Published:Updated:

``மைனா நந்தினி அக்கா மாதிரி இருக்கணும். ஏன்னா..?’’ - `அரண்மனைக்கிளி’ மதுமிதா

வெ.வித்யா காயத்ரி
``மைனா நந்தினி அக்கா மாதிரி இருக்கணும். ஏன்னா..?’’ - `அரண்மனைக்கிளி’ மதுமிதா
``மைனா நந்தினி அக்கா மாதிரி இருக்கணும். ஏன்னா..?’’ - `அரண்மனைக்கிளி’ மதுமிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `அரண்மனைக்கிளி'. இந்த சீரியலில் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பவர் மதுமிதா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான `குலதெய்வம்' சீரியலில் நடித்தவர். அதுமட்டுமல்லாமல் ஆர்த்தியின் அக்கா ஶ்ரீ பிரியாவும் சின்னத்திரை நடிகை தானாம்.. மதுமிதாவின் பர்சனல் பக்கங்களை புரட்டச் சொல்லிக் கேட்டோம்.

என்னுடைய சொந்த ஊர் புதுக்கோட்டை. 2007-ல் என்னுடைய அப்பா இறந்ததுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே என் அம்மாதான்! நாங்க கூட்டுக் குடும்பமா இருக்கிறதுனால வீடே எப்பவும் கலகலன்னு இருக்கும். சின்ன வயசுல இருந்தே நான் ரொம்ப அமைதியான பொண்ணு. சொந்தக்காரங்ககிட்ட கூட அதிகமாப் பேச மாட்டேன். வெளியில் போனா சுத்தம்! என்ன கேள்வி கேட்டாலும் என் பதில் ஹ்ம்.. ஆமா.. மட்டும்தான்! இப்போதான் கொஞ்சம் மத்தவங்ககிட்ட பேச ஆரம்பிச்சிருக்கேன் என்றவரிடம் நடிப்புத் துறைக்குள் வந்தது குறித்துக் கேட்கப் புன்னகைக்கிறார்.

`குலதெய்வம்' சீரியலுக்கு ஆடிஷன் நடக்குதுன்னு கேள்விபட்டு என் அக்கா போகலாம்னு சொன்னாங்க. அப்போ சரி நாமலும் டிரை பண்ணி பார்க்கலாமேன்னு ஆடிஷன் அட்டெண்ட் பண்ணோம். நாங்க ரெண்டு பேருமே ஆடிஷன்ல செலக்ட் ஆனோம். குலதெய்வம் சீரியலில் நானும், என் அக்காவும் நடிச்சோம். அந்த சீரியல் முடிஞ்சதும் ராஜ் டிவியில் ஒரு சீரியலில் நடிச்சேன். இப்போ விஜய் டிவியில் `அரண்மனைக்கிளி' சீரியலில் நடிச்சிட்டு இருக்கேன். ஆரம்பத்துல நமக்கெல்லாம் நடிப்பு எப்படி செட்டாகும்னு நினைச்சேன். இப்போ நடிக்காம இருக்க முடியாதுங்குற அளவுக்கு சேன்ஞ் ஆகிட்டேன். 

குலதெய்வம் சீரியலில் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். அந்த டீம்ல சாந்தி அம்மா கூட மட்டும்தான் இப்போ வரைக்கும் குளோஸா இருக்கேன். அவங்க சீரியலில் எனக்கு அம்மாவாக நடிச்சாங்க. ஆனா, நிஜத்திலும் அப்படித்தான் என்கிட்ட பழகுவாங்க. அவங்க பொண்ணு மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் சொல்லிக் கொடுப்பாங்க. இப்போ `அரண்மனைக்கிளி' சீரியலில் என் கூட நடிக்கிற `மைனா' நந்தினி அக்கா கூட பயங்கர குளோஸ். நந்தினி அக்கா என் கூடப் பொறக்காத அக்கா மாதிரி! எனக்கும், அவங்களுக்கும் பயங்கர பாண்டிங் இருக்கு. நான் பேசவே மாட்டேன். அக்கா செமையா போல்டா பேசுவாங்க. அதைப் பார்த்து நாமலும் அக்கா மாதிரி போல்டா பேசலாம்னு தோணும். அவங்க மனசுக்கு தோணுற விஷயத்தை முகத்துக்கு நேரா பட்டுன்னு சொல்லிடுவாங்க. அந்த விஷயம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றவரிடம் மாடலிங் குறித்துக் கேட்டோம்.

இடையில் மாடலிங் பண்ண வாய்ப்பு வந்துச்சு. ஆனா, எனக்கு அது பிடிக்கலை. அதனால அந்தத் துறை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். எனக்கு டிரெடிஷனல் டிரெஸ் போடுறதுலதான் விருப்பம். மார்டன் டிரெஸ் போட்டாலும் என் லிமிட்டை தாண்டக் கூடாதுன்னு நினைப்பேன். எங்க வீட்டுல எனக்கு ஃப்ரீடம் கொடுத்துருக்காங்க. அதை சரியாப் பயன்படுத்தணும்னு நினைக்கிறேன். பல நேரங்களில் அப்பா இல்லைன்னு வருத்தப்பட்டிருக்கேன். எனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்காங்க. ஆனாலும், அப்பா இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுல்ல! அப்பா இருந்துருந்தா இன்னும் நம்மளை வழி நடத்திருப்பாங்களேன்னு அடிக்கடி தோணும். 

என் அக்கா ஶ்ரீ பிரியா. குலதெய்வம் சீரியலில் கீர்த்தி கேரக்டரில் நடிச்சவங்க. இப்போ `கல்யாண வீடு' சீரியலில் ரோஜா கேரக்டரில் நடிக்கிறாங்க. அக்காவும் நானும் மீடியாவுக்குப் புதுசுங்குறதுனால நிறைய விஷயங்களை கத்துக்கணும்னு நினைப்போம். ரெண்டு பேரும் நிறைய விஷயங்களைப் பற்றி விவாதிப்போம். எங்க ரெண்டு பேருக்கும் பலம்னா அது எங்க அம்மாதான்! எங்க ரெண்டு பேருடைய வளர்ச்சியில் அவங்களுடைய பங்கு அளவிட முடியாதது.

என்னைப் பார்க்கிற பலரும் என்கிட்ட கேட்குற முதல் கேள்வி.. எப்படி உங்க முடியை மெயின்டெயின் பண்றீங்கங்குறதுதான். உண்மையைச் சொல்லணும்னா நான் ஸ்கூல் படிக்கும்போது இப்போ இருக்கிறதை விட லாங் ஹேர் வைச்சிருந்தேன். நடிக்க வந்ததும் ஹேர் ஸ்டிரெய்டனிங் அது, இதுன்னு நிறைய டிரை பண்ணேன். அதுல முடி கொட்டி இப்போ இவ்வளவுதான் மீதியிருக்கு. ஒரே ஷாம்பூ, ஒரே எண்ணெய்கூட நான் யூஸ் பண்ண மாட்டேன். அப்போதான் எந்த இடத்துக்குப் போனாலும் அங்கே என் ஹேர் செட்டாகும். பாதிக்கப்படாமல் இருக்கும் என்றவரிடம் அடுத்தகட்ட பிளான் குறித்துக் கேட்டோம்.

இதுவரைக்கும் மூன்று படங்களில் கதாநாயகியாக நடிச்சிருக்கேன். அடுத்தடுத்து புராஜக்டுக்கு கதை கேட்டுட்டு இருக்கேன். தொடர்ந்து சினிமா, சீரியல்னு வலம் வரணுங்குறதுதான் இப்போதைக்கு என் இலக்கு எனப் புன்னகைக்கிறார், மதுமிதா!