Published:Updated:

என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!

என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!
பிரீமியம் ஸ்டோரி
News
என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!

என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!

‘அறந்தாங்கி’ நிஷா இன்று ஒரு செலிபிரிட்டி. ஆனால், ஒரு காலத்தில் கல்லூரி முதல் கல்யாணச் சந்தைவரை தன் நிறத்தால் புறக்கணிப்புகளை மட்டுமே பார்த்தவர். அவற்றையெல்லாம் தன் வாய்த் திறமையாலும் வைராக்கியத்தாலும் வென்று வந்து அவர் அடைந்திருக்கும் வெற்றி இது.  “டிவியில நிஷா, வீட்டுக்காரரை இப்படி அசிங்கப்படுத்துது, மாமியாரைக் கேலி பண்ணிப் பேசுது, இப்படியெல்லாம் டிரஸ் பண்ணுதுன்னு சொல்றவங்க எல்லாம், நான் சொல்ற இந்தக் கதையைக் கேளுங்க’’ - படபடவெனப் பேச ஆரம்பித்தார்.  

என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!

“கறுப்பா பொறந்துட்ட காரணத்தாலேயே அவங்க படுற கஷ்டங்களும் வலியும் அதைக் கடந்து வந்தவங்களுக்கு மட்டும்தான் தெரியும். நான் பள்ளிக்கூடத்துல படிக்கும்போது என்கூட யாரும் பேசமாட்டாங்க. எனக்குத் தோழிகள், நண்பர்களும் இருக்கமாட்டாங்க. அதுக்கு என் நிறம்தான் காரணம்னு அப்போ எனக்கு முழுசா புரியலை. நான் காலேஜுக்குப் போனப்போ, சகட்டுமேனிக்கு எல்லாரையும் ராகிங் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ஆனா என்னை அந்தமாதிரி ராகிங்கூட யாருமே பண்ணல. கறுப்பா இருக்குறவங்க எல்லாம் வாழவே தகுதியில்லாதவங்களான்னு பொங்கிக்கிட்டு வரும்.

என் கூடப் படிச்ச புள்ளைங்களுக்கு எல்லாம், அவன் பார்க்குறான், இவன் சைட் அடிக்குறான், அந்தப் பையன் லவ் பண்றான்னு நிறைய கதைகள் இருக்கும். எனக்கு அப்படி எதுவுமே நடந்ததில்ல. இந்த நிறம் எனக்குத் தந்த தாழ்வுமனப்பான்மையை மீறி வர்றதுங்கிறது அவ்வளவு சிரமமா இருந்தது. ஆனாலும், அதை நான் செஞ்சேன். என் பேச்சுத் திறமைதான் அதுக்கு எனக்கு உதவுச்சு. காலேஜ்ல பேச்சுப் போட்டிகள்ல கலந்துகிட்டேன். என் பக்கத்துல உட்காரப் பிடிக்காதவங்ககூட என் பேச்சைக் கேட்டுக் கைதட்டினாங்க. அந்தக் கைத்தட்டல் சத்தம்தான், வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச முதல் அங்கீகாரம். 

என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!

நான் இளங்கலை படிக்கும்போதே எனக்கு வீட்டுல மாப்பிள்ளை பார்த்தாங்க. கிட்டத்தட்ட ஆறு பேருக்கு மேல என்னை வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. காரணம், ‘பொண்ணு அட்டக் கறுப்பா இருக்கு.’ அந்த நேரத்துலதான், என்னை நேசிச்ச என் அத்தை மகனை நானும் காதலிக்க ஆரம்பிச்சேன். உலகமே நம்மைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கும்போது, ‘எனக்கு நீதான் அழகி’ன்னு ஒருத்தர் சொன்னா அது எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பொண்ணுக்கே உண்டான வெட்கம், சந்தோஷத்தை எல்லாம் நான் வாழ்க்கையில் முதன்முதலா உணர்ந்தது அப்போதான். எங்க அத்தை வந்து எங்கப்பாகிட்ட பொண்ணு கேட்டாங்க. நாங்க லவ் பண்ணுன விஷயம் அவருக்குத் தெரியாது. அவரைப் பொறுத்தவரைக்கும் இது பெரியவங்க ஏற்பாடு பண்ணின கல்யாணம்னுதான் இப்போவரை நினைச்சிட்டிருக்கார். ஆனா, எங்கம்மாகிட்ட நான் விஷயத்தைச் சொல்லிட்டேன். அவங்க பெருசா எதிர்ப்புத் தெரிவிக்காததுகூட, எனக்கு வேற மாப்பிள்ளை கிடைக்காதுங்குற எண்ணத்துலதானோன்னு அடிக்கடி தோணும்.

கல்யாணத்துக்கு அப்புறமும், ‘செவத்த மாப்பிள்ளைக்குப் பொண்ணப் பாரு’ன்னு இந்த ஏளனப் பேச்சுகள் என்னை விட்டபாடில்லை. இன்னொரு பக்கம், பட்டிமன்றக் காலத்துல என்னைக் கடைசிப் பேச்சாளராதான் பேசச் சொல்வாங்க. ‘கொஞ்சம் பவுடர் போட்டுட்டு வாம்மா’ன்னு நேரடியாவே சொல்வாங்க. சிலர், என்னைப் பட்டிமன்றங்களுக்குக் கூப்பிடுறதையே தவிர்ப்பாங்க. யாராச்சும் பேச்சாளர் கடைசி நிமிஷத்துல வரமுடியாமல் போனா, வேற வழியில்லாம என்னைக் கூப்பிடுவாங்க. இப்போ என்னை ஒதுக்கினவங்க எல்லாம் என்கூட புகைப்படம் எடுத்துக்குறாங்க. மீடியாவுல என்னை மாதிரி ஒரு பொண்ணு வெற்றிபெறணும்னா, எனக்கு எவ்வளவு காயங்கள், வைராக்கியம் இருந்திருக்கணும்?!  

என்னைப் புரிஞ்சுக்கிட்ட என்னவர்!

என் கணவரையும் மாமியாரையும் நான் ஷோவில் கிண்டல் பண்ணிப் பேசுறதைப் பலரும் குற்றச்சாட்டாகச் சொல்றாங்க. பொதுவா ஸ்டாண்ட் அப் காமெடியில் ஆண்கள் பலர் மனைவியை கேலி பண்ணுவாங்க. அது தப்பாகத் தெரியாது. ஆனா, பெண்கள் கணவரையோ, மாமியாரையோ காமெடியா பேசுனா எல்லாருக்கும் தப்பாகத் தெரியுது. ஆரம்பத்துல, என் கணவரைக் கிண்டல் பண்ணிப் பேசி ஷோ பண்ணினப்போ, எனக்கு எந்த யோசனையும் இல்ல. ஏன்னா, அவருக்கு என்னைப் பத்தித் தெரியும். ஆனா, மாமியாரைப் பேசும்போது கொஞ்சம் யோசனையாதான் இருந்துச்சு. இருந்தாலும், அந்த நேரத்துல நிகழ்ச்சியில இருந்த போட்டியைச் சமாளிக்க மாமியார் ஜோக்குகள் எனக்குப் பெரிய பலமா இருந்துச்சு. எல்லாரும் அதை ரசிச்சுச் சிரிச்சாங்க. ஊருக்குப் போய் என் மாமியார் முன்னாடி நின்னப்போ, ‘இது காமெடிதானே? நீ ஜெயிச்சா சரிதான்’னு சொன்னதும்தான் எனக்குத் தெம்பே வந்துச்சு. அவங்க எங்க அப்பாவோட கூடப் பிறந்த தங்கச்சி. என் சொந்த அத்தை. என் மனசுல குழப்பம் வந்துடாம பார்த்துக்கிட்டாங்க. இது போட்டி உலகம். ஆடியன்ஸ் விரும்புறதை செஞ்சாதான் இங்க சர்வே பண்ண முடியும். பாடி ஷேமிங்க்கு இடம் கொடுக்குறேன், குடும்பத்தை அவமானப்படுத்துறேன்னு நிறைய குற்றச்சாட்டுகள் சொல்றாங்கதான். ஆனா, நான் ஒரு என்டர்டெயினர். என் கரியரையும் எனக்கான வாய்ப்புகளையும் தக்கவெச்சுக்கிற போராட்டம் என்னன்னு எனக்குத்தான் தெரியும்.

என் மேக்கப், டிரஸ்ஸுக்கும் நெகட்டிவ் கமென்ட்ஸ் வராமல் இல்லை. ஆனா, இது நிகழ்ச்சியின் தேவையா இருக்கு. நானும் பழனி அண்ணனும் கூடப் பொறந்த அண்ணன், தங்கச்சி மாதிரி. சிலர் என்னையும் அவரையும் சேர்த்து வைச்சுப் பேசுவாங்க. என் கணவர் என்னைப் புரிஞ்சிக்கிறதுனால இதுக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தர்றதில்ல. ஆனா என்னைக்காவது ஒருநாள், ‘எல்லோரும் உன்னைத் தப்பா பேசுறாங்க நிஷா, நீ இனிமே மீடியாவுக்குப் போக வேண்டாம்’னு அவர் சொல்லிடுவாரோங்கிற பயம் இப்போவெல்லாம் எனக்கு அதிகமாகிட்டேதான் இருக்கு. அவர் வெளிநாட்டுல பார்த்துக்கிட்டிருந்த வேலை இல்லாமப்போன நேரத்துல, நாங்க ரெண்டு பேரும் ரேஷன் அரிசிச் சோறு சாப்பிட்ட எங்க கடந்த காலமெல்லாம் யாருக்கும் தெரியாது. இன்னைக்குப் பலரைச் சிரிக்க வைக்கிற இந்த நிஷா, பல வலிகளைக் கடந்து வந்தவ. அவளோட தன்னம்பிக்கையைப் பாருங்க. உள்ள அழுகிறேன் வெளிய சிரிக்கிறேன் மொமன்ட்!”

வெ.வித்யா காயத்ரி - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்