
என் காதல் சொல்ல வந்தேன்

“ஸ்கூல் லைஃபில் எல்லோருக்குமே சின்னதா ஒரு ‘பப்பி லவ்’ இருக்கும்தானே? எனக்கு சீனியர் அவன். காதலைச் சொல்லும்போதே, அவ்வளவு நாகரிகமாக, ரொம்பவே அழகாகச் சொன்னான். குடும்ப விவரம், படித்துமுடித்த பிறகு பார்க்கவிருக்கும் வேலை, வாங்கவிருக்கும் சம்பளம் என ஆரம்பித்து எந்தத் தேதியில் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பது வரையிலாக டீட்டெயிலாக விவரித்தான். ஆனால்...’’
- சரளமான பேச்சினிடையே இடைவெளிவிட்டு, எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஃபரினா, சின்னத்திரையில் கேம் ஷோ, சீரியல், நிகழ்ச்சித் தொகுப்பு என பிஸியாக வலம்வருபவர்.
‘`காதலை நேரடியாகச் சொல்லத் தயங்குபவர்கள் நட்பு வட்டம் மூலமாகத் தூது விடுவார்கள். அந்த சீனியரோ ஒருபடி மேலேபோய், தனது அக்காவையே தன் காதல் தூதுவராக அழைத்துவந்திருந்தான். அவ்வ்வ்வ்வ்வளவு நேர்மையான - தூய்மையான லவ்வாம்!

வயதுக்கு மீறிய அவனுடைய சென்டிமென்ட் செட்டப் எல்லாம் ஓகே! ஆனால், அந்தக் காதலுக்கு நானும் ஓகே சொல்ல வேண்டுமே? அதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப்படவே இல்லை. அவ்வளவு உறுதியாக என்மேல் நம்பிக்கை வைத்திருந்தான். அதனால், ‘இது படிக்கிற வயசு... இப்போதே உன் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை... நிதானமாக யோசி. முதலில், நல்லபடியாகப் படித்து முடிப்போம். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வோம்’ என்று அவன் கற்பனைகளில் எழுதிவைத்திருந்த வாக்கியங்களையெல்லாம் வார்த்தைகளாகக் கொட்டிவிட்டுப் போனவன்தான்... அதன்பிறகு இது விஷயமாக என்னை எந்தத் தொந்தரவும் செய்யவில்லை!
பருவ வயதில், எதிர்பாலினத்தவர்மீது ஏற்படும் ஈர்ப்பை, காதல் என்று தவறாகப் புரிந்துகொள்பவர்களுக்கு மத்தியில், எனக்கு அப்போதே கொஞ்சம் தெளிவிருந்தது. அதனால்தானோ என்னவோ, அன்றைக்கு என் சீனியர் நண்பன், காதல் தெரிவித்த பக்குவத்தை ரசித்தேனே தவிர... அவனது காதலை ஏற்றுக்கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை.
கல்லூரிக்குள் காலடிவைத்த பிறகு ஒருநாள் எதேச்சையாக அந்த நண்பனைச் சந்திக்க நேரிட்டது. ஆளே மாறிப்போயிருந்தான். என்னைக் காதலிப்பதாகச் சொல்லி வர்ணித்திருந்தவன், இப்போது அதற்கு நேர்மாறாகப் பேசினான். ‘வாழ்க்கை ரொம்ப வலியது ஃபரினா... ஒவ்வொரு சூழ்நிலையிலும் அது நம்மை நாமே தலைகீழாக மாற்றிவிடுகிறது. இப்போது நான் காலேஜில் என்னுடன் படிக்கும் பெண்ணைக் காதலிக்கிறேன். நீயும்கூட உனக்கான துணையை நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ என்று தத்துவார்த்தமாகப் பேசிக்கொண்டே போனான்.
`நான் எப்போது இவனது காதலை ஏற்றுக் கொண்டேன்? என்றைக்கு அந்தக் காதலுக்காக ஏங்கி நின்றேன்? ஏதேதோ பேசிக்கொண்டே போகிறானே’ என்று எனக்குச் சிரிப்பும் வியப்புமாக இருந்தது. கூடவே ஓர் உண்மையும் புரிந்தது... `பருவ வயதில் தோன்றும் பக்குவப்படாத காதல் மட்டுமல்ல; பக்குவப்பட்ட பேச்சும்கூட நம்பத்தகுந்தல்ல...’’ என்று காதலுக்குப் புது அர்த்தம் கற்பிக்கும் ஃபரினா, காதலித்து திருமணம் செய்துகொண்டவர்.
‘`அது ஒரு விளம்பரப் பட ஷூட்டிங். டைரக்டர் பொறுப்பேற்றிருந்த அவர், காட்சிகளை எளிமையாக விளக்கிச்சொல்லும் பாங்கிலேயே நான் அவுட்டாகிப்போனேன். ஒருநாள் ஷூட்டிங்கின்போது திடீரென சில் அவுட் காட்சி ஒன்றில் அவர் நடந்துவந்ததைப் பார்த்தபோதுதான் எனக்குள் காதல் மணியடித்தது. அதே உணர்வு அவருக்கும் அதே நாளில் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பிறகு தெரிந்துகொண்டேன்.
அன்றைக்கு இரவே, திடீரென எனக்குப் போன் செய்தவர், தன் காதலைச் சொன்னார். எனக்குள்ளும் பளிச்சென்று ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. ஆனாலும், நான் உடனே ஓகே சொல்லவில்லை. ‘கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேனே...’ என்று சீன் போட்டு, ஒரு மாதம் வரை பதில் சொல்லாமலே காக்க வைத்தேன். இடைப்பட்ட காலத்தில், அவரைப் பற்றிய தகவல்களை எல்லாம் சேகரித்து ‘நல்லவர்’தான் என்பதை உறுதிசெய்து கொண்ட பின்னரே காதலிக்க ஆரம்பித்தேன்!’’ என்று முகம் மலரும் ஃபரினாவுக்கு அன்றும் இன்றும் என்றும் பிடித்த நாயகன் நடிகர் சிம்பு!
‘`காதல் அழிவதில்லை படத்தை என்றைக்குப் பார்த்தேனோ... அன்றிலிருந்தே நான் சிம்பு ரசிகைதான். சிம்பு பெயரைக் கேட்டாலே ‘ஒன்றரை டன் எனர்ஜி’ கிடைக்கும். படிக்கிற காலத்தில் என் அறை முழுக்க சிம்பு ஸ்டிக்கர்ஸாக ஒட்டிவைத்திருப்பேன். டி.வி-யில் சிம்பு படம் வந்தாலே ஸ்கிரீனுக்கு முத்தம் கொடுக்கிற அளவு சீரியஸான சிம்பு ரசிகை நான்!

டி.வி நிகழ்ச்சித் தொகுப்பாளராக வந்தபிறகு, திரைப்பிரபலங்கள் பலரைப் பேட்டியெடுத்திருக்கிறேன். ஆனாலும், சிம்புவை நேரடியாகச் சந்தித்துப் பேசுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘பியார் பிரேமா காதல்’ பட இசை வெளியீட்டுக்கு சிம்பு வந்திருந்தபோதுதான் அந்த வாய்ப்பு கிடைத்தது. ‘சிம்பு வர்றார்... சிம்பு வர்றார்’ என்று கூட்டத்திலிருந்து சத்தம் வரவும்... என்னோட லப் டப் தாறுமாறாக எகிற ஆரம்பித்துவிட்டது.
மேடையேறி என்னருகே அவர் வந்த அந்தக் கணம்... ப்ப்பா... வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே, ‘நான் உங்களுடைய க்ரேஸி ஃபேன்’ என்று சொல்லி கை கொடுத்தேன். ‘ஓகே’ என்று சின்னதாகச் சிரித்தார். அடுத்த பத்து நாள்களுக்கு என் கையைக் கழுவவில்லை. அவரது அந்தப் புன்னகைதான் நினைவு முழுக்க நிரம்பித் தளும்பியது’’ என்று சிம்பு புராணம் பாடுகிறவரைத் தடுத்து நிறுத்தி, மறுபடியும் காதல் அனுபவப் பகிர்வுக்குள்ளாக இழுத்துவந்தோம்.
‘`கல்லூரி படிக்கும்போது, உடன் படிக்கும் பையன் ஒருவன் என்னைக் காதலிக்க விரும்புவதாகக் கூறினான். எனக்கு அவன்மீது எந்த ஈர்ப்பும் இல்லை. அதனால், பதிலேதும் கூறாமல் தவிர்த்துவந்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை அவன் என்னைத் தொடர்ந்து வந்து காதல் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தான். ‘ஆஹா... இது விடாது கறுப்பு’ என்று தெரியவந்ததும், சுற்றிவளைத்து அவன் மனம் நோகாதபடி என் மறுப்பைத் தெரிவித்து விட்டேன்.
ஆனால், அடுத்த சில நாள்களிலேயே ‘ஷாக்’கடிக்கிற அந்தச் செய்தி வந்து சேர்ந்தது.
காதலிக்கச் சொல்லி என்னை நச்சரித்த பையனின் அண்ணன், ‘என் தம்பிகிட்ட நீ என்னம்மா சொன்னே... அவன் என்ன காரியம் பண்ணியிருக்கான்னு தெரியுமா?’ என்று படபடக்கிற எதிர்பார்ப்பை ஏற்றிவைத்தார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை...
‘என்ன பண்ணினான்?’
‘இஸ்லாம் பையனைத்தான் கல்யாணம் பண்ணுவே என்று நீ சொன்னதால், சுன்னத் பண்ணிக்கொண்டு வந்துவிட்டான்’ என்றார் கோபம் கொப்பளிக்கும் கண்களுடன். அதைக் கேட்டதும் எனக்கு செம ஷாக். ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று நேரடியாகச் சொல்லத் தயங்கி, நான் வெளிப்படுத்திய வார்த்தைகள் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம்.
காதல் என்பதே, ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்வதற்கான அடிப்படைதான். ஒருவரைப் பார்த்ததும் காதலை வெளிப்படுத்துவதும், அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவைப்பதற்காக எல்லை மீறிப்போவதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
காதலுக்காகக் கையை வெட்டிக் கொள்வது, நாக்கை அறுத்துக்கொள்வதெல்லாம் சினிமாவில் சித்திரிக்கப்படும் வன்முறைகள். இதுபோன்ற தவறான கற்பிதங்களைப் பார்த்துப் பார்த்து வளர்வதாலோ என்னவோ, காதலைப் பற்றிய அடிப்படைப் புரிதலே இங்கு பலரிடத்திலும் இல்லை. அதனால்தான் ‘தெய்விகக் காதல்’ என்று தேவையே இல்லாமல் காதலைப் புனிதப்படுத்துகிறார்கள் அல்லது ‘என்னைக் காதலித்தவள் வேறு யாரையும் திருமணம் முடிக்கக் கூடாது’ என்றெல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார்கள். இவர்களெல்லாம் நல்ல மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.
காதலில், இன்னொரு வகையினரும் இருக்கிறார்கள்... பிரிந்துபோன காதலன் அல்லது காதலியை நினைத்து, தன்னைத்தானே வருத்திக்கொள்பவர்கள் இவர்கள். உச்சகட்ட முட்டாள்தனம் இது. தன்னை விட்டுப் பிரிந்துபோன நபரே மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாம் ஏன் வருந்த வேண்டும்? நம்மை இழந்ததற்காக அவர்கள்தான் வருந்த வேண்டும் என்று சவால் மனநிலையில் வாழ்ந்துகாட்டுவதுதானே சரியான தீர்வு?
காதலின் பிற்போக்குதனங்களைக் கண்டிக்கிற இதேநேரத்தில், முற்போக்கு என்று கூறிக்கொண்டு சிலர் செய்துவரும் காரியங்களும் எனக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது. லிவிங் டுகெதர் என்கிற நிலையிலிருந்து அடுத்தகட்டமாக இப்போது ஃப்ளிங் ரிலேஷன்ஷிப்பில் வந்து நிற்கிறார்கள் சிலர். இது என்ன மாதிரியான உறவு... வெறுமனே உடல்சார்ந்த தேவைகளுக்காக மட்டுமே சுயநலமாக இருவர் சேர்ந்து வாழ்வதும், தேவை தீர்ந்த பின்னர் இருவரும் வெவ்வேறு வழியில் பிரிந்து செல்வதுமான இந்த வாழ்க்கையை எந்தவகையில் சேர்ப்பதென்றே தெரியவில்லை!’’ என்று காதலின் பரிமாணங்களை விவரிக்கிற ஃபரினா, இஸ்லாமியக் குடும்பத்திலிருந்து வந்த பெண். ஆனால், ``நான் பெரியாரைப் பின்பற்றுபவள்!’’ என்கிறார் கம்பீரமாக!
ஆண்களுக்கு அழகு?
கிருதாவும் தாடியும்.
சமீபத்திய கிஃப்ட்?
ஆலப்புழா படகு வீட்டில், சர்ப்ரைஸாக கணவர் கொடுத்த டின்னர்.
பிடித்த பாடல் வரிகள்?
‘மரம் இழைத்த சுருள் விரித்து
மலர் படுக்கை செய்வோம்
முகம் உடைந்த பாட்டிலுக்குள்
அகல் விளக்காய் வாழ்வோம்.’
படம்: பாய்ஸ்
பிடித்த நடிகர்?
அன்றும் இன்றும் என்றும் சிம்பு.
-த.கதிரவன்
படங்கள் : தே.அசோக்குமார்