Published:Updated:

``வாழ வெச்ச சென்னை வாய்ப்புகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கு!'' - `ஆஹா கல்யாணம்' தியா மேனன்

" 'இந்த நிகழ்ச்சிக்கான தொகுப்பாளர் இன்னும் சரியாக அமையவில்லை. நீங்களே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறீங்களா'னு கேட்டாங்க, 'கண்டிப்பா பண்றேன்'னு சொல்லிட்டேன்." - தியா மேனன்

``வாழ வெச்ச சென்னை வாய்ப்புகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கு!'' - `ஆஹா கல்யாணம்' தியா மேனன்
``வாழ வெச்ச சென்னை வாய்ப்புகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கு!'' - `ஆஹா கல்யாணம்' தியா மேனன்

2013-ம் வருடம் முதல் தற்போது வரை... முன்னணித் தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார், தியா மேனன். ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் 'சுடச்சுட சென்னை', 'லவ் டுடே', 'கிரேஸி கண்மணி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக இருந்தவர். பிறகு ஒவ்வொரு ஊருக்கும் சென்று பல மேடை நிகழ்ச்சிகள் மூலமாக தன்னை மக்களுக்கு அடையாளப்படுத்தினார். கடந்த 2016-ம் வருடம் கார்த்தி என்பவரைத் திருமணம் செய்து, சிங்கப்பூரில் செட்டில் ஆனார்.

தொடர்ந்து சன் டி.வி-யில் ஆதவனுடன் இணைந்து 'சூப்பர் சேலஞ்ச்' உட்பட சில நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராக இருந்தார். நாளை முதல் சன் லைஃப் டிவி-யில் ஒளிப்பாகவிருக்கும் 'ஆஹா கல்யாணம்' நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார். முழுக்க முழுக்க திருமணம் சம்பந்தமான நினைவுகளும், சுவாரஸ்யமான போட்டிகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறவிருக்கிறது. 'ஆஹா கல்யாணம்' நிகழ்ச்சி குறித்து, அவரிடம் பேசினேன். 

"நான் பிறந்தது கேரளாவாக இருந்தாலும், இப்போவரை சென்னைதான் எனக்குப் பெரும் வாய்ப்புகளைக் கொடுத்துக்கிட்டே இருக்கு. என் கணவர் வேலை நிமித்தமா சிங்கப்பூர்ல இருக்கார். எனக்கு எப்போ நேரம் கிடைச்சாலும், சிங்கப்பூர் பறந்திடுவேன். நிறைய ஃப்ரெண்ட்ஸ் நான் இன்ஸ்டாகிராமில் போடுற போட்டோக்களைப் பார்த்துதான், இப்போ நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு தெரிஞ்சுக்கிட்டு இருக்காங்க. அந்தளவுக்கு சோஷியல் மீடியாவுல ஆக்டிவ்வா இருக்கேன்." என்றவர், 'ஆஹா கல்யாணம்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வாய்ப்பு எதார்த்தமாகக் கிடைத்த ஒன்று என்கிறார்.  

''என் கணவர் சிங்கப்பூரில் பணிபுரிகிறார்னு எல்லோருக்கும் தெரியும். நான் ஷூட்டிங் மாதிரியான விஷயங்களுக்குத்தான் சென்னை போன்ற இடங்களுக்குப் பயணப்பட்டுக்கிட்டு இருக்கேன். அப்படி ஒருமுறை சரண்யா என்கிட்ட, 'திருமணம் சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியில் நீங்களும் உங்க கணவரும் தம்பதிகளாகக் கலந்துகொள்ள முடியுமா?'னு கேட்டாங்க. ஆரம்பத்துல ஓகே சொல்லிட்டேன். ஆனா, என் கணவருக்கு டைம் செட் ஆகலை. ஒருகட்டத்துல அதை நான் மறந்தே போயிட்டேன். அவங்களே திரும்பக் கூப்பிட்டு, 'இந்த நிகழ்ச்சிக்கான தொகுப்பாளர் இதுவரை சரியாக அமையலை. நீங்களே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குறீங்களா'னு கேட்டாங்க. 'கண்டிப்பா பண்றேன்'னு களமிறங்கிட்டேன். இந்த நிகழ்ச்சிக்காக என்னை விதவிதமா போட்டோஷூட் எடுத்தது மறக்க முடியாத அனுபவம்." என்றவர், தொடர்ந்தார். 

"இந்த நிகழ்ச்சியில் நார்த் இந்தியன், சவுத் இந்தியன், இஸ்லாம், கிறிஸ்டியன் வெட்டிங்... இப்படி நான்கு விதமான திருமணங்கள் மற்றும் அதற்கு ஏற்ற காஸ்ட்யூம்களோடு போட்டோஷூட் நடந்தது. விதவிதமா, அழகழகா என்னைக் காட்டியது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. 'ஆஹா கல்யாணம்' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரண்யா. ஒரு பெண்ணே இதுமாதிரி ஒரு நிகழ்ச்சிக்குத் தயாரிப்பாளரா, இயக்குநரா இருக்கிறதால, அழகான விஷயங்களையும் நுணுக்கங்களையும் இந்த நிகழ்ச்சியில பார்க்கலாம். 

முதல் எபிசோடில் ரமேஷ் திலக் - நவலட்சுமி தம்பதிகள் கலந்து கொள்கிறார்கள். எந்த விதத்திலும் சலிப்பூட்டாத நிகழ்ச்சியா இது இருக்கும். காரணம், காதல், ரிலேஷன்ஷிப், கல்யாணம், சடங்கு, டான்ஸ்... எல்லாமே இதுல பார்க்கப்போறீங்க. ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒவ்வொரு விதமான செட் போடப்போறோம். பல லொக்கேஷன்களில் இந்த நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நடந்திருக்கு. கடந்த பல வருடங்களாகப் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கேன். எல்லாவற்றையும்விட, இந்த நிகழ்ச்சி ரொம்பப் புது அனுபவமா இருந்தது" என்றார், தியா மேனன்.