Published:Updated:

"அவர் இழப்பின் வலி ஆறுமுன்னரே, அவளும்...?!’’ - கலங்கும் மெளனிகா

"அவர் இழப்பின் வலி ஆறுமுன்னரே, அவளும்...?!’’ - கலங்கும் மெளனிகா
"அவர் இழப்பின் வலி ஆறுமுன்னரே, அவளும்...?!’’ - கலங்கும் மெளனிகா

மௌனிகா பாலுமகேந்திரா நீண்ட இடைவெளிக்குப் பின் சீரியலுக்கு வருகிறார். தனது சினிமா அனுபவம் குறித்தும், சீரியலில் நடிப்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

`உன் கண்ணில் நீர் வழிந்தால்..' படத்தில் ரஜினியின் தங்கையாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், நடிகை மௌனிகா. அறிமுகப்படுத்தியவர், இயக்குநர் பாலுமகேந்திரா. பிறகு, பாலுமகேந்திராவின் அன்பால் ஈர்க்கப்பட்டு 2000-ம் ஆண்டில் அவரைத் திருமணம் செய்துகொண்டார், மௌனிகா. சில படங்களிலும், `கதை நேரம்’, `சொர்க்கம்’உள்ளிட்ட சில டிவி தொடர்களிலும் நடித்தார். கடைசியாக, `சொர்க்கம்’ சீரியலில் நடித்துக்கொண்டிருந்தபோது, தமிழக அரசின் `கலைமாமணி’ விருதைப் பெற்றார். பாலுமகேந்திராவின் மறைவுக்குப் பிறகு, சினிமா, சீரியலை விட்டு ஒதுங்கி இருந்தார், மெளனிகா. 

சில ஆண்டுகள் கழித்து சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸில் களமிறங்கி, `கடைக்குட்டி சிங்கம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் `ஓம்’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், கிட்டத்தட்ட பத்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் சீரியலில் நடிக்க வந்துள்ளார், மெளனிகா. சன் டிவி-யில் இம்மாத இறுதியிலிருந்து ஒளிபரப்பாகவிருக்கும் `அக்னி நட்சத்திரம்’ தொடரில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இவர். அவரிடம் பேசினோம்.

``அவரோட (பாலுமகேந்திரா) மறைவு என் வாழ்க்கையில ஒரு பெரிய வெற்றிடத்தை உணர வெச்சது. வாழ்க்கையே சூனியம் ஆகிட்ட மாதிரி ஒரு உணர்வு. ஒருவழியா காலம்தான் அந்தச் சோகத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா என்னை மீட்டு எடுத்துச்சுனு சொல்லணும். எந்த சினிமா என்னைத் தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்துச்சோ, அதே சினிமாவுல மீதிக் காலத்தையும் நகர்த்தலாம்னு பிடிச்ச படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பிச்சேன்." என்றவரின் வாழ்க்கையில் மறுபடியும் நிகழ்ந்திருக்கிறது, ஒரு சோகம்.

பாலுமகேந்திராவுக்கு அடுத்தபடியாக வாழ்க்கை மீது ஒரு பற்றுதல் உண்டாகக் காரணமானவர் என மௌனிகா குறிப்பிட்டு வந்த அவரது சகோதரியின் மகள் சில மாதங்களுக்கு முன் சாலை விபத்து ஒன்றில் பலியாகியிருக்கிறார். தனக்குக் குழந்தை இல்லை என்கிற கவலையே தெரியாத அளவுக்கு மௌனிகாவிடம் பிரியமாக இருந்தவராம் அந்த அக்கா மகள். ``அவள் குழந்தையா இருந்த நாள் முதல் கல்யாணம் முடிஞ்சு அவ ரெண்டு குழந்தைகளைப் பெத்தெடுத்தது வரைக்கும் அவளை என் மகளாகத்தான் பாவிச்சேன்." என்கிறார், மெளனிகா.

"நான் 'கடைக்குட்டி சிங்கம்’ படத்துல நடிச்சப்போ, அவள் உயிருடன் இருந்தா... அந்தப் படத்துக்கு ’சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்’னு விருது கொடுத்தது விகடன். என்னோட துரதிர்ஷ்டம். படக்குழு அந்த விருதை வாங்கும்போது, மேடையில என்னால இருக்க முடியாதபடி என் வாழ்க்கையில இப்படியொரு நிகழ்வு.

கடவுள் ஏன் இப்படி என்னைச் சோதிக்கிறார்னு தெரியலை. நான்கு வருடத்துக்கு முன்னாடி அவரைப் பிரிஞ்சப்போ என்ன வேதனையை அனுபவிச்சேனோ, அதே துயரத்தை மறுபடியும் அனுபவிச்சேன். இப்போவும் ஒவ்வொரு நாளும் அவளோட நினைப்புல இருந்து மீண்டு வர முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். ஆனா, ரொம்பவே சிரமமா இருக்கு. ஏன்னா, அவளோட நினைப்பு இல்லாம என் வாழ்க்கையே இல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தவ நான். இந்தச் சூழல்லதான், சன் டிவி-யில ஒளிபரப்பாக இருக்கிற ஒரு சீரியல்ல நடிக்கக் சொல்லிக் கேட்டாங்க. அவள் நினைப்புல இருந்து வெளியே வரணும். அதுக்காக மறுபடியும் நடிக்கலாமேனு சம்மதிச்சு, இப்போ ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போயிட்டிருக்கேன்." என்ற மெளனிகாவின் கண்கள் கலங்குகின்றன. 

காலம் மௌனிகாவின் இந்தத் துயரத்துக்கும் மருந்திடும்! 

அடுத்த கட்டுரைக்கு