சினிமா
தொடர்கள்
Published:Updated:

பொய்களின் விலை!

பொய்களின் விலை!
பிரீமியம் ஸ்டோரி
News
பொய்களின் விலை!

பொய்களின் விலை!

ப்ரல் 26, 1986 செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடந்த விபத்தை மனித வரலாற்றிலிருந்து யாராலும் அவ்வளவு எளிதில் நீக்கிவிட முடியாது. அந்த விபத்தை மீண்டும் மக்களின் கண்முன் வீரியம் குறையாமல் படைத்திருக்கிறது HBO-வின் ‘செர்னோபில்’ குறுந்தொடர்.

பொய்களின் விலை!

மொத்தமே ஐந்து அத்தியாயங்கள்தாம். அணு உலை விபத்து, முதல் அத்தியாயத்தில் சில நிமிடங்களிலேயே நடந்துவிடுகிறது. இது எப்படி நடந்தது, இந்த விபத்தால் நடக்கும் பாதிப்புகள் என்ன, இதை அன்றைய சோவியத் யூனியன் அரசு எப்படிக் கையாள்கிறது என விரிகிறது இந்தக் குறுந்தொடர்.

‘What is the cost of lies?’ - இதுதான் இந்தக் குறுந்தொடர் நம்மிடம் வைக்கும் முதல் கேள்வி. இதற்கான விடைதான் மொத்தத் தொடரும். வெலேரி அலெக்சேவிச் லேகாசவ் என்னும் கதிரியக்கப் பேராசிரியர்தான் நாயகன். இந்த விபத்தைப் பற்றி விசாரிக்கவும் பாதிப்புகளைத் தடுக்கவும் அரசால் அமைக்கப்படும் ஆணையத்தில் உறுப்பினராக்கப்படும் இவரின் தற்கொலையுடன்தான் தொடர் தொடங்குகிறது. இறப்பதற்குமுன் செர்னோபில் விபத்தைப் பற்றிப் பல வெளிவராத ரகசியங்களை ஆடியோப் பதிவு மூலம் உலகிற்கு உடைத்தவர் இவர். சோவியத் அரசு இந்தப் பேரிடரை எப்படிக் கையாள்கிறது, தங்கள் பக்கம் இருக்கும் கோளாறை எப்படி அது மறைக்கப்பார்க்கிறது, விபத்து எப்படி நடந்தது என அனைத்தும் இவரின் கதாபாத்திரம் வழிதான் நமக்குக் காட்டப்படுகின்றன. மற்றொரு முக்கியக் கதாபாத்திரம் யூட்மில்லா இக்னா டென்கோ, விபத்து அன்று அணு உலைக்குச் சென்று கதிரியக்கத்தால் பாதிக்கப்படும் தீயணைப்பு வீரரின் மனைவி. இவரின் கதாபாத்திரம் வழி மக்கள் படும் அவதிகளும் அவர்களின் மனநிலையும் கடத்தப்படுகிறது.

அனைத்துத் தரப்புப் பாராட்டையும் HBO-விற்குப் பெற்றுத்தந்திருக்கிறது ‘செர்னோபில்.’ முன்னணி ரேட்டிங் தளமான IMDB-யில் இதுவரை எந்த டிவி/வெப் தொடரும் பெற்றிராத ரேட்டிங் இப்போது ‘செர்னோபில்’ வசம்.

இப்படி ஏராளமான பாராட்டுகள் ஒரு பக்கம் என்றாலும், விமர்சனங்களும் இல்லாமலில்லை. இது அமெரிக்க நிறுவனம் தயாரித்த தொடர், உண்மைக்குப் புறம்பாக சோவியத் ரஷ்யாவை வில்லனாகக் காட்டுவதற்கென்றே எடுக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு. ‘செர்னோபில்’ நிச்சயம் நடந்ததை அப்படியே காட்டும் ஆவணத்தொடர் இல்லை. பல இடங்களில் கதைசொல்லலுக்காக கதாபாத்திரங்களிலும் காட்சியமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் இவை பார்வையாளர்களுக்காகச் செய்யப்பட்டவைதானே தவிர அப்பட்டமான பொய்கள் இல்லை என்பதுதான் ரஷ்ய மக்களின் கருத்தாகவே இருக்கிறது. முக்கிய ரஷ்ய ரேட்டிங் தளமான கிக்னொபொய்ஸ்க் தளத்தில் இந்தத் தொடருக்கு நல்ல ரேட்டிங் இருப்பதே அதற்குச் சான்று. தொடரில் உண்மையிலிருந்து சற்றே விலகும் விஷயங்கள் என்ன, எதற்காக அவை அப்படி மாற்றப்பட்டன என்பதை ‘The Chernobyl Podcast’ என்ற பாட்காஸ்ட் மூலம் விளக்கவும் செய்திருக்கிறார் இந்தக் குறுந்தொடரை உருவாக்கிய கிரேக் மெக்சின்.

இந்த விஷயத்தில் ரஷ்யா மட்டும் வில்லன் இல்லை என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அணுசக்தியைப் பொறுத்தவரை வெளிப்படைத்தன்மை என்பது எந்த அரசிடமும் கிடையாது. தேசியப் பாதுகாப்பை இதன் காரணமாகக் கூறுவர். அணுசக்தி தொடர்பான விஷயங்களில் தங்களிடமிருக்கும் பிரச்னைகளை வெளிப்படையாகக் கூறிவிட்டால் உலக அரங்கில் பெரும் பின்னடைவு ஏற்படும். இதனால் சிக்கல்கள் இருந்தால் சோவியத் ரஷ்யா மட்டுமல்ல எந்த நாடுமே இந்த நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புகள் அதிகம். அந்த விதத்தில் வெளிப்படைத்தன்மையில்லாத இந்த `அணு அரசியல்’ மிகவும் ஆபத்தானது. இதை உணர்த்தவே முற்படுகிறது ‘செர்னோபில்’.

எபிசோடு முடிந்த பிறகும் நம் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கும் டொசிமீட்டரின் சத்தம் இந்தத் தொடர் இதைச் சரியாகச் செய்திருக்கிறது என்பதற்கான சான்று.

- ம.காசி விஸ்வநாதன்