Published:Updated:

`` `பயப்படாதீங்க; தண்ணியைக் குடிச்சுட்டுப் பேசுங்க!' " - பாரதி பாஸ்கரின் பட்டிமன்ற அனுபவம்

`` `பயப்படாதீங்க; தண்ணியைக் குடிச்சுட்டுப் பேசுங்க!' " - பாரதி பாஸ்கரின் பட்டிமன்ற அனுபவம்
News
`` `பயப்படாதீங்க; தண்ணியைக் குடிச்சுட்டுப் பேசுங்க!' " - பாரதி பாஸ்கரின் பட்டிமன்ற அனுபவம்

``என் முறை வந்தது. ஒரு நிமிடம் பேசிய நிலையில், எனக்கு உதறல் வந்து, பேச முடியாமல் நின்றேன்."

ண்டிகை என்றால் பட்டிமன்றம்; பட்டிமன்றம் என்றால் பாரதி பாஸ்கர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் பொங்கல் பண்டிகை சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சியை முடித்தவர், வங்கிப் பணியில் பிஸியாகிவிட்டார். தன் பட்டிமன்ற அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமாகப் பேசுகிறார், பாரதி பாஸ்கர். 

``கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, தூர்தர்ஷன் பட்டிமன்றங்களில் பேசிக்கொண்டிருந்தேன். 1992-ம் ஆண்டு, வங்கிப் பணிக்கான நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன். என் தனித்திறமையாக, பட்டிமன்றப் பேச்சுத்திறனைக் குறிப்பிட்டிருந்தேன். அது குறித்து, வட இந்தியர் ஒருவர் என்னிடம் கேள்வி கேட்டார்; விளக்கினேன். மேலும், `வளைகுடா போர்' பற்றிச் சாதகமாகவும் பாதகமாகவும் தலா இரண்டு நிமிடங்கள் பேசச் சொன்னார். உடனே பேசினேன். பிறகு வங்கிப் பணிக்கான கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஆனால், என் பட்டிமன்றப் பேச்சு நடை, அவருக்குப் பிடித்துப்போகவே உடனே என்னைத் தேர்வு செய்தார். அப்படி, உதவி மேலாளராகத் தொடங்கி, ஆறு நிலைகளைக் கடந்து இன்று மூத்த துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கிறேன். வாசிப்புப் பழக்கம்தான் தற்போதைய பேச்சாளர் மற்றும் வங்கிப் பணி இரண்டுக்கும் அடித்தளம்.

வங்கிப் பணி, குடும்பச் சூழல் என பிஸியானதால், பட்டிமன்றங்களில் பேசுவதை நிறுத்திக்கொண்டேன். 8 ஆண்டுகளுக்குப் பிறகு, சன் டிவி பண்டிகை தின பட்டிமன்றத்தில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போதுபோல், மக்கள் முன்னிலையில் பேசுவதில்லை. ஓர் அரங்கத்தில் ரெக்கார்டிங் செய்வார்கள். என் முறை வந்தது. ஒரு நிமிடம் பேசிய நிலையில், எனக்கு உதறல் வந்து, பேச முடியாமல் நின்றேன். `பயப்படாதீங்க. தண்ணியைக் குடிச்சுட்டு நிதானமாப் பேசுங்க' எனச் சாலமன் பாப்பையா ஐயா ஊக்கப்படுத்தினார். பிறகு பயிற்சிகளின் மூலம் என் மேடைப் பேச்சுத் திறனை வளர்த்துக்கொண்டேன். பிறகு, 16 ஆண்டுகளாகப் பட்டிமன்றங்களில் பேசிவருகிறேன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பட்டிமன்றங்களில் பேசுவதைத் தாண்டி, அவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது பார்ப்பது மகிழ்ச்சியானது. நான் பங்குபெற்ற சன் டிவியின் எல்லாப் பட்டிமன்றங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது தவறாமல் பார்ப்பேன். அதன் மூலம் என் சரி, தவறுகளை அடையாளம் காண்பேன். அந்த நாள் முழுக்க, முக்கியமான தொலைபேசி அழைப்புகள் வரும். அவற்றுக்குப் பதிலளிப்பதும் சுவாரஸ்யமானது" என்று கூறுபவர், ஒரு பட்டிமன்றம் எப்படி உருவாகிறது என்பதை விளக்குகிறார்.

``சன் டிவியில் ஒரு வருடத்துக்கு 5 - 6 பண்டிகைக்காலப் பட்டிமன்றங்கள் நடக்கும். அதற்காக ஒத்திகையெல்லாம் நடக்காது. போனிலும் விவாதிக்க மாட்டோம். புத்தம் புதிய பேச்சாளருக்கு மட்டும் எப்படிப் பேச வேண்டும் என முன்கூட்டியே சொல்லிக்கொடுப்போம். மற்றபடி எல்லோரும் ஆன் தி ஸ்பாட்டில் பேசுவதுதான் வழக்கம். ஒவ்வொரு பட்டிமன்றத்திலும் இரு அணி பேச்சாளர்களையும் சாலமன் பாப்பையா ஐயாதான் தேர்வு செய்வார். பல தலைப்புகள் விவாதிக்கப்பட்டு, தேர்வு செய்யப்படும் தலைப்பு ஒவ்வொரு அணிப் பேச்சாளர்களுக்கும் தெரிவிக்கப்படும். சாலமன் பாப்பையா ஐயா என்ன தீர்ப்பு சொல்லப்போகிறார் என்பது பற்றி எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. 

அவரவர் சார்ந்த அணியின் தலைப்பு சொல்லப்பட்டதும், நாங்கள் குறிப்பெடுத்துக்கொள்வோம். இலக்கியத் தலைப்பாக இருப்பின் மட்டுமே நான் மெனக்கெட்டு முன்தயாரிப்பு வேலைகளில் கவனம் செலுத்துவேன். மற்றபடி சன் டிவி பட்டிமன்றங்களில் கமர்ஷியல் தலைப்புகளில்தான் பேசுவோம். அதனால், பெரிதாக எவ்வித முன் தயாரிப்பும் தேவைப்படாது. பட்டிமன்றத்தின் சுவையே, எதிரணியில் இருந்து வரும் ஒருவரின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனிப்பதும், அதைத் திருப்பி அவருக்கே பதிலடியாகக் கொடுப்பதும்தான். முப்பது பக்கத்துக்குத் தயாரிப்புகளுடன் சென்றாலும், அங்கு எதிரணியினரின் பேச்சை சரியாகக் கவனிக்கவில்லை; எதிர்கருத்துச் சொல்லவில்லை என்றால் நாம் அங்கு அடிபட்டுப்போவோம்." - கணீர் குரலில் முடிக்கிறார், பாரதி பாஸ்கர்.