சன் டிவி `லட்சுமி ஸ்டோர்ஸ்' சீரியல் மூலமாகத் தமிழ் சின்னத்திரையில் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார், நடிகை சுதா சந்திரன். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.
`` 'நாகினி' சீரியல் பெரிய ஹிட். ஆனா, அது இந்தி சீரியலின் ரீமேக்தான். தமிழில் நடிச்சுப் பெரிய இடைவெளி ஏற்பட்டுடுச்சு. குஷ்புவின் நட்புக்காகவும், நல்ல கேரக்டர் என்பதாலும் `லட்சுமி ஸ்டோர்' சீரியல்ல நடிக்க ஒத்துக்கிட்டேன். 'சகுந்தலா தேவி'ங்கிற அமைச்சர் ரோல்ல நடிக்கிறேன். பெரும்பாலும் நெகட்டிவ் ரோல்லதான் நடிக்கிறேன். மக்களும் அந்த ரோலை ஆர்வமாப் பார்க்கிறாங்க. எனக்கும் நெகட்டிவ் ரோல்ஸ் பிடிச்சிருக்கு. மும்பையைச் சேர்ந்தவளாக இருந்தாலும், என் பூர்வீகம் தமிழ்நாடுதான். அதனால தமிழ் புராஜெக்ட்ல நடிக்கிறது எனக்கு எப்போதும் ஸ்பெஷலானதுதான்" என்கிறார்.
நடன நிகழ்ச்சி நடுவர் அனுபவம் பற்றிக் கூறுபவர், ``டான்ஸையும் என்னையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. டான்ஸ்தான் இன்றைய என் வாழ்க்கைக்குக் காரணம். அதனால நடிக்கிறேனோ இல்லையோ, டான்ஸ் நிகழ்ச்சிகள்ல தொடர்ந்து வேலை செய்றேன். இன்றைய குழந்தைகள், இளைஞர்கள் ஏராளமானோர் டான்ஸ்ல கலக்குறாங்க. எங்க இளமைக்காலத்துல டான்ஸ் கத்துக்க அனுமதிச்ச பெற்றோர், அதை கரியரா தேர்ந்தெடுக்க ஒத்துக்கலை. இன்னைக்கு அப்படியான நிலையில்லை. பெற்றோரே, குழந்தைகளின் டான்ஸ் ஆசைக்கு ஊக்கம் கொடுக்கிறாங்க. இதையெல்லாம் ஜீ தமிழ் `டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில நடுவராக இருந்து கண்கூடப் பார்த்துச் சந்தோஷப்படறேன். நடுவராக, டான்ஸர்களுக்கு என்னாலான ஊக்கத்தைக் கொடுக்கிறேன். தவிர, நிறைய நிகழ்ச்சிகள்ல டான்ஸ் ஆடுறேன். டான்ஸ்தான் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குது" எனப் புன்னகையுடன் கூறுகிறார், சுதா சந்திரன்.