Published:Updated:

'நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் இருந்து விலகியது ஏன்? - காரணம் பகிரும் அமித் பார்கவ்

'நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் இருந்து விலகியது ஏன்? - காரணம் பகிரும் அமித் பார்கவ்
'நெஞ்சம் மறப்பதில்லை' தொடரில் இருந்து விலகியது ஏன்? - காரணம் பகிரும் அமித் பார்கவ்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி, சுமார் 300 எபிசோடுகளைக் கடந்துகொண்டிருக்கும் சீரியல், 'நெஞ்சம் மறப்பதில்லை'. ஹீரோவாக அமித் பார்கவ், அவருக்கு ஜோடியாக நிஷா, சரண்யா என இரு கதாநாயகிகள்... என அமர்க்களமாகத் தொடங்கப்பட்ட சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் தொடரிலிருந்து திடீரென வெளியேறினார் நிஷா. 'சரண்யாவுக்கு சீரியலில் தரப்பட்ட முக்கியத்துவம் தனக்கு இல்லை என நினைத்தே நிஷா வெளியேறினார்' எனத் தகவல்கள் கிளம்பின. அப்போதே நிஷாவிடம் பேசியிருந்தோம்.

'சீரியல்ல கமிட் ஆனபோது என்னோட கேரக்டர் பத்தி சொல்லப்பட்டது வேறு. சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிறகு, கேரக்டரின் ட்ராவல் வேறு மாதிரி இருந்தது' எனச் சொல்லியிருந்தார்.

தற்போது, தொடரின் கதாநாயகனான அமித் பார்கவும் வெளியேறியிருக்கிறார்.

நிஷா வெளியேறியபோது பேசப்பட்ட அதே பேச்சுகள் இப்போதும் கேட்கின்றன. அதாவது, 'சரண்யாவுக்கு தரப்பட்ட முக்கியத்துவம் ஹீராவான தனக்குத் தரப்படவில்லை என அமித் நினைக்கிறார்' என்கிறார்கள் சிலர். 'நிஷா வெளியேறியபோதே அமித்திடம், 'சீக்கிரமே உங்களுக்கும் இந்த மாதிரி நிலை வரலாம்; கவனமா இருங்க' எனச் சொன்னதாகச் சொல்கிறார்கள் இன்னும் சிலர்.

பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டிருக்க, அமித் பார்கவிடமே பேசினோம்.

''பெங்களூருல இருந்து நான் சென்னைக்கு வந்ததே சினிமாவுல நடிக்கணும்னுதான். நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனா, செலெக்டிவா கதையைத் தேர்ந்தெடுத்துப் பண்றதுன்னு முடிவுசெய்து நடிச்சிட்டிருந்தேன். அந்த நேரத்துலதான் 'நெஞ்சம் மறப்பதில்லை' வாய்ப்பு வந்தது. கமிட் ஆனபோதே, ஒன்றரையில இருந்து ரெண்டு வருஷம் வரைக்கும்னா பண்ணலாம்'னு சொல்லித்தான் சம்மதம் சொன்னேன். சீரியல்ல தொடர்ந்து நடிச்சிட்டிருந்தா, வர்ற சினிமா வாய்ப்புகளை ஏத்துக்க முடிய மாட்டேங்குது.

'நெஞ்சம் மறப்பதில்லை' இந்த மாதத்துடன் 300 எபிசோடுகளைக் கடந்துடுச்சு. அதனால, போதும்னு நினைச்சேன். இனி சினிமாவுல முழுநேரம் கவனம் செலுத்தணும்.

இன்னொரு புறம், சில நாள்களுக்கு முன்னாடி, நானே கதை எழுதி, தயாரிச்ச ஒரு வெப் சீரிஸ் வெளியானது. நடிப்பும் நானே. நல்ல வரவேற்பு கிடைச்சது. தொடர்ந்து வெப் சீரிஸ் பண்ற ஐடியாவும் இருக்கு'' என்கிறவர், வெப் சீரிஸில் மனைவி ஶ்ரீரஞ்சனியுடன் சேர்ந்து நடிக்கிற திட்டமும் இருப்பதாகச் சொல்கிறார்.