சினிமா
தொடர்கள்
Published:Updated:

உண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே

உண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே
பிரீமியம் ஸ்டோரி
News
உண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே

உண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே

எஃப்எம்மில் ரெட்டைவால் காட்டிய குறும்புக்கார ஆர்ஜே... தொலைக்காட்சியில் கலர்ஃபுல் வீஜே... அடுத்து சினிமாவிலும் கால்பதித்து பயணிக்கவிருக்கிறார் மிர்ச்சி விஜய். ஆல் த பெஸ்ட் சொல்லி விஜய்யுடன் பேச ஆரம்பித்தேன்.

உண்மையான ஆர்ஜே... உற்சாகமான வீஜே

‘`நான் சென்னைப்  பையன். இன்ஜினீயரிங் முடிச்சதும் ஒரு ஐடி கம்பெனியில வேலை பார்த்தேன். அந்த வேலையில எனக்குப் பெருசா விருப்பம் இல்லை. மூன்று வருடத்தில் அந்த வேலையை விட்டுட்டேன். எனக்கு நணபர்கள் அதிகம். எப்பவும் கலாச்சுப் பேசிட்டிருப்போம். அப்படி ஒருமுறை நான் ஜாலியா பேசுறதைப் பார்த்துட்டு நண்பன் ஒருத்தன் ‘நீ ரேடியோவுல பேசுனீன்னா எங்கயோ போயிடுவ மச்சான்’னு சொன்னான். அப்போ கலாய்ச்சு விட்டுட்டேன். பிறகு அடிக்கடி அதையே சொல்லி ஊக்கப்படுத்திக்கிட்டே இருந்தான். நமக்குத் தெரியாத ஒரு வேலையைச் செய்து பார்த்தால் என்னங்கிற ஐடியாவுலதான் ‘ரேடியோ மிர்ச்சி’யின் ஆர்ஜே ஆடிஷனுக்குப் போனேன். ‘நீ எப்படிப் பேசுவியோ, அதைப் பேசினா போதும்’னு சொன்னாங்க. நான் செலக்ட் ஆனேன். இப்படித்தான் என் ஆர்ஜே பயணம் ஆரம்பிச்சது’’ என்றவரிடம், ஒரு ஆர்ஜே-வாக என்னென்ன விஷயங்களில் கவனமாக இருப்பீர்கள் எனக் கேட்டேன்.

‘`ஆர்ஜே வேலை ஈஸின்னு பலபேர் சொல்றாங்க. என் அனுபவத்தில் சொல்றேன், அதுதான் கஷ்டமான வேலை. தினமும் என்ன நடக்குதுன்னு அப்டேட்டா இருக்கணும். எந்த டாப்பிக்கும் எடுத்துப் பேசவேண்டியிருக்கும். முக்கியமா, காலர்ஸ்கிட்ட உஷாரா இருக்கணும். ஏன்னா, அவங்க எப்போ, எந்த மாதிரி கேள்விகள் கேட்பாங்கன்னு தெரியாது. அதைச் சிரிச்சுக்கிட்டே சமாளிக்கணும். எனக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருந்தாங்க. அப்படி வந்தவர்தான், என் மனைவி மோனிகா. எனக்கு ரசிகையாகி, இப்போ மனைவியாகிட்டாங்க” எனச் சிரித்தவர், தொடர்ந்தார்.

‘`ரேடியோவுல பேசும்போது சில நேரங்களில் ‘ஆன் ஏர்’ல்  மைக்கை ஆஃப் பண்ணாம எதையாவது சிரிச்சுப் பேசிக்கிட்டிருப்போம். அப்படி எனக்கு நான்கைந்து முறை நடந்திருக்கு. ஒருமுறை ஒரு காலர் லைனில் வந்து, ‘என்னை எப்படியெல்லாம் கலாய்ச்சீங்க’ன்னு  கேட்டப்போ, நான் சிரிச்சு சமாளிச்சதை மறக்கவே முடியாது. ‘ரெட்டை வால்’ ஷா எனக்கு சீனியர். ஆரம்பத்தில் சார்னு ஆரம்பிச்சு, ‘ப்ரோ’, ‘மாமா’, ‘வாடா போடா’ன்னு பேசிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கு எங்க நட்பு’’ என்றவரிடம், வீஜே ஆனது எப்படி எனக் கேட்டேன். 

‘`ரேடியோவில் ஆர்ஜே-வாக வேலை பார்த்தாலே, எப்படிப்பட்ட வேலையையும் செய்யலாம். தவிர, ஆர்ஜே-வாக இருக்கும்போது நடிக்க முடியாது. ஒரு நாளில் ஆறு மணிநேரம் பேச வேண்டி இருக்கும். எவ்வளவு நேரம் சீன் போட்டுப் பேசமுடியும், அதனால, ஆரம்பத்துல இருந்தே உண்மையாவே இருந்து பழகிடணும். அப்படி, என்னை ரேடியோவில் கேட்டு, சமூக வலைதளங்களில் என் வீடியோக்களைப் பார்த்து வந்த வாய்ப்பு இது” என்றவர், ‘`மூன்று மாதம் பிரேக் எடுத்திருக்கிறேன். மறுபடியும் என்னை நிச்சயம் ரேடியோவில் பார்க்கலாம். வீஜே வேலையால், எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். சக தொகுப்பாளினி கீர்த்தி எனக்கு ரொம்ப சப்போர்ட். எங்க காம்பினேஷன் ஷோ நல்லா ஹிட் அடிக்குது. உற்சாகமா பண்ணிட்டு இருக்கேன்’’ என்பவர், பாடலாசிரியர் ஆன கதையும் சொன்னார். 

‘`ரேடியோவில் நிகழ்ச்சிகளின் புரமோஷனுக்கு ஜிங்கிள்ஸ் எழுதுவோம். அதனால, வரிகள் எழுதுவதில் எனக்குச் சிக்கல்கள் இல்லை. மா.கா.பா நடித்த ‘மாணிக்’ படத்துக்குத்தான் முதலில் பாடல் எழுத ஆரம்பிச்சேன். அதுல நடித்திருந்த ஒருவர் என் காலேஜ் சீனியர். அவருக்கு நான் பாட்டு எழுதுவேன்னு தெரியும். அதனால அந்த வாய்ப்பு வந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடலையும் நான்தான் எழுதினேன். பிறகு, ‘மேயாத மான்’ல ‘காத்துல அசையும் தாமரையே’, ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்துல ‘டக்குனு டக்குனு’ எனத் தொடர்ந்து வாய்ப்புகள் வருது. மத்தபடி, எனக்குப் பெரிய கனவா இருந்தது, சிம்ரனை நேரில் பார்க்க ணும்ங்கிறது. ஒரு மேடையில் ‘மின்னல் ஒரு கோடி’ பாடலுக்கு அவரும், நானும் ஆடினோம். அந்தக் கனவும் நிறைவேறிடுச்சு!’’ எனப் பூரிப்பவர்,‘`எனக்கு உருவகேலி செய்வது பிடிக்காது. என் நிகழ்ச்சிகளும் முடிந்தவரை அதைத் தவிர்க்கப் பார்ப்பேன். அப்பப்போ பேசுற, ‘நால்னா மூஞ்சி’ மாதிரியான வார்த்தைகளைப் பயன்ப டுத்துறப்போ கூட ரசிக்கிற மாதிரி சொல்வேன். அதைமீறி, எப்ப வாவது கஷ்டப்படுத்துற மாதிரி பேசிட்டா, அப்பவே மன்னிப்பும் கேட்பேன்” என்று ஸ்வீட் முகம் காட்டுகிறார்!

- வே.கிருஷ்ணவேணி; படம்: ஆ.முத்துகுமார்