Published:Updated:

``ராஜ்ஜியங்கள் அறிமுகம், அழிந்த இனம், இன்செஸ்ட் உறவு..." - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 2

தார்மிக் லீ

'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 2

``ராஜ்ஜியங்கள் அறிமுகம், அழிந்த இனம், இன்செஸ்ட் உறவு..." - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 2
``ராஜ்ஜியங்கள் அறிமுகம், அழிந்த இனம், இன்செஸ்ட் உறவு..." - `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' ஒரு க்விக் அறிமுகம் - அத்தியாயம் 2

முதல் அத்தியாயத்தில் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' நாடகத்தின் அறிமுகமாக சில விஷயங்களைப் பார்த்தோம். இந்த அத்தியாயத்தில் நாடகத்தில் இடம்பெற்றிருக்கும் ராஜ குடும்பங்கள், மற்ற குடும்பங்கள், அவரவர் பாதுகாவலர்கள்,  மன்னரின் ஆலோசகர்கள், முக்கியமாக முதல் சீஸனில் என்ன நடந்தது... அனைத்தையும் சுருக்கமாகப் பார்ப்போம். 

இத்தொடரின் முதல் அத்தியாத்தை இந்த இணைப்பில் படிக்கலாம்!

18 குடும்பங்களின் பெயரையும் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறேன். ஸ்டார்க், பராத்தியன், லானிஸ்டர், டார்கேரியன், ரென்லி பராத்தியன், ஸ்டானிஸ் பராத்தியன், க்ரேஜாய், ரீட், போல்டன், ஃப்ரே, மோர்மன்ட், டைரல், மார்டல், டல்லி, ஆர்ரின் டார்த். இவைதான் ராஜ்ஜியத்தின் முக்கிய குடும்பங்கள். முதல் நான்கு ராஜ குடும்பங்களை வைத்துதான் மொத்தக் கதையும் நகரும். மற்ற குடும்பங்கள், சில முக்கியமான திருப்பங்களுக்கு வித்திடுவார்கள். இவர்களைத் தவிர, 'நைட்ஸ் வாட்ச்' என்ற ராணுவமும், 'ஒயில்டுலிங்ஸ்' என்ற பழங்குடியினருக்கும் கதையில் முக்கிய பங்கு இருக்கிறது.  

முதலாவதாக, முக்கியமான ராஜ குடும்பங்களைப் பற்றி விரிவாகச் சொல்கிறேன். வெஸ்டிரோஸில் இருக்கும் ஏழு ராஜ்ஜியங்களை ஆட்சி செய்யும் அரசன், ராபர்ட் பராத்தியன். இவர் பராத்தியன் வம்சத்தைச் சேர்ந்தவர். அரசவை, கிங்ஸ் லேண்டிங் எனும் இடத்தில்தான் இருக்கிறது. ஏனென்றால், மற்ற நகரங்களைவிட இதுதான் பெரிய நகரம், தலைநகரும்கூட! அரசனின் தலைமை ஆலோசகராகப் பணிபுரிபவரை `Hand of the king' என்று அழைப்பார்கள். ராபர்ட் பராத்தியனின் ஆலோசகராக, ஜான் ஆர்ரின் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் ஆர்ரின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் இறந்த பிறகு ராபர்ட் பராத்தியன், ஸ்டார்க் குடும்பத்தைச் சேர்ந்த நெட் ஸ்டார்க்கைத் தன்னுடைய ஹேண்ட்டாகப் பணியாற்ற உத்தரவிடுவார். இவரைத் தவிர, பீட்டர் பெய்லிஷ், கிராண்ட் மெய்ஸ்டர் பேசல், வேரிஸ் போன்றவர்களும் அரசரின் ஆலோசகராகப் பணியாற்றி வருவார்கள். இவர்களுக்கு `Small Council' என்று பெயர். அனைவரையும் கலந்துபேசி முடிவெடுத்த பின்னர், ஹேண்ட் ஆஃப் தி கிங்கான நெட் ஸ்டார்க், தன் இறுதி முடிவை எடுப்பார். அந்த கவுன்சிலில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு குணம். இதில், மிகவும் சமயோஜித புத்தியுடனும், தன்னுடைய நற்பெயரைப் பாதுகாத்துக்கொள்ளவும் நூதனமான சில குழப்பங்களை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர், பீட்டர் பெய்லிஷ். இவருக்கு 'லிட்டில் ஃபிங்கர்' என்ற பட்டப் பெயரும் உண்டு. சரி, அரசனின் பராத்தியன் குடும்பத்தைப் பார்ப்பதற்கு முன், ஸ்டார்க் குடும்பத்தைப் பற்றிப் பார்த்துவிடுவோம். 

ஸ்டார்க் குடும்பத்தின் தலைவர், நெட் ஸ்டார்க். தலைவி, கேட்லின் ஸ்டார்க். இவர்களுக்கு ராப் ஸ்டார்க், சான்ஸா ஸ்டார்க், ப்ரான் ஸ்டார்க், ரிக்கான் ஸ்டார்க், ஆர்யா ஸ்டார்க், ஜான் ஸ்நோ (வேறு ஒரு மனைவிக்குப் பிறந்தவன்) என 6 குழந்தைகள். இதில், ஜான் ஸ்நோ என்பவர், நெட் ஸ்டார்கிற்கும், வேறொரு பெண்ணிற்கும் பிறந்தவர்போல் காட்டியிருப்பார்கள். `கேம் ஆஃப் த்ரோன்ஸி'ன் மொழிப்படி, இதுபோல் பிறந்தவர்களை `பாஸ்டர்ட்' என்று அழைப்பார்கள். இவர்கள் வின்டர்ஃபெல் எனும் இடத்தில் வசிப்பவர்கள். 

கதைக்குள் வருவோம்! முதலில், நைட்ஸ் வாட்ச் எனும் ராணுவத்தைப் பற்றிப் பார்க்கலாம். கதைப்படி, இந்த ராணுவம் 8000 வருடங்களுக்கு முன்பு தோன்றியது. ஏழு ராஜ்ஜியங்களின் எல்லைப் பாதுகாவலர்கள் இவர்கள்தான். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் 700 அடி சுவருக்கு `தி வால்' என்று பெயரிட்டிருப்பார்கள். ஏழு ராஜ்ஜியத்தைப் பாதுகாப்பதுதான் இவர்களின் வேலையும், கடமையும். யாரிடமிருந்து பாதுகாக்கிறார்கள் என்பதைப் பிறகு பார்ப்போம். கேம் ஆஃப் த்ரோன்ஸின் முதல் சீஸன், முதல் எபிசோடு இந்தச் சுவரிலிருந்துதான் தொடங்கும். மூன்று பாதுகாவலர்கள் அந்த அரணைச் சுற்றி ரோந்து வரும்போது, சில நபர்கள் செத்துக்கிடப்பதைப் பார்க்கிறார்கள். அங்கிருக்கும் பிணங்கள் தலை வேறு, உடல் வேறெனக் கிடக்கிறது. ஒயில்டுலங்ஸ் எனும் பழங்குடியினர் செய்த வேலையாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அரணை நோக்கிக் குதிரையில் பாய்வார்கள். அப்போது திடீரென ஒரு ஒயிட் வாக்கர் அவர்கள் முன் வந்து நிற்கிறது. தரவுகள்படி, 1000 வருடங்களுக்கு முன்பே ஒயிட் வாக்கர்ஸ் இனம் அழிந்துவிட்டதாகச் சொல்வார்கள். ஆனால், திடீரென அதில் ஒன்று அவர்கள் முன் நிற்பதைப் பார்த்து பயத்தில் அரண்டுவிடுகிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில் மூன்று பேரில் இருவரைக் கொன்றுவிடுகிறது, ஒயிட் வாக்கர். ஒருவரை மட்டும் உயிரோடு விட்டுவிடுகிறது. 

இதில், ஒயிட் வாக்கர்ஸ் எனும் அரக்கர்களுக்கும், ஒயில்டுலிங்ஸ் எனும் பழங்குடியினருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறுதான். ஆனால், அந்த இரண்டிடமிருந்தும் பாதுகாப்பதுதான், நைட்ஸ் வாட்ச் வேலை. அங்கு உயிரோடு இருந்த ஒருவன் மட்டும் பயத்தில் வின்டர்ஃபெல்லை நோக்கி ஓடி வந்துவிடுகிறான். முன்பே சொன்னதுபோல், வின்டர்ஃபெல்தான் ஸ்டார்க் குடும்பம் வாழ்ந்து வரும் இடம். அந்த இடத்தின் அரசன், நெட் ஸ்டார்க். நைட்ஸ் வாட்ச்சின் விதிமுறைப்படி அங்கிருப்பவர்கள் யாரும் அரணைவிட்டு வெளியே வரக்கூடாது. மீறினால், மரணம்தான். அங்கிருந்து தப்பித்து வந்தவன், தான் ஒயிட் வாக்கரைப் பார்த்ததாகச் சொல்வான். `1000 வருடங்களுக்கு முன்பே அதெல்லாம் அழிந்துவிட்டது' எனச் சொல்லி அவன் தலையைத் துண்டித்துவிடுவார், நெட் ஸ்டார்க். விதிமுறையை மீறிவிட்டார் அல்லவா?

ஸ்டார்க் குடும்பத்திலிருந்து கதை அப்படியே லானிஸ்டர் குடும்பத்தை நோக்கி நகரும். ஏழு ராஜ்ஜியங்களின் அரசனான ராபர்ட் பராத்தியன், லானிஸ்டர் குடும்பத்தைச் சேர்ந்த செர்சி லானிஸ்டர் என்பவரைத்தான் திருமணம் செய்திருப்பார். கேவன் லானிஸ்டர், டைவின் லானிஸ்டர், ஜேமி லானிஸ்டர், செர்சி லானிஸ்டர், டிரியன் லானிஸ்டர், லான்ஸஸ் லானிஸ்டர்... இவர்கள்தான் லானிஸ்டர் குடும்பம். ராபர்ட் பராத்தியனின் மகன் பெயர், ஜோஃப்ரி லானிஸ்டர். ஆனால், செர்சி லானிஸ்டரின் தம்பியான ஜேமி லானிஸ்டருக்கும், அவருக்கும் பிறந்தவர்தான் ஜோஃப்ரி லானிஸ்டர் என்று ஊர் முழுக்கப் புறணி பேசிக்கொண்டிருப்பார்கள். காரணம், ஜேமிக்கும், செர்சிக்கும் இடையே `இன்செஸ்ட்' உறவு இருக்கும். இன்செஸ்ட் என்றால் ரத்த சொந்தங்களுக்குள்ளேயே உறவு வைத்துக்கொள்வது. இதைக் கதையிலும் காட்டியிருப்பார்கள். இதற்கும், ஜான் ஆர்ரினின் மரணத்துக்குமே தொடர்பு இருக்கும் என்பதுபோல் சில வசனங்களும் இடம்பெற்றிருக்கும். ஜான் ஆர்ரின்தான், ராபர்ட் பராத்தியனின் முந்தைய 'Hand of the king'. 

அடுத்ததாக, டார்கேரியன் குடும்பத்தின் அறிமுகம். பராத்தியன், ஸ்டார்க், லானிஸ்டர் போன்ற ராஜ குடும்பங்கள் எல்லாம் வெஸ்டிரோஸ் பகுதிகளில் வாழ்ந்து வரும் குடும்பங்கள். அதேபோல், டார்கேரியன் குடும்பம் எஸ்ஸோஸ் பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பம். கதைப்படி, இவர்கள்தான் பல வருடங்களுக்கு முன்பு ஏழு ராஜ்ஜியங்களையும் ஆண்டுகொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் நடந்த ஓர் அரசியல் திருமணத்தால், மொத்த ராஜ்ஜியமும் பராத்தியன் குடும்பத்திடம் சென்றுவிடும். இந்தக் குடும்பத்தில் டினேரியஸ் டார்கேரியன், விசிரஸ் டார்கேரியன் என இருவர் மட்டுமே மிஞ்சியிருந்தனர்.  

மொத்த ராஜ்ஜியத்தையும் ஆட்சிசெய்ய ஆசைப்படும் விசிரஸ் டார்கேரியன், அவரது தங்கை டினேரியஸ் டார்கேரியனை, டோத்ராக்கி இனத்தைச் சேர்ந்த கல் டிராகோ என்பவருக்குத் திருமணம் செய்யத் திட்டமிடுவார். ஏனென்றால், கல் டிராகோ ஒரு மாபெரும் போர் வீரன். இதுவரை யாரிடமும் தோற்காத படையை உடையவன். அதனால், இழந்த ராஜ்ஜியத்தை மீட்டெடுக்க இந்த அரசியல் திருமணத்தை நடத்த திட்டமிடுவார், விசிரஸ் டார்கேரியன். பிறகு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் நம்மிடையே பதியவைக்கும் முயற்சியாகக் காட்சிகள் நகரும். முதல் எபிசோடுலேயே எந்தெந்தக் கதாபாத்திரங்கள் முக்கியம் என்பது தெரிந்துவிடும். 

கதாபாத்திரம் ஒவ்வொன்றாக நம் மனதில் பதிய வைத்துவிட்டு, வெவ்வேறு திருப்பங்களுடன் கதை நகரும். மேற்கூறிய குடும்பங்கள்தாம்  ராஜ குடும்பங்கள். நெட் ஸ்டார்க், ராபர்ட் பராத்தியனுக்காகப் பல போரில் சண்டையிட்டு ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக் கொடுத்தவர். செர்சி லானிஸ்டர் - ஜேமி லானிஸ்டருக்கும் இடையே இருக்கும் இன்செஸ்ட் உறவு, ஸ்டார்க் குடும்பத்தின் பாஸ்டர்ட் என்றழைக்கப்படும் ஜான் ஸ்நோ நைட்ஸ் வாட்ச்சின் பாதுகாவலனாகச் செல்வது, நெட் ஸ்டார்க்கின் மகள் சான்ஸா ஸ்டார்க் - ராபர்ட் பராத்தியனின் மகன் ஜோஃப்ரி ஸ்டார்க் திருமண நிச்சயம், கல் டிராகோ - டினேரியஸ் டார்கேரியனின் திருமண வாழ்க்கை, டிராகன் இருப்பதாக நினைத்து சில முட்டைகளைப் பாதுகாத்து வரும் டினேரியஸ் - டோத்ராக்கி குடும்பம், கிங்க்ஸ் லேண்டிங்கில் நெட் ஸ்டார்க்குடைய ஹேண்ட் ஆஃப் கிங்க்கின் அரசவைப் பணி, டோத்ராக்கி வெஸ்டிரோஸை நோக்கிப் போருக்குப் பயணப்படுவது... இப்படிச் சாதாரணமாக நகரும் கதையில் ஆங்காங்கே சில திருப்பங்கள் நிகழும்.  

செர்சி - ஜேமியின் இன்செஸ்ட் உறவை நெட் ஸ்டார்க்கின் மகன் ப்ரான் ஸ்டார்க் பார்த்துவிட, அவரை உயரத்திலிருந்து கீழே தள்ளிவிடுவார், ஜேமி லானிஸ்டர். இதனால், கோமாவிற்குச் சென்றுவிடுவான், ப்ரான் ஸ்டார்க். கிங்க்ஸ் லேண்டிங்கில் மன்னர் ராபர்ட் ஸ்டார்கிற்கும், நெட் ஸ்டார்கிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், `ஹேண்ட் ஆஃப் கிங்' பதவியை ராஜினாமா செய்துவிடுவார் அவர். முன்பு பீட்டர் பெய்லிஷ் என்றழைக்கப்படும் லிட்டில் ஃபிங்கர் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா... அவர்தான் இந்தச் சண்டைக்கு மறைமுகமான காரணமாக இருப்பார். மறுபக்கம், நைட்ஸ் வாட்ச்சில் தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளப்படுத்தத் தொடங்குவார், ஜான் ஸ்நோ. 

ராபர்ட் பராத்தியனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, நெட் ஸ்டார்க்கைச் சிறைபிடிக்க நினைப்பார் ஜேமி லானிஸ்டர். காரணம், இவர் ஹேண்ட் ஆஃப் கிங்காக பொறுப்பேற்றதிலிருந்தே இருவருக்கும் ஆகாது. தவிர, தன் இன்செஸ்ட் உறவைப் பற்றி நெட் ஸ்டார்க்குக்கும் தெரியும் என்பதும் வெறுப்பிற்குக் காரணம். வின்டர்ஃபெல் நோக்கிப் புறப்படும் நெட் ஸ்டார்க்கை கிங்க்ஸ் லேண்டிங்கிலேயே சிறையில் அடைக்க அவரைத் தாக்கிவிடுவார், ஜேமி லானிஸ்டர். பழைய நட்பு காரணமாக ராபர்ட் பராத்தியன் அவரைச் சிறையில் அடைக்க அனுமதிக்காமல், மருத்துவ உதவி செய்ய உத்தரவிடுவார். 

மறுபக்கம், தொடர்ந்து டினேரியஸ் டார்கேரியனை அவரது அண்ணன் விசிரஸ் டார்கேரியன் கொடுமைப்படுத்திக்கொண்டே இருப்பார். அதில் கடும்கோபமடையும் கல் டிராகோ, விசிரஸ் டார்கேரியனை கொடூரமாகக் கொன்றுவிடுவார். டினேரியஸ் டார்கேரியனின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தந்தையாக ஒரு சத்தியத்தையும் கொடுப்பார், கல் டிராகோ. அது என்னவென்றால், பராத்தியனுடன் போரிட்டு ஏழு ராஜ்ஜியங்களையும் பரிசாகக் கொடுப்பதுதான். இதெல்லாம் நடப்பது எஸ்ஸோஸில்! இந்தப் பக்கம் வெஸ்டிரோஸில் ராபர்ட் பராத்தியன் வேட்டைக்குச் செல்லும்போது நடந்த விபத்தினால், மரணப் படுக்கையில் இருக்க, `இனி நீதான் ஆட்சி செய்யவேண்டும்' என நெட் ஸ்டார்க்கிற்கை நோக்கி உத்தரவிட்டு இறந்துவிடுகிறார். அரசனின் இந்தக் கடைசி முடிவை செர்சி லானிஸ்டரும், ஜேமி லானிஸ்டரும் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், என்ன செய்யவிருக்கிறார்கள்... அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்! 

வின்டர் வந்துகொண்டிருக்கிறது...