Election bannerElection banner
Published:Updated:

``ஷேர் ஆட்டோவுல ஏறிய பத்தாவது ஆள் நான்!" - `காமெடி கில்லாடிஸ்' வின்னர் ஜெயக்குமார்

``ஷேர் ஆட்டோவுல ஏறிய பத்தாவது ஆள் நான்!" - `காமெடி கில்லாடிஸ்' வின்னர் ஜெயக்குமார்
``ஷேர் ஆட்டோவுல ஏறிய பத்தாவது ஆள் நான்!" - `காமெடி கில்லாடிஸ்' வின்னர் ஜெயக்குமார்

"`நல்ல பண்றடா. சூப்பரா இருக்கு'னு சொன்னாலும், `அந்த கவர்மென்டு வேலை..'னு  ரெண்டு அம்பது காமெடி மாதிரி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க." 

``என் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி. அண்ணாமலை யுனிவர்சிட்டியில விவசாயம் படிச்சேன். `விவசாயம் எங்களோட போகட்டும். நீ கவர்மென்ட் உத்தியோகத்துக்குத்தான் போகணும்'னு அம்மா, அப்பா சொல்லிட்டாங்க. அரைக் காசு வாங்குனாலும், அரசாங்கச் சம்பளம் வாங்கணும்னு கண்டிஷன். ஆனா, என் மனசு சினிமா, டிவி-யைத் தவிர வேறெதுக்கும் போகல. காலேஜ் முடிச்சுட்டு யுபிஎஸ்சி தேர்வுக்குப் படிக்கப்போறேன்னு சென்னைக்கு வந்த எனக்குக் கிடைச்ச பரிசுதான், `காமெடி கில்லாடிஸ்' வாய்ப்பு." - `காமெடி கில்லாடிஸ்' நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆன சந்தோஷம், ஜேகே (எ) ஜெயக்குமார் முகத்தில்!

``சென்னை உங்களை எப்படி வரவேற்றது?"

``வீட்டுல இருந்து 8,000 ரூபாய் வாங்கிட்டு சென்னைக்கு பஸ் ஏறினேன். இங்கே வந்து கிளாஸுக்குப் போய்கிட்டே எங்கெல்லாம் ஆடிஷன் நடக்குதுனு விசாரிச்சு, அதிலும் கலந்துக்கிட்டேன். வந்த புதுசுல எனக்கு வழி தெரியாது. இந்த ஊர்ல ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. யார்கிட்டயாச்சும் வழி கேட்டா, `தெரியலை'னு சொல்லாம இஷ்டத்துக்கு ஒரு வழியைக் காட்டி விட்டுடுறாங்க. அப்படித் தப்பான இடத்துக்குப் போய் மாட்டிக்கிட்ட அனுபவம் எனக்கு நிறைய இருக்கு. அதுக்கப்புறம் சென்னைகூட பழகிட்டேன். ஒரு கட்டத்துல ஆடிஷன்ல கலந்துக்கிறதே முழுநேர வேலையாகிடுச்சு. அப்படிக் கலந்துகிட்ட ஒரு ஆடிஷன்தான், `காமெடி கில்லாடிஸ்'. " 

``ஆடிஷன்ல தேர்வானப்போ உங்க மனநிலை எப்படி இருந்தது?" 

``எனக்கு சினிமா ஆசை இருந்தது. ஸ்கூல் படிக்கும்போது நடிகர்கள் லீவ் லெட்டர் எழுதுனா எப்படி இருக்கும்னு, சின்னச் சின்ன கான்செஃப்ட்ல மிமிக்ரி பண்ணினேன். பல சமயம் ஆடிஷன் போறதுக்குக் கையில காசு இருக்காது. காலையில இருந்து சாப்பிடாம வரிசையில் நின்னு `போங்கய்யா'னு ஊருக்கே திரும்பிப் போன நாள்கள் அதிகம். அப்படிப் பல ஆடிஷன்ல கலந்துக்கிட்டு கடைசியா கிடைச்ச வாய்ப்புதான், `காமெடி கில்லாடிஸ்'. அப்போ எனக்கிருந்த சந்தோஷதத்தை வார்த்தையால சொல்லமுடியாது. சிட்டில இருந்து வந்த பசங்களுக்கு நல்ல எக்ஸ்போஷர் இருந்தது. ஆனா, என்னை மாதிரி கிராமத்துல இருந்து வந்த பசங்களுக்கு, ஊர் பெரிய மைனஸ்னுதான் சொல்வேன்."  

``முதல் எபிசோடுக்கு  எப்படித் தயாரானீங்க?" 

``ரிகர்சல் ரூமுக்குப் போனா, `நான் ஒருதடவை சொன்னா', `ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா', `நான் தனி ஆளில்லை' இப்படி சூப்பர் ஸ்டார்ல ஆரம்பிச்சு மொட்டை ராஜேந்திரன் வரை... ஒரு ரூம்ல பல நடிகர்களின் குரல்கள் எந்நேரமும் கேட்டுக்கிட்டே இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஆரம்பத்துல எனக்கு அல்லு வுட்ருச்சு. போகப்போக நானும் அந்த ரூம்ல கொஞ்ச இடத்தைக் குத்தகைக்கு எடுத்துக்கிட்டேன். முதன்முறையா நம்ம முகம் டிவியில வரப்போகுதுனு நினைச்சு சந்தோஷமா பிராக்டிஸ் பண்ணினேன்." 

``உங்களுடைய ஜோடி முல்லை கபிலன் பற்றி?"

``முல்லை கபிலன் சினிமா ஆசையோட ஐடியில வொர்க் பண்ணிக்கிட்டிருக்கிற பையன். ஸ்கிரிப்டே இல்லாம சும்மா பேசிக்கிட்டே இருப்போம். அப்படிதான் எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சு. முதல் எபிசோடுல `பாகுபலி' கான்செப்ட் பண்ணோம். முதல் வசனமா, `பாகுபலி மாடுலேஷன் ஆகிய நான்'னு பேசும்போதே நல்ல ரெஸ்பான்ஸ்! அந்த ஷோவுல நான் கட்டப்பா கேரக்டர் பண்ணேன். `நாங்க மிமிக்ரி ஆர்டிஸ்ட் கிடையாது. மாடுலேஷன் ஆர்டிஸ்ட்'னு பதிவு பண்னோம். அதுவே எங்களைத் தனியா காட்டுச்சு. என் வெற்றியில் பாதி அவனுடையது."

``டிவியில உங்களைப் பார்த்துட்டு, வீட்டுல இருக்கிறவங்க என்ன ரியாக்ட் பண்ணாங்க?" 

``என்னை முதன்முதல்ல டிவியில பார்த்துட்டு வீட்ல எல்லோரும் செம ஷாக்! ஏன் சொல்லலைனு கேட்டாங்க. `சர்பிரைஸ் கொடுக்கலாம்னுதான் சஸ்பென்ஸா வெச்சிருந்தேன்'னு சொன்னேன். ஆனா, உண்மையான காரணம் அது இல்லை. சொன்னா, வீட்டுல விடமாட்டாங்களேனுதான் சொல்லலை. `நல்ல பண்றடா. சூப்பரா இருக்கு'னு சொன்னாலும், `அந்த கவர்மென்டு வேலை..'னு  ரெண்டு அம்பது காமெடி மாதிரி கேட்க ஆரம்பிச்சிடுவாங்க." 

``எந்த எபிசோடு உங்களுக்குப் பதற்றமா இருந்தது?" 

``அரையிறுதிப் போட்டிதான். ஏன்னா, ஒன்பது பேரைத்தான் தேர்வு பண்றதா இருந்தது. சரி, இவனும் நல்லாதான் பண்ணியிருக்கான்னு கடைசியா அறிவிச்ச பெயர்தான், என்னுடையது. ஷேர் ஆட்டோவுல ஏறிய பத்தாவது ஆள் மாதிரிதான் நான். ஆனா, அப்போ டைட்டில் வின்னர் ஆவேன்னு நினைக்கல. அப்போ, சந்தோஷம் கலந்த வருத்தம் இருந்தது. ஏன்னா, என் ஜோடி முல்லை கபிலன் எலிமினேட் ஆகிட்டான். இவ்ளோ நாளா ஒண்ணா இருந்துட்டு ஃபைனல்ல அவன் இல்லைனு வருத்தமா இருந்தது."

``ஷோ முடிஞ்ச பிறகு, முதல் செல்ஃபி அனுபவம்?"

``சேனல்ல விக், தாடி எல்லாம் வெச்சு மேக்அப் போட்டு, நம்மளை நமக்கே அடையாளம் தெரியாத அளவுக்கு மாத்திடுவாங்க. அதனால, என் ஒரிஜினல் முகம் எதுனு பதிவாகல. அப்படியும் ஒரு பையன் என்னைக் கண்டுபிடிச்சு வந்து செல்ஃபி கேட்டான். ஒரு நிமிடம் கண் கலங்கிட்டேன்."

``அடுத்து?" 

``வீட்ல படிக்கச் சொல்றாங்க. ஆனா, எனக்கு டைரக்‌ஷன்லதான் ஆர்வம். நம்பிக்கைதான் என்னை நகர்த்திக்கிட்டு இருக்கு. பார்ப்போம்..."

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு