Published:Updated:

``போய்யா உனக்காக என் ரத்தத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்!’’ - `அறந்தாங்கி’ நிஷா

``போய்யா உனக்காக என் ரத்தத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்!’’ - `அறந்தாங்கி’ நிஷா
``போய்யா உனக்காக என் ரத்தத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்!’’ - `அறந்தாங்கி’ நிஷா

``என் குழந்தையை வளர்க்குற எங்கம்மா, என்னை மக மாதிரி பார்த்துக்கிற என் மாமியார்... இவங்க எல்லாருமே எங்க காதல் வாழ்க்கையில முக்கியமான கேரக்டருங்க!’’

கைச்சுவை கலைஞர் நிஷா, இப்போது விஜய் டிவி `மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் தன் கணவர் ரியாஸ் அலியுடன் கலக்கிக்கொண்டிருக்கிறார். நிஜமாகவே நீங்க லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா... உங்க காதல் கதையைப் பற்றி சொல்லுங்களேன் எனக் கேட்க, ``காதல் கதையா... ம்க்கும் அதை வேற சொல்லணுமாக்கும்’’ என்று தனக்கே உரிய நக்கலுடன் ஆரம்பிக்கிறார்.

``அவரு என்னோட அத்தைப் பையன். ஒரு கல்யாணத்துக்காக அவர் குடும்பம் எங்க வீட்டுக்கு வந்திருந்தது. அப்போ நான் ப்ளஸ் டூ படிச்ச பச்சப்புள்ள. ஒரு நாள் கரன்ட் கட்டாக, அவர் டக்குனு என் கையைப் பிடிச்சு, `நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படுறேன். அதுக்காகத்தான் இங்க வந்தேன். இன்னும் ஒரு மாசத்துல நான் வெளிநாடு போயிடுவேன். நான் மாமாகிட்ட பேசுறேன்’னு கடகடன்னு டயலாக் ஒப்பிச்சாரு. உலகத்துலேயே கரன்ட் போயிருந்தப்போ புரொப்போஸ் பண்ணின ஒரே ஆளு என் புருஷன்தான்’’ என கலகலவெனச் சிரிக்கிறார் நிஷா.

``வெளிநாட்டுக்குப் போனதுக்கு அப்புறம், நிஷாகிட்ட லேண்ட்லைன்ல ரகசியமா பேசிட்டிருந்தேன். நிஷா எனக்கு முதல் தடவை லெட்டர் எழுதி அனுப்பியிருந்தாங்க. அடுத்த நாள் போன் பேசும்போது, `ஐ லவ் யூ மட்டும் வேற கலர்ல இருக்கும் கவனீச்சீங்களா?’ன்னு கேட்டாங்க. `ஆமா புள்ள, ஸ்கெட்ச்ல எழுதுனியா?’னு கேட்டேன். `போய்யா... உனக்காக என் ரத்தத்தை வேஸ்ட் பண்ணிட்டேன்’னு சொன்னாங்க. அப்படி ரத்தம் சிந்தி வளர்ந்த காதல்’’ என்கிறார் ரியாஸ் குறும்புடன்.

``அவர் ரொம்ப ஏழ்மையான குடும்பம்ங்கிறதால, பொண்ணுலாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு எங்கப்பா. அப்புறம் சொந்தக்காரங்க எல்லாம் சேர்ந்து சொல்லித்தான் சம்மதிச்சாரு. அந்தக் கல்யாண வீட்டுல பார்த்ததுக்கு அப்புறம், அஞ்சு வருஷம் கழிச்சு, என் கல்யாணத்துலதான் என் புருஷனைப் பார்த்தேன்’’ என்று காதல் கதை சொல்கிறார் நிஷா.

ரியாஸ், ``வசதியா இருந்த புள்ளையைக் கட்டிக்கிட்டுவந்து ரேஷன் அரிசி சாப்பிட வச்சிட்டோமேன்னு பல முறை வருத்தப்பட்டிருக்கேன். கல்யாணமான நேரத்துல எனக்கு வெளிநாட்டு வேலை இல்லாமப்போக, நிஷாதான் பட்டிமன்றத்துக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சாங்க. ரெண்டு வருஷம் கழிச்சு எனக்கு அரசு வேலை கிடைச்சது. இடைப்பட்ட காலத்துல எவ்வளவோ கஷ்டங்கள். நிஷா மாதிரி ஒரு மனைவி கிடைச்சது என் பாக்கியம்’’ என்று நெகிழ்கிறார்.

``என் காமெடிகள்ல வர்ற புருஷன் ஜோக்குகளைக் குறிப்பிட்டு, `உங்க வீட்டுக்காரர் ஒண்ணும் சொல்ல மாட்டாரா?’னு பலரும் கேட்பாங்க’’ - சிரிக்கிறார் நிஷா. ``இவரை மாதிரி ஒரு புருஷன் யாருக்கும் அமையாது. என் குழந்தையை 10 மாசத்துலயிருந்து வளர்த்து வர்ற எங்கம்மா, என்னை மக மாதிரி பார்த்துக்கிற என் மாமியார்... இவங்க எல்லாருமே எங்க காதல் வாழ்க்கையில முக்கியமான கேரக்டருங்க. இந்த அன்பான குடும்பத்தை இறுக்கமா பிடிச்சுட்டு ஓடிட்டிருக்கேன்!

காதலிக்கும்போது நிறைய விஷயங்கள் புரிஞ்சிக்க முடியாது. காதல் வாழ்க்கை வேறு! திருமண வாழ்க்கை வேறு! கல்யாணமாகி இவர் கூட வந்ததுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு விஷயமா கத்துக்கிட்டேன். என்னுடைய திறமையை அங்கீகரிச்சது என் குடும்பம் மட்டும்தான். நீ உன் திறமையைத் தைரியமா வெளிக்காட்டு. நாங்க உனக்கு சப்போர்ட்டா இருக்கோம்னு சொன்னாங்க. ஒரு நாள் லீவு கிடைச்சாலும் என் பையன் கூட நேரம் செலவழிக்கணும்னு ஆசைப்படுவேன். இப்போ வரைக்கும் என் அம்மா, அப்பாவுக்கு என்னால முடிஞ்ச உதவிகளை செய்றேன். திருமணமாகி போய்ட்டா பொறந்த வீட்டை அப்படியே மறந்திடணுங்குற கான்செப்ட் எனக்கு செட்டே ஆகாது. என் கணவரை விட என் அப்பாதான் எனக்கு ஃபர்ஸ்ட். இதை நாங்க காதலிக்கும்போதே என் கணவர்கிட்ட சொல்லிட்டேன். அவரும் என்னைப் புரிஞ்சிகிட்டாரு. என்னுடைய எல்லா அடையாளமும் அறந்தாங்கியில்தான் இருக்கு. மாசத்துல 10 நாள் எங்க அப்பா, அம்மா கூடதான் இருப்பேன். என்னைப் புரிஞ்சுகிட்ட என்னவர் கிடைச்சது என் பாக்கியம்!’’ எனச் சிலிர்க்கிறார் நிஷா.

அடுத்த கட்டுரைக்கு