Published:Updated:

''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க!'' - ’அறந்தாங்கி’ நிஷா

"இதுவரைக்கும் நாங்க எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், அவர் எங்கேயோ இருப்பார்... நான் எங்கேயோ இருப்பேன். இப்போ, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணணுங்கிறது பெரிய டாஸ்க். அவர்கிட்ட நான் சொன்னப்போ, முதல்ல அவர் மறுத்தார். அதுக்கப்புறம்தான் ஓகே சொன்னார்."

''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க!'' - ’அறந்தாங்கி’ நிஷா
''இதுக்கு அப்புறம் அவர் சரளமா பேசிட்டாலே போதுங்க!'' - ’அறந்தாங்கி’ நிஷா

'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் 'அறந்தாங்கி' நிஷா. பெண்களுக்கு காமெடி சாத்தியமாகுமா என்கிற கேள்வியை உடைத்துச் சாதித்திருக்கிறார். 'கலக்கப்போவது யாரு சீசன் 5' நிகழ்ச்சியில் 'ரன்னர் அப்' பட்டத்தைக் கைப்பற்றினார். பின்னர், விஜய் டி.வி-யில் பல ரியாலிட்டி ஷோக்களில் நிஷாவின் குரல் ஒலித்தது. தற்போது, அவருடைய கணவர் ரியாஸ் அலியுடன் சேர்ந்து விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாக இருக்கும் 'மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

''நான் பல மேடைகள் ஏறியிருக்கேன். சின்ன வயசுல இருந்தே, என்னைப் பேச விட்டா பக்கம் பக்கமா பேசிட்டு இருப்பேன். என் கணவர் அப்படியே தலைகீழ்! ஒரு நாளைக்கு இரண்டு வார்த்தைதான் பேசுவாரு. ஒரு வருஷத்துல மொத்தமா அவர் பேசுன வார்த்தைகளை விரல்விட்டு எண்ணிடலாம்னா பார்த்துக்கோங்க. ஆரம்பத்துல, இந்த நிகழ்ச்சி வாய்ப்பு வந்தப்போ எனக்கே கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்துச்சு. இதுவரை மேடையில் பழனி அண்ணா, ராமர் அண்ணா கூடலாம் சேர்ந்து பண்ணியிருக்கேன். என் வீட்டுக்காரர்கூட பண்ணணும்னு சொன்னதும் அம்புட்டுதான்! ஏன்னா, அவர்கூட இதுவரை நான் எந்த மேடையுமே ஏறுனது இல்ல. எனக்கு பக்கபலமா இருப்பார். என்னை முழுசா சப்போர்ட் பண்ணுவாரு. ஆனா, அவருக்கு இதெல்லாம் தெரியாது.

இதுவரைக்கும் நாங்க எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் அவர் எங்கேயோ இருப்பார், நான் எங்கேயோ இருப்பேன். இப்போ, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணணும்ங்கிறது பெரிய டாஸ்க். அவர்கிட்ட நான் சொன்னப்போ, முதல்ல அவர் மறுத்தார். அதுக்கப்புறம்தான் ஓகே சொன்னார். ஆனா, நாம ரொம்ப லவ் பண்ற ஒருத்தங்க நம்மளுடைய பக்கத்துல நிற்கும்போது வர்ற பலத்தை இப்போதான் உணர்ந்தேன். உண்மையைச் சொல்லணும்னா, இதுக்கு முன்னாடி மத்தவங்ககூட சேர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது வெற்றி மட்டும்தான் இலக்கா தெரியும். கேலி, கிண்டல்னு எதுனாலும் பார்த்துக்கலாம்னு தோணும். ஆனா இப்போ, இவர்கூட சேர்ந்து பண்றப்போ, அவர் நல்லா பண்ணணும், அவரை எல்லோரும் பாராட்டணும், அவரை யாரும் அசிங்கப்படுத்திடக் கூடாதுங்குற எண்ணமெல்லாம் தோண ஆரம்பிச்சிடுச்சு. 

அவருக்கு கேமரா எங்கே இருக்கும், எப்படிப் பேசணும்ங்கிறதெல்லாம் தெரியாது. முதல் நாள் அவரை குழந்தை மாதிரிதான் பார்த்துக்கிட்டேன். ஒவ்வொரு விஷயமா அவருக்கு சொல்லிக்கொடுத்துட்டு இருந்தேன். மைக்ல பேசுங்கன்னு ஒவ்வொன்னா பார்த்துப்பார்த்து சொல்லிக்கொடுத்தேன். அவர் சொதப்பி அது என்னை பாதிச்சிடுமோங்குற எண்ணம் அவருக்கு அதிகமாகவே இருக்கு. நான் என்ன சொல்லிக்கொடுத்தாலு,ம் அதைப் பொறுமையா கேட்டு மாத்திக்கிட்டார். இதுவரைக்கும் அவர் என்கிட்ட  ஈகோ பார்த்ததில்ல. இப்பவும் அப்படித்தான்!

இந்த நிகழ்ச்சியில், டைட்டில் வாங்கணுங்கிறது எல்லாம் எனக்கு ஆசை இல்லங்க. இந்த நிகழ்ச்சிக்கு வந்ததுக்கு அப்புறம் என் கணவர் சரளமா பேச ஆரம்பிச்சிட்டாருன்னாலே அது போதும்! வீட்டுக்கு விருந்தாளி வந்தாகூட வாங்கன்னு கேட்டுட்டு உள்ளே போயிடுவார். அவங்ககிட்ட நான் என்ன பேசுறதுனு கேட்பார். அவருக்குப் பேசவே வராது. இங்கே அவரைப் பேசவைக்கிறதுதான் என்னோட சவால்! என் மாமியார், எங்க ஒட்டுமொத்த ஃபேமிலிக்கே செம ஷாக். புரோமோ பார்த்துட்டு எல்லோரும் நாளைக்கு நிகழ்ச்சியில் என் வீட்டுக்காரரைப் பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

அந்த நிகழ்ச்சியில், திடீர்னு அவருக்கு முத்தம் கொடுத்துட்டேன். என்னன்னு தெரியல. அந்தச் சமயத்துல எனக்கு வெட்கம் வேற வந்துடுச்சு. என் வீட்டுக்காரர் மறுபடி மறுபடி என்கிட்ட, 'உனக்கு வெட்கமெல்லாம் வருமா நிஷா!'ன்னு கேட்டுட்டே இருந்தார். வீட்டுக்கு வந்ததும், நிஜமாவே உனக்கு வெட்கம்லாம் படத் தெரியுமான்னு கேட்டார். காதல் கணவரோட நான் பண்ற முதல் ரியாலிட்டி ஷோ! 

எங்களுக்குக் கல்யாணம் ஆகும்போது, எல்லோரும் என்கிட்ட உண்மையைச் சொல்லு நீ தானே புரொப்போஸ் பண்ணினன்னு கேட்டாங்க. அவர்தான், புரொப்போஸ் பண்ணி எனக்காக ஐந்து வருஷம் வெயிட் பண்ணாரு. நம்ம ஆளு மத்ததெல்லாம் பேச மாட்டாரு. ஆனா, இது மட்டும் நல்லா தெரியும். இப்போ வரை இதைச் சொல்லித்தான் அவரைக் கிண்டல் பண்ணுவேன். இப்போ, அவரை யாரும் கிண்டல் பண்ணிடக் கூடாதுன்னு பல விஷயங்கள் கத்துக்கொடுக்கிறேன்!" எனப் புன்னகைக்கிறார், நிஷா.