சமூகம்
Published:Updated:

கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா? - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்!

கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா? - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா? - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்!

கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா? - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்!

மே 19-ம் தேதி இறுதிகட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்த அடுத்த அரை மணி நேரத்தில், நாடு முழுவதும் பரபரப்பு பற்றிக்கொண்டது. முன்னணி தொலைக்காட்சிகள் வெளியிட்ட, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்தான் அதற்குக் காரணம். உண்மையில், தேர்தலுக்குப் பிந்தைய இந்தக் கருத்துக் கணிப்பானது பி.ஜே.பி தரப்பே நம்பமுடியாத அளவுக்கு இருந்தது என்பதுதான் வேடிக்கை! 

கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா? - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்!

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தின. இப்படி முதல்கட்ட தேர்தல் பிரசாரம் முடிவடைந்த ஏப்ரல் 9-ம் தேதிக்கு முன் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளுக்கும் மே 19-ம் தேதி மாலை வெளியிடப்பட்ட வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கும் வித்தியாசங்கள் ஏராளம். தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சிக்குச் சாதகமாக இருந்த கருத்துக் கணிப்புகள்... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பி.ஜே.பி-க்கு சாதகமாக மாறிவிட்டன.

இதுகுறித்து டெல்லியின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எந்த அடிப்படையில், எத்தனை பேரிடம் எடுக்கப்பட்டது என்கிற விவரங்களை எந்தத் தொலைக்காட்சி நிறுவனமும் வெளியிடுவது இல்லை. ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கருத்துக் கணிப்புகளை வெளியிடும் முன் அது எடுக்கப்பட்ட விதங்களையும் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இங்கு தேர்தலுக்குப் பின் வெளியிடப்பட்ட ‘எக்ஸிட் போல்’ கருத்துக் கணிப்பில் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சி, ‘பி.ஜே.பி-க்கு 297 இடங்கள் கிடைக்கும்’ என்று ஒளிபரப்பியது. அதைப் பார்த்த அதன் போட்டித் தொலைக்காட்சி அடுத்த சில நிமிடங்களில், ‘பி.ஜே.பி-க்கு 307 தொகுதிகள் கிடைக்கும்’ என்று ஒளிபரப்பியது. முன்னதாக ‘பி.ஜே.பி-க்கு 297 தொகுதிகள்’ என்று ஒளிபரப்பிய அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் இதைப் பார்த்து, மீண்டும் பி.ஜே.பி-க்கு இருபது தொகுதிகள் கூடுதலாக அளித்து, ‘பி.ஜே.பி-க்கு 317 தொகுதிகள் கிடைக்கும்’ என்று மாற்றி ஒளிபரப்பியது. அதாவது, சில நிமிடங்கள் இடைவெளியில் 297-லிருந்து 317-க்கு ஜம்ப் ஆகிவிட்டார்கள். 

கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா? - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்!

அதேபோல், ஒரு மாநில தொலைக்காட்சி யின் கருத்துக் கணிப்பு நேரலையில் திடீரென்று 20 தொகுதிகள் பி.ஜே.பி-க்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டன. தொலைக் காட்சி விவாதத்தில் இதற்கான காரணத்தை பங்கேற்பாளர்கள் கேட்டார்கள். அதற்கு நெறியாளர், ‘இப்போதுதான் ஏழாவது கட்டத் தேர்தல் முடிவடைந்துள்ளது. இமாசலப் பிரதேசத்தில் நான்கு, உத்தரப் பிரதேசத்தில் 13, பஞ்சாபில் மூன்று, மேற்கு வங்கத்தில் எட்டு என்று பி.ஜே.பி-க்குக் கூடுதலாக 20 தொகுதிகள் கிடைத்துள்ளன’ என்று கணக்குச் சொன்னார். ‘இதன் கூட்டுத்தொகை 28 வருகிறது’ என்று விவாதத்தில் கலந்துகொண்டவர்கள் சொன்னதும் நெறியாளர் திருதிருவென முழித்துவிட்டார். 

இதேபோல், இந்தியா டுடே நிறுவனத்தோடு கருத்துக்கணிப்பு நடத்திய ஆக்ஸிஸ் நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்ட முடிவுகளை, மறுநாளே நீக்கிவிட்டது. பி.ஜே.பி. போட்டியிடாத ஸ்ரீநகரில்,  அங்கு அந்தக் கட்சி வெல்லும் என்று கணிப்பு வெளியான காமெடியும் நடந்திருக்கிறது” என்றவர்கள் தொடர்ந்து மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.

“மே 19-ம் தேதி மாலை 59 தொகுதிகளுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன. அடுத்த ஒரு மணி நேரத்தில் அத்தனை தொகுதிகளுக்கும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன சில நிறுவனங்கள். குறுகியகால அவகாசத்தில் எப்படி இத்தனை தொகுதிகளிலும் கருத்துக்கணிப்புகளை எடுத்திருக்க முடியும்? உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி களத்தில் போட்டியிடவே இல்லை. அங்கு வெளியான கருத்துக் கணிப்பில், அந்தக் கட்சிக்கு 2.9 சதவிகிதம் வாக்குகளை வழங்கியுள்ளது ஒரு நிறுவனம். மற்றொரு தனியார் நிறுவனம், நாற்பதாயிரம் பேரிடம் கருத்துக் கணிப்புகளை நடத்தியதாகச் சொல்கிறது. அதில் முப்பதாயிரம் பேர் இணையதளம் வாயிலாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றுள்ளனர். அதில் 28 ஆயிரம் பேர் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்தக் கணிப்பு எப்படி சரியானதாக இருக்கும்?

இப்படி குளறுபடிகளின் மொத்த வடிவமாகக் காட்சியளிக்கின்றன தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள். இந்தக் கருத்துக் கணிப்புகள் வெளியான ஒன்றரை மணி நேரத்தில், அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளிலும் விளம்பரக் கட்டணங்கள் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டிருந்தன. இத்தனைக்கும் இந்த விளம்பரங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே புக் செய்யப்பட்டவை. மும்பையில் இந்தக் கருத்துக் கணிப்புகளை வைத்து மிகப் பெரிய சூதாட்டமே நடைபெற்றது. மறுநாள் பங்குச் சந்தையிலும் பலநூறு கோடிகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன.

இறுதியாக ஒன்றைச் சொல்கிறோம்... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகளும் நெருக்கமாக இல்லாமல்... அதிக அளவு வேறுபட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக்கணிப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் சரியான வழிமுறைகளை விதிக்க வேண்டும்” என்றார்கள்.

- அ.சையது அபுதாஹிர்