆகணும்கிறது என் சின்ன வயசுக் கனவு.  ஆனா, படிப்பு பிடிக்கலை. வாழ்க்கையில படிப்பு முக்கியம்தான். அதையும்விட அறிவு ரொம்ப முக்கியம்னு நம்பறேன். இங்கே உள்ள எஜுகேஷன் சிஸ்டம் எனக்குப் பிடிக்கலை. குறைவான மார்க்ஸ் வாங்கினாலும் என்கிட்ட வாழ்க்கைக்கான புத்திசாலித்தனம் நிறையவே இருக்கு.

அன்புக்கு நான் அடிமை! - யஷிகா ஆனந்த்

கனவும் நனவும்

இப்போதும் பைலட் கனவு கலையலை. ஆனா, பைலட்டின் வாழ்க்கை ரொம்ப  ஸ்ட்ரெஸ் நிறைஞ்சது. நடிப்பும் கஷ்டம்தான். ஆனாலும், இது நடிப்புக்கான பீரியட்னு நினைக்கிறேன். அதனால பைலட் கனவைத் தள்ளிவெச்சிருக்கேன். அவ்வளவுதான்.

டிராமா, டான்ஸ்னு  சின்ன வயசுலேருந்து அடுத்தவங்களை என்டர்டெ யின் பண்றது பிடிக்கும். வீட்டுக்கு என் கசின்ஸ் வரும்போது விதவிதமா நடிச்சுக்காட்டுவேன். ஏழாவது படிக்கும்போதே நடிப்பு பிடிக்க ஆரம்பிச்சது. அந்த வயசுக்கு மீறின மெச்சூரிட்டி இருந்தது. என் போட்டோஸ் பார்த்துட்டு நான் ஸ்ருதிஹாசன் மாதிரி இருக்கிறதா நிறைய பேர் சொல்வாங்க. அந்த வயசுலயே அட்வர்டைஸ் மென்ட்ஸ்லயும் ஷார்ட் ஃபிலிம்ஸ்ல யும் நடிச்சிருக்கேன். ரெண்டு, மூணு படங்களில் குட்டிக்குட்டி கேரக்டர்ஸ்ல நடிச்சிருக்கேன். பல படங்கள் ரிலீசாகலை. நல்லவேளை ரிலீசாகலைனு இப்ப தோணுது!

நிராகரிப்புகள் நிரந்தரமல்ல!

நடிக்க வந்த புதுசுல நிறைய ரிஜெக்‌ஷன்ஸைப் பார்த்திருக்கேன். அப்பல்லாம் எனக்குத் தமிழ் வராது. டயலாக் பேச ரொம்ப டைம் எடுப்பேன். மூணு வருஷங்களுக்கு முன்னாடி என்னுடைய முதல் விளம்பரப்பட ஷூட்... அதுல எனக்கு, கடவுள் லட்சுமி கேரக்டர். சுத்தமான தமிழ் பேசணும்.

100 முறை மனப்பாடம் பண்ணியும் எனக்குச் சரியான மாடுலேஷன் வரலை. யாரும் சொல்லிக் கொடுக்கவும் தயாரா இல்லை. டைரக்டர் கோபமாகி ஃபைலைத் தூக்கி என்மேல வீசினார். அதுவரைக்கும் ஹீரோயினுடைய ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தியா குட்டிக்குட்டி கேரக்டர்ஸ்ல நடிச்சிட்டிருந்தேன். சீக்கிரமே ஹீரோயினாயிடலாம்னு மனசு முழுக்க கனவுகளோடு இருந்த எனக்கு இந்தச் சம்பவத்துக்குப் பிறகு  தன்னம்பிக்கை மொத்தமா காலியாயிடுச்சு.

நான் ரொம்ப ஒல்லியா இருந்ததால பப்ளியா வேணும்னு கேட்டிருக்காங்க. ஆடிஷன்ல செலக்ட் ஆகி நம்பிக்கையோடு காத்திட்டிருந்து, கடைசியில எனக்குப் பதிலா வேற நடிகையை கமிட் பண்ணின அனுபவமெல்லாம் நிறைய நடந்திருக்கு. காஸ்டிங் கவுச் அனுபவங்களையும் எதிர்கொண்டிருக்கேன். ஒருகட்டத்துல எனக்கொரு விஷயம் புரிஞ்சது. இந்த இண்டஸ்ட்ரியில எல்லாரும் நல்லவங்க இல்லை. அதேநேரம் எல்லாரும் கெட்டவங்களும் இல்லை. பொறுமைதான் இந்தத் துறையில சாதிக்க முக்கியமான தகுதினு புரிஞ்சுக்கிட்டேன்.  வெற்றிக்காகக் குறுக்கு வழிகளை நாடக் கூடாது. நடிகையை அவங்க திறமையை வெச்சு செலெக்ட் பண்ணட்டும். காஸ்டிங் கவுச் எதுக்கு?

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ - படமா? பாடமா?

ஒரு டாக்டர் எப்படி கோட் மாட்டும்போது டாக்டராகவும் அதைக் கழற்றினதும் சாதாரண நபராகவும் இருக்காங்களோ, அப்படித்தான் நடிப்பும். நடிச்சு முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டா நாங்களும் சாதாரண மனுஷங்கதான். நடிப்பையும் பர்சனல் வாழ்க்கையையும் குழப்பிக்கக் கூடாது. அந்தப் படத்தில் நடிக்க நான் சம்மதிக்கக் காரணம்,  அது என் ஒரிஜினல் கேரக்டர் கிடையாது. அது காவியா. அந்த ஷூட்டிங் முடிஞ்சதும் நான் யஷிகா. அந்தப் படம் ஏற்படுத்தின இமேஜை உடைக்க நான் வேற ஒரு கேரக்டர்ல நடிப்பேன். அதுல ஒருவேளை எனக்கு ரொம்ப பாசிட்டிவான கேரக்டரா இருக்கலாம். அதுவுமே நடிப்புதான். நிஜமில்லை.  நீங்க பிக் பாஸ் வீட்டுல பார்த்ததுதான் யஷிகாவின் உண்மையான முகம்!

அன்புக்கு நான் அடிமை! - யஷிகா ஆனந்த்

பிக் பாஸுக்கு முன்பும் பிறகும்!

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ ரிலீசான பிறகு எல்லா லேங்வேஜ்லயும் எக்கச்சக்க வாய்ப்புகள். அந்தப் படத்தின் ரீமேக்லயும் நான் நடிக்கிறதா இருந்தது. அதையெல்லாம் கமிட் பண்றதுக்காகப் பேசிட்டிருந்தபோதுதான் பிக் பாஸ் வாய்ப்பு வந்தது. முதல்ல எனக்கு பிக் பாஸ்ல கலந்துக்கிற ஐடியாவே இல்லை. ஆனா, அந்த ஷோ நான் யாருங்கிறதை உலகத்துக்குக் காட்டும். அது எனக்கு நிச்சயமா ஒரு திருப்புமுனையா அமையும்னு எல்லாரும் சொன்னதால உள்ளே வந்தேன். உள்ளே இருந்த நாள்கள் நிம்மதியா, சந்தோஷமா இருந்தேன். முக்கியமா நான் நானா இருந்தேன்.

வெளியில வந்ததும் அந்த பாதிப்பி லேருந்து மீளவே பல நாள்களானது. குளிச்சிட்டு தலையில தண்ணீர் சொட்ட வெளியில வரும்போது ‘ஐயோ மைக் நனைஞ்சிடப்போகுதே’னு தடவிப் பார்க்கறேன். தூங்கும்போது வீட்டுக்குள்ள காலை ஆட்டிக்கிட்டே இருக்கேன்னு அம்மா சொல்றாங்க.  பிக் பாஸ் வீட்டுல மதியத்துல தூங்கினா நாய் குரைக்கும்.  அதனால நான் காலை ஆட்டிக்கிட்டே  தூங்க  ட்ரை பண்ணுவேன். பிக் பாஸ் நான் முழிச்சிட்டிருக்கேன்னு நினைச்சுப் பார். ஒரு செகண்டு கால் ஆட்டறதை நிறுத்தினாலும் நாய் குரைக்க ஆரம்பிச்சிடும். வீட்டுலயும் அப்படியே இருக்கேன். நான் யார்னு எனக்கே உணர்த்தின ஷோ அது. பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போகிற வரைக்கும் நான் எங்க வீட்டுல இந்திதான் பேசுவேன். இப்போ வாயைத் திறந்தா தமிழ்தான் வருது. தமிழ் மக்களுடைய மனசுல இடம் பிடிக்கணும்னு ஆசைப்பட்டா போதுமா? அதுக்காக என் சைடுலேருந்து நான் ஏதாவது செய்ய வேண்டாமானு யோசிச்சேன். தமிழை தப்பில்லாமப் பேசறதும் ஒரு வழினு தெரிஞ்சுக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டிருக்கேன்.

எங்கிருந்து வந்தது இவ்வளவு பக்குவம்?

நான் அம்மா வயித்துல இருந்தபோது அப்பா அவங்களுக்கு நிறைய தத்துவப் புத்தகங்களை வாசிச்சுக் காட்டுவாராம். மோட்டிவேஷனல் ஸ்பீச் கேசட்டெல்லாம் போட்டு, கேட்க வெச்சதா அம்மா சொல்லியிருக்காங்க. ஸ்கூல்ல யாருக்கு என்ன பிரச்னை வந்தாலும் என்கிட்ட அட்வைஸ் கேட்பாங்க. நான் 12-வதுல சைக்காலஜி படிச்சிருக் கேன். அதெல்லாம் காரணமா இருக்குமோ என்னவோ?

மஹத்?

என்னதான் மெச்சூர் டான கேரக்டர்னாலும் எமோஷன்ஸ்னு வரும் போது நான் ரொம்ப வீக். நான் எக்ஸ்ப்ரெசிவ் கிடையாது. ஆனா, மனசுக்குள்ள எக்கச்சக்கமான அன்பு உள்ளவ. யாருக்காவது வாக்கு கொடுத்துட்டா மீற மாட்டேன். இந்த உலகமே எனக்கு எதிரா நின்னாலும் கவலைப்பட மாட்டேன். அன்பை வெச்சு என்னை ஈஸியா ஏமாத்திடுவாங்க. அப்படி ஏமாந்த அனுபவங்கள் நிறைய இருக்கு. ‘உன் நட்பு வட்டத்தைச் சின்னதா வெச்சுக்கோ. யாரையும் சீக்கிரமா நம்பிடாதே’னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்வாங்க. என்னுடைய அந்த அன்புதான் அடுத்தவங்களுக்கான ஆயுதமா இருக்கு. வேற என்ன சொல்ல?

ஐஸ்வர்யா அவ்வளவு ஸ்பெஷலானதேன்?

அவளை பிக் பாஸ் வீட்டுக்குள்ள போன பிறகுதான் தெரியும். எங்க ரெண்டு பேருக்கும் தமிழ் சரியா வராது. `சரியா டிரஸ் பண்ணத் தெரியாது, மேனர்ஸ் இல்லை, பைத்தியம் மாதிரி நடந்துக்கிறாங்க'னு எங்க ரெண்டு பேரைப் பத்தியும் நிறைய பேசினாங்க. முதல் நாள்லேருந்தே எங்க நட்பு ஸ்ட்ராங்காயிட்டே இருந்தது. அந்த வீட்டுக்குள்ளே நாங்க ரெண்டு பேரும்தான் வயசுல சின்னவங்க. ஜோக் அடிக்கிறது, கலாட்டா பண்றதுனு பல விஷயங்களில் ஒரே மாதிரி இருந்தோம். ஒருத்தர் மேல ஒருத்தர் அதீதமான அன்போடு இருந்தோம். வெளியில வந்த பிறகும் அதே அன்போடு இருக்கோம்.  எங்களுடைய இந்த நட்பு கடைசி வரைக்கும் தொடரும்.''

அன்புக்கு நான் அடிமை என்கிற யஷிகா, அவரின் தங்கையின் அன்புக்குக் கொஞ்சம் கூடுதல் அடிமையாம்.

- ஆர்.வைதேகி,   ப.சரவணகுமார்

தங்கை ஒஷீனுடனான யஷிகாவின் பாசப் பகிர்வு அடுத்த இதழில்...