Published:Updated:

என் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
என் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா
என் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா

என் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா

பிரீமியம் ஸ்டோரி

“கம்யூனிசம், ஆத்திகம், நாத்திகம் மாதிரி காதல் என்பதும் ஒரு நம்பிக்கை. காதலிக்கப்படுகிறவர் மீதான எண்ணத்தின் மேல்தான் ஒவ்வொருவரும் காதல் என்ற முழுமையை உணர்கிறோம்.

இதுவரை நேரிலேயே பார்த்திராத ஒருவருடன்கூட எனக்குக் காதல் வரலாம். நான் ஒருவரைக் காதலிக்க... என்னுடைய மனசு மட்டும் போதும். என்னுடைய எண்ணங்களிலேயே என்னவர் வாழ்வார். ஒன்றாக வாழ்ந்துதான் காதலை முழுமையடையச் செய்ய முடியும் என்கிற அவசியமில்லை!

கடந்தகாலம், எதிர்காலம் என்று பிரித்துப் பார்க்கமுடியாத நிகழ்காலத் தொடர்ச்சிதான் காதல். நான் இறக்கின்ற தறுவாயில் என் மாஸ்க்கைக் கழற்ற வருகிற நர்ஸுடன்கூட எனக்குக் காதல் வரலாம்!’’ - காதல் என்ற மூன்றெழுத்துக்கு முந்நூறு தத்துவார்த்த விளக்கங்களோடு அசரடிக்கிறார் சின்னத்திரை நாயகி சரண்யா!

‘`என்னுடைய முதல் காதல் சுந்தர்ராஜ்மீதுதான். வாழ்க்கையில் நீடித்த உறவுகொண்ட காதலாக இருக்கப்போவதும் சுந்தர்ராஜ்மீது மட்டும்தான்... ஏனெனில், அவர்தான் என் அப்பா. எல்லோரையும் போல என்னுடைய முதல் காதலும் அப்பாவின் மீதுதான்!’’ என்று சொல்லிவிட்டு, கன்னத்தில் குழிவிழச் சிரிக்கும் சரண்யாவுக்கு, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே கனவு நாயகனாக இருந்தவர் இந்தியக் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்!

‘`அவர் எப்பவுமே நிதானம். என் அப்பாவின் குணத்தையொத்து இருந்ததினாலேயே டிராவிட்மீதும் எனக்குப் பிரியம் ஏற்பட்டிருக்கலாம்.

என் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா

வளர்ந்து விவரம் தெரிந்தபிறகு மறக்கமுடியாத காதலாக அமைவது பள்ளிப்பருவத்து காதல்தான். ஆனால், என்னுடைய வாழ்க்கையின் தீராத சோகம்... பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்ததுதான். அதனால், காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே ‘அது எங்கேயோ ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம்’ என்றாகிப்போனது.

சின்ன ஆறுதல்... எங்கள் பள்ளிக்குப் பக்கத்திலேயே ஆண்கள் பள்ளி. அதனால், பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் பசங்களை சைட் அடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. சிலபேர் லெட்டர்ஸும் பரிமாறிக்கொள்வார்கள். எந்த வாய்ப்புமே கிடைக்காத என்னைப் போன்றவர்கள் ‘ஏய் அவன் என்னைத்தான் பாக்குறான்டி...’ என்று சும்மாவாச்சும் சீன் போடுவோம்.

ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பையன்மீது எனக்கும் இனக்கவர்ச்சி ஏற்பட்டது. என் நட்பு வட்டத்தில் இருந்த ஒரு பையனின் எதிர்வீட்டில்தான் அந்த ஸ்மார்ட் பாயும் இருந்தான். அதனால், குரூப் ஸ்டடி போவதுபோல, என் நண்பனின் வீட்டு மொட்டை மாடியிலிருந்து எதிர்வீட்டுக்கு நூல் விட்டுக்கொண்டிருந்தேன். ‘வானமோ நீலம்... நீதான் என் பாலம்’ என்றெல்லாம் கவிதை எழுதும் அளவுக்குக் காதல் காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அவனுக்கும் என்மீது ஈர்ப்பு இருந்தது என்பது பின்னாளில்தான் தெரியவந்தது.

ஒருநாள் ஃப்ரெண்ட்ஸோடு நான் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தபோது, அந்த ஸ்மார்ட் பாய் கொஞ்சம் தொலைவிலிருந்து, ‘சரண்யா...’ என்று அழைத்ததுதான் தாமதம்... என்னுடன் வந்த தோழிகள் எல்லாம் தெறித்து ஓடி விட்டார்கள். அத்தனை நாள்களும் நான் எந்தப் பையனுடன் பேச ஆசைப் பட்டிருந்தேனோ... அதே பையன் என்னைப் பெயர் சொல்லி அழைக்க, எனக்குப் பயத்தில் கை கால் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.

‘பிரதர்... எனக்கு ஒண்ணும் தெரியாது... என் ஃப்ரெண்ட்ஸ், சைக்கிள்...’ என்று ஏதேதோ உளற ஆரம்பித்தேன். என்னருகே வந்தவன், ‘ஒண்ணுமில்ல... உன் செல் நம்பர் வாங்கலாம்னுதான் வந்தேன்’ என்றான் நிதானமாக. அப்போதும்கூட எனக்குப் பயம் தீரவில்லை. ‘என்கிட்டே செல்லே கிடையாது பிரதர். என் அப்பா செல் நம்பர் வேண்டுமானால் தர்றேன்’ என்று சம்பந்தமே இல்லாமல் நான் பேச... ‘புஸ்’ஸாகிப்போன அந்த ஸ்மார்ட் பாய் ‘ஸாரி’ கேட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான். ஆக, என் முதல் காதலே இப்படிச் சொதப்பலாகத்தான் முடிந்துபோனது!

அடுத்து... எத்திராஜ் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, கல்ச்சுரல் ஃபங்ஷனுக்காக சென்னையிலுள்ள எல்லாக் கல்லூரிகளுக்கும் அழைப்பிதழ் கொடுக்கச் செல்வோம். ஸ்டெல்லா மாரீஸ், எம்.ஓ.பி மாதிரி லேடீஸ் காலேஜையெல்லாம் கவனமாகத் தவிர்த்துவிட்டு, லயோலா, நியூ காலேஜ், பச்சையப்பா என்று ஆண்கள் கல்லூரிக்குச் சென்று அழைப்பிதழ் கொடுப்பதற்குப் பெரிய போட்டியே நடக்கும். இன்விடேஷன்களைப் பங்கு பிரிப்பதில் நீ, நான் என்று அடித்துக்கொள்வோம். அப்படிக் கிடைத்த அழைப்பிதழையும் நேரே சென்று ஒரே நாளில் கொடுத்துவிட்டு வந்துவிட மாட்டோம். கையில், அழைப்பிதழை எடுத்துக்கொண்டு போய், காலேஜை வெறுமனே ஒரு ரவுண்டு வந்துவிட்டு, அழைப்பிதழைக் கொடுக்காமலேயே திரும்பிவிடுவோம். பின்னர் மறுபடியும் அதே அழைப்பிதழ், அதே காலேஜ். இப்படிப் பசங்களை சைட் அடிப்பதற்காகவே சுற்றித் திரிந்த நாள்கள் அவை.

விவரம் தெரிந்து 23 வயதில்தான் எனக்கு ‘முதல் காதல்’ அனுபவம் வாய்த்தது. அந்தக் காதலும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. காதலும் கடந்துபோகும் என்ற அனுபவத்தை மட்டுமே தந்துவிட்டுச் சென்றது. பள்ளிப் பருவத்தின் இனிமையை நினைத்து நினைத்து வாழ்நாள் முழுக்க ரசிக்கலாம். மறுபடியும் அதே பள்ளியில், அதே பெஞ்ச்சில் போய் உட்கார்ந்து படிக்க முடியாது அல்லவா? காதல் அனுபவமும் அதுபோலதான். முறிந்துபோன காதலை நினைத்து துக்கப்படுவதோ, கோபப்படுவதோ தேவையற்றது. அதன் இனிமையான அனுபவங்களை மட்டும் அவ்வப்போது அசை போட்டுவிட்டு, மறுபடியும் நிகழ்கால எதார்த்தத்துக்குள் நுழைந்துவிடுவதுதான் என் ஸ்டைல்!

என் காதல் சொல்ல வந்தேன் - சரண்யா

வாசிப்புப் பழக்கம்கொண்ட ஆண்களை எனக்குப் பிடிக்கும். அவர்களிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கும். அரசியல், இலக்கியம், காதல், காமம் என்று எதைப் பற்றியும் விவாதிக்க முடியும்; புரிந்துகொள்ள முடியும். நம்முடைய  உணர்வுகளை எளிதில் உள்வாங்கிக் கொள்வார்கள்.

மனம் பொருந்திப்போன ஆணுக்கும் பெண்ணுக்கு மான காதல் என்பது மென்மையான ஓர் இறகின் ஸ்பரிசம் போன்றது. மாறாகப் பொருந்திப்போகாத, முரண்பாடுகள்கொண்ட உறவாக நீடிப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட இருவருமே பரஸ்பர புரிதலுடன் பிரிந்துவிடுவது நல்லது. இல்லையெனில், காதல் என்ற பெயரில், தேவையற்ற சுமைகளை வாழ்நாள் முழுக்க சுமந்து திரியும் பரிதாப நிலை ஏற்பட்டுவிடும்.

காதலின் வலியை அனுபவித்துப் பார்த்தவர்களுக்கே புரியும்... அதுவும் ஒரு சுகமே! ‘துயரமான வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்...’ என்று கவிஞர் பாப்லோ நெருடா எழுதுவார். மோசமான ஓர் உறவுச் சூழலில் சிக்கியிருந்தபோது, இதே போல நானும் கவிதை எழுதியிருக்கிறேன்.

கலா சிருஷ்டியின் உச்சமே ‘வலி’யிலிருந்துதான் வருவதாக நான் நினைக்கிறேன். ‘திறமையின் உச்சத்தைக் காட்டவல்லது வலி’ என்று நான் நம்புகிறேன். நேரடியாக ஒரு வெற்றியை எட்டுவதன் மூலம் கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை விடவும், ஒரு தோல்விக்குப் பிறகு கிடைக்கும் வெற்றி உச்சபட்ச சந்தோஷத்தைத் தரக்கூடியது... கொண்டாடத்தக்கது. காதல் வலியும் இதற்கு விதிவிலக்கல்ல...

மனித உணர்வுகளில் உன்னதமான ‘தாய்மை’ உணர்வுக்கு அடுத்ததாகக் ‘காதல்’ உணர்வுதான் இடம்பிடிக்கிறது. அதனால்தான் காதல் ஒரு மனிதனை அடியோடு மாற்றவல்ல வீரியம் கொண்டிருக்கிறது. காதலர்களுக்குள் ஏற்படும் தற்காலிகப் பிரிவு ஏற்படுத்தும் வலிகூட, சம்பந்தப்பட்ட மனிதர்களை அது பக்குவப்படுத்தவே செய்யும்!’’

- இதமாக நிறைவு செய்கிறார் சரண்யா!

த.கதிரவன், படங்கள் : ப.சரவணகுமார்

ஆண்களிடம் பிடித்தது...

தாடி, மீசை வைத்த மாநிற ஆண்களை ரொம்பப் பிடிக்கும்!

காதல் வரி...

‘கபாலி’ படத்தில் வரும் ‘மாயநதி’ பாடல் வரிகள் என் மனதுக்கு நெருக்கமானவை!

20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் நிலையைப் பற்றிச் சொல்லும்போது, ‘நான் உனைக் காணும் வரையில் தாபத நிலையே...’ என்கிறாள். ‘அடிடா அவளை, உதைடா அவளை’ என்பதுபோன்ற கொடூர வரிகளுக்கிடையே காதலைச் சொல்லும் அழகான தமிழ் வரி இது! அதேபாடலில், ‘மாயநதி இன்று மார்பில் வழியுதே... தூய நரையிலும் காதல் மலருதே...’ என்கிற வரிகளில் காதல் உருகும்!

காதல் நாயகன்...

இந்திய கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் ‘ராகுல் டிராவிட்’தான் என் கனவு நாயகன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு