Published:Updated:

''அப்பாவோட இறப்புல இறந்து மீள முடியலை..!’’ மன அழுத்தத்தில் மைனா சூஸன் ஜார்ஜ்

''அப்பாவோட இறப்புல இறந்து மீள முடியலை..!’’  மன அழுத்தத்தில் மைனா சூஸன் ஜார்ஜ்
''அப்பாவோட இறப்புல இறந்து மீள முடியலை..!’’ மன அழுத்தத்தில் மைனா சூஸன் ஜார்ஜ்

சினிமா, சின்னத்திரை என வலம் வந்தவர் சூஸன் ஜார்ஜ். `மைனா' திரைப்படம் இவருக்கெனத் தனியோர் அடையாளத்தைக் கொடுத்தது என்றே கூறலாம். சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் எல்லோரையும் ஈர்த்தவர். தற்போது என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவரிடம் பேசினோம்.

``இப்போ கும்கி 2 புராஜக்ட் முடிஞ்சிடுச்சு. அடுத்த புராஜக்ட் பொங்கலுக்கு அப்புறம் ஆரம்பிச்சிடுவேன் எனப் புன்னகைத்துப் பேசத் தொடங்கினார். ஷூட்டிங்கில் இருந்தா தொடர்ந்து பிஸியாகவே இருக்க வேண்டியிருக்கும். இப்போ ஷூட்டிங் இல்லாததால் ஃப்ரீ. சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி ஐ.டியில் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். மீடியாக்குள்ளே வந்ததும் அந்த வேலையை விட்டுட்டேன். போன வருஷம் டெலிபையில் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசரா வேலை பார்த்தேன். அங்கே நிறைய லீவு எடுக்க முடியலை. அதனால அந்த வேலையை விட்டுட்டேன். இப்போ முழுக்க முழுக்க ஷூட்டிங் மட்டும்தான்''! என்றவர் அவருடைய கடினமான வலி மிகுந்த தருணத்தை நம்முடன் பகிர்ந்தார்.

``கடினமான நேரத்தில் இருக்கிறேன்.. எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்!" இப்படியான ஒரு பதிவை என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அந்தத் தருணம்தான் என் வாழ்க்கையில் கடினமான பக்கங்களா இருந்துச்சு. எல்லாப் பெண் குழந்தைங்களுக்கும் அவங்களுடைய அப்பா ரொம்ப ஃபேவரைட்! எனக்கும் அப்படித்தான்! மூணு மாசத்துக்கு முன்னாடி என் அப்பா தவறிட்டாங்க. அவங்க இந்த உலகத்தில் இல்லைங்குறதை என்னால ஏத்துக்கவே முடியலை. பயங்கர மன அழுத்தத்துக்கு ஆளானேன். கவுன்சலிங்கிற்குப் போனேன். `இறப்பு எல்லோருக்கும் பொதுவானது! இந்த உலகத்தில் பிறக்குற எல்லா உயிர்களும் ஒருநாள் இந்த உலகத்தை விட்டுப் போய்தான் ஆகணும்!'ன்னு என்னை நானே சமாதானம் பண்ண ஆரம்பிச்சேன். இப்போவும் அவர் நினைப்பிலிருந்து மீண்டெழ முடியலை. ராட்சசன் படத்துக்குப் பிறகு எந்தப் படத்துக்கும் கதை கேட்கலை. எங்கே போனாலும் அப்பாவுடைய ஞாபகம் என்னைத் துரத்திட்டே வந்துச்சு. இப்போ கொஞ்ச, கொஞ்சமா அந்த மன அழுத்தத்திலிருந்து வெளிவந்துட்டு இருக்கேன். என் எதிரிக்குக் கூட சாவு வரக் கூடாதுன்னு நினைப்பேன். கூடவே இருக்குறவங்க இறந்து போன அடுத்த நொடி அவங்க நம்ம கூட இருக்க மாட்டாங்கங்குறது எவ்வளவு கொடுமையான விஷயம். என்றவர் சில நொடி மௌனத்துக்குப் பின்னர் தொடர்ந்தார்.

நான் சோஷியல் மீடியாவில் ஆக்டிவா இருக்க மாட்டேன். என்னைப் பற்றி எந்தத் தகவலும் வெளியில் வரலைங்குறதும் எல்லோரும் நான் செத்தே போயிட்டேன்னு சொல்லிட்டாங்க. `ராட்சசன்' படம் நான் செத்ததுக்கு அப்புறம் வெளிவந்த படம்ங்குற அளவுக்குச் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இனியும் ஆக்டிவ் இல்லாம இருக்கக் கூடாதுன்னு ட்விட்டரில் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணேன். நான் பாசிட்டிவ், நெகட்டிவ்னு வர்ற எல்லா கமென்டுக்கும் ரிப்ளை பண்ணுவேன். ட்விட்டரில் பயங்கரமா கிண்டல் பண்ணுவாங்க. ஆனாலும், அதை பாசிட்டிவ்வா எடுத்துப்பேன்.

எனக்கும் ஷாப்பிங்கிக்கும் ரொம்ப தூரம். என் அம்மாதான் எனக்குத் தேவையான பொருள்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பாங்க. சராசரி பொண்ணுங்களுக்குப் பிடிச்ச டெம்ப்ளேட் விஷயங்கள் எனக்குப் பிடிக்காது என்றவரிடம் டிக் டாக் வீடியோ குறித்துக் கேட்கவும் சிரிக்கிறார்.

நார்மலா ஷூட்டிங் பண்றப்போ கூட கேமரா முன்னாடி பயந்தது இல்ல. ஆனா, இந்த டிக் டாக்கில் ஒரு வீடியோ பண்றதுக்குள்ள சொல்ல முடியாத அளவுக்குப் பதற்றம் வந்துடுது. ஒவ்வொருத்தரும் இந்த வீடியோக்கு என்னென்ன கமென்ட் போடப் போறாங்களோங்குறது மட்டும்தான் என் பயத்துக்கான காரணமே.. சில பாசிட்டிவ் கமென்ட்ஸூம் வரும். எல்லாத்தையும் புன்னகையோட கடந்துடுறேன் என்கிறார், சூஸன்.