Published:Updated:

``மன்னிக்க வேண்டுகிறேன்’’ - யாரிடம் கேட்கிறார் பாரதி பாஸ்கர்?

``மன்னிக்க வேண்டுகிறேன்’’ - யாரிடம் கேட்கிறார் பாரதி பாஸ்கர்?
News
``மன்னிக்க வேண்டுகிறேன்’’ - யாரிடம் கேட்கிறார் பாரதி பாஸ்கர்?

`` `இன்னைக்கு எப்படிப் பேசினீங்கம்மா?' என்றுதான் முதலில் கேட்பார்கள். `சூப்பர்', `சுமார்', `மோசம்' எனச் சூழலுக்குத் தகுந்த பதிலைச் சொல்வேன்."

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கரிடம், சில கேள்விகளை முன்வைத்தோம். அவரிடமிருந்து உற்சாகமாகப் பதில்கள் வந்தன.

``கைத்தட்டல்?"

``மிகப் பெரிய போதை. கைத்தட்டல் வர வர, நம்மை அறியாமல் உயர்ந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை மனதில் வரும். செல்ல வேண்டிய பாதை சரியானதாக இருக்க வேண்டியதுதான் மிக அவசியம். நான் ஆரம்பக்கால பட்டிமன்றங்களில் உணர்ச்சிவசப்பட்டு சில தவறான வார்த்தைகளைப் பேசியிருக்கிறேன். பிறரைப் பொது இடத்தில் மனதாரப் பாராட்டுவதும், அவர்கள் செய்யும் தவறுகளைத் தனியாக அழைத்துச் சுட்டிக்காட்டுவதும்தான் சாலமன் பாப்பையா ஐயாவின் குணம். அவர் என் தவறுகளை பக்குவமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார். என் தவறுகளையும், பொறுப்பையும் உணர்ந்தேன். பிறகு என் வார்த்தைகளில் எப்போதும் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க தவறுவதில்லை. அன்றிலிருந்து கைதட்டலை ஊக்கமாக எடுத்துக்கொள்கிறேனே தவிர, அதனால் மயக்கம் கொள்வதில்லை." 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``அவமானம்?"

``நிறைய அவமானங்களைக் கடந்தே, இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். கிடைக்கும் என எதிர்பார்த்து எனக்குக் கிடைக்காமல் போனவை நிறைய உண்டு. அவை எல்லாமே அவமானம்தான். அதற்காக நிறைய வருந்தியிருக்கிறேன்."

``தோழி?"

``என் பெற்றோருக்கு மூன்று மகள்கள். எங்களுக்குப் பெண் குழந்தைகள் பிறக்க வேண்டும் என நானும் என் கணவரும் ஆசைப்பட்டோம். அதன்படி எங்களுக்குக் காவியா, நிவேதிதா என இரு மகள்கள். பெண்களுக்குப் படிப்புதான் முக்கியம் என 50 ஆண்டுகளுக்கு முன்பே என் பெற்றோர் முற்போக்கு குணத்துடன் செயல்பட்டனர். நான் அவர்களைவிடச் சிறப்பாக யோசிக்க வேண்டுமல்லவா! என் மகள்களைச் சமையல் வேலைகள், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதில்லை. `விருப்பம் இருந்தால் செய்யுங்கள். ஆனால், தேவை வரும்போது கற்றுக்கொள்ள வேண்டும்' என்றேன். `சம்மதம்' எனச் சொன்னவர்களுக்கு, சமையலில் விருப்பமில்லை. `நல்லதா போச்சு' என்றேன். என் எல்லாச் செயல்பாடுகள் பற்றியும் மகள்களுக்கும், அவர்களைப் பற்றி எனக்கும் நன்றாகத் தெரியும். மகள்களே என் மிகச்சிறந்த தோழிகள்."

``பண்டிகைக் கால பட்டிமன்றம்?"

``தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போதே நான் பங்குபெற்ற பட்டிமன்றத்தைத் தவறாமல் பார்த்துவிடுவேன். அதனால் என் சரி, தவறுகளை அடையாளம் காண்பேன். அந்த நாள் முழுக்க, முக்கியமான தொலைபேசி அழைப்புகள் வரும். அந்தப் பண்டிகைக் கால தினம் மகிழ்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் கழியும்." 
 
``நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தொலைபேசி அழைப்பு?"

``ஒரு பட்டிமன்றத்தில் பேசி முடித்து காரில் வந்துகொண்டிருக்கும்போதெல்லாம், என் மகள்களிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு நிச்சயம் வரும். 'இன்னைக்கு எப்படிப் பேசினீங்கம்மா?' என்றுதான் முதலில் கேட்பார்கள். `சூப்பர்', `சுமார்', `மோசம்' எனச் சூழலுக்குத் தகுந்த பதிலைச் சொல்வேன். அதேபோல், என் பண்டிகைக்கால பட்டிமன்றங்களை மகள்கள் முடிந்தவரைத் தவிர்க்காமல் பார்ப்பார்கள். வீட்டில் இருந்தால் உடனே பாராட்டுவார்கள். வெளியூரில் இருந்தால், பட்டிமன்றத்தைப் பார்த்து, உடனே போனில் வாழ்த்துவார்கள்; ஆக்கப்பூர்வமான கருத்துகளைச் சொல்வார்கள். அப்படிப் பலர் வாழ்த்தினாலும், என் மகள்களின் அழைப்புக்குத்தான் நான் காத்திருப்பேன்."

``ஒருவரிடம் மன்னிப்பு கேட்பதென்றால்?" 

``என் பெற்றோரிடம்! ஓடிய ஓட்டத்தில் அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட தவறிவிட்டேன்."

``எழுத்தாளர் பாரதி பாஸ்கர்?"

``ஓரளவுக்குப் புத்தகங்களை எழுதியிருக்கிறேன். ஆனால், எழுத்தாளராக நான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேச்சாற்றலில்தான் எனக்கு அதிக விருப்பமும் ஆர்வமும் இருக்கிறது. அதை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதால், எழுத்தாற்றலில் நேரம் செலுத்த முடிவதில்லை."