Published:Updated:

``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை!" - பிர்லா போஸ்

``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை!" - பிர்லா போஸ்
``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை!" - பிர்லா போஸ்

வீட்டுப் பிரச்னைக் குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தது பற்றி டிவி நடிகர் பிர்லா போஸ் பேசியிருக்கிறார்.

``ஜெயலலிதா அம்மா முதலமைச்சரா இருந்தப்போ, `சி.எம் செல்'லில் மனு கொடுத்து போராடத் தொடங்கினேன். இந்தத் தேதி வரைக்கும் என் பிரச்னை தீர்ந்தபாடில்லை. நாளைக்கே `சின்னத்திரை நடிகர் தற்கொலை'னு செய்தி வந்தா, `வேலை இல்லை; கடன் தொல்லை'னு வழக்கம்போல உச் கொட்டிட்டு கடந்து போயிடாதீங்க, என் விஷயத்துல அது தற்கொலை இல்லை, கொலை...' - சமீபத்தில் தன்னுடைய பிரச்னை குறித்து புகார் தருவதற்காக சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்திருந்த டிவி நடிகர் பிர்லா போஸ் இப்படியொரு பகீர் தகவலை நம்மிடம் பகிர்ந்தார்.

சில நாள்களுக்கு முன் நடந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நிரோஷா தலைமையிலான அணியில் போட்டியிட்டு, அந்த அணி தோற்றபோதும் வெற்றி பெற்ற இவர், தற்போதைய சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

என்ன பிரச்னை? - கேட்டோம்.

```சீரியல் வாய்ப்பு இல்லை', `குறைந்த நாள்களே ஷூட்டிங்' என மற்ற டிவி ஆர்ட்டிஸ்ட்கள் சந்திக்கிற பிரச்னைகளை நானும் சந்திச்சுக்கிட்டு வர்றேன். அந்தப் பிரச்னைகளே மன அழுத்தத்துல விடக்கூடியவைதான். ஆனா, இப்போ நான் சந்திச்சுக்கிட்டு இருக்கிற பிரச்னை அதைவிடப் பல மடங்கு மன அழுத்தத்தைத் உண்டாக்கியிருக்கு.

ஒண்ணுமில்லீங்க... இப்போ உங்களுக்குப் பேட்டி தந்துகிட்டிருக்கிற இந்த நேரம்கூட, பயந்துகிட்டேதான் பேசுறேன். உங்களை என் வீட்டுக்கு வரச் சொல்லி, பேட்டி தரலைன்னா, எக்ஸ்ட்ரா ரெண்டுபேர் வந்துட்டா உட்கார இடமில்லாத அளவுக்குச் சின்ன வீடு. அதனால, வெளியில சந்திச்சுப் பேசலாம்னு கிளம்பி வந்துட்டேன். ஆனா, வீட்டை விட்டு வெளியில கிளம்பி வர்றதுக்கு எனக்கு அவ்வளவு பயம். ஏன்னா, நான் வீட்டுல இல்லாத எந்த ஒரு நிமிடமும் என் குடும்பத்தை நடுரோட்டுல தூக்கியெறியத் தயாரா இருக்காங்க'' என்றவர், சில நிமிட மெளனத்திற்குப் பிறகு தொடர்ந்தார். 

``இத்தனைக்கும் அது என் சொந்த வீடு இல்லை. லீஸுக்கு எடுத்துக் குடியிருக்கேன். வீட்டை லீஸுக்குத் தந்த பாலாஜி என்பவர், அது அவருடைய சொந்த வீடுனு சொல்லி சில ஆவணங்களைக் காட்டினார். அந்த வீட்டின் பெயரில் முதல்ல ஒரு வங்கியில லோன் பெறப்பட்டிருக்கு. பிறகு, வீட்டின் பரப்பை அதிகமாகக் காட்டி இன்னொரு வங்கியில லோன் கேட்டிருக்காங்க. அந்த இன்னொரு வங்கி தேசியமயமாக்கப்பட்ட யூனியன் வங்கி. அந்த வங்கி, முதல்ல கடன் கொடுத்த வங்கிக்குப் பணத்தைக் கட்டி மீட்டு, அதிகப்படியான தொகையை இந்த வீட்டின் பெயரில் தந்திருக்கு. இந்த விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. சொந்தமா வீடு வாங்கினா பரவாயில்ல, லீஸுக்குத்தானேனு நானும் உரிமையாளர்னு சொன்னவர் காட்டிய வீட்டு வரி ரசீது உள்ளிட்ட சில ஆவணங்களைப் பார்த்து, 3 லட்சம் பணத்தைக் கொடுத்துட்டுக் குடியேறிட்டேன்.

அதுக்குப் பிறகுதான், வரிசையா பிரச்னைகள். ரெண்டு வருஷமா கரன்ட் பில் கட்டலைனு வந்தாங்க. நானே கட்டினேன். பிறகு, தொடர்ச்சியா சில செலவுகள். அதெல்லாம் பரவாயில்ல. ஆனா, ஒரே வருடத்துல யூனியன் வங்கியில இருந்து வந்து `கடன் ஜப்தி; வீட்டைக் காலி பண்ணுங்க'னு சொன்னாங்க. அப்போ விசாரிச்சப்போதான், அது பாலாஜியின் வீடே இல்லைனு தெரிஞ்சது. ஆறுமுகம் என்பவரது வீடுனு சொன்னது, யூனியன் வங்கி. அவரை நான் பார்த்ததே இல்லை. ஆறுமுகம் அந்த வங்கியில சில அதிகாரிகளின் உதவியுடன் மோசடி பண்ணி லோன் வாங்கியிருக்கார்.

நான் பாலாஜிகிட்ட `என் பணத்தைத் தந்துடுங்க; நான் காலி பண்ணிடுறேன்'னு சொன்னதுக்கு, `இனி நீங்களாவது, பேங்காவது!'னு சொல்லிட்டார். அவர் மீது போலீஸில் புகார் தந்திருக்கேன். இதுக்கிடையில வங்கியில போய் நடந்ததையெல்லாம் விவரிச்சு, நான் பாதிக்கப்படாதபடி நடவடிக்கை எடுங்கனு கேட்டுக்கிட்டேன். ஆனா, வங்கியில தாங்கள் செய்த தவறு வெளியே தெரிஞ்சுடும்னு பதறாங்க. வங்கி அதிகாரிகள் வராம, ஏஜென்ஸியை அனுப்புறாங்க. யார் யாரோ செய்த தவறுக்கு நான் எப்படிங்க பலிகடா ஆகமுடியும்?" என்றவர், தொடர்ந்தார்.

``வீட்டு அளவை தப்பா காட்டி வங்கியிலிருந்து கடன் வாங்க முடியுது. ஆனா, நியாயமா வரவேண்டிய என் பணத்துக்கு (எல்லா ரசீதுகளும் உள்ளன) வழி சொல்லுங்கன்னா, காது கொடுக்கமாட்டேங்கிறாங்க. நான் முறையிடும்போது, `நீங்க அக்ரீமென்ட் போட்டவர்கிட்ட கேளுங்க'னு சொல்கிற வங்கி, யாருக்கு லோன் கொடுத்ததோ அவங்களைக் கண்டுபிடிச்சு கடனை வசூலிக்க சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குறதை தப்புனு சொல்லமாட்டேன். ஆனா, ஆறுமுகமோ பாலாஜியோ இதுவரை தண்டிக்கப்படலை. என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டிருக்காங்க.

சில அதிகாரிகளின் செயலால் சம்பந்தப்பட்ட வங்கி தவறு செய்திருக்கு. நான் என்னங்க தப்பு செய்தேன்?! என் பணம் கிடைச்சா, நாளைக்கே காலி செய்திடுவேன். இல்லையா, போலீஸ் விசாரிச்சுக்கிட்டிருக்கிற என் புகார்ல தீர்வு கிடைக்கிற வரைக்குமாவது எனக்கு அவகாசம் தரணும். ரெண்டும் இல்லாம, எந்த நேரத்திலும் காலி பண்ணிடுவோம்னு மிரட்டிக்கிட்டே இருந்தா, மனைவி குழந்தைகள் எப்படி நிம்மதியா இருப்பாங்க?! நான் கதறுவதைக் கண்டுக்காம பொருள்களை எடுத்து வெளியே போட்டு என் குடும்பத்தைத் தெருவுல நிற்க வெச்சா, அந்தவேளை என்னவேணாலும் நடந்தா, அதுக்கு யாருங்க பொறுப்பு?!" - ஆவேசத்துடன் முடித்தார், பிர்லா போஸ்.

சம்பந்தப்பட்ட வங்கித் தரப்பில் பேசினோம்.

``அது பல காலமா போய்க்கிட்டிருக்கிற பிரச்னை; அரை மணிநேரம் கழிச்சுப் பேசுங்க, பதில் சொல்றோம்" என்றார்கள். நாம் திரும்பவும் அழைத்தபோது, அழைப்பை உயர் அதிகாரிக்குத் திருப்பி விடுவதாகச் சொல்லியே நம்மைத் தவிர்த்தார்கள். வங்கித் தரப்பு விளக்கம் தந்தால் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு