Published:Updated:

``ஏன் பிரேக்... ஏன் மாற்றம்?’’ - I am Back அஞ்சனா

வே.கிருஷ்ணவேணி

``ஜி தமிழ் சேனலில் கடந்த மார்ச் 10-ம் தேதி முதல் இரவு 8 - 9.30 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3 நிகழ்ச்சி. இதன் தொகுப்பாளர் அஞ்சனா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்கிரீனில் தோன்றுகிறார்.

``ஏன் பிரேக்... ஏன் மாற்றம்?’’ - I am Back அஞ்சனா
``ஏன் பிரேக்... ஏன் மாற்றம்?’’ - I am Back அஞ்சனா

ஜி தமிழில் ஒளிபரப்பாகிவரும் `ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் வி.ஜே அஞ்சனா. கிட்டத்தட்ட 10 வருடங்களாகத் தொகுப்பாளினியாக இருந்து வரும் அவருக்கு இது இரண்டாவது இன்னிங்க்ஸ். அவருடைய மகன் ருத்ராக்‌ஷையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறாராம். 

இந்த வாய்ப்பு வந்தது பற்றி கேட்டபோது குஷியோடு பேச ஆரம்பித்தார், ``பிரேக் எடுத்துவிட்டு எப்ப வரப்போறோம்னு ஒரு குழப்பம் இருந்தது. குழந்தையை வச்சிட்டு எப்படி மேனேஜ் பண்றதுனு தெரியல. ஏதாவது ஒரு வாய்ப்பு வரும்போது பார்த்துக்கலாம்னு இருந்தேன். திடீரென்று ஜி தமிழ் சேனலிலிருந்து போன் பண்ணி `ஜூனியர் சூப்பர் ஸ்டார் 3’ ஆரம்பிக்கப் போறோம். நீங்க ஹோஸ்ட் பண்றீங்களா'னு கேட்டார்கள். இப்போது இருந்தே ஷோ பண்ண ஆரம்பிச்சாதான் பழக்கமாகும். இப்போதிலிருந்தே பழக ஆரம்பித்தால்தான் ஸ்கூல் போகும்போது என் மகனுக்கு ஈஸியாக இருக்கும் என ஓ.கே சொல்லிட்டேன். 

இந்த வாய்ப்பு வந்ததும் உடனே, என் கணவரிடம் கேட்டேன். `நீ தைரியமாப் பண்ணு, குழந்தையைப் பார்த்துக்கொள்ள நானும் ஹெல்ப் பண்றேன்’னு சப்போர்ட் பண்ணியிருக்கிறார். ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3 ஜி தமிழ் சேனலின் பெஸ்ட் ஷோனு சொல்லுவேன். குழந்தைகள் நடிப்பதை ரசிப்பதையும் தாண்டி அந்த ஷோவை தொகுத்து வழங்கவும் போகிறேன். சந்தோஷமாக இருக்கு. தேவயாணி, பாக்யராஜ், ரச்சிதா மூன்று பேரும் நடுவர்களா இருக்கிறார்கள். என்னுடன் இணையும் தொகுப்பாளர் கமல். செம்ம ஜாலி டைப்’’ என்றவரிடம் இவ்வளவு வருஷம் கழித்து ஸ்கிரீன் முன்னால் நிற்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டதற்கு,

``ஷோ பண்ணி பல வருஷம் ஆகிடுச்சு. புது சேனல், புது ஷோ, புது சூழல் எல்லாமே வித்தியாசமாகத்தான் இருக்கு. சேனல் இன்டர்வியூ எல்லாம் ஈஸியாப் பண்ணிடுவேன். இதெல்லாம் செட் ஆகுமானுதான் ஆரம்பத்தில் யோசித்தேன். பழகிப்போம்னு தைரியமாகக் களத்தில் இறங்கிட்டேன். முதல் நாள் ஷூட் கஷ்டமாக இருந்தது. ஷோவுக்கு என் குழந்தையைக் கூட்டிட்டுத்தான் போனேன். அங்கே மாமியார் பார்த்துக்கொண்டாலும், அப்பப்போ குழந்தைக்கு பீட் கொடுத்துட்டு வரும்போது கஷ்டமாகத்தான் இருக்கும். இதெல்லாம் கொஞ்ச நாளில் சரியாகிடும்னு நினைக்கிறேன். எப்படியும் இரண்டு மூன்று பேர் என் குழந்தையைப் பார்த்துக்கிறாங்க.

பிராக்டிஸ்ல எல்லாமும் கைவசம் வந்துடும்னு நம்புகிற ஆள் நான் அல்ல. நமக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு விஷயத்தைத்தான் மோல்ட் பண்ண முடியும் இல்லையா. அப்படித்தான் எனக்குள்ள இருக்கிற தொகுப்பாளினி இத்தனை வருஷம் கழித்தும் வெளியில் வந்திருக்கிறாள். இன்னும் கொஞ்ச நாள் தாண்டிப் போயிட்டாலே போதும் முழு மூச்சா உள்ளே இறங்கிடுவேன்.

முதல் நாள் ஷூட்டே, இரவு 2 மணி ஆகிடுச்சு. முன்பெல்லாம் செட்லயே இருப்பேன். சாப்பிடுவேன். இப்போது குழந்தைக்கு பீட் பண்றது. அவன் தூங்கிட்டானா எனப் பார்த்தால்தான், நிம்மதியா ஷோ பண்ண முடியும். இல்லனா அதுவே மைண்ட்ல ஓடிட்டு இருக்கும். கொஞ்சம் பிரஷராக இருந்தது. ஆனால், செட்டில் நல்ல சப்போர்ட் பண்ணாங்க. என்னால் ஒரு ஷாட்டுக்குப் போக முடியலனாகூட அதை வேறு ஒரு சீனை வைத்து மேட்ச் பண்ணிக்கிட்டாங்க. நல்லாப் புரிஞ்சுக்கிறாங்க. உங்கள நல்லாப் பார்த்துக்கிறோம்னு சொல்லியிருக்கிறார்கள்.’’ இதற்கு முன்னாடி வேறு வாய்ப்புகள் எதுவும் வந்ததா..?’ என்றால்

``ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீஸன் 1 தொகுப்பாளினியாகக் கூப்பிட்டிருந்தார்கள். அப்போது நான் சன் டிவியில இருந்தேன். அங்கிருந்து மாறுகிற ஐடியாவே இல்லை. சீஸன் 1, சீஸன் 2 நிகழ்ச்சிகளைக் கீர்த்திதான் தொகுத்து வழங்கினார்கள். இந்த ஷோ மூன்றாவது சீஸனா வருதுனா கண்டிப்பாக ஹிட் அடிச்சாதான் இருக்கும். ஏதோ ஒரு புது சேனலில் போய் உட்காருவதைவிடவும், நல்ல ஸ்கோப் உள்ள நிகழ்ச்சியில் உட்காருவதுதானே நல்லது. எங்களுக்குத் தெரியும் ஒரு அம்மாவா குழந்தையை எப்படி மேனேஜ் பண்றதுனு. உங்களுக்குத் தேவையான உதவிகளைக் கண்டிப்பாகச் செய்ய தயாராக இருக்கிறோம் என இயக்குநர், சக தொகுப்பாளர் கமல், என்னிடம் பேசியவர்கள் எனப் பல பேர் எனக்கு நிறைய வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு டீமைத்தான் எதிர்பார்த்தேன்’’ எனப் பூரிப்புடன் பேசினார் அஞ்சனா.