
கலக்கப்போவது நாங்க!
ஈரோடு மகேஷூம், தாடி பாலாஜியும் திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நல்ல ஃபிரெண்ட்ஸ். அவர்களுடன் பேசும்போது நகைச்சுவையும் தமிழும் துள்ளி விளையாடுகின்றன.

‘`ரொம்ப மெலிந்துவிட்டீர்கள்போல?!’’ என பாலாஜியிடம் கேட்டதற்கு, “முன்பெல்லாம் போஷாக்கா யோசிப்பேன். இப்போ போஷிகாவுக்காக யோசிக்கிறேன். அதனால்தான் இப்படி!” எனச் சிரித்தவர், தன்னுடைய கரியர் ஆரம்பித்த கதையைச் சொன்னார்.
‘`படத்துல நடிக்கும்போதே, சன் மியூசிக் ஆரம்பித்த புதிதில் இரண்டு வருடம் வீஜே-வாக இருந்தேன். அப்போதே ஆங்கரிங் மேல ஆர்வம் வந்தது. அதை அப்படியே கெட்டியா பிடிச்சுக்கிட்டேன். டைமிங்கில பேசுறது எனக்குச் சின்ன வயசுல இருந்தே வரும். எனக்குத் தனியா நின்னு ஷோ பண்ணணும்னா பயம், காம்போவா பண்றது செட் ஆகும்னு தோணுச்சு. என்னைப் பொறுத்தவரை, நடிப்பைவிட ஆங்கரிங்தான் ரொம்பக் கஷ்டம்.
என் ஸ்பெஷலே கவுன்டர்தான். நான் பேச ஆரம்பித்தாலே சிரிக்க ஆரம்பிச்சுடுவாங்க. ‘பாலாஜி அண்ணனுக்கும் எனக்கும் பேசற திறமை இல்லைன்னா எப்பவோ எங்களை வெளியே தள்ளியிருப்பாங்க’ன்னு சிவ கார்த்திகேயன் ஒருமுறை சொன்னார். என்னால எப்போதும் சீரியஸ் நோட்ல ஆங்கரிங் பண்ண முடியாது. செம ஜாலியா ஷோ இருக்கணும். சன் டிவி-யில் ‘அல்லி ராஜ்ஜியம்’ சீரியலில் ஆச்சி மனோரமா, ஸ்ரீபிரியா நடிச்சி ருந்தாங்க. நானும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அப்போ என்னைப் பார்த்துட்டு, ‘இவன் சுருளிராஜன், சந்திரபாபு சேர்ந்த கலவை’ன்னு பாராட்டினாங்க. என் வாழ்க்கையில அந்தப் பாராட்டை மறக்கவே முடியாது. அந்த சீரியலில், ‘பொறம்போக்கு’ன்னு ஒரு இடத்துல ஆச்சியம்மா சொல்வாங்க. நான் நின்னு, ‘சேட்டு, அந்த அம்மா உங்களைக் கூப்பிடுது’ன்னு சொல்வேன். அந்த சீரியலில் மனோரமாவை ‘ஜில்’னு கூப்பிடுவேன். ‘என்னடா என்னை ஜில்லுனு கூப்பிடுற’ன்னு கேட்டாங்க. `ஏன், ‘தில்லானா மோகனாம்பாள்’ சிவாஜி மட்டும் ‘ஜில்லு’னு கூப்பிடலாம். நான் அப்படிக் கூப்பிடக் கூடாதோ’னு கேட்டேன். அவங்களால சிரிப்பை அடக்க முடியல’’ என்றவரைப் பின்தொடர்ந்தார், மகேஷ்.
‘`எனக்கும் அவருக்கும் பத்து வருட வயது வித்தியாசம். முதலில் ஒரு பொது நிகழ்ச்சியில்தான் இவரைப் பார்த்தேன். அடிக்கடி பேசினோம். நண்பர்கள் ஆனோம். விஜய் டிவி-யில் வெளியான ‘அறுபது நொடி, ஆர் யூ ரெடி’ ஷோவை ஐந்து வருடத்துக்கு முன்னாடி ஆரம்பிச்சோம். அதில்தான், ‘மாமா, மச்சான்’னு கூப்பிட்டாதான் ஷோவுக்கு நல்லாருக்கும்னு சொன்னார். கடைசியில் அதுதான் க்ளிக் ஆச்சு.
அப்போ ஆரம்பிச்சு, இப்போவரை நான் அவருடைய தவறுகளையும் சுட்டிக்காட்டுவேன். யூடியூப் வீடியோ பிரச்னைகள் வந்தபோதுகூட அவர்மீது உறுதியாக, நம்பிக்கையாக இருந்தேன். சந்தோஷத்தில் இருக்கும்போது கூட ஆயிரம் பேர் இருப்பதைவிட, துக்கத்தில் ஒருத்தராவது தோள் கொடுக்கணும். அதுதான் உண்மையான நட்பு. எங்க நட்பு அப்படித்தான்’’ என்பவரைப் பெருமையோடு பார்க்கிறார், பாலாஜி.
‘`ஒரு விஷயம் தெரியுமா, நான் தாடியை அதிகமா வளர்த்திருந்தப்போ, ஜூனியர் பிரபுதேவான்னு கூப்பிட்டாங்க. அவரை மாதிரியே ஒருவேளை தாடியை வளர்த்திருந்தா, என் ஜோலி முடிஞ்சிருக்கும். அதை அப்படியே மாத்தி காமெடியைக் கொண்டுவந்தேன். பிரபுதேவாவையும், என்னையும் 75% ஒப்பிட்டாங்க. இரண்டு பேருக்குமான ரசனையும், பாடி லாங்குவேஜூம் ஒரேமாதிரி இருந்தது. ‘பிக் பாஸ்’ ஷோவுல இருக்கும்போது யாஷிகா ‘உங்க வாக் தனியா இருக்குண்ணே’ன்னு சொல்லிக் கிட்டே இருக்கும். யாரையும் காப்பியடிக்கக் கூடாதுன்னு நான் தெளிவா இருப்பேன்’’ என்றவரிடம், “ ‘கண்ணான கண்ணே’ பாடலைக் கேட்டா, கலங்குறீங்களாமே!” என்றோம்.
‘` ‘விஸ்வாசம்’ படத்தில் ‘உன்கூட இருக்கும்போது பாசமா இருக்கும்மா, அவர்கூட இருக்கும்போது பாதுகாப்பா இருக்கு’ன்னு ஒரு வசனம் வரும். அதுதான் என் வாழ்க்கையிலேயும் நடந்திருக்குன்னு நினைக்கிறேன்.

நித்யாவைத் திருமணம் செய்தபோது, நடிப்புக்கு வாய்ப்பு இல்லாமல், ‘மயக்கம் என்ன’ தனுஷ் மாதிரி என் வாழ்க்கை இருந்தது. அதற்குப் பிறகுதான் டேக் ஆஃப் ஆனேன். மகேஷ், ரோபோ சங்கர் எல்லோருமே, ‘குடும்பத்தோடு வெளிநாடு போன முதல் செலிபிரிட்டி நீதான்’னு சொல்வாங்க. என் குடும்பப் பிரச்னை உச்சத்தில் இருந்த நேரம்தான், சிறந்த தொகுப்பாளர் விருது எனக்கும், மகேஷூக்கும் கிடைச்சது’’ என நிறுத்த, மகேஷ் ஆரம்பித்தார்.
“என் பொண்ணு அமிழ்தா பிறந்த பிறகு, நான் கோபத்தைக் குறைச்சுக்கிட்டேன். அண்ணா சுரேஷ்தான் தன் வாழ்க்கையைத் தியாகம் செய்து என்னைப் படிக்க வெச்சார். என்னுடன் இருப்பவர்கள் நான் பாடலாசிரியர் ஆவேன்னு நினைச்சாங்க. நல்ல கவிதையைப் படித்தால், எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்காது. ‘என்னை எழுதியவள் நீ... உனக்கு என்ன எழுத’ன்னு எங்க அம்மா மீனாட்சிக்குக் கவிதை எழுதியிருக்கேன். அவங்க கேட்டுட்டுக் கலங்கிட்டாங்க.
எனக்குக் கிடைச்ச ‘கலக்கப்போவது யாரு’, ‘அசத்தப்போவது யாரு’ இப்படி ஒவ்வொரு ஷோவும் எனக்கு முத்திரை ஷோதான். இன்னொரு விஷயம், நான் தேடித் தேடி சாப்பிடுவேன். எல்லோருக்கும் தரணும்னு நினைப்பேன். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டிருக்கேன். உணவைப் பொறுத்தவரை அளவுக்கு அதிகமா போகும்போது, வேண்டாம்னு சொன்னாலே உங்க உடம்புக்கு வேணுங்கிறது கிடைக்கும்’’ என மகேஷ் சொல்லி முடித்ததும், ‘`எனக்கு சமீபத்தில் சித்தர்கள்மீதான ஈடுபாடு அதிகமாகிடுச்சு. திருவண்ணாமலை, கொல்லிமலை இந்த இரண்டு இடத்துக்கும் அடிக்கடி போவேன். போலீஸ், கோர்ட்னு அடிக்கடி பிரச்னை இருந்தது. பெளர்ணமி, கிரகணம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்த ஒருநாள், மூக்குப்பொடி சித்தரைப் பார்த்தேன். அடுத்த இரண்டாவது நாள் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டேன்.
என்கூட யார் இருந்தாலும் சீக்கிரம் மிங்கிள் ஆகிடுவேன். சில இடத்தில் என் ஸ்டைலுக்கு அவங்களை மாற்றுவேன். இல்லைனா அவங்க ஸ்டைலுக்கு நான் மாறிடுவேன். நானும், மகேஷூம் ஏதாவது ஒரு விஷயத்துக்கு வாக்குவாதம் பண்ணுவோம். ஒருமணி நேரத்திற்குள் சமாதானம் ஆகிடுவோம். இரண்டு பேருமே மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். என் அப்பா காலமாகிட்டார். இப்போ என் அப்பாவாக மகேஷ்தான் இருக்கார்’’ என நெகிழும் பாலாஜியின் கைகளை இறுக்கிப் பற்றிக்கொள்கிறார், மகேஷ்.
‘`பாராட்டைத் தாண்டி, குறையையும் எடுத்துச்சொல்ல ஆரம்பித்தாலே அந்த நட்பு கடைசிவரை நிலைக்கும். அதற்கு உதாரணம் எங்க நட்பு. ‘செல்லும் இடத்தில் சினம்’னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார். அந்தமாதிரி, நான் கொடுக்கும்போது பாலாஜி வாங்கிக்கொண்டார். அவர் கொடுக்கும்போது, நான் வாங்கிக்கிறேன். இப்படி இன்னும் எங்கள் நட்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம்!’’ என இருவரும் கட்டியணைத்துக்கொள்கிறார்கள்.
- வே.கிருஷ்ணவேணி; படங்கள்: தி. குமரகுருபரன்