Published:Updated:

``வீட்ல சைன் லாங்குவேஜ் கத்துக்கிறேன்'' - பேபி அதித்ரி

வெ.வித்யா காயத்ரி
``வீட்ல சைன் லாங்குவேஜ் கத்துக்கிறேன்'' - பேபி அதித்ரி
``வீட்ல சைன் லாங்குவேஜ் கத்துக்கிறேன்'' - பேபி அதித்ரி

சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் `தேவசேனா' கதாபாத்திரத்தில் அனைவரையும் ஈர்த்த சுட்டி அதித்ரி. பலரும் தேவசேனாவை தன்னுடைய வீட்டுக் குழந்தையாகவே நினைத்துக் கொண்டாடினார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. `நந்தினி' சீரியல் தற்போது முடிவடைந்த நிலையில் பலரும் தேவசேனாவை மிஸ் செய்திருப்பீர்கள். உங்களுக்காகவே ரீ-என்ட்ரி கொடுக்க அசத்தல் கதாபாத்திரத்தில் வருகிறார், அதித்ரி! ஆம், விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் `அஞ்சலி' சீரியலில் அஞ்சலியாக நம் மனதை ஈர்க்கவிருக்கிறார், இந்தச் சுட்டிப் பெண். அதித்ரியின் அம்மா தாரணியிடம் பேசினோம்.

`நந்தினி' சீரியல் நாங்க எதிர்பார்க்காத அளவுக்கு ரீச் கொடுத்துச்சு. எங்கே போனாலும் பாப்பாவை அடையாளம் கண்டுபிடிச்சு கொண்டாடுவாங்க. அவகூட செல்ஃபி எடுத்துப்பாங்க. சொல்லப்போனா எல்லோரும் அவங்க வீட்டுக் குழந்தையாதான் என் பொண்ணைப் பார்த்தாங்க. நந்தினி சீரியல் முடியும்போது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. டிசம்பரில் சீரியல் முடிந்ததும் சரி இனிமேல் பாப்பாவுக்கு சீரியல் வேண்டாம். படங்கள், விளம்பரங்களில் கவனம் செலுத்தலாம்னு முடிவு பண்ணினோம். ஏன்னா, சீரியல்னா ரொம்ப நாள் லீவு எடுக்க வேண்டியிருக்கும். படிப்பு பாதிக்கப்படக் கூடாதுன்னு நினைச்சோம். போன மாசம் ஒருநாள் டைரக்டர் பிரம்மா சார் போன் பண்ணி இந்த சீரியலுக்காகக் கேட்டாங்க. அப்போ பாப்பாவை சீரியலில் நடிக்க வைக்கிற ஐடியா இல்ல சார். படிப்பு ரொம்ப பாதிக்கப்படும் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

`நந்தினி' சீரியலில் முழுக்க, முழுக்க தேவசேனாதான். அப்படியொரு சீரியல் மறுபடி எடுப்பாங்களான்னு என்னால கற்பனை கூட பண்ண முடியலை. அந்த அளவுக்குப் பாப்பாவுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்த கேரக்டர் அது. அந்த கேரக்டர்ல இருந்து அவளைக் கீழே இறக்கிடக் கூடாதுங்குறதுல ரொம்பவே கவனமா இருந்தோம். அதனாலும் கூட சீரியல் வாய்ப்புகளைத் தவிர்த்தோம். பிரம்மா சார் பேசும்போது ஷாக் ஆகுற மாதிரி ஒரு விஷயம் சொன்னாங்க. இந்த சீரியலில் அதித்ரிதான் லீட்.. அதுமட்டுமல்லாமல் அஞ்சலி காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைன்னு சொன்னாங்க. அது என்னை ஈர்த்துச்சு. மாற்றுத்திறனாளி கதாபாத்திரம் கிடைக்கிறதுங்குறது மிகப் பெரிய விஷயம் இல்லையா! இப்படி சேலன்ஞ்சிங்கான ரோலை மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு நினைச்சேன். எவ்வளவு கஷ்டமானாலும் பிரவாயில்ல பாப்பாவை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணேன். 

ஏழு வருஷத்துக்கு முன்னாடி விப்ரோவில் பார்த்துட்டு இருந்த வேலையை விட்டுட்டேன். நந்தினி சீரியல் முடிஞ்சதும் சரி இனிமேதான் பாப்பா சீரியலில் நடிக்கப் போறது இல்லையில்ல. ரெண்டு பொண்ணுங்களும் கொஞ்சம் வளர்ந்துட்டாங்க நாம வேலைக்குப் போகலாம்ன்னு டிசம்பர் மாதம் ஹெச்.ஆரா செலக்ட் ஆனேன். மறுபடி எப்படி வேலையை விடுறதுன்னு ஒருபக்கம் யோசிச்சாலும் இன்னொரு பக்கம் கண்டிப்பா இந்த சீரியலில் பாப்பாவை நடிக்க வைக்கணும்னு நினைச்சேன். அப்புறமா என் கணவர், என்னுடைய அம்மா, அப்பா எல்லோர்கிட்டேயும் சொல்லி அவங்களை ஓகே சொல்ல வைச்சேன். அப்புறம் என் அம்மா, அப்பா சரி நீ வேலைக்குப் போ.. நாங்க பாப்பாவைப் பார்த்துக்கிறோம்னு சப்போர்ட் பண்ணாங்க. ஷீட்டிங் போனதுல இருந்து டைரக்டர் சார் பாப்பாவை ரொம்பவே கேரிங்கா பார்த்துக்குறாங்க. மறுபடியும் லீட் ரோல் அதித்ரிக்குக் கிடைக்கும்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கலை. பலரும் அதித்ரியை மிஸ் பண்றதாச் சொல்லியிருந்தாங்க. இப்போ `அஞ்சலி'யா உங்க வீட்டுக்குப் பாப்பா வரப் போறா. இதே சப்போர்ட்டைத் தொடர்ந்து கொடுங்க என்றார்.

சீரியஸாக ஹோம்ஒர்க் எழுதிக் கொண்டிருந்த அதித்ரியிடம் `அஞ்சலி' சீரியல் குறித்துக் கேட்டேன் ``ஆமா ஆன்ட்டி... சீரியலுக்காக சைன் லாங்குவேன் கத்துக்குறேன். வீட்ல அம்மாவும், சூட்டிங்ல டைரக்டரும் சைன் லாங்குவேஜ் சொல்லிக் கொடுக்கிறாங்க. சீக்கிரமே உங்க எல்லோரையும் அஞ்சலியாப் பார்க்க வர்றேன்.. லவ் யூ ஆல்!'' என முழு அஞ்சலியாக மாறி சைன் லாங்குவாஜ் பேசியவருக்கு ஆல் தி பெஸ்ட் கூறி விடைபெற்றோம்!