சினிமா
தொடர்கள்
Published:Updated:

ஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்!

ஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்!

ஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்!

90’ஸ் குழந்தைகளின் மாலை நேரத்தைத் தொலைக்காட்சி வழி ஆச்சர்யமான தாகவும், உற்சாகமானதாகவும் மாற்றியவர் `வெங்கி மங்கி.’ வென்ட்ரிலோக்கிசம் (Ventriloquism) என்ற கலை மூலம் தமிழகத்தில் நன்கு அறியப்பட்டவர். அவரின் மகள் நிரஞ்சனா, விஜய் டிவி-யின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு மாலை நேரத்தில் இந்த மாயக்குரலியைச் சந்தித்தேன்.

ஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்!

“நிரஞ்சனாவுக்கு அப்பாவின் கலையைக் கற்க ஆசை வந்தது எப்போ?”

“நான் இந்த வென்ட்ரிலோக்கிசத்தை நாலு வயசுலேருந்து பண்றேன். இதைப் பண்ண ணும்ங்கிற  ஆர்வத்தைக் கொடுத்தது அப்பாதான். அவர் கண்ணாடி முன்னாடி நின்னு ஒத்திகை பார்க்கும்போது, பொம்மையை ஒரு மடியிலும் என்னை ஒரு மடியிலும் வெச்சிருப்பாராம். நான் நடை வண்டியில பொம்மைகளை வெச்சு ‘பேக், பேக்’னு பேசிக்கிட்டிருப்பேன்னு அம்மா சொல்வாங்க. வளர்ந்த பிறகு எனக்கு இந்தக் கலைமீது ஆர்வம் இருக்குன்னு புரிஞ்சுகிட்டு, என்னைத் தயார்படுத்தியது அம்மாதான்.”

“நிக்கிதான் உங்களுக்கு இணையா இருக்கணும்னு எப்போ முடிவாச்சு?”

“நான் வழக்கமா பயிற்சி பண்ற ஆஞ்சலினா, நிக்கி ரெண்டுபேரையும் கொண்டுபோயிருந்தேன். அப்போ, நிகழ்ச்சித் தேர்வாளர்களுக்கு நிக்கியை ரொம்பப் பிடிச்சிருந்தது. ஒரு பையன் - பொண்ணு இணை இருந்தா காமெடி இன்னும் நல்லாருக்கும்னு சொன்னாங்க. அப்படித்தான் நிக்கியும் நானும் இணைந்து நிகழ்ச்சியில கலந்துகிட்டோம்.”

“ ‘வென்ட்ரிலோக்கிசம்’ கத்துக்க என்ன மாதிரியான பயிற்சி தேவை?”

“இது முழுக்கவே மனசு சம்பந்தப்பட்ட வேலை. ஒரு பொம்மைக்குக் குரல் கொடுக்கணும்; அதேசமயம் நாமளும் பேசணும். உதாரணத்துக்கு, நான் பேசும்போது காமெடியா எனக்குப் பதில் தரணும் நிக்கி. இப்படி, ரெண்டு ஆளோட வேலையை நாம செய்யணும். இதுல முக்கியம், பொம்மைக்குப் பேசும்போது நம்ம உதடு அசையக் கூடாது. பொதுவா இந்த வித்தையை 15 நிமிடத்துக்குமேல யாரும் பண்ணமாட்டாங்க. ஆடியன்ஸ் ஆர்வத்தைப் பொறுத்து, நான்  45 நிமிடம் வரைகூட செஞ்சிருக்கேன்.”

ஒரு மாயக்குரலியும்... நக்கல் நிக்கியும்!

“இந்த வென்ட்ரிலோக்கிசத்துக்கு உங்க அப்பா தமிழ்ப் பெயர் வெச்சாரமே?”

“ஆமா, தமிழ்நாடு அரசு சார்பாக அவருடைய இந்தத் திறமைக்காக விருது கொடுத்தாங்க. அப்போ, அரசாங்கத்துல இந்தக் கலைக்குத் தமிழ்ல பெயர் இருந்தா நல்லாருக்கும்னு சொல்லிருக்காங்க. அப்பா, சில தமிழ் ஆய்வாளர்கள், பேராசியர்கள்கூடச் சேர்ந்து இந்த ‘வென்ட்ரிலோக்கிசம்’ங்கிற வார்த்தைக்கு, ‘மாயக்குரல்’னு பெயர் வெச்சாங்க.”

“இந்த பொம்மைகளை எப்படித் தயாரிக்கிறீங்க?”

“இந்த பொம்மைகளோட பேரு ‘வென்ட்ரி லோக்கிஸ்ட் டம்மி’. இது இந்தியாவுல தயாராகிறது கம்மி. அப்படித் தயாராகிறதும், அவ்வளவு நேர்த்தியா இருக்கிறதில்லை. அமெரிக்காவுல இந்தமாதிரி டம்மிகள் சரியா இருக்கு. அந்த பொம்மை உயிரோட இருக்கிற மாதிரியே வடிவமைச்சிருப்பாங்க.” 

“சின்ன வயசுலேயே பெரிய அங்கீகாரங்கள் கிடைச்சிருக்கு. மறக்க முடியாத பாராட்டு எது?”

“ஒவ்வொரு வருடமும் நாங்க, புற்றுநோய், ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிகழ்ச்சி நடத்துவதுண்டு. அங்கே இருக்கிறவங்க என் நிகழ்ச்சியைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அது எனக்கு நெகிழ்வான தருணமா இருக்கும்.”

“இது மேலை நாட்டு மக்களுக்கான கலையாக இருக்கிறதை உணர்றீங்களா?”

“மேலை நாடுகள்ல இருக்கிற ஆடியன்ஸுக்கு இந்தக் கலையின் நுணுக்கங்கள் தெரிஞ்சிருக்கிற தனால, அவங்களால ரசிக்க முடியுது. நம்ம ஊர்ல இன்னும் இது பதிவு செய்யப்பட்ட குரல், இன்னொருத்தர்தான் பேசுறார்னு எல்லாம் நினைச்சுக்கிட்டிருக்காங்க. அவங்க புரிஞ்சுகிட்டு அந்த நிகழ்ச்சிக்குள்ளே வரும்போது, நிகழ்ச்சியே முடிஞ்சுபோயிடுது. டிவி-யில வந்த பிறகு, இப்போ இதைப் பலரும் ரசிக்க ஆரம்பிச்சிருக்காங்க.”

- அலாவுதின் ஹுசைன்; படங்கள்: க.பாலாஜி