Published:Updated:

``என் கணவர் பிசினஸ் பண்றார்; அவர் நடிப்பைவிட்டு விலகலை!" - சிந்து ஷியாம்

``என் கணவர் பிசினஸ் பண்றார்; அவர் நடிப்பைவிட்டு விலகலை!" - சிந்து ஷியாம்
``என் கணவர் பிசினஸ் பண்றார்; அவர் நடிப்பைவிட்டு விலகலை!" - சிந்து ஷியாம்

``என் மகன் தேஜஸ் கிருஷ்ணா, `காற்றின் மொழி' படத்துல ஜோதிகாவின் மகனாக நடிச்சிருந்தான். முதல் படம்னாலும், சிறப்பா நடிச்சிருந்தான். அந்தப் படத்துல நானும் நடிச்சிருந்தேன்."

`தெய்வமகள்' சீரியல் புகழ் சிந்து ஷியாம், சினிமாவிலும் நடித்துவருகிறார். தற்போதைய தன் நடிப்புப் பயணம் குறித்து சுவாரஸ்யமாகப் பேசுகிறார்.

`` `தெய்வமகள்' சீரியலுக்குப் பிறகான சின்னத்திரைப் பயணம் பற்றி..."

``அந்த சீரியல் பெரிய ஹிட். அதில் நடிச்ச பலருக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைச்சுது. மெகா தொடர்களில் நடிக்கிறது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இரண்டும் கலந்த அனுபவம். ஒரு மெகா தொடர் ஒளிபரப்பாகிட்டு இருக்கும்போது அதில் நடிக்கும் ஆர்டிஸ்டுகளுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். சீரியல் முடிந்த பிறகு, முந்தைய சீரியல் கேரக்டர் போலவே தொடர்ந்து வாய்ப்புகள் வரும். அப்படித்தான் எனக்கும். அநியாயத்துக்கு ரொம்ப அப்பாவியான அம்மா ரோல்களே வருது. அதனால் சின்ன வருத்தம் உண்டு. இப்போ ஜீ தமிழ் `ஓவியா'ங்கிற சீரியல்ல நடிக்கிறேன். அதுலயும் சென்டிமென்ட் அம்மா ரோல். இப்படி வழக்கத்துக்கு மாறாக, சவாலான கேரக்டர்கள்ல நடிக்க அதிகம் ஆசைப்படறேன்."

``அம்மா ரோல்களில் நடிப்பதால் உங்களுக்கு வருத்தமுண்டா?"

`` `தெய்வமகள்' சீரியல் நிறைவடையும் தருணத்துல, விஜய் டிவி `பகல் நிலவு' சீரியல்ல கமிட்டானேன். அதில் கலெக்டராக வரும் நான், மெச்சூரிட்டியான இளைஞருக்கு சிங்கிள் மதரும்கூட. நிஜத்தில் என் மகன் ஸ்கூல் படிக்கிற சின்ன பையன். அதனால அந்த அம்மா ரோல்ல நடிக்க ஆரம்பத்துல தயக்கமும் வருத்தமும் இருந்துச்சு. அதேசமயம், நடிப்பில் வித்தியாசத்தைக் காட்டணும்ங்கிற எண்ணத்தில்தான் அந்த சீரியல்ல மகிழ்ச்சியுடன் நடிச்சேன். பிறகு நேரப் பற்றாக்குறை காரணமாக, அந்த சீரியல்ல இப்போ நடிக்க முடியலை. அதனால என்னோட கேரக்டர்ல சின்ன பிரேக் கொடுக்கப்பட்டிருக்கு. அதுக்குள்ள அந்த சீரியல்ல இருந்து நான் வெளியேறிட்டேன்னு சொல்றாங்க. அது உண்மையில்லை. விரைவில் மீண்டும் அதே கேரக்டரில் என் நடிப்பைத் தொடரப்போறேன். இந்நிலையில, `ஓவியா' சீரியல்லயும் பெரிய பொண்ணுக்கு அம்மா ரோல் (சிரிக்கிறார்)."

``உங்க டான்ஸ் பயணம் எப்படிப் போகுது?"

``அடிப்படையில நான் டான்ஸர். பிறகுதான் நடிகை. டான்ஸ் கிளாஸ் நடத்திட்டு இருக்கேன். கடந்த மார்கழி மாதம் சென்னையிலுள்ள பல சபாகளில் நான் தனியாகவும், என் மாணவிகளுடனும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினேன். தமிழ் புராஜெக்ட்ஸ் மற்றும் டான்ஸ் செயல்பாடுகளால்தான் என் பூர்வீகமான மலையாள சினிமாவில் கவனம் செலுத்த நேரமில்லை."

``உங்க கணவர் இப்போ நடிப்பதில்லையே?"

``என் கணவர் ஷியாம், முன்பு நிறைய படங்கள் மற்றும் சீரியல்களில் நடிச்சுட்டு இருந்தார். இப்போ அவர் சலூன் பிசினஸ்ல கவனம் செலுத்துறார். அதுக்கே அவருக்கு நேரம் சரியா இருக்கு. அவர் பிசினஸில் நிர்வாகச் செயல்பாடுகள் உள்ளிட்ட விஷயங்களில் நானும் உதவி செய்றேன். நல்ல ஆக்டிங் வாய்ப்புகள் வந்தால் அவர் தொடர்ந்து நடிப்பார். எனக்கும் அவருக்கும் நடிப்புத்துறைதான் அடையாளம் கொடுத்துச்சு. அதனால, இத்துறையைவிட்டு நாங்க விலகமாட்டோம்."

`` `காற்றின் மொழி' படத்தில் நடித்த அனுபவம் பற்றி..."

``என் மகன் தேஜஸ் கிருஷ்ணா, `காற்றின் மொழி' படத்துல ஜோதிகாவின் மகனாக நடிச்சிருந்தான். முதல் படம்னாலும், சிறப்பா நடிச்சிருந்தான். அந்தப் படத்துல நானும் நடிச்சிருந்தேன். அம்மா-மகன் இருவரும் ஒரே படத்தில் நடிச்சது புது அனுபவம்தான். ஏழாவது படிக்கிற பையனுக்குத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வருது. நல்ல கதைகளில், படிப்பு பாதிக்காத வகையில மகனை நடிக்க வைப்போம்."

அடுத்த கட்டுரைக்கு